பூர்வ ராஜாக்கள் வைத்த படியே...
அபராஜிதவர்மனை வீழ்த்திப் பல்லவ பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்து, பிற்காலச் சோழப்பேரரசுக்கு வலுவான ஓர் அடித்தளத்தை முதலாம் ஆதித்த சோழன் அமைத்தான்.
அவனுடைய 27ஆம் ஆட்சியாண்டில் பதிவுசெய்யப்பட்ட கீழ்காணும் கல்வெட்டில், திருக்கழுக்குன்றத்து மலை மேல் அமைந்துள்ள வேதகிரீஸ்வரர் கோயிலின் மூலஸ்தானத்து பெருமாளுக்கு அளிக்கப்பட்ட நில தானத்தைப் பற்றிய ஒரு முக்கிய தகவல் உள்ளது. திருக்கழுக்குன்றத்தின் தாழக்கோயிலான பக்தவத்சலேஸ்வரர் கோயிலில் இந்தக் கல்வெட்டு உள்ளது. அதன் வரிகள் பின்வருமாறு,
"1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிராஜகேசரி பருமற்கு யாண்டு இ
2. ருபத்தேழாவது களத்தூர்க் கோட்டத்துத் தன்கூற்று
3. த்திருக்கழுக்குன்றத்து ஸ்ரீ மூலஸ்தானத்து பெருமான் அ-
4. டிகளுக்கு இறையிலியாக ஸ்கந்த சிஷ்யன் கொடுத்தமை-
5. யில் அப்படியே பாடவைக் (வாதாபி) கொண்ட நரசிங்கப்
6. போத்தரையரும் அப்பரிசை ரக்ஷித்தமையில் அந்துரைய
7. ன் குணவன் மகன் புத்தன் விண்ணப்பத்தினால் பூர்வ
8. ராஜாக்கள் வைத்த படியே வைத்தேன் இராஜ கேசரிப-
8. ரும்மனேன் இத்தர்மம் ரக்ஷித்தான் அடி என் முடி மேலின"
முற்கால பல்லவர்களுள் ஒருவனான ஸ்கந்தசிஷ்யன் (3ஆம்–4ஆம் நூற்றாண்டு), முதன்முதலில் இறையிலி நிலத்தை வேதபுரீஸ்வரருக்கு வழங்குகிறான். அவனுக்குப் பிறகு 7ஆம் நூற்றாண்டில் வரும் வாதாபிகொண்ட நரசிம்மவர்மன், அந்தப் பரிசை உள்ளபடியே பாதுகாக்கிறான். பிறகு 9ஆம் நூற்றாண்டின் இறுதியில், குணவனின் மகன் புத்தன் என்பவனின் விண்ணப்பத்தை ஏற்று, முதலாம் ஆதித்த சோழன் அதை உறுதிப்படுத்தி மீண்டும் இறையிலி நிலத்தை வேதபுரீஸ்வரருக்கு வழங்கியதைக் கல்வெட்டுக் கூறுகிறது.
இதில் நமக்குக் கிடைக்கும் முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், ஸ்கந்தசிஷ்யனின் காலத்தில், மலைமேலுள்ள வேதகிரீஸ்வரர் கோயிலானது செங்கலாலும் சுதையாலும் அமைக்கப்பட்ட தொன்மையான கோயிலாக இருந்துள்ளது. சம்பந்தரும் அப்பரும் இக் கோயிலைப் பாடியுள்ளார்கள் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. மகேந்திவர்மன் அல்லது முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில், அதே மலையின் இறங்கும் வழியில் ஒரு குடைவரை அமைக்கப்படுகிறது. ஒற்றைக் கல் மண்டபம் என்று அழைக்கப்படும் அந்தக் குடைவரையில் உள்ள தூண் கல்வெட்டை நாம் பார்த்தோமானால், மலை உச்சியில் உள்ள வேதபுரீஸ்வரருக்கும் மற்றும் தன் குடைவரையின் இறைவனுக்கும் என இரு கோயில்களுக்கும் சேர்த்து நரசிம்மவர்மன் வழங்கும் நில தானத்தைப் (வழிபாட்டுப் புறம்) பற்றிய செய்தி உள்ளது,
"ஸ்ரீரி திருக்கழுக்குன்றத்து பெருமான
னடிகளுக்கு களத்தூர் கோட்டத்
து... திருக்கழுக்குன்ற
த்து ஸ்ரீ மலைமேல்
மூலட்டானத்து பெருமான
னடிகளுக்கு வழிபாட்டுப்புறமா
க வாதாபி கொண்ட நரசிங்கப்
போத்தரசர் வைத்தது."
இதில் 'திருக்கழுக்குன்றத்துப் பெருமானடிகளுக்கு' என்று தான் அமைத்தக் குடைவரையின் இறைவனையும், 'ஸ்ரீ மலைமேல் மூலட்டானத்துப் பெருமானடிகளுக்கு' என்று வேதபுரீஸ்வரரையும் இணைத்து வழிபாட்டுப் புறமாக நிலத்தை வழங்கியுள்ளதாக நரசிம்மவர்மன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளான்.
எனவே முதலாம் ஆதித்தனின் கல்வெட்டில் குறிப்பிட்டபடி, ஸ்கந்தசிஷ்யனின் காலத்தில் மலை உச்சியின் சுதைக் கோயிலுக்கு வழங்கப்பட்ட இறையிலி நிலமானது, பிற்பாடு நரசிம்மவர்மனால் புதுப்பிக்கப்படுகிறது. தான் அமைத்த குடைவரையின் பெருமானையும் அதில் சேர்க்கிறான்.
அதன் பிறகு, 9ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றிய பிறகு, அந்துரையைச் சேர்ந்த குணவன் என்பவனின் மகனான புத்தனின் வேண்டுகோளுக்கு இணங்க, பூர்வ ராஜாக்களான பல்லவர்கள் வழங்கிய முறைப்படியே இறையிலியை ஆதித்த சோழன் நிலைநாட்டியுள்ளான். அதாவது பல்லவரின் 600 ஆண்டு கால நிலதானத்தை உள்ளபடியே தொடர்ந்து புதுப்பித்து அளித்துள்ளான். 'இந்த தர்மத்தைக் காப்பவனின் காலடி என் தலைமேல்' என்று ஆதித்தன் குறிப்பிடுவதன் மூலம், பல்லவர் காலத்தில் இருந்த நடைமுறையின் மீது மிகுந்த மரியாதையை வைத்து அவ்வாறே அவனும் நடந்துள்ளான் என்பது நமக்கு நன்றாகப் புலனாகிறது.
– சக்கரவர்த்தி பாரதி & பாரதி
01.04.2026
Sources: Cave Temples of the Pallavas by K.R. Srinivasan
'பல்லவர் வரலாறு' – மா. இராசமாணிக்கனார்