நாகரீகத்தின் வேர்களைத் தேடி - நிகழ்வு

2 views
Skip to first unread message

Murugapandian Ramaiah

unread,
Nov 27, 2018, 11:02:42 AM11/27/18
to tamil...@googlegroups.com
சிங்கை எழுத்தாளர் விழாவின் ஒரு பகுதியாக நாகரீகத்தின் வேர்கள் என்கிற தலைப்பில் எழுத்தாளர் சு வெங்கடேசன் (தனது முதல் நாவலான காவல் கோட்டத்திற்கு சாகித்திய அகாடமி விருது பெற்றவர். கீழடி தொல்லியல் ஆய்விற்காக குரல் கொடுப்பவர்) உரையாற்றினார்.

கீழடி குறித்து தெளிவாக எடுத்துரைக்கும் முன்னரே, அதில் அரசு எந்திரம், தமிழ் தேசீய வாதிகள், இந்துத்துவம் என்கிற அரசியல் சுறாவளிகள் சூழ்ந்து அவற்றை மறைத்துவிட்டன. இதில் பிரதானமாக நாம் குற்றம் சாட்டவேண்டியது மத்திய அரசையும், தொல்லியல் துறையையும்தான். அதன் பிறகுதான் மற்றவர்கள்.
இங்கே இது இருக்கிறது. இதன் பின்புலம் இதாக இருக்கலாம் என்று பொது அறிக்கையை விடுத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்துக்கொண்டு போயிருந்தால், இந்தப் பழிசொல்லுக்கு தொல்லியல் துறையும் டெல்லியும்  ஆளாகியிருக்காது. அதைச் செய்யாமல் அதை மறைத்து மறைத்து, அதனைச்சுற்றி அரசியல் உருவாக அனுமதித்தவை இந்த அரசு எந்திரங்கள் என்பது என் பார்வை.

வெங்கடேசன் சிறப்பாக உரையாற்றினார். கிட்டத்தட்ட அவர் பிற ஊடகங்களில் கட்டுரைகளாகவோ பேட்டிகளாகவோ சொன்ன செய்திகளை இங்கேயும் சொல்லிச் சென்றார்.
  • வைகை நதி முழுக்க தொல் நாகரீகத்தின் எச்சங்கள் காணப்படுகின்றன. கீழடி என்பது தெரிவு செய்யப்பட்ட ஊர் என்றாலும் அது போன்ற பிற ஊர்கள் அதன் அருகில் கிடைக்கின்றன.
  • கீழடியில் பல நூற்றாண்டுகளுக்கு மக்கள் வாழ்ந்த தடங்கள் தென்படுகின்றன. உதாரணமாக, அகழாய்வு செய்யப்பட்ட குழிகளில் அடியிலிருந்து பார்த்தோமானால், எழுத்துக்கள் அல்லாத சித்திரங்கள் (கிறுக்கல்கள்) உள்ள பாண்டங்கள் கிடைத்திருக்கின்றன. பிறகு மேலே கிறுக்கல்களுடன் கூடிய ஓரிரு எழுத்துக்கள் கிடைத்திருக்கின்றன. மேலே எழுத்துக்கள் உள்ள பாண்டங்கள் கிடைத்துள்ளன. எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி இவ்விடம் காணக் கிடைக்கிறது
  • தமிழர்களின் வானவியல் அறிவை மெச்சிய அவர், அதற்குச் சான்றாக தமிழர்களின் வணிக சான்றுகள் ரோமானியாவில் கிடைத்ததைச் சுட்டிக் காட்டினார்.
  • மதுரையின் இருப்பிடம் என்று இலக்கியங்களில் சொல்லப்படுவதற்கும், இன்றைய மதுரையின் இருப்பிடத்தற்கும் வேறுபாடுகள் உள்ளதாக சொன்னார். ஆனால், பழைய குறிப்புகள் சுட்டும் இடத்தில் கீழடி இருக்கிறது என்கிறார். எனவே இது பழைய மதுரையாகவோ, அல்லது பழைய மதுரையின் எல்லைப் புற ஊராகவோ இருந்திருக்கலாம்.
  • கார்பன் டேட்டிங் படி, இந்திய அரசு அனுமதித்த சில பொருட்களுக்கு கிமு 2-3 நூற்றாண்டு என்று தேதி வந்திருக்கிறது. இன்னும் அடியில் உள்ள பொருட்களை ஆய்வுக்கு அனுப்பினால் இதன் தேதி இன்னும் பின்னோக்கிப் போகும். துரதிருஷ்டவசமாக இந்திய அரசியலும், சர்வதேச அரசியலும் இதில் விளையாடுகிறது. இன்றைய நமது வரலாறு ஆய்வு முடிவுகளை (அல்லது ஊகங்களை) பொய்ப்பித்துவிடும் என்று பயப்பட வேண்டிய நிர்பந்தம் யாருக்கோ இருக்கிறது.
  • இதுவரை நடந்த அகழாய்வில் எடுத்த பொருட்களை எங்கே வைத்தார்கள். யார் வைத்தார்கள். அவற்றை யார் எடுத்தார்கள். இப்போது எங்கே இருக்கின்றன என்பது குறித்து யாருக்கும் தெளிவில்லை. நீதிமன்றத்தில் சொல்ல மறுக்கின்றனர். அவசர அவசரமாக அகழாய்வு செய்த அதிகாரியை, வேறு மாநிலத்திற்கு ஒரு சாதாரண அருங்காட்சியகக் காப்பாளராக மாற்றவேண்டியது எதற்கு என்கிற பதில் வெளிப்படையாக யாருக்கும் சொல்லப்படவில்லை. அதன் பின் நடந்த அரசியல் கூத்துக்கள், தமிழகத்தின் மீது டெல்லியின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. தவிர, இதில் தமிழக அரசின் தொல்லியல் துறையின் தொய்வையும் கவனிக்க வேண்டி உள்ளது
  • தமிழ் தேசீயம் உள்ளிட்ட அரசியலை இதில் புகுத்த வேண்டியதில்லை. நாம் அறிய வேண்டியது, அதில் உள்ள தொல்லியல் உண்மைகளை. அதன் மூலம் நம்முடைய மரபை.


Reply all
Reply to author
Forward
0 new messages