ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 25 April 2026
(சட்டச் சொற்கள் விளக்கம் 1047-1050: தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 1051-1055
| 1051. Apprentice at law | பயிற்சி வழக்குரைஞர் வழக்குமுறைப் பயிலுநர் பயிற்சிச் சட்டம், 1961 இந்தியாவில் பயிற்சிப் பருவத்தைக் ஒழுங்குபடுத்துகிறது. இதில் பணிப்பயிலுநர்களுக்கும் பணியாளர்களுக்கும் உள்ள உரிமைகள், கடமைகள், பாதுகாப்புகள் வரையறுக்கப்படுகின்றன. இச்சட்டம் மைய அரசால் அறிவிக்கப்பட்ட, இசைவளிக்கப்பட்ட அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். இது வேண்டப்படும் சிறப்புப் பணிப்பயிற்சித் திட்டங்களுக்கு இசைவை வழங்குகிறது. |
| 1052. Apprenticeship | பயிற்சிப் பருவம் பணிப்பயிற்சி தொழிற் பயிற்சிநிலை மீன்பிடித்தல், கைவினை, தையல், ஊர்திப் பழுது, எந்திரப் பணி முதலான பணிகளில் புதியதாகச் சேரும் பொழுது அவற்றில் தகுதி பெறுவதற்காக அளிக்கப்படும் பயிற்சிக்கான காலம். ஒரு பதவியில் சேர்ந்ததும் அதற்குரிய தகுதிபெற்று அதன் தகுதி நிலையை அறிய உதவும் பயிற்சிக்காலமே தகுதிகாண் பருவம்(Probation Period). ஒரு குறிப்பிட்ட தொழில் அல்லது கைவினையில் தேர்ச்சி பெறுவதற்காக அளிக்கப்படும் பயிற்சியே தொழிற்பயிற்சி. தகுதிகாண் பருவம் என்பது சில திங்களில் இருந்து ஈராண்டு வரை இருக்கலாம். ஆனால் தொழிற்பயிற்சி என்பது ஈராண்டிற்கும் மேல் இருக்கலாம். |
| 1053. Approbate and reprobate | ஏற்றலும் மறுத்தலும் ஏற்கவும் மறுக்கவும் ஏற்றலும் மறுத்தலும் கோட்பாடு சட்ட ஆவணத்தின் பயன்மைகளை ஏற்பதிலிருந்து ஒரு தரப்பாரைத் தடுப்பது ஆகும். அதே நேரம், சட்டக் கோரல்களில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் இதன் சுமையை மறுப்பதாகும். ஏற்கவும் மறுக்கவும் என்பது சட்டக் கோட்பாடு ஆகும். இதன்படி ஒருவர் ஒரே நேரத்தில் ஒன்றை ஏற்கவும் மறுக்கவும் முடியாது. “ஒருவரால் இன்மாவை(cake) தின்று தீர்க்கவும் அப்படியே வைத்திருக்கவும் முடியாது” என்னும் தொடர் இதற்கான விளக்கமாகும். quod approbo non reprobo என்னும் இதன் இலத்தீன் தொடரின் பொருள் நான் எதை ஏற்கிறேனோ அதை மறுக்க முடியாது என்பதாகும். ஒரு தரப்பு சட்டஆவணத்தை முதலில் ஏற்றுவிட்டுப் பின்னர் மறுக்கலாம் என்ற எண்ணப்போக்குக் கொள்ளக் கூடாது என்பதற்காக இது சொல்லப்படுகிறது. இது வணிமாற்றத்தின் (transaction) மூலம் ஆதாயம் காணும் தரப்பு, அதனுடன் தொடர்புடைய கடப்பாடுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. |
| 1054. Approbation | ஒப்புதல் ஏற்பு ஒரு தரப்பு தரும் ஆவணத்தை மறு தரப்பார் ஏற்றுக் கொள்ளல் அல்லது நீதித்துறை ஒப்புக் கொள்ளுதல் என்பதை இது குறிக்கிறது. ‘Approbation’ ஒப்புதல் என்னும் பொருளைத் தரும் பிரெஞ்சு இலத்தீன் சொல்லாகும். |
| 1055. Appropriate | தக்க பொருத்தமான தனதாக்கு உரிய ஒதுக்கு ஒதுக்கியளி பணியாட்சித் தீர்ப்பாயச் சட்டம் 1985(THE ADMINISTRATIVE TRIBUNALS ACT, 1985) கூறு 36, விதிகளை உருவாக்குவதற்கான அதிகாரம் உடைய உரிய அரசு(Power of the appropriate Government to make rules) குறித்துக் கூறுகிறது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 1311 -1315 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1316 -1320
கணவன் அல்லது மனைவி, தன் மனைவி அல்லது கணவன்மீது கொண்டுள்ள அளவுகடந்த பேரச்சமே (வாழ்க்கைத்) துணைவர் வெருளி.
துணைவரின் தவறான பழக்க வழக்கங்கள், முரட்டுக் குணங்கள், பொறுப்பற்ற தன்மை, கட்டாயத் திருமணம், உள்ளத்தில் இடம் தராமை போன்றவற்றால் வாழ்க்கைத் துணைவர் மீது அளவுகடந்த வெறுப்பு கொள்வோர் உள்ளனர். ஒருவரை மற்றொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து அன்பு செலுத்தினால், திருவள்ளுவர் கூறுவதுபோல் வாழ்க்கைத் துணை நலத்தைப் பேணினால், இதற்கு இடமில்லை.
00
வண்ணங்களைத் தூவி வரையப்படும் துமி ஓவியம் தொடர்பான தொடர்பான அளவு கடந்த பேரச்சம் துமி ஓவிய வெருளி.
முதலில் தூவு பூச்சு வெருளி எனக் குறிப்பிட்டிருந்தேன். Spray Painting என்பதன் நேர் பொருள். எனவே, மனம் நிறைவளிக்கவில்லை. வண்ணத் துளிகள் மூலம் வரையப்படம் ஓவியம் என்னும் பொருளில் துமி ஓவியம் எனக் குறித்துள்ளேன். (துமி = துளி)
00
தும்மல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் தும்மல் வெருளி.
மணிக்கு 160 அயிரைப்பேரடி(கி.மீ.) விரைவில் தும்மல் வருவதாகக் கூறுகிறார்கள். எனவே, இதன் தாக்கத்தால் அச்சம் வருவது இயற்கைதான். எனினும் இல்லாத நோய்களை இருப்பதாக எண்ணி அதன் காரணமாகத் தும்மல் வருவதாகப் பலர் அஞ்சுகின்றனர்.
தும்மினால் யாரோ நம்மை நினைப்பதாகக் கூறும் பழக்கம் உள்ளது. தும்மினால் 100 ஆண்டு வாழ்க என்னும் பொருளில் 100 என்று சொல்வதும் நம்மிடையே உள்ளது. தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
ஊடியிருந்தோமா தும்மினார் யாம் தம்மை
நீடுவாழ் கென்பாக்கு அறிந்து.(குறள் எண் 1312) என்கிறார்.
அஃதாவது, காதலரோடு ஊடியிருந்த நேரம் பேச வைப்பதற்காக அவர் தும்மினாராம். அப்பொழுதுதானே நீடு வாழ்க என வாழ்த்திக் காதலி பேசுவார், என்கிறார்.
அதேநேரம் ஒற்றைத்தும்மல் தும்மினால், தொடங்க இருக்கும் செயல் அல்லது புறப்பட்டுப் போகும் நோக்கம் நிறைவேறாது, இது கெட்ட அறிகுறி என்று எண்ணும் பழக்கம் உள்ளது. இதனால் நோய் அறிகுறியாக மட்டுமல்லாம் கேடு அறிகுறியாகக் கவலைப்பட்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
Sternuta என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தும்மல் எனப் பொருள்.
00
தூக்கம் குறித்த தேவையற்ற மிகையான பேரச்சம் துயில் வெருளி.
உறக்க வெருளி(Somniphobia), தூக்க வெருளி(seruphobia) எனத் தனித்தனியாகக் கூறுவதை விட எல்லாவற்றையும துயில் வெருளி என்றே சொல்லலாம்.
புது வருவாயையுடைய ஊரின் தலைவனோடு தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துயிலில் இருந்து எழுப்பியதற்காகத் தலைவி சேவல்மீது சினம் கொள்வதாக மதுரைக் கண்ணனார் (குறுந்தொகை 107, 6-7) கூறுகிறார். தூங்கினால் கனவு வரும்; கனவு வந்தால் தலைவன் வருவான் என உறக்கத்தை விரும்பும் தலைவிகள் உண்டு. ஆனால் இப்பொழுதெல்லாம் உறங்கினால் கெட்டக் கனவு வரும் என அஞ்சுவோர் உள்ளனர்.
படுக்கச் சென்றால் அப்படியே இறப்பு வரும் எனப்பேரச்சம் கொள்வோரும் உள்ளனர். பொதுவாக உடல் நலமற்றவர்கள், தள்ளா அகவையில் உள்ள முதியோர் இவ்வாறு பேரச்சம் கொள்வோர்.
இளைஞர்கள் உறங்கினால் மார்பில் ஏறிக் கன்னிப்பிசாசு / மோகினிப் பிசாசுஅழுத்தும் என அஞ்சுவதும் உண்டு.
hypnos என்னும் கிரேக்கச் சொல்லிற்கு சொல்லிற்குத் துயில் எனப் பொருள்.
00
பயணத்தில் (பேருந்தில் / தொடரியில்) தூங்கும் பொழுது வாயில் நீர் ஒழுகும் என்ற பேரச்சம் கொள்வது துயில்எச்சில் வெருளி.
பேருந்தில் / தொடரியில்(தொடர் வண்டியில்) பயணம் செய்யும் பொழுது அடுத்தவர் மேல் சாய்ந்து தூங்கி விழுவோம், அப்பொழுது வாயில் இருந்து எச்சில் ஒழுகும், இதனால் பிறர் கேலிக்குள்ளாவோம் அல்லது கண்டனத்திற்கு உள்ளாவோம் எனச் சிலர் அஞ்சுவர். பொதுவாகப் பருமனானவர்களுக்கும் 45-55 அகவைக் குட்பட்டவர்களுக்கும் இவ்வாறு அச்சம் உள்ளது. வாயில் இருந்து எச்சில் ஒழுகுவதும் பயணத் தூக்கமும் இணைவதால் இச்சிக்கல்.
தொடர் வண்டியில் தூங்கும் பொழுது அடுத்த இருக்கையில் உள்ளவர் மேலே தூங்கி வழிந்து எச்சில் விடுவதைத்தான் மேனாட்டார் குறிக்கின்றனர். பேருந்து, சீருந்து முதலான பயணத்திற்கும் இது பொருந்தும்.
இலத்தீனில் aqua என்றால் நீர், dormo என்றால் தூக்கம் எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
00