காரையூர் புதுவளவு வண்ணிக் கண்மாய் கரையில் கல்வெட்டு இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த சுரேஷ் என்ற பட்டதாரி மாணவர் கொடுத்த தகவலின் பேரில் சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் கா.காளிராசா , செயலர் இரா.நரசிம்மன், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி, வரலாற்றுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா ஆகியோர் அவ்விடத்தில் களஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
இரண்டடி நீளமுள்ள இக்கல்வெட்டில் மொத்தம் ஏழு வரிகளோடு நிறைவடையும் இடத்தில் ஒரு பூரண கும்பமும், அதன் இரு பக்கமும் குத்து விளக்குகளும் காணப்படுகின்றன. எழுத்தமைதியைக் கொண்டு இது பொது ஆண்டு பதிமூன்றாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம்.
அதாவது, “வண்ணக்க நல்லூர் என்ற ஊரில் உள்ள குளக்கரையை அல்லது குளத்தின் பகுதியை அடைந்து வாழ்ந்த சீயர் (வைணவ ஆச்சாரியார்), மக்களுக்கு நல்வாழ்வுக்கான வேத நெறியைக் காட்டி, அவர்களைப் பாதுகாத்து (ரக்ஷை செய்து) அருளினார்" எனப் பொருள் கொள்ளலாம். காரையூரில் உள்ள அழகிய மணவாளப் பெருமாள் கோயிலில் காணப்படும் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், மற்றும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோரது கல்வெட்டுகளில் வண்ணக்க நல்லூர் பெயருடன், வண்ணக்க நல்லூர் தூதன் ஆண்டபிள்ளை என்று கையெழுத்திட்டவரின் பெயரும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. காரையூரில் அழகிய மணவாளப் பெருமாள் கோயிலைச் சேர்ந்த நம்பிமார்க்கு காரையூர், மணக்குடி, வண்ணக்கநல்லூர், தோட்டூர், உகளூர், பனைவயல் ஆகிய கிராமங்களிலும் இக்கோயிலுக்கான திருவிடையாட்டம் எனப்படும் இறையிலி நிலங்கள் இருந்ததாக இக்கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
மேலும் இக்கண்மாயின் அருகே அமைந்துள்ள அய்யனார் கோயில் வன்னிகுன்னி அய்யனார் என அழைக்கப்படுவதாலும், இக்கண்மாய் வண்ணிக்கண்மாய் என அழைக்கப்படுவதாலும் கல்வெட்டின்படி இப்பகுதியே வண்ணக்க நல்லூர் என அழைக்கப்பட்டிருக்கலாம். தமிழகத்தில் காவல் தெய்வமாக விளங்கும் ஐயனார், பொதுவாக தனது இரு தேவியரான பூரணா, புஷ்பகலா மற்றும் வாகனங்களுடன் காட்சியளிப்பது வழக்கம். இங்குள்ள ஐயனார் துணைவியர் இன்றி தனித்து அமர்ந்த நிலையில் உத்குடி ஆசனத்தில் (அமர்ந்த நிலை) கம்பீரமாக வீற்றிருக்கிறார். இரண்டு யானை வாகனங்கள் காணப்படுகின்றன. ஐயனார் சிற்பத்தின் தலையில் ஜடாபாரத்துடனும், நெற்றியில் கண்ணி மாலை, மார்பில் சன்னவீரம், காதுகளில் மகர குண்டலங்கள், மார்பில் உதரபந்தம் ஆகியவற்றுடன் வலது கையில் செண்டை ஏந்தியுள்ளார். இடது கரம் தண்ட ஹஸ்தத்தில் அமைந்துள்ளது. இச்சிற்பமும் பொது ஆண்டு 12 அல்லது 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம், என தெரிவித்தனர்.
என் விளக்கம்: வண்ணக்க நல்லூரில் தங்கும் இடமுள்ள குளத்தை சீயர் வேத நெறி கற்பிக்க வேண்டி செய்வித்தான். இதை சீயர் பாதுகாக்க வேண்டும் என்பது பொருள். யார் கட்டியது என்ற குறிப்பு இல்லை. இதற்கு தப்பாக விளக்கம் கொடுத்துள்ளனர் என்பது சீயர் ரக்ஷை என்ற சொல்லில் இருந்து விளங்கும்.