(வெருளி நோய்கள் 476-478 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 479-483
எகல் என்பவர் கோட்பாடு குறித்த வெறுப்பும் பேரச்சமும் கொள்வதே எகலிய வெருளி.
கியோர்கு வில்ஃகெம் பிரீட்ரிக்கு எகல் (Georg Wilhelm Friedrich Hegel)(1770 – 1831) என்பவர் புகழ்மிக்க இடாய்ச்சு நாட்டு (செருமனிய) மெய்யியல் அறிஞர் ஆவார். இவரது கருத்துகளுக்கு ஆதரவு இருந்தது போல் சிலர் காரணமற்ற மிகை பேரச்சமும் கொண்டிருந்தனர்.
00
எகித்து (Egypt), எகித்து மக்கள், எகித்து தொடர்பானவை மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் எகித்து வெருளி.
எகித்திய வெருளி பல்வேறு வகைகளில் வெளிப்படும். குறிப்பாக வரலாறு, பண்பாடு, நாகரிகம் தொடர்பான எகித்திய இடங்கள் குறித்த தேவையற்ற பேரச்சம் எழுகிறது.
“Aigyptos” என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் எகித்து.
00
எக்காளம் / ஊதுகொம்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் எக்காள வெருளி.
இசை வெருளி உள்ளவர்களுக்கு எக்காள வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00
எக்குசு (எகசு) ( X ) என்னும் ஆங்கில எழுத்தின் மேல் உள்ள அளவுகடந்த பேரச்சம் எகசு எழுத்து வெருளி.
எக்குசு என்பது கணக்கில் பயன்படுத்தப்படுவதாலும் புதிர் எழுத்தாகப்பயன்படுத்தப்படுவதாலும் ஊடுகதிர் எக்குசு கதிர் எனச் சொல்லப்படுவதாலும் அவ்வவற்றின்மீது வெறுப்பு உள்ளவர்களுக்கு
எக்குசு எழுத்தின்மீதும் அளவுகடந்த பேரச்சம் வருகிறது.
00
எச்சரிப்பொலி குறித்த வரம்பற்ற பேரச்சம் எச்சரிப்பொலி வெருளி.
எச்சரிப்பொலி கேட்டதும் பேரிடர் வந்து விட்டதாகவே கருதித் தேவையற்ற அளவு கடந்த பேரச்சத்திற்கு ஆளாவோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 2/5
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 10 : conference, seminar, symposium – தமிழில் . . . -தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 11
Conference Call – பன்முகஅழைப்பு
Conference Call என்றால் என்ன?
Conference Call என்றால் நேர் பெயர்ப்பாகப் பலரும் மாநாட்டு அழைப்பு என்றே பயன்படுத்துகிறார்கள். சிலர் கலந்துரையாடல் அழைப்பு என்கிறார்கள். சிலர் கூட்டுத் தொலைபேசி உரையாடல் என்கிறார்கள். இது பேசுவதாகவும் இருக்கலாம், காணுரையாகவும் இருக்கலாம். இடைக்கால இலத்தீனிலும் இடைக்கால் ஃபிரெஞ்சிலும் con- என்றால் உடன் எனப் பொருள். Fero என்றால் பண்படுத்தப்படாத அல்லது ஒழுங்கு முறையில்லாத எனப் பொருள்கள். நேர் பொருள் ஒத்து வரவில்லை.
கூட்டத்தில் தலைவர் இருந்து உரைகளை ஒழுங்குபடுத்துவதற்கு வாய்ப்பில்லாததைக் குறிப்பதாகக் கொள்ளலாம். எனினும் நாம் பயன்பாடு கருதி உடன் பேசுதல் எனக் கொள்ளலாம். இதனடிப்படையில் Conference Call என்பதைப் பலருடனும் சே்ர்ந்து பேசும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில் கொண்டு பன்முக அழைப்பு எனலாம்.
?. மூன்றுபேர் மட்டும் பேசினாலும் பன்முக அழைப்புதானா?
மூவர் இணைந்து பேசுவதை மும்முக அழைப்பு, நால்வர் இணைந்து பேசுவதை நான்முக அழைப்பு, ஐவர் இணைந்து பேசுவதை ஐம்முக அழைப்பு என்பதுபோல் சாெல்லிக் கொண்டே போகலாம். ஆனால் அது தேவையில்லை. இருவருக்கு மேல் சேரும்பொழுதே பலர் எனலாம். ஆதலின் பொதுவாகப் பன்முக அழைப்பு என்றே சொல்லலாம்.
? Seminar, Symposium, Summit என்று அனைத்தையும் கருத்தரங்கம் என்று சொல்கிறோமே.
அப்படியில்லை.
Seminar கருத்தரங்கம்
Symposium உரையரங்கம்
Summit- உச்சி மாநாடு
என்று சொல்லி வருகிறோம்
symposium என்பது sumpínō என்னும் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான சொல். sum-என்றால் சேர்தல்/கூடல் pínō என்றால் குடித்தல், அஃதாவது மது குடித்தல். இதன் பொருள் கூடிக் குடித்தல். அஃதாவது மது விருந்து. பின்னர் அறிவுசார் விவாதத்துடனும் குடியுடனும் கூடும் ஒரு கூட்டத்தைக் குறித்தது. இதுவே, ஒரு தலைப்பைப் பற்றிய விவாதத்திற்கான கூட்டம் என்றானது. குறிப்பாகப் பங்கேற்பாளர்கள் விளக்கக்காட்சிகளை வழங்கும் ஒரு கூட்டம்.
மது விருந்து இருந்தாலும் இல்லாவிட்டாலும் அறிவுசார் கருத்துகள் இடம்பெறும் கூட்டம் என்பதால் கருத்தரங்கம் எனலாம்.
இவை தொடர்பில் வேறு சில கருத்துகளையும் பார்ப்போம்.
பொதுவாகக் கருத்தரங்கம் என்றால் பலரது கருத்துகளுக்கும் இடம் இருக்க வேண்டும் .சிலர் தாங்களே உரையாளர்களை முடிவெடுத்துக் கொண்டு பங்கேற்பாளர்களும் கருத்துளைத் தெரிவிக்கலாம் எனச் சொல்லி விட்டு நடைமுறையில் தங்களுக்கு வேண்டிய சிலரை மட்டும் பேசச்சொல்லி விட்டுக் கருத்துப்பகிர்வுகளுக்கே இடம் தர மாட்டார்கள். இவற்றை யெல்லாம் உரையரங்கம் என்று சொல்லலாம். கருத்தரங்கம் என்பது பொருந்தாது. பலரும் உரையாற்றவும் கருத்துகளைத் தெரிவிக்கவும் வாய்ப்புள்ள கூட்டத்தையே கருத்தரங்கம் எனலாம்.
Summit என்றால் உச்சி என்றும் மலை முகடு / மலையுச்சி என்றும் பொருள்கள்.
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளின் உயர்நிலைத் தலைவர்களுக்கு அல்லது அவர்களின் சார்பாளர்களுக்கு இடையே நடைபெறும் முதன்மையான கூட்டம் அல்லது தொடர்ச்சியான பல கூட்டங்கள் உச்சி மாநாடு எனப்படுகிறது. மாநாடு என்பது தனக்குரிய சிறப்புப் பொருளை இழந்து பொதுவான பொருளில் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் கலந்தாடல் கூட்டமும் மாநாடு எனப்படுகிறது. இப்போதைய பயன்பாட்டில் உள்ளவாறு Summit- உச்சி மாநாடு என்றே சொல்லலாம்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்