சங்கப் புலவர்கள் பொன்னுரை – 20
காற்று இல்லா வானத்தைஅறிந்திருந்த பழந்தமிழர்
நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவர்
(வெள்ளைக்குடி நாகனார், புறநானூறு, பாடல் 35, 1- 4)
புலவர் வெள்ளைக்குடி நாகனார் சோழ வேந்தன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வறட்சியில் வாடும் மக்களின் நன்மை கருதி வரியைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டிய பாடல். இதற்கிணங்க வேந்தரும் வரியைத் தள்ளுபடி செய்தார்.
இப்பாடல் உழவின் சிறப்பையும் பல அறிவியல் உண்மைகளையும் கூறுகிறது. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.
நளி = செறிதல், குளிர்ச்சி; இரு = பெரிய; முந்நீர் = கடல்;
நளியென் கிளவி செறிவு மாகும்” (தொல்காபபியம், உரி: 25) என்பதனால், “நீர் செறிந்த கடல்”; ஏணி எல்லை; வளி = காற்று; திணி = செறிவு; கிடக்கை = நிலம்; தண் = குளிர்ந்த; தமிழ் = தமிழ் மக்களுக்கு; கிழவர் = உரிமையுடையவர்; தானை = படை
நீர் செறிந்த பெரிய கடலை எல்லையாகவும் காற்று இல்லாத – அஃதாவது காற்று நடுவே ஊடுருவிச் செல்ல முடியாத வானத்தால் சூழ்ந்ததாகவும் உடைய மண் செறிந்த இவ்வுலகில் குளிர்ச்சியான தமிழ்நாட்டிற்கு உரியவராகிய முரசு ஒலிக்கும் படையினை உடைய மூவேந்தர்.
‘தமிழ்’ என்னும் சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை என்றும் திராவிடம்தான் தமிழ் ஆனது என்றும் அறியாமலும் அறிந்தே தவறாகவும் சொல்வோர் இருக்கின்றனர்.
அவர்கள் கருத்துகள் யாவும் பொய் என்பதற்கு இலக்கியங்களில் ‘தமிழ்’ என்னும் சொல்லின் பயன்பாடு பல இடங்களில் உள்ளமையைக் குறிப்பிடலாம்.. அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் இதுவும்.
இங்கே தமிழ் என்பது தமிழ்மொழி பேசும் மக்களையும் தமிழ் மக்கள் வாழும் நிலத்தையும் குறிக்கிறது.
இப்பாடலில் உழவர் பெருமை, வரித்தள்ளுபடிக்காகப் புலவர் வேண்டுதலும் அதனை வேந்தர் ஏற்றலும் ஆகிய அருமை ஆகியவற்றுடன் அறிவியல் உண்மைகளையும் அறியலாம். அவற்றில் ஒன்றையே இங்கே பார்க்கப் போகிறோம்.
வானத்தில் குறிப்பிட்ட தொலைவிற்கு அப்பால் காற்று இல்லை என்னும் அறிவியல் உண்மையை, அத்தகைய காற்று இல்லாத வான்மண்டிலத்தைப் பிறர் அறியாப் பழங்காலத்திலேயே நம் தமிழர்கள் அறிந்திருந்தனர்.
பஞ்ச பாண்டவர்களில் குந்திக்கும் வாயுவுக்கும் பிறந்தவன் பீமன் என்றும் வாயுவுக்கும் அஞ்சலைக்கும் பிறந்தவன் அனுமான் என்றும் ஆரியப் புராணங்கள் கூறுகின்றன.
ஆரியர்கள் வாயு எனப்படும் காற்றின் அறிவியல் உண்மையை உணராதவர்களாகவே இருந்துள்ளனர்.
ஆதித்தெய்வங்களுள் ஒன்று காற்று எனக் கிரேக்கர்கள் கருதினர். அவர்களின் தொன்மைக் கதைகளின்படி, இருளுக்கும் (Erebus) இரவுக்கும் (Night) பிறந்த மகன் காற்று; இவன் பகலின் (Hemera) உடன்பிறப்பு என்றும் விண்கடவுளின் (Uranus) மகன் என்றும் உரோமர்கள் துயரத்திற்கும் (Chaos) இருளிற்கும் (Caligo) பிறந்த மகன் என்றும் கருதினர்.
இவ்வாறு காற்றினை ஒவ்வொரு நாட்டினரும் கடவுள்களின் அல்லது தேவதைகளின் குழந்தையாகக் கருதினர்.
காற்றினை இயற்கையாக மேனாட்டார் கருதாக் காலத்திலேயே காற்றின் பல் வேறு தன்மைகளைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். அத்தகைய தமிழ் இலக்கியங்கள் கூறும் காற்றறிவியலின் ஒரு கூறுதான் இப்பாடல்வரி.
காற்று இல்லாத வானப்பகுதி குறித்து மேலும் சில பாடல்களிலும் காணலாம். இப்பாடலில் தமிழ் நிலத்தைக் குறிப்பிட வந்த புலவர் உலகத்தின் பகுதியாகக் குறிப்பிடுகிறார்.
அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் வானத்தைக் கூரையாகக் கொண்ட உலகின் பகுதி என்கிறார்.
வானத்திற்கு அடைமொழியாகக் காற்று வழங்காத வானம் என அறிவியல் உண்மையுடன் அடைமொழி தருகிறார்.
வளி இடை வழங்கா வானம் என்னும் சங்கப் புலவர் பொன்னுரையை ஓர்ந்து காற்று இல்லாத வான் மண்டிலத்தை அறிந்தவர்கள் நம் முன்னைத் தமிழர்கள் என்பதை உணர்ந்து அறிவியல் தமிழ் வளத்தைப் பெருக்குவோமாக!
– இலக்குவனார் திருவள்ளுவன்
தாய் மின்னிதழ் 16.08.205
(வெருளி நோய்கள் 271 – 275 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 276 – 280
ஆழம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் ஆழ்பு வெருளி
ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் குறித்துள்ளோம்.
மிகவும் கீழிறக்கமான படிக்கட்டுகள், தாழ்வான குகை, ஆழமான கிணறு அல்லது பிற நீர்நிலைகள் முதலியவை தொடர்பான பேரச்சம் கொள்வர்.
bathos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஆழம்.
00
ஆளுநர் மீதான பேரச்சம் ஆளுநர் வெருளி.
சில நேர்வுகளில் ஆளுநர் மீதான பேரச்சம், பொதுமக்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும்ஆட்சிப்பொறுப்பாளர்களுக்கும் ஏற்படுகிறது. ஆளுநர்கள் முறையாகவோ தவறாகவோ நடவடிக்கை எடுப்பது குறித்த பேரச்சமே வெருளியாகிறது.
இப்போது ஒன்றியத்தில பாசக கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பாசக ஆட்சி இல்லா மாநிலங்களில் ஆளுநர்களைக்கொண்டு அன்றாடப் பணிகளில் தலையீடு, மாநிலக் கொள்கைகளில் குறுக்கீடு, ஆட்சி நிலைப்பின்மை குறித்த அச்சுறுத்தல் போன்ற வற்றில் ஈடுபடுகிறது. என்னதால் இதற்கு அஞ்சிவில்லை என மாநில ஆட்சியாளர்கள் சொன்னாலும் அச்சம் கொண்டு ஆளுநர் வெருளிக்கு ஆளாகிறார்கள்.
00
ஆள்வோர்கள் மீதான பேரச்சம் ஆள்வோர் வெருளி.
ஆள்வோரின் அடக்குமுறை, அளவுகடந்த வரிவிதிப்பு, குறைகளைக் களையாமை, இயல்பான இடர்ப்பாடுகள், திடீரென நேரும் பேரிடர்கள் முதலியவற்றில் இருந்து காக்காமை, வேலைவாய்ப்போ தொழில் வாய்ப்போ வழங்காமை, கொடுங்கோலாட்சி முதலியவற்றால் மக்களுக்கு ஏற்படும் பேரச்சமே ஆள்வோர் வெருளியாகிறது.
மக்களாட்சி நாட்டிலேயே மக்களுக்கு ஆள்வோர் வெருளி இருக்கும்பொழுது வல்லாட்சி நாட்டில் ஆள்வோர் வெருளி இருப்பது இயற்கையே.
00
ஆறாம் எண்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆறாம் எண்கள் வெருளி.
ஆறாம் எண்காரர்களுக்கு உரியதாகச் சொல்லப்படும் சாப்பாட்டுப் பெருவிருப்பம், உடல் பருமன் சிக்கல், நெஞ்சு வலிக்கான வாய்ப்பு, இரத்த ஓட்டக்கோளாறுகள், பிறப்புறுப்புக் கோளாறுகள் முதலான எதிர்மறைக் குறிப்புகளைப்பார்த்து அச்சம் கொள்வர்.
சாப்பாட்டுப் பிரியர்கள், உடல் பருமன் சிக்கல், நெஞ்சு வலிக்கான தேர்வு எண் 6 ஆக இருந்து அதில் தோல்வியுற்றால் 6 ஆம் எண் வீட்டில் குடிபுகுந்த பின்னர் துன்பங்களைச் சந்தித்தால் எண் 6 குறித்த அச்சம் மேலும் வளர்கிறது.
தேர்வு எண் 6 ஆக இருந்து அதில் தோல்வியுற்றால் 6 ஆம் எண் வீட்டில் குடிபுகுந்த பின்னர் துன்பங்களைச் சந்தித்தால் எண் 6 குறித்த அச்சம் மேலும் வளர்கிறது.
6,15,24 ஆம் நாள்களில் பிறந்தவர்கள் ஆறாம் எண்காரர்கள்.இவர்களுக்குக் காதல் நாட்டம், ஆடம்பர விருப்பம் முதலியன உண்டு என்பர். எனவே, காதல் வெறுப்பும் ஆடம்பர எதிர்ப்பும் உள்ளர்கள் இவ்வெண் கண்டு அஞ்சுவர். ஆறாம் எண்ணில் பிறந்த மகளோ மகனோ காதலில் ஈடுபடுவார்கள் என்ற கவலை கொள்ளும் அவர்களின் பெற்றோர்களும் 6 ஆம் எண்மீது பேரச்சம் கொள்வர்.
00
ஆறு கொடி கேளிக்கை குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆறு கொடி வெருளி.
ஆறு கொடிகள் கேளிக்கைப் பூங்கா(Six Flags Theme Park) என்பதன் சுருக்கமே ஆறு கொடிகள் எனப்பெறுகிறது.
ஆறுகொடி கேளிக்கைப் பூங்காவில் உள்ள நெடும்படகு(roller coaster) இவரி(சவாரி) பிற தீவிர இவரிகள் மீதான பேரச்சமே இப்பூங்கா குறித்த பேரச்சமாகிறது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5