சோமீஸ்வரமுடைய நாயனார் கோயில் சிவன் கோயில்
கள்ளக்குறிச்சி மாவட்டம்
சோமண்டார்குடி கொற்றவையைப் பார்த்தபின், பராந்தகர் கல்வெட்டைக் காண அருகில் உள்ள நீரற்ற குளத்தில்
கடும் வெயிலைப் பொருட்படுத்தாமல் இறங்கினோம். பல்வேறு குப்பைகள்,முட்செடிகள். புற்கள்.
கடந்த முறை வந்த போது அந்த கல்வெட்டு பொறிக்கப்பட்ட முட்டை வடிவப் பாறை குளத்தினுள்ளே (குளத்தின் தென் கிழக்கு மூலை) கிடந்தது. இப்போது அந்த பாறை அந்த இடத்தில் காணவில்லை. வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் அருண்குமார் அவர்கள், இந்த கோயிலின் ஆயிரம் ஆண்டுப் பழமையை உணர்த்தி நிற்கும் சிறப்பு மிக்க அந்த பாறைக் கல்வெட்டை குளத்தில் இருந்து எடுத்து கோயிலுக்குள் வைத்துப் பாதுகாக்குமாறு அந்த ஊர்ப் பெரியவர்களிடம் தொடர்ந்து கோரி வந்தது நினைவுக்கு வரவே குளத்தை விட்டு மேலேறிக் கரையில் தேடினோம். ஆம் . கல்வெட்டு பொறிக்கப்பட்ட பாறை, கோயில் சுற்றுச்சுவரின் வடகிழக்கு மூலையில் தரையில் கிடத்தப் பட்டிருந்தது கண்டு நிம்மதி அடைந்தோம்.
இந்த கோயிலில் பாறைக் கல்வெட்டுடன் சேர்த்து எட்டு கல்வெட்டுகளும் ஊரின் வடக்கே தாகப்பாடி அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் தனியார் நிலத்தில் ஒரு சித்திரமேழிக் கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளன.

கல்வெட்டு
சோமீஸ்வரர் கோவிலின் காலத்தால் முந்தைய கல்வெட்டு இதுவே ஆகும். தனிப் பாறை ஒன்றில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டு சற்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனை வெறும் பாறை என எண்ணிப் பல ஆண்டுகளுக்கு குளத்தில் போட்டு விட்டனர்.

இடம்:
சோமீஸ்வரமுடைய நாயனார் கோயில் (சிவன் கோயில்) வடகிழக்கு மூலையில் கிடத்தப் பட்டுள்ள தனித்த முட்டை வடிவப் பாறை.

காலம்:
முதலாம் பராந்தக சோழரின் (873-955)பத்தாம் ஆட்சியாண்டு கி.பி.917 (?)

அரசர்:

செய்தி:
பராந்தக சோழரின் பத்தாம் ஆட்சியாண்டில் "அழிசுக்காடையார் கங்க சிகாமணி தேவி அண்ணாவள் அத்திமல்லி" என்பவர் இக்கோவில் இறைவரான திருசோமீஸ்வரருக்கு பொன் கழஞ்சு (பொற்காசுகள்) தானமாக கொடுத்துள்ளார். கல்வெட்டு சிதைந்துள்ளதால், எதற்காக, எத்தனை காசுகள் கொடுத்தார் என அறியக்கூடவில்லை.

கல்வெட்டுப் பாடம்:
1. ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரி பர்மற்கு
யாண்டு ப
2.த்தாவது(?) மிலாட்டுப்பாலூர் கூற்றத்து பாலூ
3. ர் திருசோமீச்சுவரர்க்கு அழிசுகாடையார் கங்க சிகாம
4.ணியார் தேவி அண்ணாவள்ளத்திமல்லி வைச...
5.ரகதித் தவல் கொட்டு வீதம்.. குடுத்த பொன் பெருக்க(?)....
6. .........ற் கழஞ்சு
துணை நூல்:
சோமண்டார்குடி பொக்கிஷங்கள்
மரு. இ.அருண்குமார்