சோழர் காலச் சமூக நிலை

3 views
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jun 21, 2026, 5:02:10 AM (3 days ago) Jun 21
to தமிழ் மன்றம்
சாதி இன்று இந்தியா முழுவதும் சமூகத்தின் இறுகிப் போன ஒரு கூறாக உள்ளது. தமிழ் சமூகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இந்த சாதிச் சமூகம் காலம் காலமாக இப்படியே இருக்கவில்லை. இதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்த்தால் இது காலம் தோறும் மாறி வந்துள்ளது என்பது புரியும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இடைக்காலச் சோழர் காலத்தில் அதாவது 10 -13 நூற்றாண்டுகளில் தான் சாதி ஒரு சமூக நிறுவனம் என்ற வகையில் ஓரளவு முழுமையடைந்தது என்பதற்கு கல்வெட்டுச் செய்திகள் சான்று பகர்கின்றன
சோழர் காலக் கல்வெட்டுக்களில் அரச குடும்பத்தினர்,அரசு அலுவலர், வட்டார தலைவர், ஊர் மன்ற உறுப்பினர், வேளாண் குடிகள், கைவினைஞர் என்று பலர் பல சூழ்நிலைகளில் காட்சி தருகிறார்கள். இவர்கள் ஒரு பகுதியினரை கொடையாளிகளாகவும், இன்னொரு பகுதியினரைக் கொடை பெறுபவர்களாகவும் பிரிக்கலாம். இவர்களில் பலர் சபையார், ஊரார் முதலிய குழுக்களாக காணப்படுகிறார்கள். அவர்களை நீக்கிவிட்டு தனித்த நிலையில் பேர்களை மட்டும் பார்த்தால் அவர்கள் சார்ந்த சமூக நிலைமைகளைப் பற்றி ஓரளவு அறியலாம்.
கொடையாளிகள் என்ற நிலையில் பிராமணர்,வேளாளர், வணிகர் ஆகியோர் பரவலாக காணப்படுகிறார்கள். எல்லா வகையிலும் பரவலாக முதன்மை இடத்தை வகித்த இரு இனங்கள் பிராமணரும்,வேளாளரும் என்று சொல்ல வேண்டும். இதை வேறு சில சான்றுகளும் உறுதி செய்யும். நிலவரி வசூல் போன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலும் இவர்கள் தனித்து சுட்ட படுகிறார்கள். 11ஆம் நூற்றாண்டு முடிய உள்ள செப்பேடுகளில் நிலக்கொடை பற்றி அரசாணைகள் பெறுபவர்களுள் முதன்மை நிலையில் இருப்பவர்கள் பிரமதேய கிழவர்கள் அதாவது பிராமண நிலக்கிழார்கள் மற்றும் வேளாண் நிலக்கிழாரான நாட்டாருமேயாகும். இவர்கள் சோழ அரசு அலுவலர் பதவிகளில் முறையே பிரம்மராயன்,மூவேந்த வேளாண் ஆகிய பட்டங்கள் பெற்று முக்கிய இடத்தை வைத்தவர்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
வைதீகச் சடங்குகள் செய்பவர் என்ற முறையிலும் கோயில் பூசைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்ற முறையிலும் பிராமணர்கள் முதலிடத்தைப் பெற்றாரகள். இந்தச் சடங்கு வழியான தகுதியை அவர்களுடைய நிலவுடைமை மேலும் கூட்டியது. குறிப்பாக பிரம்மதேய ஊர்களில் பிராமணருக்கு அடுத்தபடியாக மற்ற யாவரும் மதிக்கப்பட்டார்கள்.
பரம்பரையாக நிலவுடமையாளர்களாக இருந்த வெள்ளாளர்கள் அடுத்த படிநிலையில் இருந்தார்கள். இவர்களுடைய ஊர்கள் வெள்ளான்வகை அல்லது வேளாண் ஊர்கள் என்றும் ஊர் மன்றங்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். வணிகர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் தொழிலால் செல்வவளம் பெற்றவர்களாகவும் நிலவுடமையாளர்களாகவும் இருந்தார்கள். வணிக ஊர்கள் நகரம் என்று அழைக்கப்பட்டன. அவ்வூர்களின் மன்றங்கள் நகரத்தார் எனப்பட்டன.
சோழர் கால சமூக மாற்றங்களைப் புரிந்து கொள்ள அக்கால அரசியல் மாற்றங்களையும் ஆராயவேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தொடங்கிய சோழராட்சி முதலில் தஞ்சாவூர் மாவட்டத்திலேயே நிலைகொண்டிருந்தது. அடுத்த ஒரு நூற்றாண்டில் வட தமிழ்நாட்டில் பெரும் பகுதியை தன் கீழ் கொண்டுவர சோழ அரசு முயற்சி செய்தது. முதல் இராசராசன் ஆட்சிக் காலம் தொடங்கி இம்முயற்சி தமிழ் நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்தது. பதினோராம் நூற்றாண்டு முழுவதும் சாளுக்கியர்,பாண்டியர்,சேரர், கீழைக் கங்கர், இலங்கை அரசர் என்று பல அரசுகளோடு பெரும் போர்கள் பல நடந்தன.
இப்போர் நடவடிக்கைகளால் சமூகத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவேண்டும். நிலத்தில் சமூகவுடைமை போய் தனியுடைமை வளர்வதற்கு இப்போர்கள் ஒரு முக்கிய காரணியாக அமைந்தன. இன்னொரு இணை விளைவு மக்கள் இடப்பெயர்ச்சியாகும். ஒன்பதாம் நூற்றாண்டுவரை சிறிய அளவில் நடந்து வந்த மக்கள் பெயர்ச்சி 10 -11ஆம் நூற்றாண்டுகளில் பெருமளவில் நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழ் வீரர்கள், வணிகர்கள் முதலியோர் வெளியே சென்றனர். வெளியிடங்களிலிருந்தும் பலர் தமிழ்நாட்டுக்குள் வந்தனர். தமிழ்நாட்டுக்குள்ளேயேயும் பெயர்ச்சி பரவலாக இருந்தது. சோழ அரசின் அலுவலர்கள் நாடு முழுவதும் சென்று வந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக அதுவரை அரசியலின் தாக்கத்துக்கு ஆளாகாமல் ஒதுங்கி இருந்த பல இனத்தவர் சோழ அரசால் ஈர்க்கப்பட்டு அரசியல் மயப்படுத்தப் பட்டார்கள். சோழரின் பெரும் படையையில் சேர்ந்த பலர் முதன்முறையாக அரசியலுக்கும் சமவெளி பண்பாட்டுக்கும் அறிமுகமானார்கள்.
இந்த வகையில் சோழர் படைக்கு ஈர்க்கப்பட்ட ஒரு போர் மரபு இனம் பள்ளி ஆகும். சோழர் படையில் வில்லிகள் அதாவது வில்வீரர் பிரிவில் இவர்கள் மிகுதியாக சேர்க்கப்பட்டார்கள். தென் ஆற்காடு மாவட்டத்தில் இந்த வில்லிகள் படை பல இடங்களில் காணப்படுகிறது. நாளடைவில் பள்ளிகள் நிலக்கிழார்களாக மாறினார்கள் என்று தெரிகிறது.
போர் மரபு இனமாக இருந்து நிலவுடைமை இனமாக மாறிய இன்னொரு இனம் சுருதிமான் ஆகும். பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் சுருதிமான் நிலக்கிழார்களாக பெரம்பலூர் கல்வெட்டுக்களில் தென்படுகிறார்கள். அதே நேரத்தில் அவர்கள் அகம்படியார் என்றும் குறிப்பிடுகிறார்கள். மேலும் சுருதிமான் ராஜேந்திர சோழத் தெரிந்த வில்லிகள் படையைச் சேர்ந்த படை முதலிகள் மற்றும் வீரர்களால் 1216இல் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. சுருதிமான் நிலக்கிழார்கள் தங்களை ஐஞ்சுநாட்டார் என்று அழைத்துக் கொண்டார்கள்.
இதே வட்டாரத்தில் நத்தமான் எனப்பட்ட இனம் யாதவ குலத்தவர் என்றும் சித்திரமேழி பெரிய நாட்டார் என்றும் சுட்டப்படுகிறது. இந்த அடைமொழிகள் இவ்வினத்தவர் முதலில் கால்நடை வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும் 12 -13ம் நூற்றாண்டில் நிலக்கிழார்களாக மாறி விட்டார்கள் என்பதையும் காட்டும்.
ஐஞ்சு நாட்டார், பள்ளி நாட்டார் அல்லது பன்னாட்டார், திருவாய்ப்பாடி நாட்டார் முதலிய பெயர்களில் உள்ள நாட்டார் என்ற பின்னொட்டு இவ்வினங்கள் இப்போது வேளாண் நாட்டாரைப் போல் தாங்களும் நில உடைமையாளர் என்ற தகுதியுடையவர்கள் என்பதை நிலைநிறுத்த செய்த முயற்சியின் ஒரு வெளிப்பாடாகும். இந்த வகையில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு உடைந்த கல்வெட்டில் காணப்படும் அகம்படி வேளானும், பள்ளி வேளாணும் என்ற சொற்றொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது வேளாளர் தகுதிக்கு அகம்படியாரும் பள்ளிகளும் உரிமை கொண்டாடினார்கள் என்று இதை விளக்கலாம்.
சோழர் படையில் முக்கிய இடத்தை வகித்த கைக்கோளர் 14 நூற்றாண்டில்தான் தெளிவாக நெசவுத்தொழில் புரிபவர்களாக காணப்படுகிறார்கள். அதேபோல சோழர் படையில் ஒரு பிரிவினராக இருந்த நியாயத்தாரும் 15ஆம் நூற்றாண்டில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டதைப் பார்க்கிறோம். கைக்கோளரும், நியாயத்தாரும் சோழர் காலத்திலேயே நெசவுத் தொழில் செய்து வந்தார்கள் என்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லை. எப்படி இருந்த போதிலும் கைக்கோளர் முதலிய படைவீரர்கள் சோழர் காலத்தில் நில உடைமையாளர்களாக ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன. ஆங்காங்கு அரசால் படைகளுக்கென்று படைப்பற்று ஊர்கள் அளிக்கப்பட்டன. அதாவது இவ்வூரின் வருவாயில் பெரும் பகுதியை இவர்கள் அனுபவிக்க உரிமை வழங்கப்பட்டது. நாளடைவில் இந்நிலங்களில் முழு காணி உரிமையும் தங்களுடையதாக
ஆக்கிக்கொள்ள முனைந்தார்கள்.
காட்டாக 1174 ல் பொறிக்கப்பட்ட ஒரு கீழப்பழுவூர் கல்வெட்டு குன்றக் கூற்றத்தைச் சேர்ந்த ஊர்கள் பலவும் படைப்பற்றாய் ஆனதால் காணியாளர் பயிர் செய்ய முனையவில்லை என்று தெரிவிக்கிறது.
பழங்காணியாளர் தங்கள் உரிமைகளை இழக்க வேண்டி வந்தது. ஆகவே பழங்காணியாளருக்கும் புதிய காணியாளருக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றுவது இயல்பே. இதன் ஒரு வெளிப்பாடே இடங்கை, வலங்கை உருவாக்கம் என்று கருத வேண்டியுள்ளது.
சோழர் ஆட்சி காலத்தின் பிற்பாதியில் 11 -12 ஆம் நூற்றாண்டுகளில் உண்டான ஒரு சமூகக் கூறு வலங்கை, இடங்கை என்ற இரட்டைச் சமூக பிரிவினையாகும். இப்பிரிவினை அடிப்படையில் படையமைப்பு சார்ந்ததாக காணப்படுகிறது. பதினொன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில் வலங்கைப் படைகள் பெரிதும் பேசப்படுகின்றன.
அந்நூற்றாண்டின் பிற்பாதியில் வலங்கை இடங்கை மகமை என்ற வரி பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இலங்கையில் பொலநறுவை நகரில் உள்ள 1120 ஒட்டி எழுதப்பட்ட விஜயபாகுவின் கல்வெட்டில் முதன்முதலாக இடங்கை படைப்பிரிவு காணப்படுகிறது. அக்கல்வெட்டில் இலங்கை அரசிடம் பணிபுரிந்த தமிழ் வேலைக்காரப் படை, வலங்கை, இடங்கை, சிறு தனம், பிள்ளைகள் தனம், வடுகர் மலையாளர் என்ற பிரிவுகள் கொண்டிருந்தது என்ற செய்தி கிடைக்கிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தான் இடங்கை சாதிகள் பற்றிய கல்வெட்டுகள் கிடைக்கின்றன.
சோழர் கால கல்வெட்டுச் செய்திகள் குறைவாக இருந்தாலும் சோழர் காலத்தில் சமூக பொருளாதார உருவாக்கத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்தன என்பதை அவை கோடி காட்டுகின்றன. நிலவுடைமையில் பத்தாம் நூற்றாண்டு வரை இருந்து வந்த எளிய கட்டமைப்பு போய் ஒரு செறிவான சிக்கலான கட்டமைப்பு உருவாகிறது. புதிய நிலவுடைமை இனங்கள் தோன்றுவதன் காரணமாக முரண்பாடுகள் வளர்கின்றன. ஒவ்வோர் இனமும் தங்கள் நிலையை உயர்த்தவும் உறுதி செய்து கொள்ளவும் கூட்டமைப்புகளை உண்டாக்குகின்றன. இக்கூட்டமைப்புகளின் நாடு தழுவிய கூட்டங்கள் சமயம் என்று பொதுவாகவும், பெரிய நாட்டார், பதினெண்விஷயத்தார் என்று அந்தந்த இடத்திற்கு தக்கவாறும் அழைக்கப்பட்டன. இவை ஒரே நேரத்தில் தொழில்சார் கூட்டுகளாகவும், உறவின்முறை கூட்டு களாகவும் இயங்கத் தொடங்குகின்றன. இந்தச் சூழ்நிலையில் அதுவரை இலை மறைவு காய் மறைவாக இருந்த சாதி உணர்வு தங்குதடையின்றி வெளிப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் சாதி பற்றி பேசுவதில் பெருமைப்படுகிறார். சாதி தீர்மானங்களுக்கு கட்டுப்படாதவர்கள்
புறந்தள்ளபடுவார்கள் என்ற எச்சரிக்கையை அடிக்கடி பார்க்கிறோம். சாதி ஏற்றத்தாழ்வுகள் பற்றி நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசப்படுகின்றன. சுருங்கக் கூறினால் அடுத்த சில நூற்றாண்டுகளில் பல்கிப்பெருகிய சாதிச்சமூகத்துக்கு உறுதியான அடித்தளம் 12 -13 ஆம் நூற்றாண்டுகளில் அமைந்துவிட்டது.
இந்தச் சாதி கட்டுமானம் பற்றிய கல்வெட்டு தரவுகளில் அக்கால சமூகத்தின் முழுமையான வடிவம் கிடைத்துவிட்டது என்று சொல்ல முடியாது. பொருளாதார வசதி பெற்ற கொடையாளிகள் உருவாக்கியவையே கல்வெட்டுக்கள். சமூகத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் இருந்த பறையர் அல்லது புலையர் போன்றோர் பற்றி மிக அரிதாகவே செய்திகள் கிடைக்கின்றன. ஆயினும் அந்த செய்திகளை கொண்டே அவர்கள் நிலைமை பரிதாபமாக இருந்தது என்று கணித்தறிய முடியும். ஒரு பகுதியினர் தீண்டத்தகாதவர் என்றும் வெறுக்கப்பட்டனர். பெரும்பாலும் அவர்கள் கொத்தடிமைகளாக நிலவுடைமையாளர்களின் பிற சொத்துக்களைப் போன்றே நடத்தப்பட்டார்கள். அவர்களுடைய குடியிருப்புகளான புலைச்சேரி நத்தங்களும் நிலவுடைமையாளர்களால் விற்கப்பட்டன என்பதையும் குறிப்பிட வேண்டும்.
ராஜராஜனுடைய இருபத்தி ஒன்பதாம் ஆட்சியாண்டை சேர்ந்த இரண்டு தொடர்ச்சியான கல்வெட்டுகள் பேரரசின் இதயப் பகுதியான சோழமண்டலத்தில் 40 கிராமங்களில் இருந்து வரும் வருமானத்தை முதலாம் ராஜராஜன் நல்கியதை விவரித்து கோவில் கருவறையின் மீது பொறிக்கப்பட்டவை. அந்த கிராமங்களில் விளைநிலங்களின் பரப்பு, இருப்பு பற்றி விரிவான விவரணையில், பிறவகையான குடியிருப்பு பகுதிகளுடன் சேர்த்து தீண்டாச்சேரி பற்றி குறிப்பாக நாம் காண்கிறோம். தமிழில் சேரி என்ற சொல் தெரு அல்லது குடியிருப்பு பகுதி என்று பொருள்படுகிறது. அதனுடன் சேர்ந்து வந்துள்ள "தீண்டா" என்பதற்கு தொடக்கூடாத என்று பொருள். ஆகவே முழுமையாக தீண்டாச்சேரி என்பது தீண்டாதாரின் குடியிருப்பு பகுதி என்று பொருள்படுகிறது. தமிழ் கல்வெட்டுகளில் தீண்டாதார் அல்லது தீண்டாமை பற்றிய வெகுசில நேரடியான குறிப்புகளில் ஒன்று, முதலாம் ராஜராஜனின் கல்வெட்டுகளில் தீண்டாச்சேரி என்ற சொல் பயன்பாடும் ஆகும்.
இந்தக் கல்வெட்டுகள் பறைச்சேரி என்ற மற்றொரு குடியிருப்பு பகுதியையும் குறிப்பிடுகின்றன. உறுதியாக தமிழ்நாட்டில் தீண்டாச்சாதி என்று மிக நன்கு அறியப்பட்ட பறையர்களின் குடியிருப்புப் பகுதி என்பதே இதற்கு அர்த்தம். கல்வெட்டில் குறிப்பிட்ட 40 கிராமங்களில் 33 கிராமங்கள் பற்றிய விவரங்களை மட்டுமே துல்லியமான அளவில் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. அந்த 33 கிராமங்களில் 20 கிராமங்களில் பறைச்சேரி பற்றிய குறிப்பு வருகின்றது. இதற்கு மாறாக அந்த அரசாணைகளில் தீண்டாச்சேரி பற்றிய குறிப்பு இல்லை. மேலும் தானமாக வழங்கப்பட்ட கிராமங்கள் குறித்த தனியான விவரணையில் எண்ணற்ற பல விவரங்களை குறிப்பிட்டு இருந்த போதிலும் கூட 33 கிராமங்களில் இரண்டில் மட்டுமே தீண்டாச்சேரி குறிப்பிடப்படுகிறது. ஆகவே தீண்டாச்சேரி இருப்பு பரவலாக இல்லை எனத் தோன்றுகிறது.
எவ்வாறாயினும் தீண்டாச்சேரியும் பறைச்சேரிக்கும் இடையே உள்ள உறவு தெளிவற்று உள்ளது. தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் ஒன்றாகவும் ஒரே கிராமத்தில் குறிப்பிடபடவில்லை. ஆனால் இவை இரண்டும் சாரத்தில் ஒன்றானவையே, பெயரில் மட்டும் வேறுபாடு உடையவை என்று கருதலாம். ஆனால் உண்மையில் இரண்டு கிராமங்களில் மட்டும் பறைச்சேரியுடன் தீண்டாச்சேரியும் இருந்துள்ளது இவை இரண்டும் அடிப்படையில் வேறானவை என உணர்த்துகிறது.
தீண்டாச்சேரி, தீண்டாதார் பற்றிய குறிப்புகள் இவ்வாறு உள்ள நிலையில் பிற்காலத்தில் தீண்டாதார் அல்லது அதற்கு இணையான நிலையில் உள்ளவர்கள் என்று கருதப்பட்ட பறையர் அல்லது பறைச்சேரி அல்லது இவர் போன்ற பிற குழுக்கள் பற்றிய குறிப்புகள் கல்வெட்டுகளில் உள்ள போதிலும்கூட தமிழ் கல்வெட்டுகளில் தீண்டாமை பற்றிய நேரடியான குறிப்பு மிக அரிது.
வடஆற்காடு மாவட்டத்தில் உள்ள 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு குடும்பத்தில் இரு சகோதரர்கள் இடையே ஏற்பட்ட மோதலை குறிக்கும் போது அது தொடர்பாக அந்த வட்டாரத்தில் உள்ள எல்லா சமூகங்களையும் குறிப்பிடுகிறது. இது தொடர்பில், இந்த கல்வெட்டு எண்ணற்ற சம்பவங்களை குறிப்பிட்டுள்ளது. வட தலைநாட்டவரும் தென்மலை நாட்டவரும் என்பது போன்று சில நாட்டவர்களின் பெயர்களில் இடத்தை குறிக்கும் முன்னொட்டும் குறிப்பிட்டுள்ளதால் சாதிப் படிநிலை கொள்கை எந்த அளவுக்கு பின்பற்றப்பட்டுள்ளது என்று வரையறுப்பதில் குழப்பம் இருந்தபோதிலும் இந்த சமூகங்களை சாதிப் படிநிலையில் தலை முதல் கடை வரை வைத்தெண்ணுதலை செய்துள்ளது எனத் தெரிகிறது. இருப்பினும் இந்த கல்வெட்டு பறையர்களை குறித்த உடனே அடுத்து பாணரையும் அதற்கடுத்து சக்கிலியரையும் குறிப்பிடுகிறது. பாணருக்கு மேலே வேடர், உவச்சர், மன்றாடி, சிவப்பிராமணர், கைக்கோளர் வாணிகர்,செட்டிகள் மேலும் பல பெயர்களைக் காண முடிகிற அதேவேளையில் சக்கிலியருக்கு கீழே இறுதியாக உள்ள சாதியாக இருளரை மட்டும் குறிப்பிடுகிறது.
இதிலிருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டில் பறையர் சமூக மதிப்பு நிலை கடைநிலைக்கு அருகில் உள்ளது என நாம் அறிந்து கொள்ள இயலும்.
பதினான்காம் நூற்றாண்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருப்பாலதுறையில் இருக்கும் ஒரு கல்வெட்டு (தெ.இ.க. 8:590) வெள்ளான், புலை அடியார்களை தானம் கொடுத்ததை பற்றி குறிப்பிடுகிறது. அந்த கல்வெட்டின்படி ஒரு பெண்ணுக்கும் அவள் மகனுக்கும் தலைவன் ஒருவன் 9 வேலி நிலமும் மனையும் 3 வெள்ளான் அடியாரையும், ஏழு புனல அடியாரையும் பரிசாகக் கொடுத்தான்.
பெற்றோர்,மகள், நான்கு மகன் என ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 7 புலையர்களின் பெயரும் பதிவாகி உள்ளது. முன்னர் நகர்ப்புறத்தில் பட்டத்தில் நின்றாராய் பண்ணையாளாய் இருந்த இவர்களை, அவர்களின் உடையானிடமிருந்து அரையன் விலைக்கு வாங்கினான். புலையர்கள் அடிமைகளாய் கைமாற்றம் செய்யப்பட்டதற்கு இது ஆதாரம் ஆகும். இதில் பெற்றோர்கள் பள்ளன் பள்ளி என குறிப்பிடப்படுவதால் புலையர்களாய் பள்ளர் இருந்தனர் என்று கருதுவதற்கும் இடமளிக்கிறது. எவ்வாறாயினும் இந்த கல்வெட்டில் இன்னொரு குறிப்பிடத்தக்க விடயம், உயர் சாதியான வெள்ளாளர்கள் ஒரு உரிமையாளரிடம் இருந்து மற்றொருவருக்கு அடிமைகளாய் கைமாற்றி கொள்ளப்பட்டது ஆகும்.
1229 ஆம் ஆண்டு குடுமியான் மலை கல் வெட்டு பிராமணன் செட்டி, வெள்ளாளர், இளமையர், படைப் பற்றுக்கள், தண்டி, பறையர், பள்ளர் என பல சாதிகளை குறிப்பிடுகின்றது. கல்வெட்டில் பிராமணர் செட்டி ஆகியவற்றிடையே இடைவெளி உள்ளது. முதல் மூன்று குழுவினர் காணியாளர் என்று வரையறுக்கப் படுகின்றனர். அடுத்த மூன்று குழுவினர் குடிமக்கள் என்று விளக்கப்படுகின்றனர். பறையர் பள்ளர் சமூகத்தில் மிகவும் கீழான நிலையில் வைக்கப்பட்டிருக்க வேண்டுமாதலால் எந்த ஒரு குழுவின் கீழும் அவர்கள் பெயர் இடம்பெறவில்லை. "அந்தணன் தலையாக பள்ளன் கடையாக " என்று கூறப்பட்ட நிலையில் வரிசைப் படுத்தப் பட்டிருக்கிறது.
முடிவாக சோழர்கள் கால சமூக நிலை இவ்வாறு உள்ளதை கல்வெட்டுகள் தெரிவிக்கிறது.
தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் (பொ.ஆ. 800-1500)
Reply all
Reply to author
Forward
0 new messages