தமிழர் என்பது மொழி அடையாளமல்ல; பண்பாட்டு அடையாளம்!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழ்நாடு எங்கும் லட்சக்கணக்கான மக்கள் ஆறுகளை நோக்கிப் படையெடுக்கிறார்கள். மேற்கே பெய்த பெருமழைக்குப் பின் தமிழ்நாட்டு ஆறுகளில் பாய்ந்து வரும் புதுப்புனலை வரவேற்கும் பண்டிகை இது என்று சொல்லப்படுகிறது. நெல் விளையும் பகுதிகளில் இதை வளமையின் தொடக்கம் என்கிறார்கள். என் கேள்வியெல்லாம், இந்தக் கொண்டாட்டத்தை இப்படித் திட்டமிட்டது யார்?
ஆடிப் பதினெட்டு என்றில்லை, இன்னும் சில நாட்களிலும் ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒருசேர இப்படித் திருவிழாக்களைக் கொண்டாடுகிறது. தைப்பூசத்திற்காக விரதமிருந்து பாதயாத்திரை போகிறவர்கள் அதிகம். சித்திரா பெளர்ணமிக்காகக் காத்திருப்பவர்கள் எண்ணிக்கை சொல்லி மாளாது. பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், மாசி மகம் - இப்படி வானியலோடும் அதையொட்டிய பருவகால மாற்றத்தோடும் தொடர்புடைய நாட்களிலெல்லாம் தமிழ்நாடு கொந்தளிக்கத் தொடங்குகிறது.
ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு காரண காரியங்கள் கதைகளாகச் சொல்லப்படுகின்றன. நாட்டுப்புறத் தெய்வங்களையும் சைவ, வைணவ தெய்வங்களையும் தொடர்புபடுத்தும் நீண்ட நெடியப் புராணக் கதைகள் ஏராளம் உண்டு. அவை எல்லாமும் பிற்காலத்தில் சொல்லப்பட்ட கொடூர விளக்கங்கள் என்பது நமக்குத் தெரியும். இந்தக் கதைகளையெல்லாம் மீறி, ஆடிப் பதினெட்டு போன்ற இந்த நாட்களில் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பது மட்டும் நிஜம்.
இது எப்படி நடக்கிறது? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை ஆடி மாதம் அம்மை நோய்க்கான மாதம் என்பதுதான் தமிழக நம்பிக்கை. புதுப்புனல் புது நோய்களையும் கொண்டுவந்திருக்கிறது. காலரா, வாந்தி பேதி சர்வசாதாரணம். அம்மன் வழிபாட்டையே இதற்கு நிவர்த்தியாகப் பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனால், அம்மை போன்ற நோய்கள் ஒழிக்கப்பட்ட பின்பும்கூட மக்களுக்கு ஆடி மாத வழிபாட்டை நிறுத்தத் தெரியவில்லை. காரணம் அழிந்த பின்பும் காரியம் தொடர்கிறது.
மானிடவியலாளர் மார்க்ரெட் ட்ராவிக் ‘மாறிப்போன அம்மா அல்லது அம்மை நோய் அழிந்த பின்பு அம்மன் என்ன செய்கிறாள்?’ என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். உண்மையில் அந்தக் கட்டுரை, ‘அம்மை நோய் அழிந்த பின்பும் மக்கள் கூழ் காய்ச்சிக் குடிப்பது ஏன்?’ என்று தலைப்பிடப்பட்டிருக்க வேண்டும். நாம் கவனம் செலுத்த வேண்டியது, மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பது தான்.
1834இல் திருநெல்வேலியில் வாழ்ந்துவந்த ஐரோப்பிய மத போதகர் ரெய்னீஸுக்கு இதே போன்றொரு பிரச்சினை வந்தது. அவரால் மதமாற்றப்பட்ட ஏராளமான அம்மன் வழிபாட்டு மரபினர் ஆனி மாதம் வந்தால் பதட்டமடைய ஆரம்பிக்கிறார்கள். பிற தமிழர்களெல்லாம் ஆனி ஆடி மாதங்களில் அம்மன் பெயரைச் சொல்லித் திரள ஆரம்பிக்கையில் இப்புது கிறிஸ்தவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
அப்போதுதான் ரெய்னீஸ் ஒரு விஷயத்தைக் கவனித்தார். அம்மன் திருவிழா வெறும் வழிபாடு மட்டுமல்ல, அங்கேதான் திருமணங்களை நிச்சயிக்கிறார்கள்; அங்கேதான் அன்னதானங்களை வழங்குகிறார்கள்; அங்கேதான் ஒருவருக்கொருவர் சந்தித்து அளவளாவிக் கொள்கிறார்கள். வழிபடும் தெய்வத்தை மாற்றுவது எளிது. ஆனால், வாழ்ந்த பண்பாட்டை என்ன செய்வது? இதற்காக உருவாக்கப்பட்டதே திருநெல்வேலியில் இன்றைக்கும் நடைபெறும் மாம்பழச் சங்கம்.
ஏற்கெனவே சொல்லப்பட்ட தினங்களில் தமிழர்கள் ஒன்றே போல் கிளர்ச்சி அடைவது ஏன்? வட்டார வேறுபாடுகள், தெய்வ மாறுபாடுகள் இருந்தாலும் அன்றன்றைய நாட்களில் மக்கள் ஒன்றுதிரள்வது ஏன்? கண்ணுக்குத் தெரியும் வழிபாடுகள், சடங்குகளைக் கடந்து அவர்களை ஒரே மாதிரியான உணர்வெழுச்சிக்கு ஆட்படுத்துவது எது? இதை உடனடியாக மாய மந்திரம் என்று நம்பிக்கொள்ள வேண்டியதில்லை. வாழிடம் சார்ந்தும், சூழலியல் சார்ந்தும், உணவு போன்ற பல்வேறு பழக்க வழக்கங்கள் சார்ந்தும், இவற்றிலிருந்து உருவாகும் பொதுப்புத்தி சார்ந்தும் தமிழர்கள் தங்களுக்குள் ஏராளமான ஒருங்கிணைப்புப் புள்ளிகளைக் கொண்டிருக்கிறார்கள். ஒரு உதாரணத்துக்கு, ஆடிப்பெருக்கு என்றதும் தமிழர்களுக்குப் புனலாடுதல் நினைவுக்கு வந்துவிடுகிறது. இதற்கு வரலாற்றிலிருந்து பல்வேறு சான்றுகள் கிடைக்கின்றன. பொங்கி வரும் புது வெள்ளத்தைப் போல தமிழர்களை உன்மத்தம் பிடிக்க வைக்கும் சித்திரம் வேறு எதுவும் இல்லை. அதன் வரலாற்றுச் சுவடுதான் ஆட்டனத்தி - ஆதிமந்தி காதல் கதை.
புதுப்புனலின் ஆக்ரோஷத்தை எதிர்த்து விளையாடும்போது உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞனின் துயரக் கதை இலக்கியப் பிரதிகளெங்கும் பதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சோகத்தின் கனத்தை அதிகரிக்க அவனுக்கு ஆதிமந்தி என்றோரு காதலி இருந்ததாகவும் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அந்தத் துன்பக் கதையின் வலி பொறுக்காமல், அவ்விளைஞன் இன்னொரு சாகச விரும்பியான மருதியால் காப்பாற்றப்பட்டான் என்றும் கதை சொல்லியிருக்கிறார்கள். புனலாடுதல் தமிழர்களின் நனவிலியில் பதிந்துபோனதன் சான்றுகள் இவை.
இது மட்டும் அல்ல, சூழலியல் சார்ந்து தமிழர்கள் மழைக்கு அடிமை. எல்லாத் தமிழ்த் திரைப்படங்களிலும் உணர்ச்சிகரமான கட்டங்களில் மழை பெய்வதற்கான காரணம் இதுதான். அதீத உணர்ச்சியை மழைதான் மிகச் சரியாகப் பிரதிபலிக்கிறது. இதனாலும்தான், சர்வசாதாரணமாய் மழை பெய்யும் மலையாளத் திரைப்படங்கள் நமக்கு எப்பொழுதும் பிரம்மிப்பைத் தருகின்றன. மாரியை விடக் கொந்தளிப்பான தெய்வத்தை தமிழர்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லைதானே! காளை, பாம்பு, கருப்பு வரிசையில் மழையும் ஒரு முக்கியமான இணைப்புக் கண்ணி.
ஆடிப்பெருக்கு என்ற சொல் இன்னொரு வகையிலும் மயக்கக்கூடியது. ஒரு கண்ணாடி தனக்குத் தெரிந்த அனைத்தையும் பெருக்கிக் காட்டுவது போல இன்றைய தினம் ஆற்றங்கரைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தன்னுருவம் பெருகித் தெரிவதைப் பார்த்துக்கொள்கிறார்கள். இந்தப் பெருக்கத்தையே சமூக ஒருங்கிணைப்பு என்று சமூகவியல் அழைக்கிறது. இதற்கு மானிடவியலில் பண்பாட்டுச் செயல் என்று பெயர். நாட்டுப்புறவியலில் பொதுப்புத்தி என்று அழைக்கப்படுகிறது.
ஒரு நூற்றாண்டாக தமிழர்களை இணைக்கும் புள்ளி மொழி என்று நினைத்துக்கொண்டிருப்பதை நாம் மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். மொழியையும் கடந்து பண்பாடு இன்னும் தீவிரமாக மனதுக்குள் அதிர்வுகளை எற்படுத்துகிறது. அது, மொழியைக் காட்டிலும் சிறந்த வரலாற்று ஞாபகங்களை நிலமெங்கும் பொதிந்து வைத்திருக்கிறது. ஒரு படி மேலே போய், பண்பாடு காலத்தையும் தனது நினைவுப் பெட்டகமாகப் பயன்படுத்துகிறது. அதன் வெளிப்பாடே, ஆடிப்பெருக்கு, சித்திரா பெளர்ணமி, மாசி மகம் போன்ற நாட்களில் தமிழர்கள் அடையும் உன்மத்த நிலை.