இன்று 17 நவ. மீளுமா மாலைத்தீவு!

3 views
Skip to first unread message

Murugapandian Ramaiah

unread,
Nov 16, 2018, 9:41:53 PM11/16/18
to tamil...@googlegroups.com
யாமீனின் ஆட்சியில் பல்வேறு சங்கடங்களைச் சந்தித்த மாலத்தீவு இன்று தேர்தலின் மூலம் மீண்டு புதிய ஆட்சியை அமைக்கிறது. அமைதியாக இருக்கும் இந்த இந்துமாக்கடலின் தீவுக் கூட்டங்கள் அதன் புவியியல் அமைவினாலும், யாமீனின் பேராசையாலும் தடம் புரண்டது. முந்தைய நாட்களைப் போல படைகளை அனுப்பி மக்களாட்சியை மலர வைக்க இந்தியா முயலவில்லை. இயலவில்லை என்றும் வைத்துக்கொள்ளலாம். 'தொட்டே.. நீ செத்தே' என்று செஞ்சீனம் எச்சரித்ததை இந்திய, மேற்கத்திய நாடுகள் பார்த்துக்கொண்டிருந்தன. இதற்கிடையில் முன்னாள் அதிபர் நஷீத் வெளிப்படையாகவே இந்தியாவிற்கு அழைப்பு விடுத்தார்.

காலங்கள் மாறும்...
காட்சிகள் மாறும்..
காலத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல..
என்று பாடி சமாதானப்படுத்தப்பட்டார். இந்திய எலிகாப்டர் அனுமதி மற்றும் அதை இயக்குபவர்களுக்கான விசாக்களை நிராகரித்து வெளியேற்றினார் யாமீன்.

இதற்கிடையில் இலங்கையின் கடந்த தேர்தலைப்போலவே எதிர்ப்பாளர்கள் ஒருங்கிணைந்து யாமீனை எதிர்த்து வென்றனர். தோற்றும் விலகாத யாமீன், நவம்பர் 17 அன்று அமைதியான அதிகார மாற்றத்திற்கு சம்மதித்தார். அதன்படி, இன்று திரு இப்ராஹீம் முகமது சாலி (படம்) பதவி ஏற்கிறார். இந்திய பிரதமர் மோடி பதவியேற்புக்குச் செல்கிறார் போல. மாலத்தீவில் செயல்படும் சீன செயல்திட்டங்களுக்கு வெளிப்படையான கணக்காய்வு தேவை என்று வலியுருத்தியிருக்கிறார் நஷீத்.

குறிப்பாக ஒரே மாதிரியான கதைகள் இங்கு பேசப்படுகின்றன. மலேசியாவில் நஜிபின் ஆட்சி இழப்பிற்குப் பின் வந்த மஹாதிர், சீன செயல்திட்டங்களை கிடப்பில் போட்டு இருக்கிறார். அரசியல் காரணமில்லை. அதன் செலவீனம் மற்றும் அதைத் திருப்பி எடுக்க ஆகும் காலம் பற்றி அவரது கவலை நியாயமானது. அதே கவலை இந்தோனீசியாவின் எதிர்கட்சியிலும் ஒலிக்கிறது. தற்போதைய அதிபர் விடோடோவைத் முந்தைய அதிபர் பிரபோவோ தோற்கடித்தால் அது நிகழக்கூடும். இலங்கை மற்றும் பாகிஸ்தானைப் பற்றி சொல்லவே வேண்டாம். வல்லரசுகளின் அகோரப் பசிக்கு ஒரு சில தலைகள் சம்மதிக்கின்றன. அதன் காரணமாகவே அந்தத் தலைகள் உருட்டப்படுகின்றன.

மாலத்தீவு சீரடைந்திருக்கும் நிலையில் இலங்கை சரிந்துள்ளது. மக்களாட்சிக்கு பணப் பசி அதிகம். பசி அதிகம் என்பதாலேயே கடன் வலைக்கு இரையாகின்றன.

புது ஆட்சி ஏற்கவிருக்கும் திரு சாலிக்கு வாழ்த்துக்கள். திராவிட் போல நின்று ஆடிய திரு நஷீத்துக்கும் வாழ்த்துக்கள்.

Pandian R

unread,
Nov 17, 2018, 11:50:26 AM11/17/18
to tamil...@googlegroups.com
வானூர்தி நிலையம் கட்டும் பணி ஒப்பந்தத்திலிருந்து GMR ஐக் கழற்றிவிட்டதிலிருந்து, மாலத்தீவு இந்தியாவுடன் டூ விட்டுவிட்டது. ஊரெல்லாம் பயணம் செய்யும் மோடி அண்டை வீடான மாலத்தீவுற்குப் போனதில்லை. மன்மோகன் காலத்தில் திருகிக் கொண்ட இந்த உறவு மோடி பதவிக்காலம் முடியப்போகும் தருவாயில் சரியான திசையில் பயணிக்கத் தொடங்குகிறது. 

பதவியேற்பு விழாவிற்கு பிறநாட்டு அதிபர்களோ, பிரதம மந்திரிகளோ அழைக்கப்பட்டதாகத் தெரியவில்லை - மோடியைத் தவிர. இந்துப் பத்திரிகையும் வெளியுறவுத்துறை ஆட்களும் லைவ் அப்டேட்டுகளைத் தெரிக்கவிட்டுக் கொண்டு இருந்தார்கள். 

இலங்கையிலிருந்து சந்திரிகாவும், நாமல் s/o ராஜபக்சவும் வந்திருந்தனர். மோடிக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அதிபர்கள் நஷீத்துக்கும் கயூமிற்கும் நடுவில் அமரவைக்கப் பட்டார். சாலியின் பதவியேற்பில் இந்தியா தவிர பிறநாட்டின் பெயர்கள் குறிப்பிடப் படவில்லை. 

சாலி பதவியேற்பு முடிந்தவுடன் முதல் வெளிநாட்டு சந்திப்பாக மோடியைடன் ஒரு குறுகிய இருதரப்பு பேச்சுவார்த்தை மற்றும் கூட்டு செய்தி வெளியீடும் அளிக்கப் பட்டது. இத்துமாக்கடலின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக அதில் கூறப்பட்டுள்ளது. தவிர மருத்துவம், கல்வி என்று இந்தியா உதவக்கூடிய துறைகளைப் பற்றி மாலத்தீவு பட்டியலிட்டுள்ளது. 

பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச காலை உணவு 🍚, இலவச இளங்கலைப் படிப்பு 🎓 என்ற மக்கள் ஈர்ப்பு அறிவிப்புக்களுடன் ஆட்சி மாற்றம் துவங்கியிருக்கிறது. 
--
Murugapandian Ramaiah



Murugapandian Ramaiah

unread,
Nov 17, 2018, 9:08:36 PM11/17/18
to tamil...@googlegroups.com
சரி இந்த இழையின் முடிவிற்கும் மையத்திற்கும் வருவோம் -

நேற்று நான் படுத்துத் தூங்கும் முன்னரே, மாலத்தீவு சென்றிருந்த மோடி டெல்லி திரும்பிவிட்டார். நான் தூங்கும் முன்னர் அவரே தூங்கிவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனாலும் 3 மணிநேர விமானப் பயணத்தில் மாலத்தீவு - சீன உறவைப் பற்றி நினைக்காமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.  எனவே அதைப் பற்றி எழுதாமல் விட்டால் இழை முற்றுப் பெறாது.


சீன உறவும் கடன் வலை கழுத்தறுப்பும்.
உள்நாட்டு கட்டமைப்புகளில் அதீத ஆர்வம் காரணமாக (அல்லது வேறு காரணங்களுக்காக) முந்தைய அதிபர் யாமீன் சீனக் கம்பெனிகளுக்கு நிறைய பணி ஒப்பந்தங்களை வழங்கி இருக்கிறார். பணிகள் கடகடவென நடந்தன. வானூர்தி நிலையம் ✈ விரிவாக்கப்பட்டுள்ளது. வானூர்தி நிலையம் இருக்கும் தீவு, மையத்தீவுடன் நிலம் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. அதற்கென ஒரு மைல் தொலைவுள்ள ஒரு கடல் பாலம் 🌉 கட்டி உள்ளார்கள். (பாம்பன் - ராமேஸ்வரம் கடல் பாலத்தின் நீலம் 2.x கிலோமீட்டர்கள்). 1000 குடியிருப்புகள் கொண்ட கட்டுமானத் திட்டம் 🏠. இதையெல்லாம் திருப்பிச் செலுத்துவது எப்படி என்பது புதிய அரசுக்குப் புதிய தலைவலி. தவிர முன்பாவது இந்தியா என்கிற ஒரு ஆற்றலைக் கட்டி மேய்க்க வேண்டியதாக இருந்தது. இப்போது சீனா வேறு.

சீன செயல்திட்டங்களுக்கு வெளிப்படையான கணக்காய்வின் தேவை குறித்து முன்னாள் அதிபர் நஷீத் எழுப்பியிருந்ததை முன்னரே பார்த்தோம். மாலத்தீவால் திருப்பிச் செலுத்தவே முடியாத வகையில் கடன் வலையில் சிக்கியிருப்பதாக எதிர்கட்சிகள் முன்னர் குறைகூறியிருந்தன. இப்போது அவைதான் ஆட்சி அமைத்திருக்கின்றன. எனவே யாமீன் செய்த சிக்கலை எதிர்கொள்வதும் தீர்ப்பதும் இவர்கள் தலையில் விடிந்துள்ளது. சீன ஒப்பந்தங்கள் குறித்து மறுபேரம் செய்வோம் என்று இலங்கையில் வாழ்ந்து வந்தபோது நஷீத் கூறியதாக ரூட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதே மாதிரி முன்னர் யாரோ பேசினார்களே.. ஆம். இலங்கையில் மைத்ரி கும்பல் அவ்வாறு பேசியது. எனவே இதைப் பற்றிப் பேசும் முன்னர் இலங்கைக்குப் போய்விட்டு வருவோம்.

மைத்ரியின் தோல்வி
உள்நாட்டுப் போரிலிருந்து இலங்கையை மீட்டெடுத்த ராஜபக்ச கடன் குழியில் தள்ளிவிட்டுப் போனார். ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் ராஜபக்சவை வீழ்த்து ஆட்சியில் அமர்ந்தபோது, சீனாவுடன் மறுபேரத்திற்கு உட்கார்ந்தன. அது வரை கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்களைக் காட்டிய சீனா, 'பணத்தைக் கட்டு அல்லது லங்கோடு கிழிக்கப்படும்' என்று உறுதியாகத் தெறிவித்துவிட்டது. தலையை அடமானம் வைத்தாவது திரும்பக் கட்டித்தான் ஆகவேண்டும் என்று உணர்ந்த மைத்ரி, கடன் அளவுக்கேற்ப தலையின் ஒரு பகுதியை அடமானம் வைத்தார். அதுதான் அம்பந்தோட்டை துறைமுகம் 🚢. 99 வருட லீசுக்கு எடுத்துக்கொண்டு போய்விட்டது சீனா. இலங்கை அவர்களுடையதுதான். அந்த துறைமுகம் மட்டும் என்னுடையது என்றவாறே, தன் முத்துமாலை திட்டத்திற்கு அடுத்த மணிதேடி போய்விட்டது செஞ்சீனம்.

இதை அறிந்த நிலையில், நஷீத்தின் மறுபேர சபதம் எவ்வாறு நிறைவேறும்? சபதம் நிறைவேறா நிலையில் அவிழ்ந்த கூந்தலுடன் திரியவேண்டிய நிலை வரலாம் அல்லவா? எனவே ஆட்சி மாறும் என்றால் காட்சியே மாறவேண்டும் என்பதில்லை. கடனைத் திருப்பிச் செலுத்த இந்தியா மோடி, சவுதி சேக், அமேரிக்க ட்ரம்ப் ஆகியோரை அணுகியிருக்கிறது மாலத்தீவு. ஆனால் இன்னமும் எவ்வளவு சீனக் கடன் என்பதே அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இந்த கடுதாசியை நீங்கள் வாசிக்கும் இந்நேரம் கால்குலேட்டரும் கையுமாக சாலி அந்த வேலையைத் தொடங்கியிருப்பார். முன்னர் வந்த செய்தியின் படி, 1.5-1.8 பில்லியன் அமெரிக்க வெள்ளி 💰💰 கடனாக இருக்கலாம் என்று அனைவரும் கூறுகின்றனர். இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) கால் பங்கு.
(ஜிடிபியில் இவ்வளவுதான் கடன் வாங்கனும் என்றெல்லாம் நடைமுறைப்படுத்தத்தக்க விதி இருப்பதாகத் தெரியவில்லை. இந்திய மாநிலங்கள் தத்தம் உற்பத்தியில் 25 சதம் வரை கடன் வாங்க டெல்லி ஒப்புக்கொள்கிறது. ஜப்பான் 200 சதம் வரை கடன் வாங்கியும் ஜப்பான் காலியாகவில்லை. 160 சதம் வாங்கிய கிரேக்கம் பஞ்சர் ஒட்டிக்கொண்டுள்ளது. இதைப் பற்றி எழுதுவதற்கு நான் சரியான ஆள் இல்லை. சிவகுமார் போன்றவர்கள் எழுதினால் நாம் படித்து இன்புறலாம்). 3 பில்லியன் வரை இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறார்கள். ஒரு ஒப்பீடுக்காக சொல்கிறேன் நண்பர்களே, கொழும்புவைக் குழிக்குள் தள்ளிய அம்பந்தோட்டை துறைமுகம் ஏற்படுத்திய கடன் சுமை ஒரு பில்லியன் அமெரிக்க வெள்ளி.

இந்த முந்திரிக்கொட்டை யாமீன் போட்ட கையெழுத்துக்கள் வில்லங்கமானவை. BRI (Belt and Road Initiative)ல் மிகுந்த ஆர்வத்துடன் இணைந்திருக்கிறார். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளார். எனவே மலேசியாவின் மஹாதீருக்கும், இந்தோனேசிய பிரபோவிற்கும் உள்ள வாய்ப்புகள் சாலிக்கு இருக்க வாய்ப்பில்லை.

கதம்பம் 🌼🌻🌺🌼🌻🌺 - வாசமும் வீச்சமும்
இலங்கை மற்றும் மாலத்தீவின் ஆட்சி மாற்றங்கள் ஒரே மாதிரியானவை. அதாவது திமுக தலைவர் கருணாநிதி பாணியில் ஒருங்கிணைந்த எதிர்கட்சிகள் இதனை சாதித்திருக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட ஆட்சியை நடத்த கருணாநிதி போன்றவர்களால்தான் முடியும். ஏனென்றால் ஒட்டப்பட்டவை என்பதனாலேயே உடையும் உரிமை கொண்டவை ஆகின்றன அல்லவா. அதுதான் இலங்கையில் நடக்கும் மைத்ரியின் கோமாளித்தனங்கள். இத்தகைய எளிதில் உடையக்கூடிய மக்களாட்சி அமைப்புகள் செஞ்சீனத்தால் நகைப்புடன் நோக்கப் படுகின்றன. இந்த உடைசலில் ஆற்றல் மிகந்தவனைக் கண்டுபிடித்து, அவனைக் குளிப்பாட்டினால் போதும்! காய்களை மாற்றி வைக்க இயலும். ஆனால் மைத்ரி அளவிற்கு சாலி சறுக்கமாட்டார் என்று நம்புவோம்.

என்னதான் நடக்கும்?
அது சாலிக்கோ நஷீத்துக்கோ தெளிவாகத் தெரியாது :-).
  • சீன கட்டுமான நிறுவனங்கள் மாலத்தீவில் அமைந்திருக்கின்றன.
  • 400 சீனத் தொழிலாளர்கள் கடல் பாலத்தைக் கட்டி முடித்துள்ளார்கள்.
  • கிட்டத்தட்ட 2 லட்சம் சீனர்கள் மாலத்தீவிற்குச் சுற்றுலா வந்துள்ளார்கள். சுற்றுலாவை நம்பி அடுப்பு எறிகிற மாலத்தீவிற்கு இது பெரிய வரப்பிரசாதம். மாலிக்கு சுற்றுலா வருபவர்களில் இந்தியாவின் பங்கு சொற்பம்! (சமீப காலமாக பூட்டானுக்கு வந்து செல்லும் சீனர்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்துள்ளது)
  • சீனா காட்டிய இடத்தில் எல்லாம் யாமீன் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போயிருக்கிறார்.
இதை எல்லாம் வைத்துதான் இனி நடக்கவேண்டியவை நடக்கும்.

பொதுவாகவே காசுக்குச் செத்த தெற்காசிய நாடுகள், இவ்வளவு தெளிவான நேர்த்தியுடன், விரைவுடன் உள்கட்டமைப்பைக் கொடுக்க சீனாவால்தான் முடியும் என்று நினைக்கின்றன.  தொழில் நுட்பத்திற்கு இன்று சீனாவை விட்டால் ஆளேது? சீனாவடன் இத்தனை முறுக்கிக் கொள்ளும் இந்தியாவால் ஒரு தொலைத் தொடர்பு கோபுரத்தைக் கூட தன் சொந்த நுட்பத்தால் அமைக்க முடியவில்லை. அனைத்துக்கும் சீனாவைச் சார்ந்திருக்க வேண்டி உள்ளது. இந்தியாவின் கைபேசி சந்தையில் சீன நிறுவனங்கள் கோலோச்சுகின்றன.
வீட்டுக்கு நாலைந்து செல்போன்கள் இருக்கும் இந்திய தொழில் நுட்பத்துறையில் இந்தியாவின் வீழ்ச்சி பரிதாபகரமானது.  மென்பொருளில் இந்திய ஆதிக்கம் இருந்தாலும் செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல் என்று நவீன நுட்பத்தில் சீனா இந்தியாவைத் தட்டி வைத்திருக்கிறது. இந்திய வெளியுறவு ஆசாமிகள் இன்னமும் தன் மென்பொருள், காலாவதியான கனரக வாகனங்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்கள், மருந்து நிறுவனங்களை தன் தகவல் தொகுப்பில் (portfolio) வைத்துக்கொண்டு சுற்றுகிறார்கள்.

நேபாளம், இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் என்று பல்வேறு எடுத்துக்காட்டுகள் இவற்றையே காட்டுகின்றன. அரச உறவில் ஆமை வேகமும், செலவழிக்க பர்ஸ் பெரிதாக இல்லாத காரணத்தாலும் இந்தியாவால் அது முடியாமல் போகிறது. இவர்களின் பசிக்கு இறை போட இந்தியாவால் இயலாது என்பதும் உண்மை. இந்தியாவிலேயே செய்யாது விடப்பட்ட எத்தனை திட்டங்கள் இருக்கின்றன.

எனவே ஒன்று தெளிவு - யாமீன் காலத்தில் பெறு வெற்றி அடைந்த சீனம், சோலியின் காலத்தில் சிறு வெற்றி பெறலாமே தவிர தோல்வி பெற வாய்ப்புகள் குறைவு. அதுவே சீனாவின் 'ஒன்றுக்குப் பதில் இரண்டு' கொள்கைக்கு வெற்றி என்று பேசப்படுகிறது. அதாவது இந்தியா என்கிற முற்றுரிமையைத் தகர்த்து அங்கே சீனத்தை நிறுவி இன்னொரு தெற்காசிய நாட்டையும் உள்ளே நுழைப்பது சீன சூழ்ச்சி முறை. நேபாளம், பங்களாதேஷ், இலங்கையில் இது வரை வென்றிருக்கிறது. அது மாலத்தீவிலும் வெல்லலாம்.

ஆனால் நால்வர் கூட்டணிக்கு (அமெ. ஜப்பான், ஆஸ்தி, இந்தியா) இது பெருவெற்றி. காரணம் -
  • யாமீன் மண்ணில் போட்டு புதைத்த 'இந்தியா-முதலில்' கொள்கைக்கு உயிர் கொடுக்கப்படும்.
  • சூடு வைத்த ஆட்டோ மீட்டர் கணக்கில் வளர்ந்து கொண்டிருந்த சீன ஆதிக்கம் தவிர்க்கப்படும்.
  • பெய்ஜிங் கடல் படைக்கு மாலியில் கிளை திறப்பது நிறுத்தப்படலாம் அல்லது தாமதப்படுத்தப்படலாம்.
  • யாமீன் காலத்தில் சீனாவிலிருந்து மாலிக்கு நீர் மூழ்கிகளில் வந்து டீ குடிப்பது குறையும்.
  • சீன எலிகாப்டர்களுக்கும், அதன் டிரைவர் கண்டக்டர்களுக்கும் விசா கிடைக்கலாம்.
தொடர்ந்து நடப்பதைப் பார்ப்போம்🤞.

SCMPயின் வாசகத்துடன் இந்த இழையை முடிக்கிறேன்.

சீனாவின் BRI திட்டத்தை நடைமுறைப் படுத்தும்போது, சம்பந்தப்பட்ட நாடுகளின் உள்நாட்டு அரசியல் களங்கள் தரும் தொடர் அதிர்ச்சிகள் தொல்லைகளைத் தந்துவருகின்றன. வளர்ந்து வரும் இந்த எடுத்துக்காட்டுகளில் பட்டியலில் புதிய வரவு மாலத்தீவு - கடைசி வரவல்ல!

தமிழ்ப் பயணி

unread,
Nov 18, 2018, 9:26:00 PM11/18/18
to tamil...@googlegroups.com
அண்ணாச்சி மிக அருமையான கட்டுரை. நானும் எழுத முயலுகிறேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ்பயணி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilpayani...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/tamilpayani.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

Murugapandian Ramaiah

unread,
Nov 20, 2018, 12:42:41 AM11/20/18
to tamil...@googlegroups.com, தமிழ்ப் பயணி
அருமை. தங்கள் கட்டுரைக்காகக் காத்திருக்கிறோம்.
Reply all
Reply to author
Forward
0 new messages