1. தமிழ்நாடு காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? – சுப.உதயகுமாரன் +++ 2. ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22 +++ 3. தோழர் தியாகு எழுதுகிறார் 19 :ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

1 view
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 25, 2023, 6:19:57 AM1/25/23
to Akar Aadhan, pmaruda...@yahoo.com, muthun...@gmail.com, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தமிழ்நாடு காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? – சுப.உதயகுமாரன்

 அகரமுதல



காவல்துறை அரசா? சுப.உதயகுமாரன் எச்சரிக்கை மணி

தோழர் தியாகு எழுதியமைக்கான கருத்தூட்டக் கட்டுரை

தமிழகக் காவல்துறைக்குள் ஒரு காவித்துறை இயங்கிக் கொண்டிருக்கிறதோ எனும் ஐயம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குமரி மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரைக் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் எந்தவிதமான முகாந்திரமும் இன்றி, “உங்களுக்கு அனைவரையும் கிறித்தவராக்க வேண்டும், அப்படித்தானே?” என்று என்னிடம் கேட்டார். இந்த தவறான, தேவையற்ற, முறையற்ற கேள்வி என்னோடிருந்த தோழர்களையும், என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்போது  “கலவரம் நடந்தே தீரும்” என்று பொதுவெளியில் கூச்சமின்றிப் பொறுப்பின்றிப் பேசுகிறவர்கள் அரசியல் செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தில், அப்படி ஒரு கலவரம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்கிற நோக்கத்தோடு, “மத நல்லிணக்கச் சந்திப்பு” எனும் ஒரு நிகழ்வை நாங்கள், குமரி மக்கள் நல்லிணக்கக் குழுவினர், ஒருங்கிணைத்தோம்.

நவம்பர் 18, 2022, வெள்ளிக்கிழமையன்று காலை 11 மணிக்கு புனித சவேரியார் கோவிலிலுக்கும், நண்பகல் 12 மணிக்கு அருள்மிகு நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவிலுக்கும், பிற்பகல் 1 மணிக்கு மாலிக்குத் தினார் பள்ளிவாசலுக்கும் சென்று, அங்கு குழுமியிருக்கும் மக்களுடன் கலந்துறவாடி, இந்த “மத நல்லிணக்க சந்திப்பை” நடத்தத் திட்டமிட்டோம்.

குறிப்பிட்ட மூன்று ஆலயங்களின் நிருவாகிகளைச் சந்தித்து அனுமதி வாங்கினோம்; அவர்களும் மிகுந்த ஆர்வத்தோடு ஒத்துழைக்க முன்வந்தனர். நாகர்கோவில் மாநகரத்தலைவர், திமுகவின் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. இரெ. மகேசு ஆகியோர் எங்களோடு மூன்று வழிபாட்டுத்தலங்களுக்கும் வருவதற்கு இசைவு தெரிவித்தார். பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள். மும்மதங்களையும் சார்ந்த பொதுமக்கள் கலந்துகொள்வதற்கு மகிழ்ச்சியுடன் முன்வந்தனர்.

ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில் நவம்பர் 16, 2022 அன்று நாகர்கோவில் நகரக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் என்னை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து, இந்த நிகழ்வை நடத்த இது உகந்த நேரமல்ல; எனவே மேற்படி நிகழ்வை அனுமதிக்க இயலாது என்று சொன்னார்.

நாங்கள் பொதுவெளியில் எதுவுமே செய்யத் திட்டமிடாத நிலையில், காவல்துறையின் அனுமதியை கோரவேண்டியத் தேவையே எழவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, மத நல்லிணக்கம் பற்றிப் பேச எல்லாமே உகந்த நேரம்தான்சனநாயக நாட்டில் மக்களுக்கு இந்த உரிமைகூட கிடையாதா என்றெல்லாம் வாதிட்டேன்.

அது அவரது தனிப்பட்ட முடிவல்ல என்பதை அவரது கண்ணியமான அணுகுமுறை தெளிவாகத் தெரிவித்தது. உடனே குமரி மக்கள் நல்லிணக்கக் குழுவினர் மாநகரத்தலைவரைச் சந்தித்து முறையிட்டோம். அவரும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் பேசி நிகழ்வை அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 17, 2022 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரையும், காவல்துறை கண்காணிப்பாளரையும் சந்தித்து முறையிடுவது என்று முடிவு செய்து, ஆட்சித்தலைவர் அலுவலகம் சென்றோம். அவர் இல்லாததால், கோட்டாட்சித் தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற அதிகாரிகளை சந்தித்துப் பேசினோம்.

காவல்துறைக் கண்காணிப்பாளர் மாலை ஐந்து மணியளவில் தன்னுடைய அலுவலகத்துக்கு வருமாறு கேட்டுக் கொண்டதையடுத்து, அங்கே சென்றோம். ஆனால் பணி நிமித்தமாக மாவட்டத்தின் மேற்குப் பகுதிக்கு சென்றிருந்த அவரால் குறிப்பிட்ட நேரத்தில் வர இயலவில்லை. அவரிடம் நேரில் பேசிவிட்டு நிகழ்வை நடத்துவதா அல்லது நீக்குவதா என்கிற இறுதி முடிவை எடுக்கலாம் என்றிருந்தோம்.

ஆனால் இரவு 7:45 மணிக்குக் காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் கைப்பேசியில் என்னை அழைத்து, “இந்த நிகழ்வை இப்போது நடத்த வேண்டா, மூன்று வாரங்கள் கழித்துப் பார்க்கலாம்” என்று சொன்னார். ஆனால் இரவு 9:36 மணிக்கு மாநகரத்தலைவர் அவர்களின் உதவியாளர் என்னைக் கைப்பேசியில் அழைத்து, மாநகரத்தலைவர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பேசியிருக்கிறார். காலையில் முடிவு சொல்வார்கள் என்று தெரிவித்தார்.

பிறகு இரவு 9:30 மணியளவில் நாகர்கோவில் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் என்னை அழைத்து “நிகழ்வுக்கு அனுமதியில்லை, கடிதம் அனுப்புகிறேன்” என்று தெரிவித்தார். நள்ளிரவு 12:40 மணிக்கு வீட்டுக்கு வந்த காவலர்கள் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி மறுப்புக் கடிதம் தந்துவிட்டுச் சென்றார்கள். அதில் “கோட்டார் காவல் நிலையத்திற்குட்பட்ட” கிறித்தவ தேவாலயத்தையும், இசுலாமியப் பள்ளிவாசலையும் மட்டும் குறிப்பிட்டுவிட்டு, அதே நாகர்கோவில் காவல்துறை உட்கோட்டத்தின் கீழ் வரும் “நேசமணி நகர் காவல்நிலைய ஆளுகைக்கு உட்பட்ட அருள்மிகு நடுக்காட்டு இசக்கி அம்மன் கோவில்” நிகழ்வை கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள்.

மேலும் “தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மதநல்லிணக்கச் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்படுகிறது” என்று கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியானால் ஒரு மதநல்லிணக்கச் சந்திப்பைக்கூட நடத்த முடியாத அளவுக்கு தமிழ்நாட்டில் “தற்போது நிலவும் சட்ட ஒழுங்கு சூழ்நிலை” மோசமாக இருக்கிறது எனும் தோற்றம் உருவாகிறது. தமிழ்நாடு அரசின் மற்றும் ஆளும் கட்சியின் நிலைப்பாடும் இதுதானா என்கிற கேள்வியும் எழுகிறது.

பொதுமக்கள் கூடுவது, சந்திப்பது, பேசுவது எல்லாமே சட்ட ஒழுங்கு சிக்கலாகப் பார்க்கப்படுவது ஒரு ‘காவல்துறை அரசு’ உருவாவதற்கான அறிகுறி. பொதுவெளிகளில் நடத்தப்படும் நிகழ்வுகளை காவல்துறைக்குத் தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க விடயம்தான். அண்மையில் அரங்கக் கூட்டங்களுக்கும் அனுமதி வாங்க வேண்டும் எனும் வழக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இப்போது காவல்துறையிடம் அனுமதி கேட்க வேண்டியத் தேவையில்லை என்றாலும், கேட்காவிட்டாலும், அனுமதி மறுக்கும் (அதாவது தடை செய்யும்) ஒரு புதிய ஏற்பாட்டை காவல்துறை உருவாக்குகிறது.

ஆளுங்கட்சியான திமுகவின் மாவட்டச் செயலாளர் கலந்துகொண்டு சிறப்பிக்கும் நிகழ்வுக்கே தடைவிதிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேல்மட்டத் தலைவர்களின் நிலைமையும் மேம்பட்டதல்ல. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அராஜகத்தை தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்துகொண்டேன் என்று முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னது ஓர் அதிர்ச்சியூட்டும் எடுத்துக்காட்டு. “ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் போராளிகளின் மீதான வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெறுவேன்” என்று வள்ளியூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உறுதிமொழி அளித்த இப்போதைய முதல்வர் அவர்கள் தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற விடாமலிருப்பது இன்னொரு எடுத்துக்காட்டு.

காவல்துறையின் அனைத்து மட்டங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரு சாக்குப்போக்கு “மேலிடத்து உத்தரவு” என்பதாகும். அந்த “மேலிடம்” தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமும் அல்ல, திமுகவின் அண்ணா அறிவாலயமும் அல்ல என்றால், அது எங்கே இருக்கிறது? தமிழ்நாடு காவல்துறை உண்மையிலேயே யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிற கேள்வி எழுகிறதுகாவல்துறைக்கு வெளியே ஓர் அதிகார மையம் இருக்கிறதோஅவர்கள்தான் இறுதி முடிவுகள் எடுக்கிறார்களோ என்றெல்லாம் சந்தேகங்கள் எழுகின்றன.

மக்கள் சிக்கல்களுக்காக ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தினால், ஒரு போராட்டம் நடத்தினால், ஐந்தாறு காவல்துறையினர், உளவுத்துறையினர் முகத்துக்கு நேரே வந்து நின்று காணொளி எடுக்கிறார்கள், படங்கள் எடுக்கிறார்கள், குறிப்பு (notes) எடுக்கிறார்கள். சில நேரங்களில் ஒரு காவல்துறை அதிகாரி புகார் அளிக்க, இன்னொரு அதிகாரி வழக்குப் பதிவு செய்யும் வினோதத்தையும் பார்க்கிறோம்.

இப்போது தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளிலும் மூக்கை நுழைத்து காட்சிப்படம் எடுக்கிறார்கள். கடந்த அட்டோபர் 18, 2022 அன்று என்னுடைய தந்தையார் திரு. சு. பரமார்த்தலிங்கம் அவர்கள் மரணமடைந்தார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் திமுகவைத் தோற்றுவித்தக் காலத்திலிருந்தே கட்சிக்காக உழைத்த அப்பாவின் விருப்பப்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் ஏனைய மாவட்ட திமுக முன்னணியினரும் அப்பா உடலத்தின் மீது திமுக கொடியைப் போர்த்திய நிலையில் அப்பாவின் இறுதி ஊர்வலம் அட்டோபர் 19, 2022 அன்று காலை 9 மணிக்கு வீட்டிலிருந்து தொடங்கியது. அப்போது நான்கைந்து உளவுத்துறையினர் காட்சிப்படம் எடுத்தார்கள்.

அதேபோல தகனத்திற்கு முன்னால் நடந்த இறுதிச் சடங்குகளையும் உளவுத்துறையினர் வீடியோ எடுத்தார்கள். தாங்கொணா துயரத்தில் இருந்த என்னால் இதனைத் தட்டிக்கேட்க இயலவில்லை. யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது? என்னுடைய தந்தையாரோ, நானோ தீவிரவாதிகள் அல்லர், கொலைக் குற்றவாளிகள் அல்லர். கொள்ளைக்காரர்கள் அல்லர். எங்களை ஏன் இப்படி அத்துமீறி படம் எடுக்க வேண்டும், காட்சிப்படம் எடுக்க வேண்டும்?

நாகர்கோவில் கோட்டாட்சித் தலைவர், குமரி மாவட்ட மாவட்ட வருவாய் அலுவலர் போன்ற அதிகாரிகளிடம் இது குறித்து நேரில் சந்தித்து முறையிட்டிருக்கிறேன். விரைவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் முறைப்படி முறையிடத் திட்டமிட்டிருக்கிறேன்.

யாரும் எதற்காகவும் எந்த விதத்திலும் இயங்காதீர்கள், வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடப்பதே உங்கள் சனநாயகக் கடமை எனும் செய்தி நமக்கெல்லாம் உரக்கச் சொல்லப்படுகிறது. உலகின் மிகப் பெரிய சனநாயக நாடு என்றெல்லாம் பெருமை கொள்ளும் நமக்கு இது ஓர் எச்சரிக்கை மணியாகவே அமைய வேண்டும். தமிழ்நாடு அரசும், ஆளும் கட்சியான திமுகவும் இந்த நிலைமையைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும், இதுகுறித்து மக்களின் ஐயங்களைப் போக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

சுப. உதயகுமாரன்

++

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22

 அகரமுதல


ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன்      21 January 2023      




(ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 21. தொடர்ச்சி)

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 22

4. குலமும் கோவும் தொடர்ச்சி

அதியர்

    தமிழ் நாட்டில் வாழ்ந்த மற்றொரு குலத்தோர் அதியர் எனப்படுவார்.12 அன்னார் தலைவன் அதியன் என்றும், அதியமான் என்றும், அதியர் கோமான் என்றும் வழங்கப்பெற்றான். ஒரு காலத்தில் அதியமான் ஆட்சி தமிழ் நாட்டில் பெரும் பகுதியில் நிலவியிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தைச் சார்ந்த தலைவருள் சிறந்தவன் அதியமான் நெடுமான் அஞ்சியாவான்.13 அவனது நாட்டின் தலைநர் தகடூர் என்று தமிழ் இலக்கியம் கூறும். அவ்வூருக்கு ஐந்து கல் தூரத்தில் அதமன் கோட்டை என்னும் பெயருடைய ஊர் அமைந்திருக்கின்றது. முன்னாளில் அங்கிருந்த கோட்டையின் அடையாளங்கள் இன்றும் காணப்படும்.14 அக் கோட்டை அதியமானால் கட்டப்பட்டது போலும்! அதியமான் கோட்டை என்பது அதமன் கோட்டையென மருவியிருத்தல் கூடும். இன்னும், சேலம் நாட்டிலுள்ள அதிகப்பாடியும், செங்கற்பட்டிலுள்ள அதிகமான் நல்லூரும் அவ்வரசனோடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

ஆவியர்

   ஆவியர் குலம் மற்றொரு தமிழ்க் குலம். அக் குலத்தார் பழனி மலைப் பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். அவர் தலைவன் ஆவியர் கோமான் என்று பெயர் பெற்றான். கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் என்பவன் அக்குலத் தலைவருள் ஒருவன்.  வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சங்க இலக்கியம் அவனை குறிக்கின்றது.15 அம் மன்னன் அரசாண்ட ஊர் வைகாவூர் என்றும், வையாபுரி என்றும் வழங்கிற்று. முருகனுக்குரிய படைவீடுகளுள் ஒன்றாகிய ஆவிநன்குடி என்னும் பதி ஆவியர் குடியிருப்பேயாகும். திரு ஆவிநன் குடி என்பது பழனியின் பெயர்.

ஓவியர்

     ஆவியரைப் போலவே ஓவியர் என்னும் வகுப்பாரும் இந்நாட்டில் இருந்தனர். சிறுபாணாற்றுப் படையின் பாட்டுடைத் தலைவனாகிய நல்லியக்கோடன் என்னும் சிற்றரசன் அவ்வகுப்பைச் சேர்ந்தவன், அவன் ஆட்சி புரிந்த நாடு ஓய்மா நாடு என்று சாசனங்களில் குறிக்கப்படுகின்றது. ஓவியர் பெருமானாகிய குறுநில மன்னனால் நெடுங்காலம் ஆளப்பட்ட நாடு ஓவிய வர்மான் நாடு என்று பெயர் பெற்றுப் பின்னர் ஓய்மான் நாடென்று சிதைந்திருத்தல் கூடும். திண்டிவனம், கிடங்கில், வயிரபுரம் முதலிய ஊர்கள் அந் நாட்டைச் சேர்ந்தனவாகும்.16

வேளிர்

     இன்னும், வேளிர் என்னும் பெயருடைய ஒரு வகுப்பார் முன்னாளில் சிறந்து விளங்கினர். அக்குலத் தலைவர்கள் சோழகுல மன்னரோடு உறவு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது. அக் குலத்தாரில் ஒரு வகையார் இருக்குவேளிர் எனப் பெயர் பெற்று, புதுக்கோட்டை நாட்டிலுள்ள கொடும்பாளூர் முதலிய இடங்களில் வாழ்ந்து வந்தனர். அறுபத்து மூன்று சிவனடியார்களில் ஒருவராகிய கணம்புல்லர் என்பவர் இருக்கு வேளூரிற் பிறந்தவர் என்று திருத்தொண்டர் புராணம் குறிக்கின்றது. இன்னும் சோழ நாட்டிலுள்ள பாடல் பெற்ற பதியொன்று புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் பெற்றிருக்கிறது.17 இவ்வூர்ப் பெயர்கள் இருக்கு வேளிரொடு தொடர்புடையனவாகத் தோன்றுகின்றன.

குறுக்கையர்

      வேளாளர் குலத்தைச் சேர்ந்த பழங்குடிகளுள் ஒன்று குறுக்கையர் குடியாகும். திருநாவுக்கரசர் அக்குடியைச் சேர்ந்தவர் என்பது சேக்கிழார் பாட்டால் விளங்குகின்றது,18 இக் குடியினர் பெயரால் அமைந்த ஊர்கள் சோழநாட்டிற் பலவாகும். அவற்றுள் மாயவரம் வட்டத்தில் அமைந்த குறுக்கை, பாடல் பெற்றுள்ளதாகும். அங்குள்ள வீரட்டானத் திறைவனை,

       “சாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த

       கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே

என்று போற்றினார் திருநாவுக்கரசர். இன்னும் சில குறுக்கைகள் சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளன. திருப்பிடவூர் நாட்டுக் குறுக்கை இப்பொழுது நாட்டுக் குறுக்கையென்னும் பெயரோடு திருச்சி நாட்டு லால்குடி வட்டத்திலுள்ளது.

திருநறையூர் நாட்டுக் குறுக்கை என்று சாசனத்திற் கூறப்படுவது கொறுக்கை என்னும் பெயர் கொண்டு கும்பகோண வட்டத்தில் காணப்படுகின்றது.19

                   முடி மன்னர் குடி

சோழர்

     முடியுடை மன்னராய்த் தமிழ் நாட்டில் அரசு புரிந்தவர் சேர சோழ பாண்டியர் ஆவர். அன்னார் நினைப்புக்கு எட்டாத பழங்காலந் தொட்டுத் தமிழ் நாட்டை ஆண்டு வந்தார்கள். சோழர் குடி பல சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தது. செம்பியன், வளவன், சென்னி முதலிய பெயர்கள் அவற்றுள் சிறந்தனவாம்.20 செங்கற்பட்டிலுள்ள செம்பியம், வடஆர்க்காட்டில் உள்ள செம்பிய மங்கலம், தஞ்சை நாட்டிலுள்ள செம்பிய நல்லூர், பாண்டி நாட்டிலுள்ள செம்பிய னேந்தல் முதலிய ஊர்கள் செம்பியன் பெயரைத் தாங்கி நிற்கின்றன. தஞ்சை நாட்டிலுள்ள செம்பங்குடி என்பது செம்பியன் குடியாக இருத்தல் கூடும். இனி, தென் ஆர்க்காட்டு வளவனூர், வட ஆர்க்காட்டு வளையாத்தூர் என்னும் வளவன் ஊற்றூர்,21 தஞ்சை நாட்டிலுள்ள வளவ நல்லூர், செங்கற்பட்டிலுள்ள வளவன் தாங்கல் முதலிய ஊர்களின் பெயரில் வளவன் என்னும் சொல் காணப்படுகின்றது. இன்னும், தஞ்சை நாட்டில் சென்னி வனம், சென்னிய நல்லூர், சென்னிய விடுதி என்னும் ஊர்கள் உள்ளன.

பாண்டியர்

       தமிழகத்திலுள்ள தென்னாட்டை யாண்ட பாண்டி மன்னர்க்குத் தென்னவன், மாறன், செழியன் முதலிய சிறப்புப் பெயர்கள் உண்டு.22 அவை யாவும் ஊர்ப் பெயர்களில் அமைந்துள்ளன. தென்னாட்டிலுள்ள தென்னன்குடி, தென்னன்பட்டி, தென்னவனல்லூர், தென்னவனாடு முதலிய ஊர்கள் தென்னவனோடு தொடர்புடையன என்பது தேற்றம். மாறன் என்னும் பெயரை மாறனேரி, மாற மங்கலம், மாறனூத்து முதலிய ஊர்ப் பெயர்களிலே காணலாம். நெல்லை நாட்டிலுள்ள செழியனல்லூர் முதலிய ஊர்களின் பெயர்களில் செழியன் என்னும் சிறப்புப் பெயர் விளங்குகின்றது .

பாண்டி நாட்டு மன்னர்

பூதப்பாண்டியன்

      பழந்தமிழ் நூல்களில் பூதப்பாண்டியன் என்ற பெயருடைய மன்னன் பெருமை பேசப்பட்டுள்ளது. ஒல்லையூரில் மாற்றாரை வென்று புகழ் பெற்ற அம்மன்னனை ‘ஒல்லையூர் கந்த பூதப்பாண்டியன்’ என்று நல்லிசைப் புலவர்கள் பாராட்டினார்கள்.23 நாஞ்சில் நாடு என்னும் தென் திருவாங்கூர் தேசத்திலுள்ள பூதப்பாண்டி என்ற ஊர் அவன் பெயரால் அமைந்ததென்று கருதலாகும்.


(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்

அடிக்குறிப்பு

12. அதியர் மழவர் இனத்தினர் என்பர்.

13. இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

14. இப்பொழுது தர்மபுரி என வழங்கும் தகடூருக்குத் தென்கிழக்கேயுள்ள அதமன் கோட்டையின் தற்கால நிலைமையை Sewell’s Antiquities என்ற நூலிற் காண்க.

15. பேகனை ஆவியர்கோ என்று புறநானூறும் -147. ஆவியர் பெருமகன் என்று சிறுபாணாற்றுப் படையும் – 86 குறிக்கும்.

16. I.M.P., p 183.

17. புள்ளிருக்கு வேளூர் இப்பொழுது வைத்தீஸ்வரன் கோயில் என வழங்கும். சடாயு என்ற புள்ளும் (பறவை), இருக்கு வேதமும், முருக வேளும் வழிபட்ட காரணத்தால் அப்பெயர் வந்ததென்று புராணம் கூறும்.

18. “வேளாண் குலத்தின்கண் வரும் பெருமைக் குறுக்கையர்தம் குடி விளங்கும்” – திருநாவுக்கரசர் புராணம்.15.

19. M.E.R. 1926, 265; 1927, 316.

20. “சென்னி வளவன் செம்பியன் கிள்ளி………………… சோழன் பெயரே” – பிங்கல நிகண்டு.

21. வட ஆர்க்காட்டு வாலாஜா வட்டத்திலுள்ள வளையாத்தூர், வளவன் ஆற்றூரே என்பது சாசனத்தால் விளங்கும். M.E.R. 1933-34. 

22.   “செழியன் கூடற் கோமான் தென்னவன்

     வழுதி மீனவன் பஞ்சவன் மாறன்

     ……………………………………

     குமரிச் சேர்ப்பன் கோப்பாண் டியனே”

     – பிங்கல நிகண்டு.

23, மாற்றாரை வென்று வருவதாக இவன் கூறிய வஞ்சினம் புறநானூறு 71-ஆம் பாட்டில் காணப்படும்.

++

தோழர் தியாகு எழுதுகிறார் 19 :ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

 அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 19 : ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி)

ஏ. எம். கே. நினைவாக (3) தொடர்ச்சி

ஒரு கட்டத்துக்குப் பின் பொன் நாடார் பரிதாபமாய்க் கெஞ்சத் தொடங்கினார்.

“என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் ஐயா. என்னைக் கொன்றுவிடாதீர்கள் ஐயா.!”

இதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தவர் திடீரென்று மெளனமாகிப் போனார். அதன் பிறகும் அடி நிற்கவில்லை சில நிமிடங்கள் கழிந்த பிறகுதான், சந்தேகம் வந்து அடியை நிறுத்தி விட்டுப் பார்த்தார்கள் – பொன் நாடார் பிணமாகியிருந்தார்

நெடுமாடத்தில் (டவரில்) நடந்த இந்தக் கொலையைத் தம் கொட்டடிகளின் இருந்தபடி பார்த்துக் கொண்டிருந்த கைதிகளுக்குத் தாங்க முடியா அதிர்ச்சி! அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதி! கம்பிக் கதவுகளை பிடித்துக் கொண்டு நின்றவர்கள் பயந்து பின்வாங்கி உள்ளே சுவரில் சாய்ந்து உட்கார்ந்து விட்டார்கள்.

பொன் நாடாரின் பிணம் சிறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சவக் கிடங்கில் வைக்கப்பட்டது.

சிறையில் அன்றிரவு யாரும் தூங்கவில்லை. ஏ.எம்.கேயும்தான்! கொலைகாரர்களைத் தப்ப விடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காகச் சிறைக் கைதிகளைத் திரட்டுவதற்கான வழிவகைகள் பற்றி யோசித்துச் சில முடிவுகள் எடுத்து, நம்பிக்கைகுரிய சில காவலர்கள் வழியாக இரவோடிரவாய் முக்கியத் ’தோழர்’களுக்குச் சொல்லியனுப்பினார். விடிவதற்குள் ஒரு செயல்திட்டம் தயாராக இருந்தது.

காலை எட்டு மணிக்கெல்லாம் ஏ.எம். கே, சிறை மருத்துவ மனைக்குச் சென்று சிறை மருத்துவர்கள் இருவரிடமும் சொன்னார்:

“பொன் நாடார் சாவுக்கு நீங்க இரண்டு பேரும் காரணமில்லை. நீங்க அடிக்கவில்லை, சாகடிக்கவில்லை. ஆனால், முறையாக பிண ஆய்வு இல்லாமல் உடம்பு இங்கே இருந்து வெளியே போகக் கூடாது. போனதென்றால் உங்களைச் சும்மா விட மாட்டோம். கண்காணிப்பாளரைக்  காப்பாற்றலாம் என்று நினைக்காதீர்கள். உங்களால் அவரைக் காப்பாற்ற முடியாது. அவராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.”

உண்மையில் அந்தச் சிறை மருத்துவர்களுக்குக் கண்காணிப்பாளரைக் காப்பாற்றும் எண்ணமில்லை. அவர்களோடு அவருக்கு அப்படி ஒரு முரண்பாடு. அவர்களோடு மட்டுமல்ல, அநேகமாய் ஒவ்வொருவருடனும் அவருக்கு முரண்பாடு இருந்தது. இந்த முரண்பாடுகளையெல்லாம் முழுக்கப் பயன்படுத்திக் கொள்வது ஏ.எம்.கே.யின் திட்டம்.

காலையிலேயே சிறைக் கைதிகள் அனைவரும் தட்டைக் கவிழ்த்து விட்டனர். உண்ணாவிரதம் மட்டும் போதாதென்று எல்லாக் கைதிகளும் நடு மைதானத்தில் வந்து உட்கார்ந்தார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் பிணத்தை வெளியே விட்டு விடக் கூடாது என்பது ஏ.எம். கே.யின் உறுதியான கட்டளை.

கண்காணிப்பாளர் தன் அறையை விட்டு வெளியில் வரவே இல்லை. மற்ற அதிகாரிகளுக்கும் என்ன செய்வதென்று விளங்கவில்லை. அவர்களின் திண்டாட்டம் கைதிகளுக்கு ஊக்கம் தந்த்து. ஏ.எம்.கே. வழிகாட்டியபடி அவர்கள் காவலர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்கள் :

“நாங்கள் வெளியில் குற்றம் செய்தோம் என்று தண்டனை கொடுத்து இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இங்கு எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லா விட்டால் என்னாவது? இங்கு ஒரு கொலை நடந்திருக்கிறது. நாங்கள் கொலை செய்தால் தண்டனை, எங்களைக் கொலை செய்தால் தண்டனை கிடையாதா? கொலை செய்ய வேண்டி ஏன் வந்தது என்று கோர்ட்டில் போய்ச் சமாதானம் சொல்லிக் கொள்ளட்டும். ஆனால் கொலை நடந்துள்ளது என்ற உண்மையை மறைக்க விட மாட்டோம். உங்களோடு எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் எங்களோடு சேர்ந்து போராடா விட்டாலும் பரவாயில்லை. எங்கள் போராட்டத்தில் குறுக்கிடாமல் இருங்கள். அது போதும்.”

காவலர்களிடையே இருந்த நண்பர்கள் சிலரும் இதே வழியில் மற்றக் காவலர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிரச்சாரம் பலித்தது. சிறை நிருவாகம் இந்தக் காவலர்களைப் பயன்படுத்திக் கைதிகள் மீது தாக்குதல் தொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஏதாவது செய்ய வேண்டுமானால் வெளியிலிருந்து காவல்துறைப் படையை வரவழைத்தால்தான் முடியும். அதில் பல சிக்கல்கள் இருந்தன.

நடந்திருப்பது ஒரு கொலை என்பதை மறைக்க வழியில்லாமற் போனது முதல் காரணம். இது தொடர்பாகப் பொய் சொல்லிக் கைதிகளை ஏமாற்ற வழியில்லை. இரண்டிலொன்று பார்த்து விடும் மன நிலையில் திரண்டிருந்த கைதிகளை அச்சுறுத்தவும் வாய்ப்பில்லை. சிறை நிருவாகம் காவலர்களிடமிருந்தும் அந்நியப் பட்டிருந்தது. அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டவராகச் சிறைக் கண்காணிப்பாளர் இருந்தார்.

மதியம் வரை புதிய அசைவுகள் ஒன்றுமில்லை . பிற்பகல் கிட்டத்தட்ட இரண்டு மணிக்கு ஏ.எம்.கே. தன் கொட்டடியிலிருந்து நெடுமாடத் தி டலுக்குச் சென்று கைதிகளுக்கு நடுவில் உட்கார்ந்து விட்டார். அவரது வருகை அவர்களுக்குத் துணிவும் ஊக்கமும் தந்தது.

கண்காணிப்பாளர் வந்து தொலைவில் நின்று கொண்டு ஏ.எம்.கே.யைக் கூப்பிட்டார். ஏ.எம். கே. மறுத்து விட்டார்.

“எது வேண்டுமென்றாலும் இங்கே வந்து பேசுங்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி கொடுக்கிறோம். ஆனால் என்னை இங்கே இருந்து கொண்டு போய்விடலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அது மட்டும் நடக்காது.”

கண்காணிப்பாளர் தன்னோடு வந்திருந்த சிறு படையை ஏவி, “அவரைப் பிடித்து வாருங்கள்” என்றதுதான் தாமதம்… கைதிகள் தரப்பிலிருந்து சரமாரியாகக் கற்கள் பறந்தன. கண்காணிப்பாளரும் மற்றவர்களும் சிறை வாயில் நோக்கி ஓடச், சிறைக்குள் அதிகாரிகளும் காவலர்களும் கூடப் பின்னாலேயே ஓடலானார். கைதிகள் சிறைவாயில் வரை துரத்திச் சென்று அத்துடன் நின்று கொண்டார்கள்.

சிறைக்குள் மருந்துக்கும் காக்கிச் சட்டை இல்லை. சிறை முழுக்கக் கைதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதிகாரிகளும் காவலர்களும் மதிலுக்குத்தான் நிருவாகம் என்ற நிலை.

கூட்டத்துக்கு நடுவிலேயே கலந்தாலோசனைகள் நடைபெற்றன. வெளியிலிருந்து ஆயுதப் படைக் காவல்துறை வந்து தாக்குதல் தொடுக்குமானால் என்ன செய்வது என்று ஒரு கேள்வி எழுந்தது.

(தொடரும்)

தரவு: தாழி மடல் 

00




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages