1. ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):23 ++ 2. தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): நாற்று பறித்த இராமன்

3 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Feb 2, 2023, 12:59:35 AM2/2/23
to Akar Aadhan, pmaruda...@yahoo.com, muthun...@gmail.com, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): நாற்று பறித்த இராமன்

 அகரமுதல


ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன்      28 January 2023      



(தோழர் தியாகு எழுதுகிறார் 25 : ஏ. எம். கே. (6) – தொடர்ச்சி)

 நாற்று பறித்த ராமன்

பொன் நாடார் கொலை தொடர்பாக நடைபெற்ற போராட்டத்துக்குப் பிறகும் தோழர் ஏ.எம். கோதண்டராமன் சில மாதக் காலம் கடலூர் மத்திய சிறையிலேயே வைக்கப்பட்டிருந்தார். இடையிடையே வேறு சில வழக்குகளுக்காக அவர் சென்னைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அங்குள்ள மத்தியச் சிறையில் வைக்கப் பட்டார். கடலூர் நீதிமன்றத்தில் அவர் மீது கொலை முயற்சி வழக்கு இருந்தது.

யாவற்றிலும் பெரிய வழக்கு — சதி மற்றும் கொலை வழக்கு — தஞ்சை நீதிமன்றத்தில் ருந்தது. நானும் இலெனினும் எந்த வழக்கில் தண்டனை பெற்றிருந்தோமோ அதே வழக்கு! அந்த வழக்கில் முதல் எதிரி நான், கடைசி எதிரி ஏஎம்கே. மொத்தம் ஏழு எதிரிகளில் முதலில் பிடிபட்ட எங்கள் நால்வர் மீதும் வழக்கு விசாரணை முடிந்து தண்டனையும் கொடுத்தாயிற்று. மற்றவர்கள் அது வரை பிடிபடாததால் அவர்கள் மீதான வழக்கைப் பிரித்து(Split) நடத்தியாக வேண்டும்.

இப்போது ஏஎம்கே பிடிபட்டு விட்டதால், அவரை மட்டும் குற்றக் கூண்டில் நிறுத்தி மீண்டும் ஒரு முறை வழக்கு விசாரணையை நடத்தியாக வேண்டும்.

அப்போது திருச்சி சிறையில் இருந்த நாங்கள் தஞ்சை நீதி மன்றத்தில் ஏ.எம். கே. மீதான வழக்கு விசாரணை தொடங்கும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தோம். வழக்கின் மீது அக்கறை கொண்டதால் அல்ல. அது பற்றி நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை . தஞ்சையில் வழக்கு என்றால் ஏஎம்கேயை திருச்சி சிறையில்தான் வைத்தாக வேண்டும். அவரைப் பார்த்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அவரைப் பார்த்து அவரோடு பேசவும் நாங்கள் ஆவல் கொண்டு காத்திருந்தோம்.

என்னையும் இலெனினையும் பொறுத்த வரை பாச உணர்ச்சிக்கு மேற்பட்ட ஒரு காரணமும் இருந்தது. நாங்கள் எந்த இயக்கத்தில் ஈடுபட்டுச் சிறைப்பட்டோமோ அந்த இயக்கத்துடன் சிறையில் கருத்து மாறுபாடு கொண்டு விலகி நின்றோம். வருங்காலத்துக்கான அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் இருந்தோம்: வெளியே எங்களை வழிநடத்திய தோழர் ஏஎம்கேயுடன் இது குறித்து விவாதிக்க விரும்பினோம். அதற்காக அவரது வருகையை எதிர்பார்த்திருந்தோம்.

தோழர் இலெனினைப் பொறுத்த வரை, ஏஎம்கேயால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்துக்கு வந்தவர். ஆனால் நம்புவதற்கே கடினமான செய்திதான், அப்போதெல்லாம் அவருக்கு ஏஎம்கேயை ஏஎம்கே. என்று தெரியாது. பெரியவராகவும் தோழர் சங்கரனாகவும்தான் தெரியும். முன்பின் அறிமுகமில்லாத — இன்னார் என்றே தெரியாத — ஒருவரின் வழிகாட்டுதலை நம்பி ஏற்று, மனைவி மக்களைத் துறந்து உயிரைக் கொடுக்கவும் சித்தமாய்ப் புரட்சிகர இயக்கத்தில் இணைவது என்றால்… அந்தப் பெருமையில் பெரும் பங்கு ஏஎம்கேயின் ஒப்படைப்புணர்வையும் அயராத உழைப்பையும் சாரும்.

தோழர் ஏஎம்கேதான் என்னைப் பந்துவக்கோட்டை வரச்சொல்லி இலெனின், குருமூர்த்தி,  இராசப்பா முதலான தோழர்களிடம் அறிமுகம் செய்து வைத்தவர். அப்போதெல்லாம் தோழர் இலெனின் அவரைப் பெரிய ஐயா என்றும் என்னைச் சின்ன ஐயா என்றும் அழைப்பார்.

இலெனினும் மற்றத் தோழர்களும் ஏஎம் கோதண்டராமன் என்ற பெயரையே ‘கியூ’ பிரிவு போலீசார் சொல்லித்தான் தெரிந்து கொண்டார்கள். அந்தப் பெயருக்குப் பின்னாலிருந்த வரலாற்றைச் சிறையில் நான் அவர்களுக்குச் சொன்னேன்.

வட ஆற்காடு மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள ஆனைமநல்லூர் ஏஎம்கேயின் சொந்த ஊர். நிலவுடைமைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், பள்ளிப் பருவத்திலேயே பகுத்தறிவுக் கருத்துகளிலும் சமூகச் சீர்திருத்தத்திலும் ஈடுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இயங்கி வந்தார். திகவிலிருந்து திமுக பிரிந்த போது இரண்டும் வேண்டா என்று பொதுவுடைமைக் கட்சிக்கு மாறி விட்டார். வயது 16, ஆண்டு 1950.

வேலூர் ஊரிசு கல்லூரியிலும், பிறகு சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்த போது, தீவிர அரசியல் ஈடுபாட்டுடன் பொதுவுடைமை இயக்கத்துக்காக உழைத்தார். படிப்பு முடிந்து சிறிது காலமே வழக்கறிஞராகப் பணி புரிந்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் புரட்சிக்காகவே ஒப்படைக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞருக்குக் கறுப்பு மேலாடையும் அங்கியும் மாட்டி வழக்குரைஞர் தொழில் செய்வது சரிப்பட்டு வரவில்லை. ஒருநாள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு முழு நேர இயக்கப் பணிக்கு வந்து விட்டார்!

மார்க்குசியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகத் தொழிற்சங்கப் பணியாற்றத் தோழர் ஏஎம்கே ஆவடி-அம்பத்தூர் பகுதிக்கு அனுப்பப்பட்டார். வில்லிவாக்கத்திலிருந்து பட்டாபிராம் வரை ஏராளமாய்ப் புதிய தொழிற்சாலைகள் முளைத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்தப் பகுதியில் தொழிலாளர்களை அமைப்புவழியில் திரட்டித் தொழிற்சங்கம் கட்டும் பொறுப்பை ஏஎம்கே திறம்பட நிறைவேற்றினார்.

1967 தேர்தலுக்குப் பின் மா.பொ.க. (சிபிஎம்) கட்சிக்குள் மூண்ட கருத்துப் போராட்டத்தில் தலைமையுடன் கடுமையாக மோதிக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் ஏஎம்கே. அவரோடு சேர்த்துக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களில் தொழிற்சங்கத் தலைவர் குசேலரும் ஒருவர்.

நக்குசலைட்டு(Naxalite) இயக்கம் எனப் பெயர் பெற்ற இ.பொ.க.(மா.இலெ.)/CPI(M.L.) கட்சியைத் தமிழகத்தில் தோழர் எல். அப்புவுடன் சேர்ந்து நிறுவியவர் ஏஎம்கே .உடனடி ஆயுதப் போராட்டம், சிற்றூர்ப் புறங்களில் வருக்கப் பகைவரை அழித்தொழிப்பது,  மக்கள்திரள் போராட்டங்களைக் கைவிட்டு கரந்தடிப் போர் முறையை (Guerrilla warfare) மேற்கொள்வது என்றெல்லாம் கட்சி நிலையெடுத்த போது, தயக்கமோ தாமதமோ இல்லாமல் இந்த முடிவுகளை ஏற்று, நகர வாழ்வையும் தொழிற்சங்க அரசியலையும் துறந்து தஞ்சை மாவட்டச் சிற்றூர்ப்புறத்துக்கு வந்து விட்டார் ஏஎம்கே!

முதல் சந்திப்பிலேயே என்னைப் பார்த்து, “மற்றதையெல்லாம் உடைப்பது இருக்கட்டும், உங்கள் குடும்பத்தை உடைத்து விட்டு வெளியே வாருங்கள்” என்று சொன்னவர் ஏஎம்கே.

அந்த முதல் சந்திப்பை மறக்கவியலாது. நக்குசல்பாரி இயக்கமாக அறியப்பட்ட மா-இலெ கட்சியை எனக்கு அறிமுகம் செய்தவர், என்னை இயக்கத்துக்கு வென்றெடுத்தவர் பேராசிரியர் இராதாகிருட்டிணன் (இப்போது தோழர் மருதமுத்து). அவரும் நானும் தோழர் பாசுகரனும் ஆசிரியர் தோழர் சிவானந்தமும் சில மாணவர்களும் குடந்தை நகரில் ஒரு குழுவாக இயங்கிக் கொண்டிருந்தோம். கல்கத்தாவிலிருந்து வந்து கொண்டிருந்த (இ)லிபரேசன் இதழையும் கோவையிலிருந்து வந்து கொண்டிருந்த ‘புதிய தலைமுறை’ இதழையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தோம். நாங்களே ‘புதிய உலகம்’ என்ற திங்களேடு தொடங்கத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ஏட்டுக்கு ஆசிரியர் என்று முடிவாகியிருந்தது. ஆனால் எங்களுக்குக் கட்சியோடு தொடர்பில்லை.

திருச்சிராப்பள்ளியில் ஆசிரியர் தோழர் ’அசுரனோடு’ இராதாவுக்குத் தொடர்பிருந்தது. கட்சியோடு தொடர்பு வேண்டும் என்று அவரைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.  

1969 செட்டம்பர்த் திங்கள் ஒரு வெள்ளிக் கிழமை இரவு அசுரனோடு பெரியவரும் (ஏஎம்கே) குடந்தையில் பேராசிரியர் இராதாவின் இல்லத்துக்கு வந்து சேர்ந்தனர். அக்கா இந்திரா எங்களுக்கு உணவு பரிமாறியவுடனே ஏஎம்கே ’உட்காருவோமா?’ என்று கேட்டு, சுற்றி எங்களை உட்கார வைத்துக் கொண்டு அறிக்கையுரை அளிக்கத் தொடங்கி விட்டார். உடனே ஆய்தப் போரட்டம், ஊர்ப்புறத்துக்குச் சென்று அழித்தொழிப்புக்கு விவசாயத் தொழிலாளர்களை ஆயத்தப்படுத்துவது என்று சொல்லி விட்டு, அழித்தொழிப்பை நியாயப்படுத்த சாரு மசூம்தார் கூறியவற்றை எடுத்துக்கட்டினார். 1905 முதல் உருசியப் புரட்சியின் தோல்வி குறித்து இலெனின் எழுதிய “மாசுகோ எழுச்சி குறித்து”/ “On the Moscow Uprising” என்ற கட்டுரையைப் படித்துக்காட்டி விளக்கினார்.   

விடியற்காலை புறப்படும் முன் ”சரி, நீங்க என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டார். “தியாகு எப்போதோ முடிவு செய்து விட்டார், கட்சித் தொடர்புக்காகத்தான் காத்திருந்தோம், இப்போதைக்கு அவரை ஆசிரியராகப் போட்டு பத்திரிகை நடத்தத் திட்டமிட்டிருக்கோம்” என்று இராதா சொன்ன போது ஏஎம்கே வேகமாகத் தலையசைத்து மறுத்தார்: ”தியாகு ஒரு பாட்டாளிய மாணவர் (proletarian student) எனத் தோன்றுகிறது. அவரை உடனே சிற்றூருக்கு அனுப்புங்கள். பத்திரிகை வேலையெல்லம் மற்றவர்கள் பாருங்கள். புரட்சிதான் அவசரப் பணி.” என்னைப் பார்த்து தியாகு, முதலில் உங்கள் குடும்பத்தை த் துண்டித்துக் கொள்ளுங்கள் (“Thiagu, you first break your family”) என்று சொல்லிப் பெரும்பண்ணையூர் தோழர் ஆர். மாணிக்கம் முகவரியை எழுதிக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார். இரண்டே நாளில் படிப்புச் சான்றிதழ்கள் அனைத்தையும் எரித்து விட்டு நான் பெரும்பண்ணையூர் சேரி போய்ச் சேர்ந்தேன்.]

அவரோடு ஏறத்தாழ ஓராண்டுக் காலம் தஞ்சை மாவட்டத்துச் சேரிகளில் வேலை செய்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. வேலை என்றால் இயக்க வேலை மட்டுமல்ல!

மக்களுடன் ஒன்றுகலப்பதன் பகுதியாக நான் வயல் வேலைக்குச் செல்லத் தொடங்கிய போது என்னை அவர் பாராட்டினார். பாராட்டிய தோடு நில்லாமல் அவரும் வயல் வேலைகளைப் பழகிக் கொண்டு செய்யத் தொடங்கி விட்டார்.

பட்டுக்கோட்டைப் பக்கம் நம்பிவயல் அருகே ஒரு சிற்றூரில் நாங்கள் இருவரும் நாற்றுப் பறிக்கும் வேலைக்குப் போயிருந்தோம். அந்த நிலம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தோழர் ஒருவருக்குச் சொந்தமானது. நாற்றுப் பறிக்க வந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் சேரிக்காரர்களே என்றாலும், குடியானவத் தெருவிலிருந்தும் சிலர் வந்திருந்தனர்.

வேலைக்கு நடுவில் அனைவருக்கும் வரப்பில் வைத்துத் தொன்னையில் கூழ் ஊற்றுவார்கள். வரிசையாக நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடிக்க வேண்டும். குடியானவத் தெருக்காரர்கள் அது வரை சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாலும் கூழ் வாங்கிக் குடிக்க வராமல் ஒதுங்கி நின்று கொள்வார்கள். நிலவுடைமையாளராகவே இருந்தாலும் சேரிக்காரர் சேரிக்காரர்தான்கூலிக்காரராகவே இருந்தாலும் சாதிக்காரர் சாதிக்காரர்தான் என்பதில் அவர்கள் தெளிவாய் இருப்பார்கள்.

ஏஎம்கேயும் நானும் வரிசையில் நின்று தொன்னையில் கூழ் வாங்கிக் குடித்த போது குடியானவத் தெருக்காரர்களுக்குத் திகைப்பு! அது வரை எங்களைத் தங்கள் ஆள் என்று எண்ணியிருக்க வேண்டும்!

கூழ் குடித்து முடித்து சேற்று நீரில் கைகழுவி புறங்கையால் வாய் துடைத்து வெற்றிலைபாக்கு மென்று சுவைத்தபடி ஏஎம்கே மீண்டும் நாற்றுப் பறிக்கக் கால் மடித்து உட்கார்ந்த போது அருகிலிருந்தவர் சன்னமான குரலில் கேட்டார்:

“ஏனையா நீங்களும் போய் அவன்களுடன் கூழ்  வாங்கிக் குடிக்கிறீர்கள்? ஏதோ வேலைக்கு வந்துவிட்டோம் என்பதால் சாதியை விட்டுவிட முடியுமா?”

ஏஎம்கே சிரித்துக் கொண்டே சொன்னார்: ”நாங்களும் சேரிதான். சொந்தக்காரர்கள். வெளியூரில் இருந்து வந்துள்ளோம்.”

கேட்டவர் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து கொண்டார். அன்றிரவு ஏஎம்கேயிடம் நான் கேட்டேன்: “நீங்கள் அப்படிச் சொன்னீர்களே, அவன் நம்மைத் தெரிந்து கொண்டு காட்டிக் கொடுத்துவிடப்  போகிறான்”

அப்போது நாங்கள் தலைமறைவாக இருந்தோம். ஏஎம்கே சொன்னார்:

நாம் புரட்சி செய்ய வேண்டும் என்றால் நம்முடைய வருக்க நிலையிலே இருந்து இறங்கி வருகிற மாதிரி சாதி நிலையிலே இருந்தும் இறங்கி வர வேண்டும். நமக்குச் சாதி இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் போதாது. சாதி பேரில் மிக அதிகமாக ஒடுக்கப்படுகிறவர்களுடன் ஒன்றாயிட வேண்டும். அதை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும். அதுதான் நமக்கு உண்மையான பாதுகாப்பு.”

தஞ்சையில் நடைபெறவிருந்த வழக்கு விசாரணைக்காகக் கடலூரிலிருந்து ஏஎம்கே திருச்சி சிறைக்கு மாற்றப்படும் செய்தி கிடைத்து நாங்கள் ஆவலோடு காத்திருந்தோம். திருச்சி சிறைக்குக் கொண்டுவரப்பட்ட போது அவரும் கூட எங்களையும் மற்ற தோழர்களையும் சந்திக்கும் ஆவலோடுதான் வந்திருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் அவரை எங்களோடு வைக்காமல், தனியாக ஓரிடத்தில் அடைத்து வைத்தார்கள். ஏமாற்றம்! ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள எங்களுக்குத் தேவைப்பட்டது மனவுறுதி!

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு – தாழி மடல் 20

++

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை):23

 அகரமுதல


ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன்      28 January 2023      


(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 23

4. குலமும் கோவும் தொடர்ச்சி

அழகிய பாண்டியன்

      பூதப் பாண்டியனுக்குப் பின்னே வந்த அழகிய பாண்டியன் பண்டைக் காலத்துப் பாண்டி மன்னருள் மிகச் சிறந்தவன். பொதியமலைச் சிற்றரசனாகிய ஆய் என்பவனை வென்று மேம்பட்ட அப் பாண்டியன் தன் வெற்றிச் சிறப்பு விளங்குதற் பெருட்டு அம் மலையடி வாரத்திலுள்ள ஓர் ஊருக்கு அழகிய பாண்டியபுரம் என்று பெயரிட்டான் என்பர்.24

சேந்தன்

     ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரை மாநகரில் அரசாண்டவன் சேந்தன் என்னும் செழியன். அவன் சிறந்த வீரனாகவும், செங்கோல் வேந்தனாகவும் விளங்கினான் என்பது  ‘சிலைத் தடக்கைச் செழியன்’என்றும், ‘செங்கோல் வேந்தன்’ என்றும் வேள்விக் குடிச் செப்பேடுகள் கூறுதலால் அறியப்படும். சேந்தமங்கலம் என்ற ஊர் பாண்டி நாட்டில் உண்டு.

கோச்சடையன்

திருஞானசம்பந்தர் காலத்தில் வாழ்ந்திருந்த பாண்டியன், அரிகேசரி மாறவர்மன்.25 அவனுக்குப்பின் அவன் மகனாகிய கோச்சடையன் அரசனாயினான். நாற்பதாண்டுகள் அரசு வீற்றிருந்த அம் மன்னன் பல்லவனோடு போர் புரிந்த பல நாடுகளை வென்று புகழ் பெற்றான். இராமநாதபுர நாட்டிலுள்ள கோச்சடை என்னும் ஊர் அவன் பெயரைத் தாங்கி நிற்கின்றது.

வரகுணன்

     கோச்சடைக் கோமகனுக்குப் பின்பு பட்டமெய்திய பாண்டிய மன்னருள் வீரமும் சீலமும் ஒருங்கே வாய்ந்தவன் வரகுண பாண்டியன்.26 அவன் ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசு புரிந்தவன். பல்லவ மன்னர் வீறு குறைந்திருந்த அக்காலத்தில் நந்திவர்மன் என்னும் பல்லவனிடமிருந்து சோழ நாட்டை அவன் கைப்பற்றி ஆண்டவன் என்பது நன்கு விளங்குகின்றது. திருச்சிராப்பள்ளிக்கு அருகே வரகனேரி என்னும் ஊரொன்று உண்டு. வரகுணன் ஏரி என்ற பெயரே வரகனேரி யென மருவிற் றென்பர். இவ்வூர் வரகுணபாண்டியன் பெயரைத் தாங்கி நிலவுகின்றது போலும்!

சேரவன் மாதேவி

     வரகுண வருமனுக்குப் பின்னே அவன் தம்பியாகிய பராந்தக பாண்டியன் பட்டம் எய்தினான். வீர நாராயணன் என்னும் விருதுப் பெயர் கொண்ட அம்மன்னன் இயற்றிய அறங்களும், நிகழ்த்திய போர்களும், பிறவும் சின்னமனூர்ச் செப்பேடுகளில் விரித்துரைக்கப்படுகின்றன. வானவன் மாதேவி என்னும் சேரகுல மங்கை அவன் தேவியாய்த் திகழ்ந்தாள். நெல்லை நாட்டிலுள்ள சேரமாதேவி என்னும் சேரவன் மாதேவி, அம் மங்கையின் பெயரால் அமைந்த ஊர் என்று கருதலாகும்.27

வீரபாண்டியன்

    தஞ்சைச் சோழர் தலையெடுத்தபோது பாண்டியர் பணியத் தொடங்கினர். பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசாண்ட பராந்தக சோழன் பாண்டி மன்னனை இருமுறை வென்று, அவன் தலைநகராகிய மதுரையையும் கைப்பற்றிக் கொண்டான். இங்ஙனம் பதங் குலைந்த பாண்டியன் மூன்றாம் இராச சிம்மன் என்பர். ஆயினும், அவன் மைந்தனாகிய வீரபாண்டியன் சோழரை வென்று, வசை தீர்ப்பதற்குக் காலம் பார்த்திருந்தான். அதற்கேற்ற வாய்ப்பும் வந்துற்றது. வடபுலத்து வேந்தன் ஒருவன் சோழ நாட்டின்மீது படையெடுத்துக் குழப்பம் விளைவித்தான்.28

அக்காலத்துச் சானங்கள் வீரபாண்டியனைச் ‘சோழன் தலைகொண்ட கோவீர பாண்டியன்’ என்று பாராட்டுதலால், அவன் போர்க்களத்தில் சோழன் ஒருவனைக் கொன்று புகழ் பெற்றிருத்தல் வேண்டும் என்று தெரிகின்றது. அவ்வெற்றியின் காரணமாக அவன் சோழாந்தகன் என்னும் விருதுப் பெயர் பூண்டான்.29 மதுரை நகரின் அருகேயுள்ள சோழாந்தக சதுர்வேதி மங்கலம் என்னும் ஊர் அவன் பெயர் தாங்கி நிலவுகின்றது.சோழந்தகன் என்பது சோழவந்தான் என மருவியுள்ளது.30

    வீர பாண்டியன் பெயரால் அமைந்த ஊர்கள் இன்னும் சில உண்டு. நெல்லை நாட்டு நாங்குனேரி வட்டத்தில் வீரபாண்டியன் நல்லூர் என்று முன்னாளிற் பெயர் பெற்றிருந்த ஊர் வீரபாண்டியம் என இன்று வழங்குகின்றது.31 மதுரை நாட்டுப் பெரிய குளம் வட்டத்தில் மற்றொரு வீரபாண்டியன் நல்லூர் உண்டு. புல்லை நல்லூர் என்னும் பழம் பெயர் வாய்ந்த அவ்வூர் வீரபாண்டியன் பெயரைப் பிற்காலத்தில் பெற்றதென்பது கல்வெட்டுகளால் விளங்கும்.32 அவ் வீரபாண்டிய நல்லூர் வீரபாண்டி எனக் குறுகியுள்ளது.

மூன்று பாண்டியர்

     பாண்டி நாட்டைச் சோழர் ஆட்சியினின்றும் விடுவிப்பதற்குப் பன்முறை முயன்றனர் பாண்டியர். இராசாதி ராச சோழன் காலத்தில் மூன்று பாண்டியர் ஒன்று சேர்ந்து உள்நாட்டுக் கலகம் விளைத்தார்கள். சோழன் படையெடுத்தான். பாண்டியர் மூவரும் எதிர்த்தனர். அவர்களில் மானாபரணனும், வீர கேரளனும் போர்க்களத்தில் இறந்தார்கள். அன்னார் பெயர் கொண்டு நிலவும் ஊர்கள் நெல்லை நாட்டிற் சில உண்டு. அம்பாசமுத்திர வட்டத்திலுள்ள மானாபரண நல்லூரும், தென்காசி வட்டத்திலுள்ள வீர கேரளன் புத்தூரும் அவரது சுதந்தர ஆர்வத்திற்குச் சான்றாக நிற்கின்றன.

சுந்தர பாண்டியன்

     பாண்டி நாட்டிலுள்ள ஊர்களில் ஒன்று மாறனேரி.33 முற்காலத்தில் அது மாறமங்கலம் என்னும் பெயரால் வழங்கிற் றென்பது சாசனத்தால் விளங்குகின்றது. அவ்வூர் சுந்தர பாண்டிய நல்லூர் என்ற மறு பெயர் பெற்றிருந்த தென்பதும், சுந்தர பாண்டீச்சரம் என்னும் சிவாலயம் அங்கு அமைந்திருந்த தென்பதும் கல்வெட்டால் அறியப்படுவனவாகும்.34 இத்தகைய மாறமங்கலம் அங்கெழுந்த ஏரியின் சிறப்பினால் மாறனேரி யாயிற்றென்று கொள்ளலாம்.

குலசேகரன்

     பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் மதுரையில் அரசு புரிந்த மன்னன் குலசேகர பாண்டியன். அவன் ஆட்சியின் இருபத்தைந்தாம் ஆண்டில் சில சிற்றூர்களைச் சேர்த்து, இராச கம்பீர சதுர்வேதிமங்கலம் என்னும் பெயரால் ஓர் ஊரை உண்டாக்கினான் என்று திருப்பூவணத்துச் செப்பேடு கூறுகின்றது. இராச கம்பீரன் என்பது குலசேகர பாண்டியனது விருதுப் பெயர் என்று தெரிகின்றது. இக் காலத்தில் இராமநாதபுரச்சிவகங்கை வட்டத்திலுள்ள இராசகம்பீரமே அவ்வூராகும்.

 (தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

24. The Chronology of the Early Tamils, p. 122, F.N.

25. இவனைச் சுந்தர பாண்டியன் என்றும், நெடுமாறன் என்றும் புராணங்கள் கூறும். நெல்லை நாட்டிலுள்ள அரிகேசரி நல்லூர் இவன் பெயரால் அமைந்தது போலும், இப்பொழுது அஃது அரிகேச நல்லூர் என வழங்கும்.

26. சின்னமனூர்ச் செப்பேடுகளில் இம்மன்னர் “கொற்றவர்கள் தொழு கழற்கால் கோவரகுண மகராசன்” என்று புகழப்பட்டுள்ளார். பட்டினத்தடிகள் திருவிடை மருதூர் மும்மணிக் கோவையில் இவருடைய சிவ பக்தியின் பெருமையைப் பாராயுள்ளார். “பெரிய அன்பின் வரகுண தேவர்” என்பது அவர் வாக்கு.

27. The Pandyan Kingdom, p. 79.

28. இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிண தேவன்.

 29. I.M.P.1175; 474 of 1909

30. The Pandyan Kingdom, p. 120 அதன் பழம் பெயர் குருவித் துறை.

31. T.A.S. Vol. I.p.90.

32. 426 / 1907. அங்குள்ள பழமையான சிவாலயம் கண்ணுடை ஈச்சரம் என்று கல்வெட்டிற் குறிக்கப்பட்டுள்ளது. அஃது இப்பொழுது கண்ணீசுவரர் கோயில் எனப்படும்

33. இஃது இராமநாதபுரம் நாட்டுச் சாத்தூர் வட்டத்தில் உள்ளது.

34. 481 / 1909




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages