ஆட்சி செய்வது துன்பம் தருவதே! – இளங்கோ அடிகள்
ஆள்வோர் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வதாக எண்ணுவோம். ஆனால் செங்கோலாட்சி புரிபவர்களுக்கு ஆட்சி செய்வது துன்பம் தருவதே இதனையே தேசியப்புலவர் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் கூறுகிறார். அது குறித்த பாடலடிகள் வருமாறு
மழைவளங் கரப்பின் வான்பே ரச்சம்
பிழையுயிர் எய்திற் பெரும்பே ரச்சம்
குடிபுர வுண்டுங் கொடுங்கோ லஞ்சி
மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்ப மல்லது தொழுதக வில்
– சிலப்பதிகாரம் 2.காட்சிக்காதை, அடிகள் 100-104
பதவுரை:
மழை வளம்=மழையாகிய வளம்; கரப்பின்= பெய்யாது மறைந்தால்; வான் பேர்= மிகப் பெரிய; அச்சம்= அச்சம் உண்டாம்; பிழை உயிர் எய்தில்=எதனாலும் உயிரினங்களுக்குத் துன்பம் வந்தால்; பெரும்பேர் அச்சம்=மிகப் பெரிய அச்சமுண்டாம்; குடிபுரவுண்டும்=குடிகளைக் காத்தலை மேற்கொண்டும்; கொடுங் கோல் அஞ்சி= கொடுங்கோலுக்கு அஞ்சி; மன்பதை காக்கும்=மக்கட் கூட்டத்தினைப் பேணிக் காக்கும்; நன் குடிப் பிறத்தல்= நல்ல குடியில் உதித்தல், துன்பம் அல்லது=துன்பந் தருவதல்லது; தொழுதகவு இல் =போற்றத்தக்கதன்று.
கருத்துரை:
மழைவளம் பெய்யாது போனால் ஆட்சியாளரையே மக்கள் குறைகூறுவர். அதனால் பெரும் அச்சம் வரும். கொடுங்கோல் ஆட்சியால் மக்கள் துன்பமுறாத வண்ணம் அவர்களைப் பேணிக்காக்கும் நல்ல குடியில் பிறத்தல் இன்பம் தருவதன்று; போற்றத்தக்கதுமன்று; துன்பம் தருவதே!
இதையேதான்,
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை யல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்;
(புறநானூறு 35, அடிகள் 28-30)
என்கிறார் புலவர் வெள்ளைக்குடி நாகனார்
அரிய மருந்து போன்ற நல்லாட்சி தருவது அரிதானதா? அல்லது எளிதானதா? எனச் சேக்கிழார் பெரிய புராணத்தில் மனுநீதிச் சோழன் குறித்த பாடலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ?
அஃதாவது நல்லாட்சி தருதல் எளியதன்று அரியதே என்கிறார்.
ஆள்வோர் மக்களிடம் வரி முதலானவற்றைப் பெறுவதால் அவர்கள் முதலாளிகளாகவும் ஆள்வோர் ஏவலராகவும் ஆகின்றனர். எனவே, ஏவலராகிய ஆள்வோர் மக்கட்பணி செய்ய வேண்டும்.
இப்பொழுதும் பெருமழை செய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் மழைபெய்யாமல் வறட்சி ஏற்பட்டுப் பஞ்சம் உண்டானாலும் ஆட்சியாளரைத்தான் மக்கள் குறைகூறி ஏசுவர்.
எனவே, இயற்கையாலும் செயற்கையாலும் மக்களுக்குத் துன்பம் வராத வகையிலும் அவ்வாறு துன்பம் வந்தால் அவற்றைத் துடைத்தழிக்கும் பணியிலும் ஆள்வோர் ஈடுபட வேண்டும். ஆள்வோர் எவ்வளவுதான் நன்மைகள் புரிந்தாலும் இறுதியில் தீமை ஏதும் புரிந்தார்கள் எனில், அத் தீமையைத்தான் எண்ணுவர். அதனால் ஆள்வோரை இகழ்ந்து பேசுவர். எனவே, ஆட்சிபுரிதல் துன்பம் தருவதே என்பதை உணர்ந்து நிறைகுறைகளை ஆய்ந்து மக்கள் ஆள்வோரை மதித்திடவேண்டும்.
ஆள்வோரும் மக்களுக்கு நன்மைகள்தான்புரிகின்றோம் என அலட்சியமாக இருந்து விடாமல், பழிவரும் செயல்களில் ஈடுபடாமல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1411 -1415: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1416 -1420
நடை பேசி குறித்த வரம்பற்ற பேரச்சம் நடை பேசி வெருளி.
நடைபேசிகள்(walkie-talkies) காவல் துறையினரால் பயன்படுத்தப் படுகின்றன. எனவே, காவல் துறையின் குறியீடாகக் கொண்டு இவை குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். காவலர் சிலர் கவனக் குறைவால் தமக்குரிய நடைபேசியைத் தொலைத்துள்ளனர்.இதுபற்றி அறிந்த பிறர் விழிப்பாக இருப்பதற்கு எண்ணி அளவு கடந்து கவலைப்படுகின்றனர்.
00
முகநூலில் ஒருவர் விடுக்கும் நப்புக் கோரிக்கையை மற்றவர் ஏற்காததால் வரும் அளவுகடந்த பேரச்சம் நட்பு ஏற்காமை வெருளி.
எல்லாக் குமுகத் தளங்களிலும் கோரிக்கை ஏற்காமை குறித்த பொது வெருளியாக இதைக் கருதலாம். கோரிக்கை ஏற்கப்படாததால் வெறுப்போர் இருப்பதாகக் கருதி அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
Amicus என்னும் இலத்தீன் சொல்லிற்குப் பொருள் நட்பு. இங்கே நட்பு மீது அச்சம் ஏற்பட்டு அதனை ஏற்காமையைக் குறிக்கிறது.
00
நண்டு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நண்டு வெருளி.
உயிருள்ள நண்டுகள் குறித்துப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். நண்டுக்கறி குறித்துப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
Kavouri/kabouros ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு நண்டு எனப் பொருள்.
காண்க: கடல் நண்டு வெருளி(Astakophobia)
00
நண்பர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் நண்பர் வெருளி.
நண்பர்களால் தம்முடைய கமுக்கச் செய்திகள் பரவுமோ, நண்பர்கள் திசைமாறிப் போவார்களோ என்ற கவலை பேரச்சமாக மாறி நண்பர் வெருளிக்கு ஆளாகின்றனர்.
நட்பிற்கும் கூடா நட்பிற்கும் வேறுபாடு காணத் தெரியாமலும் நண்பர் வெருளிக்கு ஆளாகின்றனர்.
Amico என்னும் இத்தாலியச் சொல்லிற்கு நண்பன் எனப் பொருள்.
00
நமைச்சல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் நமைச்சல் வெருளி.
pruritus என்னும் இலத்தீன் சொல்லிற்கு நமைச்சல் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5