ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 26 August 2023 அகரமுதல
(தோழர் தியாகு எழுதுகிறார் 190 : மணிப்பூர் ஒலிக்கும் எச்சரிக்கை மணி!- தொடர்ச்சி)
இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?
நான் இறைமறுப்பாளன். சமய மறுப்பாளன். ஆனால் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் இறைமறுப்பு, சமயமறுப்பு இயக்கமன்று. அதே போல் இறைநம்பிக்கைக்கான இயக்கமும் அன்று. தமிழர்களில் பல சமயத்தவர் இருப்பது மெய். சமய மறுப்பாளர்களும் உள்ளனர். சமய விடுமை என்பது ச்மய மறுப்பு விடுமையும் அடங்கலானது. பொது அமைதிக்கும் பொது ஒழுங்குக்கும் உட்பட்டு சமயத்தைக் காட்டிக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் சமயத்தைப் பரப்பவுமான விடுமையே சமய விடுமை ஆகும். இதுவே சமய மறுப்பு விடுமைக்கும் பொருந்தும். சமய மறுப்பைக் காட்டிக் கொள்ளவும் கடைப்பிடிக்கவும் பரப்பவும் விடுமை உண்டு.
சமயம் அல்லது சமய மறுப்பை அரசிலோ அரசியலிலோ கலக்கக் கூடாது என்பதுதான் சமயச் சார்பின்மை [SECULARISM] எனப்படும் உலகியல். சமய வழிபாட்டில் அல்லது சமய நிறுவனங்களில் சொத்துச் சிக்கல் போன்ற உலகியல் செய்திகள் தொடர்புற்றிருக்கும் நேர்வுகளில் மட்டுமே அரசு தலையிட வேண்டும். தேவையான நேரத்தில் தலையிடவும் வேண்டும். காட்டாக, சமயத்தின் பெயரால் ஒரு சிறு கும்பல் மக்களின் சொத்தை வன்பறிப்பு செய்யுமானால் அரசு தலையிட வேண்டும். சமய உரிமையின் பெயரால் ஒருசில சமுதாயங்களுக்குக் கோயில் நுழைவு அல்லது தெரு நுழைவு மறுக்கப்படுமானால் அரசும் அரசியல் ஆற்றல்களும் தலையிடத்தான் வேண்டும். கருவறை நுழைவும் இப்படித்தான்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பல பெரிய கோயில்கள் மன்னராட்சிக் காலத்திலிருந்தே சில மேல்சாதி நிலக்கிழார்களின் பிடியில் இருந்தன. இவை பார்ப்பனர்களின் பண்பாட்டுக் கோட்டைகளாகவும் விளங்கின. நான் பிறந்த திருவாரூரில் தியாகராசர் கோயில் வி.எசு. தியாகராச முதலியாரின் தலைமையிலான அறக்கட்டளை அல்லது அறங்காவலர் குழுவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. இந்தக் கோயிலுக்கு ஓராயிரம் வேலி நன்செய் நிலம் இருந்தது. வேலி என்றால் 20 மா. ஆறு மா சற்றொப்ப ஒரு ஏக்கர் வரும் என நினைக்கிறேன்.
தியாகராச சாமிக்கு ஆயிரம் வேலியும், அதே பெயர் கொண்ட ஆசாமிக்கு 1,001 வேலியும் இருந்ததாம். ஆசாமி ஒரு வேலியைச் சாமிக்கு எழுதி வைத்து விட்டாராம். ஆனால் மொத்தம் 2.001 வேலியும் ஆசாமியின் ஆளுகையில் நீடித்ததாம். கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்தவர்களின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் செவ்வியக்கம் பல போராட்டங்களை நடத்தியது வரலாறு. அதே செவ்வியக்கத் தலைவர்கள் சிலர் கோயில் அறங்காவலர்களாகி குத்தகை சாகுபடியாளர்களை வஞ்சித்த நேர்வுகளும் உண்டு.
சைவ வைணவக் கோயில்களின் பெயரில் பெரும் நிலச்சொத்துகள் இருப்பதையும், இவற்றைப் பரம்பரை அறங்காவலர்களோ மடாதிபதிகள் அல்லது ஆதீனகர்த்தர்களோ ஆண்டு அனுபவித்து வருவதையும் மன்னராட்சிகள் காலங்காலமாய்ப் பாதுகாத்து வந்தன. சாதிய-நிலக்கிழாரிய அமைப்பின் ஒரு முகன்மைக் கூறாக இந்தக் கோயில் சொத்துடைமை ஆட்சி அமைந்திருந்தது.
பிரித்தானியக் குடியேற்ற(காலனி)ஆதிக்கம் கிழக்கிந்தியக் கும்பினியின் வடிவில் தொடங்கிய போது இந்த கோயில் சொத்துடைமையின் மீது வெள்ளையர் ஒரு கண் வைக்கலாயினர். ஒரு புறம் அவர்களின் வரித் தண்டல் கொள்ளைக்கும், மறுபுறம் வணிக அங்காடி வளர்ச்சிக்கும் கோயில் சொத்துடைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர நினைத்தனர். 1810, 1817 ஆண்டுகளில் கிழக்கிந்தியக் கும்பினி இந்துக் கோயில்களின் ஆட்சியில் தலையிடுவதற்கான சட்டங்கள் இயற்றியது.
பல வகையிலும் எதிர்ப்புக் கிளம்பியதால் 1841க்குப் பின் அரசு பின்னடித்தது. 1857 சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் இந்திய விடுதலைப் போருக்குப் பின் கிழக்கிந்தியக் கும்பினியின் ஆட்சியை மாற்றி பிரித்தானிய முடியரசே 1858 விக்குடோரியா சாற்றுரை வழியாக தன் நேரடி ஆட்சியை நிறுவிய பின் குறுநில மனனர்கள், நிலக் கிழார்களின் ஆளுகையில் தலையிடாமைக் கொள்கையை மேற்கொண்டது. அறமற்ற அறங்காவலர்களை அவிழ்த்து விட்டாற்போலாயிற்று. அவர்கள் கோயில் நிதியையும் நகைகளையும் விருப்பம் போல் கொள்ளையடித்தனர். கோயில் நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்றும் குத்தகைக்கு விட்டும் ஆதாயமடைந்தனர்.
“சிவன் சொத்து குலநாசம்” போன்ற அச்சுறுத்தல்களுக்கு யார் அஞ்சினாலும் அறங்காவலர்களும் அருச்சகர்களும் அஞ்சுவதில்லை. நிதி ஆதாரமில்லமல் பல கோயில்களில் பூசைகள் நின்று போயின. இறையன்பர்களே இப்போது அரசுத் தலையீட்டைக் கோரினர். 1863இல் இசுலாமிய நிறுவனங்கள் உட்பட இந்து சமயக் கோயில்களின் ஆட்சியில் தலையிடுவதற்கான அறநிலையச் சட்டம் போடப்பட்டது. இது தயங்கித் தயங்கிச் செய்த ஒரு தொடக்கம் மட்டுமே.
இரட்டையாட்சி முறைப்படி சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியமைத்த பிறகுதான் 1925ஆம் ஆண்டு பனகல் அரசர் ஆட்சியில் இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926ஆம் ஆண்டு செட்டம்பர் 17ஆம் நாள் மதராசு இந்து சமயம் அறநிலையச் சட்டம், 1927 என்ற சட்டம் வரையப்பெற்றது. இதன்படி ஒரு தலைவரையும் மூன்று உறுப்பினர்களையும் கொண்டதாக வாரியம் அமைக்கப்பட்டது. இவ்வாரியத்தின் கீழ் நிருவாக அதிகாரிகள் அமர்த்தப்பட்டனர்.
இந்திய விடுமை (சுதந்திரம்) என்ற அதிகாரக் கைமாற்றத்துக்குப் பிறகு ஓய்வுபெற்ற நீதியர் பி. வெங்கட்ரமணராவு(நாயுடு) தலைமையில் அறுவர் கொண்ட குழுவின் அறிக்கையின்படி மதராசு இந்து சமயம்-அறநிலையச் சட்டம், 1959 நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அறநிலைய வாரியங்கள் மாற்றப்பட்டு அறநிலையத் துறை உருவானது. இதன்படி, அறங்காவலர்களால் இயற்றப்படும் தீர்மானங்களை அரசால் நியமனம் செய்யப்பட்ட நிருவாக அதிகாரிகள் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்துவார்கள்.
இப்படிப் பிறந்ததே தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை. இது சமயச் சார்பற்ற அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதே தவிர, இந்து சமய ஆகம விதிகளுக்கு உட்பட்டதன்று. இஃது உலகியல் நிறுவனமே தவிர சமய நிறுவனம் அன்று. கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றப்படுவதைத் தடுப்பதுதான் அதன் கடமையே தவிர இந்துத்துவ நிகழ் நிரலைச் செய்து முடிப்பதன்று.
இதையெல்லாம் இப்போது யாருக்கு நினைவுபடுத்துகிறோம்? தமிழக அரசுக்குத்தான்! குறிப்பாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்குத்தான்! பார்ப்பானை விஞ்சிய பார்ப்பனாக இருப்பதுதான் இந்து அறநிலையத் துறை அமைச்சருக்குரிய தகுதி என்று அவர் எண்ணிக் கொள்வார் போலும்! இந்துத்துவ நிகழ்நிரலின் படி கோசாலை அமைத்தால் போதாதென்று கோமாதா கோமியம் கழிக்கும் பின்பக்கம் நின்று தீபாராதனையும் காட்டி வழிபாடு செய்கிறார்.
அரிசனங்கள் கோயிலில் நுழையக் கூடாது என்று கோயில் வாசலில் அறிவிப்புப் பலகை தொங்கிய ஒரு காலத்தில், பி. பரமேசுவரன் என்ற ‘அரிசன்’ ஒருவரையே இந்து அறநிலையத் துறை அமைச்சராக்கிக் கோயில் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக்கியதோடு, அவருக்குப் பார்ப்பனப் பூசாரிகளே பூரண கும்ப மரியாதை தர வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியவர் அன்றைய முதலமைச்ச்சர் காமராசர்.
சேகர்பாபுவின் பொறுப்பில் இந்து அறநிலையத்துறை எப்படிச் செயல்படுகிறது என்பதில் முதலமைச்சர் சற்றே கவனம் செலுத்த வேண்டுமெனக் கோருகிறேன். அமைச்சரவைக் கூட்டுப் பொறுப்பு என்ற நெறிப்படி சேகர்பாபுவின் நடவடிக்கைகள் தமிழக அரசுக்கும், அதன் திராவிடக் கொள்கைகளுக்கும் பெருங்கேடாகிக் கொண்டிருப்பதை விரைவில் உணர்ந்தால் நல்லது.
சாதி வெறி சமய வெறி அரசியலின் கோட்டை கொத்தளங்களாகத் தமிழ்நாட்டுப் பெருங்கோயில்களும் சிறு கோயில்களும் மாற்றப்பட்டு வருகின்றன. தமிழக அரசு இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 221
(ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை: தலமும் கோவிலும் தொடர்ச்சி)
ஊரும் பேரும் 46
மாடக்கோயில்
தமிழகத்தில் ஈசனார்க்குரிய கோயில்கள் எண்ணிறந்தன. அவற்றுள் மன்னரும் முனிவரும் எடுத்த கோயில்கள் பலவாகும். சோழ நாட்டை யாண்ட செங்கணான் என்னும் கோமகன் “எண் தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்தான்” என்று திருமங்கையாழ்வார் கூறிப் போந்தார். அம் மன்னன் எடுத்த திருக்கோயில்களைப் பற்றிய சில குறிப்புகள் தேவாரத்தில் உண்டு. தஞ்சை நாட்டைச் சேர்ந்த நன்னிலத்தில் உள்ள பெருங்கோயில் அவன் செய்ததென்று சுந்தரர் தெரிவிக்கின்றார்.1
இன்னும் வைகல் என்னும் பதியிலுள்ள மாடக் கோவில் கோச்செங்கணான் கட்டியதென்பது,
“வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே”
என்ற திருஞான சம்பந்தர் வாக்கால் விளங்கும்.
அரிசிலாற்றங் கரையில் அமைந்த திரு அம்பர் மாநகரில், செங்கணான் கட்டிய கோயிலில் சிவபெருமான் வீற்றிருந்த செம்மை,
“அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே”
என்னும் தேவாரத்தால் விளங்குகின்றது.
திரு ஆனைக் காவில் வெண்ணாவல் மரத்தில் வெளிப்பட்ட ஈசனுக்கு அவ் வேந்தன் திருக்கோயில் எடுத்தான் என்று சேக்கிழார் அருளிப் போந்தார்.2
பெருங்கோயில்
ஈசனார் வீற்றிருக்கும் பெருங்கோயில் எழுபத்தெட்டு என்று
கணக்கிட்டார் திருநாவுக்கரசர்.
“பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்”
என்று அவர் பாடுகின்றார். இப் பாசுரத்திற் குறிக்கப் பட்ட பெருங் கோயில் அனைத்தும் இக் காலத்திற் காணப்படாவிடினும் தேவாரத்தில் அவற்றைப் பற்றிய சில குறிப்புண்டு.
இந் நாளில் கொடவாசல் என வழங்கும் குடவாயிற் பதியில் ஒரு பெருங்கோயில் இருந்தது.3 நாகபட்டினத்திற்கு அண்மையிலுள்ள கீழ் வேளூரில் அமைந்த ஆலயமும் பெருங்கோயில் என்று பேசப்படுகின்றது.4
அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள கலய நல்லூர் என்னும் பதியில் ஒரு பெருங் கோயில் உண்டு. பூங்கமலப் பொய்கையின் இடையே அழகுற இலங்கிய அவ்வாலயத்தைச் சுந்தரர் பாட்டில் எழுதிக் காட்டியுள்ளார்.
“தண்கமலப் பொய்கைபுடை சூழ்ந்தழகார் தலத்தில்
தடங்கொள் பெருங்கோயில் தனில்தக்க வகையாலே”
எழுந்தருளிய ஈசனை அவர் மகிழ்ந்து போற்றுகின்றார்.
தலைச்சங்காடு என்னும் பதியில் பிறிதொரு பெருங் கோயில்
இருந்ததென்பது,
“தண்டலையா ர்தலையாலங் காட்டி னுள்ளார்
தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்”
என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கால் அறியப்படுகின்றது. பெருந்திருக்கோயில்
வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் மருதநாடு என்ற பழமையான ஊரொன்று உள்ளது. அங்கமைந்த ஆலயத்தின் பெயர் பெருந்திருக் கோயில் என்பது சாசனத்தால் விளங்குகின்றது. இராசராசன் முதலாய பெருஞ் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சில காலம் விக்கிரம சோழ நல்லூர் என்ற மறுபெயரும் அதற்கு வழங்கியதாகத் தெரிகின்றது. பெருந்திருக்கோயில் என்பது இக் காலத்தில் புரந்தீஸ்வரர் கோயில் எனத் திரிந்து வழங்குகின்றது.5
சிறுதிருக்கோயில்
தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள எழும்பூர் என்னும் உருமூர் ஒரு பழமையான ஊர். இடைக் காலத்தில் விக்கிரம சோழ சதுர் வேதிமங்கலம் எனவும் அவ்வூர் வழங்கிற்று. அங்குள்ள கோயிலிற் கண்ட சாசனங்கள் சிறு திருக் கோயில் என்று அதனைக் குறிக்கின்றன.6 இப்பொழுது கடம்பவனேஸ்வரர் கோயில் என்று கூறப்படுவது அதுவே.
கரக்கோயில்
பாடல் பெற்ற கடம்பூரில் அமைந்துள்ள கோயில் கரக்கோயிலாகும்.
“நன்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தன் கடம்பைத் திருக்கரக் கோயிலான்”
என்று தேவாரம் இக் கோயிலைப் போற்றுகின்றது.
ஞாழற் கோயில்
நறுஞ் சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற் கோயில் என்று தேவாரம் பாடிற்று. தஞ்சை நாட்டில் விளநகர் என வழங்கும் விளைநகரில் அமைந்த கோயில் திருஞாழற் கோயிலாகும். ஞாழல் என்பது கொன்றை மரத்தின் ஒரு வகை. புலிநகக் கொன்றை என்றும் அதனைக் கூறுவர். கொன்றை மாலை சூடும் ஈசன் கொன்றையஞ் சோலையைக் கோயிலாகக் கொண்டார் போலும். ஆற்றங் கரையில் அழகுற அமர்ந்த திருஞாழற் கோயிலுடையார்க்கு அருத்தயாமக் கட்டளைக்காக உத்தமசோழனுடைய முதற்பெருந் தேவியார் அளித்த நிவந்தம் சாசனத்திற் காணப்படுகின்றது.7
கொகுடிக்கோயில்
முல்லைக் கொடிகள் தழைத்துப் படர்ந்து மணங் கமழ்ந்த சூழலிற் கோவில் கொண்டார் சிவபெருமான். அது கொகுடிக் கோயில் என்று பெயர் பெற்றது கருப்பறியலூர் என்ற பழம் பதியிற் பொருந்திய அக் கோயில் தேவாரத்தில் இனிது எழுதிக் காட்டப்படுகின்றது.
“கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை
குதிகொள்ளும் கருப்பறியலூர்க்
கொடியேறி வண்டினமும் தண்தேனும்
பண்செய்யும் கொகுடிக் கோயில்”
என்னும் சுந்தரர் திருப்பாட்டில் முல்லைக் கோயிலின் கோலம் மிளிர்வதாகும். இத் திருக் கோயிலில் அமர்ந்த ஈசனைப் பிழையெல்லாம் பெறுத்தருளும் பெருமானாகக் கண்டு போற்றினார் திருஞான சம்பந்தர்.
“குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென இருப்பது கருப்பறிய லூரே”
என்றெழுந்த அவர் திருவாக்குக் கேற்ப அங்குள்ள இறைவன் திருநாமம் குற்றம் பொறுத்த நாதர்’ என்றே இன்றும் வழங்கி வருகின்றது.
இளங்கோயில்
இன்னும், இறைவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில்களைத்
தொகுத்துரைக்க விரும்பிய திருநாவுக்கரசர்.
“இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் வீழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே”
என்று பாடிப் போந்தார். இப்பாசுரத்திற் குறிக்கப்பெற்ற கோயில்களைத் தேவாரத்தாலும் சாசனங்களாலும் ஒருவாறு அறியலாகும்.
மேலே குறித்த கடம்பூரில் ஈசனார்க்குத் திருக்கரக் கோயிலோடு இளங்கோயில் என்னும் மற்றோர் ஆலயமும் இருந்ததாகத் தெரிகின்றது.
“கடம்பை இளங்கோயில் தன்னின் உள்ளும்
கயிலாய நாதனையே காண லாமே”
என்றார் திருநாவுக்கரசர். கடம்பூரில் திருக்கரக் கோயிலுக்குக் கிழக்கே ஒரு கல் தூரத்தில் இளங்கோயில் அமைந்துள்ள தென்பர்.8
தஞ்சை நாட்டுப் பேரளத்திற்கு அருகே மற்றோர் இளங்கோயில்
உண்டு.
“நெஞ்சம் வாழி நினைந்திடு மீயச்சூர்
எந்தமை உடையார் இளங்கோயிலே”
என்னும் திருநாவுக்கரசர் திருவாக்கால் இவ் விளங்கோயில் திருமீயச்சூரைச் சேர்ந்ததென்பது விளங்கும்.
(தொடரும்)
இரா.பி.சேது(ப்பிள்ளை)
ஊரும் பேரும்