துருகூர் நடுகல்
சேலம் மாவட்டம் கல்வராயன் மலை மேற்குச் சரிவில் வெள்ளாறு, வடவெள்ளாறு என்று அழைக்கப்படும் நிவாவாற்றின் (flood river) ஊட்டாறுகளில் (tirbutary) ஒன்று பெரியாறு. இவ்வாற்றை தும்பல் ஆறு, கரியகோயிலாறு என பல பெயர்களால் அழைக்கின்றனர். இவ்வாற்றில் தும்பல் கருமந்துறைச் சாலையில் பாப்பநாயக்கன்பட்டி என்னும் மலையடிப்பட்டிக்குத் தென்கிழக்கில் மலையடிவாரத்தில் கரியகோயில் நீர்த்தேக்கம் என்ற பெயரால் ஓர் அணை கட்டப்பட்டுள்ளது. அவ்வணையின் கீழ் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆற்றுவளவு என்னும் சிற்றூர். இச்சிற்றூரே பண்டு துருகூர் எனப்பட்டது.
சேலம் மாவட்டத்து ஆற்றூர் வட்டத்தில் வாழைப்பாடிக்கு வடகிழக்கில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ளது தும்பல். தும்பலிலிருந்து கிழக்காக கருமந்துறை என்னும் மலையூர் செல்லும் சாலையில் மூன்றுகல் (கி.மீ.) தொலைவில் பெரியாற்றின் வடகரையில் அமைந்துள்ளது பீமண்ணன் பாளையம். பீமண்ணன் பாளையத்தில் இறங்கி ஆற்றைக் கடந்து கிழக்கு நோக்கிச் சென்றால் ஏழுபுலி(ளி) என்ற ஊரின் பிடாகையான ஆற்றுவளவை அடையலாம் அல்லது கரியகோயில் நீர்த்தேக்கத்தை ஒட்டி பெரியாற்றை கடந்து அதன் தென்கரை வழியே மேற்கு நோக்கிச் சென்றும் ஆற்றுவளவை அடையலாம்.
பல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழர் காலத்தில் இவ்வூர் கோயிலொடு குடிநிறைந்த ஊராக இருந்துள்ளது. ஏழுபுலியில் இருந்து ஆற்றுவளவுக்குச் செல்லும் வழியில் ஆற்றுவளவின் தென்கிழக்கு மூலை முகப்பில் பண்டைய சிவன் கோயில் ஒன்று இருந்ததற்கான அடையாளங்களுடன் பராந்தகச் சோழன் காலத்தைச் சார்ந்த கல்வெட்டொன்று காணப்படுகின்றது. இக்கல்வெட்டில் இவ்வூர் துருகூர் என்றும் இவ்வூரில் எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் பண்டைய தமிழ் வழக்குப்படி ஊரைச் சார்த்தி துருகூர் நக்கன் என்று பொறிக்கப்பட்டுள்ளதால் ஆற்றுவளவின் பழம்பெயர் துருகூர் என்று அறியலாம். இதனை மேலும் உறுதிப்படுத்துவதுபோல ஆற்றுவளவு சிவன் கோயில் திடலின் தென்கிழக்கே ஏறத்தாழ 300 மீட்டர் தொலைவிலுள்ள மலைய கவுண்டர் தோட்டத்தில் உத்தம சோழனின் 8 ஆம் ஆட்சியாண்டு (கி.பி. 978) நடுகல் ஒன்று காணப்படுகின்றது. இதில் இவ்வூர் துறவிநாட்டு துருகூர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆற்றுவளவு என்று இன்று அழைக்கப்படும் ஊரே பண்டைய துருகூர் என்பது உறுதிப்படுகிறது.
திடலின் கிழக்குச் சரிவில் நட்டுவைக்கப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லின் இருபுறமும் எழுத்துகள் காணப்படுகின்றன. இவ்வெழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு பராந்தக சோழன் கால்த்து எழுத்தமைதியில் உள்ளது.
கல்வெட்டு முன்பக்கம் 13 வரிகள்
கிலாச்சவிடத்து - (இ > எ > அ திரிபு) கலாம், கலகம், மோதல், clash; எசு - இரு தரத்தாரையும் இசைவித்து அமைதிப்படுத்தல், வாதாடு, Mediate; பட்டான் - வீரசாவடைந்தான்; சார்த்தி - பெயரை நினைவு கூர்ந்து; இலக்கித்தார் - பாதுகாத்தார்; இ < ஈ - இந்த; அச்சம் (அச்சு + அம்) - ஒத்த உருவம், தலைமுறை; அறுவான் - அற்றுப்போவான்.
விளக்கம்: முதற் பராந்தகனின் நாலாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 911) அல்லது சுந்தரச் சோழனுடைய 4 ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி.961) துறவிநாட்டு துருகூருக்கும் இளவகுன்றி ஆகிய ஈரூர்களுக்கும் இடையே ஏற்பட்ட எல்லைத் தொடர்பான மோதலில் இரு தரப்பாருக்கும் இசைவான இணக்கப்பாடு (எசு) உண்டாகப் அமைதி உடன்பாடு பேசப் போன இடத்தில் கொலையுண்டு இறந்தான் களையன் காளி என்பான். கொலை செய்த கிடுகன் தான் திருந்தியதற்கு தண்டத் தொகையாக கொடுத்த பொன்னில் ஐந்து கழஞ்சு பொன்னை துருகூர் நக்கரான சிவபெருமானுக்கு நந்தா விளக்கு எரிக்க தன் மகன் நம்பி காளியை நினைவில் வைத்து கொடுத்தான் அமித்தன். இதற்கு அமித்தன் இந்த கல்லை பாதுகாத்தவர் காலடி என் தலைமேல் வைத்ததாகும் என்று கூறுவதோடு நில்லாமல் இந்த அறச்செயலை அழிப்பவன் ஏழு தலைமுறை இல்லாமல் போவான் என சாவிக்கின்றான்.
கிலாச்ச, எசு ஆகிய சொற்களுக்கு எந்த அகராதியிலும் பொருள் இல்லையேனும் பிற ஒத்த சொல்லை நோக்கி இவற்றின் பொருளை உய்த்துணர (infer) முடிகின்றது. கிலாச்ச > கெலாச்ச > கலாச்ச என்பது ஆங்கிலக் clash என்றச் சொல்லோடு ஒலியாலும் பொருளாலும் ஒப்பப் பொருந்துகின்றது.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி மடலம் 1 பாகம் 3 இல் எசப்பு என்பதற்கு விற்பனையில் இரு தரத்தாரையும் இசைவிக்கும் முயற்சி, தரவாளித் தொழில், தரவு, brokerage என்று பொருள் தருகின்றது. எசப்புச் செலவு என்றால் தரகு கொடுத்தற்கு பிடிக்குஞ் செலவு என்பது பொருள். இதற்கு வேராக இசை > இசைப்பு > எசப்பு என்று சுட்டுகின்றது. மற்றொரு சொல்லான எசலாட்டம் என்பதற்கு இகலாட்டம் > இசலாட்டம் என்பதே வேர். அதற்கு வாதாடு, போட்டி ஆகிய பொருள்கள் உள்ளன. எசப்பு, எசலாட்டம் ஆகிய இவ்விரு சொல்லின் பொருளை நோக்கி இரு தரத்தாருக்கும் இசைவான உடன்பாடு ஏற்பட பேசுவதே எசு என்பதன் பொருள் என உணரலாம். ஈண்டு ஆங்கிலத்தில் had brokered peace என்ற சொற்றொடரையும் கவனிக்க.
தெலுங்கு, கன்னடம் ஆகிய பிற தமிழிய மொழிகள் போல இந்த என்பதைக் குறிக்க ஈ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிலாக.
இதன் அண்டையில் உள்ள உத்தமசோழன் காலத்து நடுகல் கல்வெட்டு 5 வரிகள் கொண்டுள்ளது.
நிரை - மந்தை
உத்தம சோழனின் எட்டாவது ஆட்சி ஆண்டான கி.பி. 978 இல் துறவிநாட்டு பகுதியில் அடங்கிய துருகூரில் தங்கி வாழும் முடவச் சாத்தன் என்பான் பகைவர் கவர்ந்து சென்ற நிரையை மீட்டு வீரசாவடைந்தான் என்பதே நடுகல் கல்வெட்டின் செய்தி.
நடுகல்லில் வழங்கும் சிறுமன் நிரை என்ற சொல்லுக்கு பொருள் தேடிய போது அச்சொல் அகரமுதலியில் இடம் பெறவில்லை. மாறாக அதற்கு நெருக்கமான சிறுமட்டம் என்ற சொல் கண்ணில்பட்டது. அதற்கு குதிரைக் குட்டி > pony, யானைக் கன்று என பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே சிறுமன் என்ற சொல்லில் சிறு என்பது குட்டி அல்லது கன்றைக் குறிக்கின்ற விலங்குச் சொல்லாகவே இருத்தல் வேண்டும் என்று கருதமுடிகின்றது. செம்மறி ஆடாக இருக்கலாம். கட்டுரையாளர் திரு. குழந்தைவேலன் சிறுமன் என்பது இன்னொரு ஆள் பெயர் எனக் காட்டுகின்றார். அப்படியானால் பட்டார் என்று பன்மையில் தானே வினை முடிய வேண்டும் ஆனால் பட்டான் என்றல்லவா முடிகின்றது. ஆதலால் சிறுமன் என்பது ஆள் பெயர் அல்ல.
தென்மொழி சூலை இதழில் தொல்லியலறிஞர் கா. குழந்தைவேலன் தொகுத்து வழங்கிய கட்டுரை.
சேலம் மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி -1 , தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 31, பக்கம் 212 - 215

