அரியலூர் மாவட்டம் இறைவர்:மதுராந்தக ஈஸ்வரமுடையார்

1 view
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Apr 18, 2026, 11:02:34 PM (4 days ago) Apr 18
to தமிழ் மன்றம்

அரியலூர் மாவட்டம்

இறைவர்:மதுராந்தக ஈஸ்வரமுடையார்


 

ஏலாக்குறிச்சியில் நடைபெற்ற நண்பர் பெரிய மரை கிருஷ்ணன் மகன் திருமணத்திற்கு மச்சான் கஜேந்திரனுடன் சென்றிருந்தேன்.

பௌத்தவியல் அறிஞர் முனைவர் கும்பகோணம் ஜம்புலிங்கம் ஐயா அவர்கள்,எறக்குடியில் ஒரு புத்தர் சிற்பம் இருப்பதாகவும் அதைச் சென்று பார்த்து வருமாறும் செய்தி அனுப்பி இருந்தார்

திருமணம் முடிந்த பின் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம், அங்கு இருக்கும் அரியலூர் பாளையக்காரர் கல்வெட்டு பார்த்த பின் அரியலூர் சாலையைப் பிடித்தோம்.

இலேசான தூறல்.

அங்கிருந்து ஆறு கிலோ மீட்டரில் எறக்குடி.

ஊரின் முகப்பிலேயே கோயில். கோயிலைச் சுற்றிய நிலங்கள்-சிலை, அங்கன்வாடி மையம், பெருமாள் கோயில் எனப் பல வகைகளில்- ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டன.

Description: ◾வரலாறு

இந்த கோயிலில் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டுகளில் இரைக்குடி என குறிக்கப்படும் இவ்வூர் தற்போது "எறக்குடி" அழைக்கப்படுகிறது. கீழப்பழுவூரில் உள்ள இரண்டாம் இராஜராஜன் காலக் கல்வெட்டு ,இவ்வூர்ப் பெயரைப் "பூலோகபுரந்தர நல்லூர்" எனக் கூறுவதோடு மேலப்பழுவூரில் இருந்த "குலோத்துங்க சோழன் அக்கசாலை ஈஸ்வரம்" என்ற நாணயம் அச்சடிக்கும் இடத்தில் கோயிலுக்குத் தேவதானமாக இவ்வூர் இருந்ததையும் குறிப்பிடுகிறது.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள முதலாம் இராஜராஜன் காலத்துக் கல்வெட்டு ,இவ்வூரைச் சேர்ந்த இடையர்கள் ,தஞ்சைக் கோயிலுக்கு விடப்பட்ட ஆடுகளைப் பராமரித்து நெய் வழங்கும் பணியைச் செய்தனர் எனவும் கூறுகிறது.

கல்வெட்டுகளில் கூறப்படும் "திருவாய்ப்பாடி ஆழ்வார் கோயில்"என்பது வைணவக் கோயிலாகலாம். ஆனால் அது இவ்வூரில் எங்கு உள்ளது என அறியக் கூடவில்லை.

Description: ♦️முதல் கல்வெட்டு

இடம்: எறக்குடி ஆதிமத்யார்ஜுனேசுவரர் கோயில் கருவறை தென்புறச் சுவர்

மன்னன்: மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178-1218)

ஆட்சியாண்டு : 13

காலம்: கி.பி. 1191

ARE 401 of 1992-93

Description: ◾விளக்கம்:

இது மூன்றாம் குலோத்துங்க சோழரின் ஆணையாகும். இவ்வூர்ப் பெயர் இரைக்கு இவ்வூர் குன்றக் கூற்றம் (தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்துக் குன்னம்)எனும் நாட்டுப்பிரிவின் கீழ் இருந்தது எனக் கூறுகிறது.

இந்த கோயிலின் பெயர் மதுராந்தக ஈஸ்வரமுடையார் கோயில் எனவும் இவ்வூரில் திருவாய்ப்பாடி ஆழ்வார் கோயில் எனும் கோயில் இருந்ததையும் இக்கல்வெட்டு விவரிக்கிறது.

இக்கோயில்களுக்குப் பூஜை வழிபாட்டுக்கு சுத்தமல்லி என்ற ஊரில் இருந்த நிலங்களை இவ்விரு கோயில்களுக்கும் முறையே இரண்டு பங்குகளாகப் பிரித்து வழங்கி மன்னர் ஆணைபிறப்பித்ததையும் அதனைப் பல்வேறு வருவாய்த் துறை அலுவலர்கள் நிறைவேற்றியதை விவரிக்கிறது.

இது இரைக்குடியில் உள்ள மதுராந்தக ஈஸ்வரமுடையார் கோயில் அலுவலர்களுக்கும் இவ்வூரில் உள்ள திருவாய்ப்பாடி ஆழ்வார் கோயில் அலுவலர்களுக்கும் மன்னர் அனுப்பிய ஆணையாகும். சுத்தமல்லி என்ற ஊரில் தேவதானமாக விடப்பட்ட நிலம் போக மீதி உள்ள நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை திருவாய்ப்பாடி ஆழ்வார் கோயிலுக்கும் இரண்டு பகுதியை ஸ்ரீ மதுராந்தக ஈஸ்வரமுடையார் கோயிலுக்கும் தேவதானமாக வழங்க வேண்டும் என வேணாடுடையான் எனும் அமைச்சர் மன்னரிடம் கேட்டுக் கொண்டதற்ககு இணங்க நிலங்களை இறையிலியாக வழங்கி இதில் வருவாய்த் துறை அலுவலர்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.

கல்வெட்டுப் பாடம்

1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுரையும் கொண்டு பாண்டியன் முடித்தலையும் கொண்டருளின ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவர்க்கு

2. யாண்டு பதின்மூன்றாவது நாள் நூற்றொன்றினால் பிரஸாதஞ் செய்தருளின் திருமுகப்படி திரிபுவனச் சக்கரவத்திகள் கோனேரின்மை கொண்டான் குன்

3. றக் கூற்றமான உத்துங்க துங்க வளநாட்டு இரைக்குடி மதுராந்தக ஈஸ்வரமுடையான கோயில் தேவகன்மிக்கும் கோயில் கண்காணி செய்வார்களுக்கு

4. ம் ஸ்ரீ காரியஞ் செய்வானுக்கும் இத்தேவர்க்கும்இவ்வூர்த் திருவாய்ப்பாடி ஆழ்வார்க்கும் இன்னாட்டு சுத்தமல்லியில் பன்நிரண்டாவது வரையும் தேவதானமா

5. நிலம் நீக்கி நீக்கி நின்ற நிலத்து மூன்று கூறிட்ட இருகூற்றில் வந்த நிலம் இத்தேவர்க்குத் தேவதான இறையிலியாகவும் ஒரு கூற்றால் வன்த நிலம்

6. வ்வாழ்வார்க்குத் தேவதான இறையிலியாகவும் பதின்மூன்றாவதுமுதல் இடக்கடவதாக பெறவேணுமென்று வேணாடுடையான் நமக்குச்

7. சொன்னமையில் இப்படி செய்யக் கடவதாகச் சொல்லி கணக்கிலும் இட்டுக் கொள்ளக் கடவர்களாக வரிக்கு கூறு செய்வார்களுக்கும் சொன்னோம் இவ்வரி

8. யிலி இத்தேவர்க்கும் திருவாய்ப்பாடி ஆழ்வார்க்கும் பன்நிரண்டாவது வரையும் தேவதானமான நிலம் நீக்கி நீக்கி நின்ற நிலத்து மூன்று கூறிட்டு ஒரு கூற்றால்

3. வந்த நிலம் இவ்வாழ்வார்க்கு தேவதானமாக விட்டு ஒரு கூற்றால் வந்த நிலம் இத்தேவர்களுக்கு தேவதான இறையிலியாகக் கைக் கொண்டு நிம

10. ந்தஞ் செலுத்தப் பண்ணுகவென்று எழுதினான் திருமந்திர ஓலைநெறி உடைச் சோழ மூவேந்த வேளாரும் குருகுலராயரும் இலாடராயரும் விழிஞத்தரையரும்

11. மலையப்பிரயாரும் கச்சிராயரும் வயிராதராயரும் அமரக்கோனாரும் காடு வெட்டிகளும் நரசிங்கபன்மரும் வேணாடுடையாரும் எடுத்திட்டது.

Description: ♦️இரண்டாம் கல்வெட்டு

இடம்: எறக்குடி ஆதி மத்யார்ஜுனேசுவரர் கோயில் கருவறை தென்புறச் சுவர்

மன்னன்: மூன்றாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் (1297 - 1342)

ஆட்சியாண்டு : 6

காலம்: கி.பி. 1303

...எண்: ARE 402 of 1992-93

Description: ◾விளக்கம்:

இரைக்குடியில் பெரியநாட்டான் ஆலடியின் கீழ் ஐஞ்சு நாட்டார்கள் என அழைக்கப்பட்ட பழுவூர் பற்று திரணி(தற்போதைய பெரம்பலூர் மாவட்டத்துத் தெரணி)நாட்டார், கண்டராதித்தன் பிடாகை திரணி நாட்டார் ஒன்று கூடித் தங்களுக்குள் ஒருமைப் பிடிபாடு செய்து கொண்டனர். அதன்படி அவர்களுக்கு இப்பகுதியில் உள்ள ஊர்களில் இருக்கும் நீர்நிலக் காணி உரிமைகள், நத்தக் காவல் காணி, காப்புக் காணி உரிமைகள் ஆகியவற்றை அவர்களின் ஆண் வாரிசுகளுக்கு வழங்குவது என முடிவு செய்தனர்.

Description: ◾கல்வெட்டுப் பாடம்

1. ஸ்வஸ்திஸ்ரீ கோற்சடபன்மர் திருபுவனச்

2. க்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தே

3.வற்க்கு யாண்டு ஆறாவது ஆவணி மாதம் ரு ம்

4. நாள் பழுவூர்ப் பற்று திரணி நாட்டவரும் கண்

5. டராதித்தன் பிடாகைத் திரணி நாட்டவரும்

6. ரைக் குடியில் பெரிய நாட்டான் ஆலடியில்

7. நிறைவற நிறைந்து குறைவறக் கூ

8. டி எங்களில் இசைந்த ஒருமைப் பிடிபா

9. டு பண்ணின பரிசாவது பழுவூர்ப் பற்றின்

10.ண்டராதித்தன் பிடாகையிலும் பல பற்றி

11. லும் நாங்கள் கொண்டுடை வோமாய் நா

12. ங்கள் ஆண்டுபோது நீற்நிலக் காணிகளும்

13. நத்தக் காவல் காணிகளும் காப்புக் காணி

14. களும் மற்றும் எப்பேற்ப்பட்ட உரிமைகளும்

15. எங்கள் ஆண்மக்களே இந்தக் காணி ஆளு

16. மை பிடிபாடு பண்ணினோம் பழுவூர்ப் பற்று

17. ஞ்சு நாட்டவரும் கண்டராதித்தன் பிடாகை

18. ஞ்சு நாட்டவரும் இவ்வனைவரோம்

இப்படிக்கு இவை சொக்கனார் எழுத்து.

Description: ◾குறிப்பு

"ஐஞ்சு நாட்டார் என்போர் சுருதிமான் இனத்தவர் (தற்போது இவர்கள் பார்க்கவ குல சுதர்மான்கள் என அழைக்கப்படுகிறார்கள்) என்பதை ஐஞ்சுநாட்டு சுருதிமான்கள் என்று ஊட்டத்தூரில் உள்ள மூன்றாம் குலோத்துங்கனின் கல்வெட்டுக் குறிப்பிடுவதால் அறியலாம்"எனப் பேராசிரியர் இல.தியாகராஜன் கூறுகிறார்..

Description: ◾

துணை நூல்:

அரியலூர் மாவட்டக் கல்வெட்டுகள் செப்பேடுகள்

டாக்டர் இல. தியாகராஜன்


Reply all
Reply to author
Forward
0 new messages