(௩. தமிழர்கட்கு என்ன வேண்டும்? – திருத்துறைக்கிழார் – தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
ஆ.தமிழர்
௪. தமிழா உனக்குத் தன்மானமுண்டா?
கற்பனையில் உண்டான கல்லுருவங்களைக் கடவுள் என்று வணங்கலாமா? அவற்றின் முன் படையலிட்டும், பலியிட்டும், பாலாலும், பன்னீராலும், தேனாலும், சருக்கரையாலும் அக்கற்களை முழுக்காட்டி ஆடை சுற்றி, அணிகலன்பூட்டி, பூச் சார்த்திப் பொட்டிட்டு, மண்டியிட்டு விழுந்து கும்பிடலாமா? உன்னால் செய்ய முடியாத செயல்களை அக்கற்கள் எங்ஙனம் செய்ய முடியும்? அவை பிறர்துணையின்றி அசைய மாட்டா. வைத்த இடத்தைவிட்டு நகர முடியுமா? உனக்கு நன்மையோ தின்மையோ அவற்றால் இயற்ற இயலுமா? எங்காவது ஒரு கல்லுருவமாவது எழுந்து நடந்ததுண்டா? நீ பார்த்ததுண்டா? கல்லுருவத்தில் எந்தக் கடவுளையாவது நடந்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல உன்னால் முடியுமா? ஆனால், இன்றைய அறிவியல் முன்னேற்றத்தின் உதவியை நாடினால், ஒருகால் நடக்கச் செய்யலாம். எனவே, கடவுள் என்பது அச்சத்தாலும், அறியாமையாலும் எழுந்த கற்பனையே எனத் தெளிக.
உன் நெற்றியில் சாம்பலைப் பூசிக்கொண்டும், அதன்மீது ஆர(சந்தன)ப் பொட்டும், அதற்கு மேல் குங்குமப் பொட்டும் வைத்துக் கொள்வதால், நீ அடையும் நன்மை ஏதேனும் உண்டா? ஆயின், அறிவுப்பாதைக்கு எழுதியனுப்புக. திருமால் பக்தனாயின் சுண்ணக் கட்டியால் U போன்ற குறியும், Y போன்ற குறியும், நடுவில் சிவப்புக் கோடும் போட்டுக் கொள்வது எதற்காக?
நன்மை ஏதேனுமிருப்பின் நமக்கு எழுதுக. உடல் முழுவதும் சாம்பலும், நாமக்குழையும் திமிர்ந்து கொள்வதால் என்ன நன்மை கண்டாய்? அத்தகைய செயலால் இறவாமல் இருப்பவர் எவரேனும் உண்டா? கடவுள் என்ற ஒன்று இல்லை; உண்டு என்று உரைப்போர் பித்தலாட்டக்காரர்கள் என்கின்ற பெரியார் கூட எண்பத்தேழாம் அகவையை எட்டிவிட்டாரே! ஒவ்வொருவனும் தான் எந்த மதத்தான் என்பதைப் பிறர் அறிந்து கொள்ளச் செய்ய அணியும் அடையாளங்களே அவை. நெற்றியைப் பார்த்ததும் இவன் சிவமதம், இவன் திருமால் மதம், இவன் கிறித்தவ மதம், இவன் இசுலாம் மதம் எனப்பிறர் தெரிந்து கொள்ளத்தாமே பயன்படுகின்றன. இன்று உலகமக்கள் யாவரும் ஒரே இனம்; வேறுபாடில்லை; யாவரும் உடன்பிறந்தோரென வாழ வேண்டும் என்று நமது குடியரசுத் தலைவர் உள்பட அனைத்துலகத் தலைவர்களும் பேசி வருகின்றனர். இக்குறிகளால் வேறுபாட்டு உணர்ச்சியன்றோ வலியுறுகின்றது. மத உணர்ச்சியன்றோ மண்டைக் கேறுகின்றது?
நெற்றிக் குறியிடாத கிறித்தவன், இசுலாமியன், சீக்கியன், பௌத்தன், சமணன் முதலியோர் வளமுடன் வாழவில்லையோ? ஆனால் கிறித்தவன், கழுத்தில் சிலுவையும், இசுலாமியன் தலையில் குல்லாவும், சீக்கியன் தாடி மீசையும், பௌத்தன் மொட்டைத் தலையும், அடையாளங்களாகக் கொள்கின்றனர். இவையும் ஒருவகையில் வேற்றுமையை வளர்க்கும் செயலே. இந்து மதத்தானைப் போன்று நெற்றிக் குறிகள் இடுவதில்லையெனினும், ஒவ்வொரு மதத்தானும், எம்மதமும் சம்மதம் எனப் பேசிக் கொண்டே மேற்கூறிய அறிகுறிகளால் வேற்றுமை உணர்ச்சியை வளர்க்கிறான். எந்த மதத்தினனாயினும் தமிழ்நாட்டில் வாழ்பவனாகிய நீ தமிழனே. ஆதலால் எல்லாரும் தமிழர் என்ற ஒற்றுமையை உண்டாக்க மதச்சின்னங்கள் அணிவதை அகற்றுக. உயர்வு, தாழ்வு என்ற மனப்பாங்கு உன்னைவிட்டு ஓடும். நீ ஒருவனை உனக்குத் தாழ்ந்தவன் என்று நினைக்கின்றாய். உனது தன்மானம் என்னவாகும்? என்பதை எண்ணியதுண்டா? ஏன் இந்தப் புனைவு வேறுபாடு? கற்பனையில் தோன்றிய இவ்வேறுபாட்டைக் களைந்துவிட்டால் நாடு நலம் பெறும்.
ஆண்கள் மட்டில் இந்த வேறுபாட்டுணர்ச்சியை வளர்க்கின்றார்களா? பெண்டிர் ஈடுபடவில்லையா? எனின். பெண்களும் நெற்றியில் சாம்பலைப்பூசி, அதன்மேல் குங்குமப் பொட்டிடுகின்றனர். முக்காடு போட்டுக் கொள்கின்றனர். பெண்களும் வேற்றுமைக்கு வித்திடுவதில் சளைக்கவில்லை எனலாம்.
பிளவு பண்ணும் குறிகள்
இந்து மதத்தான் என்பவன் எதை எழுதத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழி போடாமல் எழுத மாட்டான். கிறித்தவ மதத்தான் சிலுவைக் குறியிடாமல் எழுத மாட்டான். இசுலாமியன் 786 போடாமல் எழுதுவதில்லை. எழுதுவதிலுமா மதவெறி புகவேண்டும்? எங்ஙனம் ஒற்றுமை உணர்ச்சி உருவாகும்?
அது மட்டுமா? உன் பெயருக்குப் பின்னால் முதலியார், நாயுடு, நாயக்கர், பிள்ளை, நாடார், தேவர், வாண்டையார் முதலிய வால்களை ஒட்டியே எழுதுகின்றாய். பிறரைப் பற்றிக் கூறும் போதும் கூட, அவ் வால் பட்டங்களைச் சூட்ட மறப்பதில்லை. ஆனால், இந்த வால் ஒட்டிக்கொள்ளும் வழக்கம் பெண்களிடம் இல்லை என்பது குறித்து மகிழ்கிறோம். பெண்களின் பெயர்கட்குப் பின் சாதிப்பட்டமாகிய வால்களை ஏன் வெட்டினார்கள் என்பது விளங்கவில்லை? ஒருவேளை. பெண்களுக்கு முதன்மையளித்தல் கூடாது. அடிமை வாழ்வு வாழப் பிறந்தவர்கள் என்ற எண்ணமாக இருக்கலாமோ? சாதிப் பட்டங்களால் நீ சாதித்தது என்ன? மதக்குறிகளால் நீ அடைந்த மதிப்பென்ன? வேற்றுமையை வளர்ப்பதைத் தவிர்த்து வேறென்ன கண்டாய்? ஏனைய மதத்தார் கண்ணோட்டத்தில் உன்னையே நீ தாழ்த்திக் கொள்கின்றாய்?
உன் வழிவந்தோரையும், உன்னையும் இழிவுபடுத்தும் இராமன் பிறந்தநாள், கிருட்டிணன் பிறந்தநாள், ஒன்பதிரவு, தீபாவளி, இராமலீலா, ஒலிப்பண்டிகை முதலிய விழாக்களையும், மூடத்தனத்தை வளர்க்கும் சரசுவதி பூசை, பிள்ளையார் சதுர்த்தி, கந்தர் சட்டி, கார்த்திகை, திருவாதிரை, திருப்பாவை, திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சிகள், வெள்ளி, செம்பு, வெண்கலத்தாலான உருவங்களை அணி செய்து தெருக்களைச் சுற்றித் தூக்கிக்கொண்டு மேளம், தாளம், எக்காளம், பேரிகை முழங்க வருவது. கடவுள் பெயரால் நேர்த்திக்கடன், இந்தக் கொடுமையைக் கேட்பாருண்டா? அருச்சனையாலும், வேள்வியாலும் பகைவர்களைத் தோற்கடிக்க முடியுமானால் ஏன் அரசாங்கம், மக்களிடம் இந்தியக் காப்பு நிதி திரட்டுகிறது? போர்க் கருவிகட்காகக் கோடிக்கணக்கில் பணம் செலவிடுகிறது? படைக்கு ஆள் சேர்க்கிறது? மேற்கூறிய கடவுள் தொண்டர்கள் இதை எடுத்துரைத்து, அரசினரைப் பணத்தைப் படைக்காகப் பாழாக்காது தடுத்துக் கற்களைக் கழுவியும், அவற்றிற்குப் பூச்சார்த்தியும், வேள்வி செய்தும் வெற்றி காண்போம் என்று திருத்த முன்வராதது ஏன்?
அருச்சனையாலும், வழிபாட்டாலும் வேள்வியாலும், மந்திரத்தாலும், பக்திப்பாடல்களாலும் எக்காரியத்தையும் வெற்றியடையச் செய்யமுடியுமானால், இந்தக் கடவுட் பித்தர்களையெல்லாம் எல்லைப்புறத்திற்கே அனுப்பி நாட்டைக் காக்கச் செய்யலாமே! மந்திரவாதிகள் மந்திரம் செப்பிப் பகைவரைத் தோற்கடிக்கலாமன்றோ? ஏன் அரசு இத்துணை இடர்க்கு உள்ளாக வேண்டும்? பல அரக்கர்களையும், அசுரர்களையும் கொன்று குவித்த தெய்வங்களை ஏவி பாக்கித்தானையும், சீனாவையும் முறியடிக்கக் கூடாதா? தமிழ்நாட்டு அரசு இங்குள்ள தெய்வங்களையும், தெய்வப் பித்தர்களையும் உடனே பாக்கித்தான் போர் முனைக்கு அனுப்ப முன் வருமா? அவர்கள் இங்கிருந்து கொண்டு வெற்றிக்கு உழைக்கிறார்கள். நேரே சென்றால் நமக்கு முழு வெற்றிதானே! மதச்சார்பற்ற அரசு இதைச் செய்யுமா?
தமிழா! நீ இவையெல்லாம் எண்ணிப் பார்த்து, நன்கு சீர்தூக்கிப் பார்த்து, பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உண்மையுணர்ந்து, நாட்டுக்கு நன்மையையே செய்க. அடிமை மனப்பான்மை, அச்ச மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை மூடப்பழக்க மனப்பான்மை முதலியவற்றை ஒழித்து, வாழ்வு வளம் பெறுவதற்குரிய நல்ல வழிவகைகளை மேற்கொண்டு, முன்னேறி சிறந்த பகுத்தறிவுவாதியாகத் தன்மானங்கெடாது செயலாற்றி, நல்லவனாகவும், வல்லவனாகவும் வாழ்வாயாக!
பிறரை அளவுக்கு மேல் புகழ்ந்துரைத்து வயிற்றைக் கழுவும் வாழ்க்கையை அறவே அகற்றி, உள்ளதை உள்ளவாறுரைத்து வாழும் உயர் வாழ்வைக் கைக்கொண்டு புகழுடன் மாந்தப் பண்புடன் புனித வாழ்வு வாழ்க! இதுவே உனக்கு யாம் கூறும் அறிவுரையும், அறவுரையுமாகும். பொய்க் கூற்றும், போலியுரையும், புனைந்துரையும் ஒழிக! தன்மானம் தழைக்க!
(நன்றி : அறிவுப்பாதை)
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
(வெருளி நோய்கள் 256 – 260 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 261 – 265
ஆமை, கடலாமை பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஆமை வெருளி.
00
ஆய்வகம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஆய்வக வெருளி.
வேதியப்பொருள்கள்(chemicals) மீதான ஒவ்வாமை, பேரச்சம் உள்ளவர்கள் ஆய்வகம் அல்லது ஆய்வுக்கூடம் பற்றிப் பேரச்சம் கொள்கின்றனர்.
ஆய்வின் பொழுது தவறு நேர்ந்து தீய வாயு வெளியேறும், தீப்பிடிக்கும், கண்ணாடிக் குடுவைகள் உடைய நேரிடும், இவற்றால் உடலுக்குத் தீங்கு நேரிடலாம், உயிரிழப்பும் நேரலாமஎன்பன போன்ற அச்சங்கள் ஏற்பட்டு ஆய்வக வெருளிக்கு ஆட்படுகின்றனர்.
00
ஆரிகன்( Oregon) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆரிகன் வெருளி.
ஆரிகன்/ஓரிகன் ஐக்கிய அமெரிக்காவில் 33 ஆவது மாநிலமாக 1859இல் இணைந்தது. இதன் தலைநகரம் சேலம்(Salem). பழங்குடியினர் பெரும்பான்மையர் வசித்து வந்த நிலப்பகுதி இது.
ஆரிகன்/ஓரிகன் மக்கள், வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கம், நாகரிகம்,பண்பாடு முதலியன குறித்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
ஆர்கன்சாசு(Arkansas) மாநிலம் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆர்கன்சாசு வெருளி.
முதல் எழுத்து குறிலாக இருக்கும் பொழுது இரண்டாவது எழுத்து ‘ர்’ ஆக இருந்தால் ‘ரு’ வடிவம் பெறும். ஆனால், ‘ர்’ என்றே ஒலிக்கும் வகையில் முதல் எழுத்தை நெடிலாக உச்சரித்தால் சொல்லினிமை ஏற்படுகிறது. எனவே, அருக்கன்சாசு என்பதை விட ஆர்கன்சாசு என்பது நன்றாக உள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 25 ஆவது மாநிலமாக 1836 இல் இணைந்தது இது. தென்பகுதியில் அமைந்துள்ள இதன்தலைநகரம் சிறுமலை(Little Rock)
ஆர்கன்சாசு மாநிலம், மக்கள், அவர்களின் நாகரிகம், உணவு, பண்பாடு, கொடி, முத்திரை, பழக்க வழக்கம், முதலானவற்றின்மீதான வெறுப்பும் பேரச்சமும் ஆர்கன்சாசு வெருளியை உருவாக்கிறது.
00
புனைவுரு ஆர்தர்(Arthur Timothy Read) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆர்தர் வெருளி.
மார்க்கு பிரெளன் (Marc Brown) உருவாக்கிய ஆர்தர் புத்தகத்திலும் தொலைக்காட்சி அசைவூட்டத் தொடரிலும் ஆர்தர் திரிமோதி முதன்மைப் பாத்திரம்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 15 November 2015 அகரமுதல
11 : தமிழே இன்பம்! – முடியரசன்
தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே – நீயே
தலை நின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு
இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?
பாவேந்தர் மரபுக்கவிஞரான முடியரசன் அவர்களின் ‘முடியரசன் கவிதைகள்’ தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்ட பாடல்.
“பிறவிகளுக்கெல்லாம் காரணமாகும் தாயைப்போன்று எங்களின் தாயாய் விளங்கும் மொழிகளின் தாயே! எங்களை இயக்கும் உயிரே! உன்னை வழங்கும் குழந்தையாகிய நான் பெறுதவற்கு அரிய பேறாய் எனக்குக் கிடைத்த செல்வமே! எல்லா மொழிகளுக்கும் தலைமையாய் விளங்கும் சிறப்பு மிக்கவளே! உன்னுடைய திருவடியைப் பணிவுடன் வணங்குகிறேன். இங்கே நீ இ(ல்)லை என்றால் எனக்கு ஏது இன்பம்? நீ அன்றோ இன்பம்!”
எனத் தமிழே நமக்கு எல்லாம் என்கின்றார் கவிஞர்.
தமிழைத் தாயாகவும் உயிராகவும் செல்வமாகவும் கூறும் கவிஞர் இத்தகு சிறப்புடைய தமிழை நாம் வணங்கிப் போற்ற வேண்டும் என்கிறார். தமிழில்லையேல் இன்ப வாழ்வு இல்லை என்பதை உணர்த்தி இன்ப வாழ்விற்குத் தமிழைப் பற்ற வேண்டும் என்கின்றார் கவிஞர் முடியரசன்.
பேச்சிலும் எழுத்திலும் படிப்பிலும் வணக்கத்திலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என அனைத்து இடங்களிலும் தமிழ் புறக்கணிக்கப்படும் நிலையைப் போக்கித் தமிழே எல்லாம் என ஆக்கிக் கவிஞரின் கனவை நனவாக்குவோம்!
– இலக்குவனார் திருவள்ளுவன்