1. குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. வெருளி நோய்கள் 206 -210 : இலக்குவனார் திருவள்ளுவன்

6 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Aug 3, 2025, 8:17:38 PM8/3/25
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

குறள் கடலில் சில துளிகள் 31 – அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ       இலக்குவனார் திருவள்ளுவன் 
     03 August 2025      கரமுதல


(குறள் கடலில் சில துளிகள் 30 – பெரியாரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி)

குறட் கடலிற் சில துளிகள் 31

அறிஞர்களே கண்கள்; அவர்களைத் துணையாகக் கொள்க!

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்

சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.  

(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண் ௪௱௪௰௫ – 445)

பதவுரை: சூழ்வார்-சூழ்ந்து இருப்பவர்; கண்-விழி; ஆக-ஆகும்படி; ஒழுகலான்-நடந்து கொள்ளுதலால்; மன்னவன்-வேந்தன்; ஆட்சியாளர்; சூழ்வாரை-பெரியாரை; சூழ்ந்து-ஆராய்ந்து; கொளல்-கொள்க.

அறிஞரகளே உலகின் கண்கள். எனவே, ஆட்சியாளர்கள் அவர்களைத் தம் சுற்றமாகக் கொண்டு இயங்க வேண்டும்.

சூழ் என்பதற்குச் சுற்றுதல், சுற்றியிருத்தல் என்பன மட்டும் பொருள்கள் அல்ல. ஆராய்தல், தேர்ந்தெடுத்தல், கலந்தாய்வு எனப் பல பொருள்களும் உள்ளன. இதனடிப்படையில் சூழ்வார் என்றால் கலந்தாய்விற்குரிய அறிஞர் என்று பொருள்.

இத்தகைய அறிஞர்களையே நமக்குத் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆதலின் அறிஞர் பெருமக்களையே ஆட்சியாளர் அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும்.

சூழ் என்ற சொல் சூழ்ந்துகொள், ஆராய் என்ற இரண்டு பொருளில் இக்குறளில் வந்துள்ளது. சூழ்ந்து என்றது தன்னைச் சுற்றிக்கொள்பவர்களாக ஏற்றுக்கொள்ளுமுன் அவர்கள் அறிவாலும் பயிற்சியாலும் சூழ்ச்சியாலும் தேர்ந்தவர்களா என்பதை ‘ஆராய்ந்து’ தனக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பதாம்.

சூழ்வார் என்ற சொல்லில் உள்ள ‘சூழ்’ என்பது சூழ்ந்து கொள்      அ ஃதாவது சுற்றியிரு என்ற பொருளில் வந்து சூழ்வார் என்பது சூழ்ந்துள்ளவர் (சுற்றியிருப்பவர்) எனப் பொருள்படும். இங்கு நாட்டுத் தலைவனைச் சுற்றியிருப்பவர்கள் சூழ்வார் எனப்படுகின்றனர். ஆட்சியைத் திறம்பட நடத்துவதற்கு ஆற்றல் வல்ல அறவோர் அணுக்கமாக இருக்க வேண்டும். இவர்கள் வெவ்வேறு துறையில் சிறப்பு அறிவு கொண்ட பெரியோர்களாயிருப்பர். அவனுக்கு ஆராய்ச்சியுரையும் அறிவுரையும் கூறுபவர்கள் இவர்களே. அவர்களைக் கலந்து எண்ணியே ஆட்சித் தலைவன் அரசியல் முடிவுகளை எடுப்பான்; நல்லாட்சிக்கு அவ்வாறு கலந்துபேசி முடிவு எடுக்க வேண்டும். அத்தகையோர் அமைச்சர் பெருமக்கள், படைத்தலைவர்கள், புலவர்கள், ஒற்றர்கள், தூதர்கள், அறவாணர்கள் முதலானோர் ஆவர். இவர்கள் ஆட்சியாளரைச் சூழ இருத்தலால்  சூழ்வோர் எனப்படுகின்றனர். சூழ்வார் என்றதற்குச் சூழ்ச்சித் துணையாவார் என்றும் பொருள் கூறுவர்.

மணக்குடவர் “அரசன் தன்னைச் சூழ்ச்சியாற் கொல்ல நினைப்பாரைத் தானுஞ் சூழ்ச்சியாற் கொல்ல வல்லவனாதல்” என்று இப்பகுதிக்கு உரை கூறியுள்ளார். இவர் குறளின் பிற்பகுதியிலுள்ள ‘கொளல்’ என்ற சொல்லுக்கு ‘கொலல்’ என்று பாடம் கொண்டு இவ்வாறு கூறியுள்ளாரா எனத் தெரியவில்லை. அல்லது சூழ்ச்சி என்றால் தீவினை புரிய திட்டமிடல் என்னும் பொருள் உள்ளதால், அங்ஙனம் கருதி உரையெழுதினாரா எனத் தெரியவில்லை.

நன்கு கற்ற அறிஞரைத் தன் சுற்றமாகக் கொள்வது பற்றிய வேறு சில செய்யுள்களும் உள்ளன. அவற்றில் இரண்டு வருமாறு:

ஒற்றர் தங்களை ஒற்றரின் ஆய்தலும்

கற்ற மாந்தரைக் கண் எனக் கோடலும்

சுற்றம் சூழ்ந்து பெருக்கலும் சூது அரோ

கொற்றம் கொள் குறிக் கொற்றவற்கு என்பவே

(சீவக சிந்தாமணி, விமலையார் இலம்பகம் 28)

“ஒற்றரை ஒற்றரைக் கொண்டே ஆராய்தலும், அறநூல் கற்றவரைக் கண்போலக் கொள்வதும் மந்திரிச் சுற்றத்தையும் தந்திரிச் சுற்றத்தையும் இவன் இதற்குரியன் என்று ஆராய்ந்து பெருக்கலும் வெற்றிகொள்ளுங் கருத்தையுடைய அரசற்குச் சூழ்ச்சி யென்ப” எனப் பொருள் கூறுகின்றனர்.

கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான்

உற்றுஇடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம்

மரையா துணைபயிரும் மாமலை நாட!

சுரையாழ் நரம்பறுத் தற்று.

(பழமொழி, 260)

“பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே! நீதிநூல்களைக் கற்றவர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன், யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று, அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது, தானே ஒருவகையாகத் துணிதல், நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும்” எனப் பொருள் கூறுகின்றனர்.

கிரேக்க மெய்யியலாளர்களும் மெய்யியல் அறிஞர்கள் துணை கொண்டு ஆட்சி நடப்பதே சிறந்த ஆட்சி என்கின்றனர்.

கண்ணின் பார்வைத்திறன் செம்மையாக இருக்க வேண்டும். அதுபோல் கண்ணாக விளங்க வேண்டிய சூழ்ந்திருப்போர் செம்மையாக இருத்தல் வேண்டும். இவ்வாறு சொல்வது ஆட்சியாளருக்கு மட்டும் உரியதல்ல. மக்களாய்ப் பிறந்த ஒவ்வொருவருமே துன்பம் வந்தால் அதைத் துடைத்தெறியவும் சிறந்த இலக்கினை அடைய நல்ல பாதை காட்டுவதற்கும் அறிவு, ஆற்றல், சூழ்வினைத் திறன், அறவுணர்வு உடையோரை உடன் இருப்பவர்களாகக் கொள்ள வேண்டும். ஆதலின்,

குறள்வழியில் கண்களாய்க் கருதுவதற்குரிய

அறிஞர்களைத் துணையாகக்  கொண்டு

சிறந்து வாழ்க!

– இலக்குவனார் திருவள்ளுவன்


++

வெருளி நோய்கள் 206 -210 : இலக்குவனார் திருவள்ளுவன்


ஃஃஃ    இலக்குவனார் திருவள்ளுவன் 
     04 August 2025      கரமுதல


(வெருளி நோய்கள் 201 -205 தொடர்ச்சி)

வெருளி நோய்கள் 206 -210

  1. அல்பேனிய வெருளி – Albanophobia

அல்பேனியா(Albanai) மாநிலம் தொடர்பான காரணமற்ற அளவற்ற பேரச்சம் அல்பேனிய வெருளி..
அல்பேனியக் குடியரசு (Republic of Albania) ஐரோப்பாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள நாடாகும். இதன் தலைநகரம் திரானா(Tirana).
அல்பேனிய (Albania)நாடு, நாட்டிலுள்ள மலைகள், மக்கள், கொடி, நாகரிகம், பண்பாடு, வணிகம் முதலானவை மீது தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
அல்பேனியர்கள், அல்பேனியாவில் மட்டுமல்லாமல் கொசாவா(Kosovo[a]), மாசிடோனியா(Macedonia), மாண்டெனெகிரோ (Montenegro), செர்பியா(Serbia), குரோட்டியா(Croatia), கிரீசு(Greece), இத்தாலி(Italy) நாடுகளிலும் வசிக்கின்றனர். இங்குள்ளோர்களில் பலருக்கு அல்பேனிய வெருளி உள்ளது.

00

  1. அவமான வெருளி -Aiskhunephobia
    அவமானம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அவமான வெருளி.
    நேர் பொருள் வெட்கம் என்பதாகும். எனினும் அவமானத்தால ஏற்படும் வெட்க உணர்வு என்பதால் அவமானம் என்பதே பொருத்தமாக இருக்கும்.
    தோல்வி வந்தால், தவறி விழுந்தால், தவறு செய்து பிடிபட்டால் வரும் அவமானத்தால் ஏற்படும் பேரச்சம். அவ்வாறு பிடிபடுவோமோ எனஅதற்கு முன்னரே கவலைப்பட்டு அவமான உணரவிற்கு ஆளாகிப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
    அவமானம் தமிழ்ச்சொல்லே!
    தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
    அஃதிலார் மேற்கொள் வது
    (திருக்குறள்,262)
    தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
    அவம்செய்வார் ஆசையுள் பட்டு
    (திருக்குறள், 266)
    என்று இரு குறள்களில் திருவள்ளுவர் ‘அவம்’ என்று பயன்படுத்தியுள்ளார்.
    அவம் என்றால் கேடு, பயனின்மை, வீண் முயற்சி எனப் பொருள்கள்.
    எனவே, அவமானம் என்றால் மானக்கேடு எனப் பொருள்.
    00
  2. அவரை வெருளி – Fasoliphobia
    அவரை, சீமை அவரை தொடர்பான மிகையான பேரச்சம் அவரை வெருளி.
    அவரைக்காயால் பல நன்மைகள் உள்ளன. குடல் புற்று நோய்க்கு மருந்தாகவும் பயன்படும். என்றாலும் அவரையின் சுவை பிடிக்காமலும் ஒவ்வாமை ஏற்படும் என்று கவலைப்பட்டும் சிலர் அவரை வெருளிக்கு ஆளாகின்றனர்.
    00
  3. அவரைப் பனிய வெருளி – Vanillaphobia
    நெற்று அவரை(Vanilla) அல்லது நெற்றுஅவரை மணம் சேர்க்கப்பட்ட பனியேடு- அவரைப் பனியம்- பற்றிய அளவற்ற பேரச்சம் அவரைப் பனிய வெருளி.
    பனிக்கூழ் என்று சொல்லி வந்தாலும் பனிப்பாலேடு என்பதன் சுருக்கமாகப் பனியேடு எனக்குறித்துப் பின்னர் பனியம் என மாற்றியுள்ளேன். (பனிக்கூழ்> பனியம் என்றே சொல்லலாம் என்கிறீர்களா? பனியேடு எனப் பயன்படுத்தி வந்தமையால் அதிலிருந்து மாற்றுகிறேன்.)
    ‘வனிலா’ என்பது மெக்கிசோவைப் பிறப்பிடமாகக் கொண்ட நறுமணப் பொருள். வெனிலா என்றும் வெண்ணிலா என்றும் உச்சரிக்கும் இதனை வனிக் கொடி என்றும் பெரும்பிரண்டை என்றும் குறிப்பிட்டுள்ளனர் தமிழ்நூலோர். இசுபானிசுச் சொல்லான வனிலா என்பதன் பொருள் சிறு நெற்று என்பதாகும்.
    00
  4. அவா வெருளி – Periergeiaphobia
    அவா தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அவா வெருளி.
    ஒன்றின் மீதான அவா, அதன் விளைவான ஆசை முதலியவற்றால் ஏற்படும் நிறைவேறுமா என்பது குறித்த கவலை, நிறைவேற்றுவதில் உள்ள அச்சம் ஆகியவற்றின் வளர்ச்சியால் அவா வெருளி உண்டாகிறது.
    00

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல் தொகுதி 1/5

++



--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages