ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 04 June 2026
(வெருளி நோய்கள் 1511-1515 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1516-1520
நூறு கோடி / நிகற்புத எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நூறு கோடி எண் வெருளி
நிகற்புதம் என்பது 1,00,00,00,000 ஐக் குறிக்கும்.
00
நெகிழ் நுரை குவளை(Styrofoam cup) குறித்த வரம்பற்ற பேரச்சம் நெகிழ் நுரை குவளை வெருளி.
நெகிழ் நுரை குவளை என்பது எடை குறைந்த, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கொள்கலன் ஆகும். இது சூடாகவும் குளிராகவும் உள்ள பானங்களுக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும். சிறந்த வெப்பக் காப்புத்தன்மையை வழங்கி, பானங்களை அவற்றின் சரியான வெப்பநிலையில் வைத்திருப்பதோடு, பயன்படுத்துபவரின் கைகளை மிகுந்த வெப்பம் அல்லது குளிரிலிருந்து பாதுகாக்கிறது. எனினும் சூடான பானத்தைப் பயன்படுத்தும் பொழுது வேதியல் மாற்றங்களால் உடலுக்குத் தீங்கு நேரும் எனத் தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
00
நெகிழிப் பை (plastic bag) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நெகிழிப் பை வெருளி.
செக்கு(Czech) மொழிச்சொல்லான plasty என்பதன் பொருள் நெகிழி.
தாள் பை வெருளி(Pgronphobia), பை வெருளி(Sakoulaphobia / Bolsaphobia) காண்க.
00
நெஞ்சு அல்லது நெஞ்சு நோய்(இதய நோய் ) தொடர்பான இயல்பு மீறிய பேரச்சம் நெஞ்சுநோய் வெருளி.
தலைவன் உடன் இல்லாமையால் நெஞ்சு நோவது குறித்துத் தலைவி,
“நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே” (அகநானூறு 4.1.) என்று கூறுவதாகப் புலவர் காமம்சேர்குளத்தார் கூறுகிறார்.
“ வருந்தியென்
நெஞ்சுபுண் ணுற்ற விழுமத் தானே.” (அகநானூறு 261.7-8)
என்று புலவர் கழார்க் கீரனெயிற்றியார், வருந்தி நெஞ்சம் புண்பட்டதை (அதனால் உறக்கம் வராததைத்)தலைவி தோழியிடம் கூறுகிறாள் என்கிறார்.
இவ்வாறு நெஞ்சு சார்ந்த வலிகளைச் சங்க இலக்கியங்களில் காணலாம். இதுவே அளவு கடந்த பேரச்சமாக மாறும் பொழுது நெஞ்சு வெருளியாகிறது.
cardio என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் நெஞ்சு அல்லது நெஞ்சு சார்ந்த
00
நெடுங்கழுத்தி(அயல் வான் கோழி/Emu) மீதான அளவுகடந்த பேரச்சம் நெடுங்கழுத்தி வெருளி.
நெடுங்கழுத்தி என்பது நீண்ட கழுத்தும் சாம்பல் அல்லது பழுப்பு நிறம் கொண்ட இறகுகளும் விரைவாக ஓடுவதற்கேற்ற நீளக்கால்களும் கொண்ட பறக்க முடியாத ஆத்திரேலியா நாட்டுப் பறவை.
பறவையினங்களில் தீக்கோழிக்கு அடுத்ததாகப் பெரிய பறக்காத பறவை நெடுங்கழுத்தி /அயல்வான் கோழி (Emu).
இதனை ஈமு என்றும் ஈமியூ என்றும் நேர் ஒலிப்பாகச் சொல்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5