1. குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2. திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2 ++ 3. நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா

191 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 11, 2018, 5:13:46 PM1/11/18
to thiru thoazhamai, puduvaibloggers kuzhu, tamil_ulagam kuzhu, kuzhu, tamilmanram kuzhu, தமிழ் சிறகுகள், thamizh...@googlegroups.com, theyva-thamizh, வல்லமை, Murugesan M., Raghavendra A, Chandra Sekar, தமிழ் யாப்பியல் ஆய்வாளர் பேரவை, World Tamil Forum, kavia...@yahoo.co.in, Chandar Subramanian, kalvettu, dina ethal, ymha.vad...@yahoo.com, Kanagu Chandran, manj...@dinamani.com, mki...@hotmail.com, Mumbai Kumanarasa Lemuriya Publications, srir...@dinamani.com, ne...@lankasri.com, ne...@tamilwin.com, online...@thehindutamil.co.in, Newsofthe Transtamils, wetamizhar




நாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா

நாகரத்தினம் கிருட்டிணாவின்

‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா

மார்கழி 28, 2048 – வெள்ளி – சனவரி 12, 2018


000

திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2

திருவள்ளுவர்  2.

தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :-
  1. இடுக்கண்கால் கொன்றிட விழு மடுத்தூன்றும்
நல்லா ளிலாத குடி. (1030)
தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுல நையவத னுட்பிறந்த வீரர்
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கல்மட வார்கட னென்றெழுந்து போந்தான்.
(சிந்தா – காந்தருவ-6)

2.வேட்ட பொழுதி னவையவை போலுமே
தோட்டார் கதுப்பினா டோள். (1105)
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினி வேய்மென்றோட்
பூட்டார் சிலை நுதலாட் புல்லா தொழியேனே.
(சிந்தா-குண-192)
3. கடலன்ன காம முழந்து மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில். (1137)
எண்ணில் காம மெரிப்பினு மேற்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணல தில்லையே.
(சிந்தா – குண – 148)
4. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல். (894)
யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். (895)
வேந்தொடு மாறுகோடல் விளிகுற்றார் தொழிலதாகும்.
(சிந்தா – குண – 239)
5. ஆக்கங் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கா ரறிவுடை யார். (463)
வாணிக மொன்றுந் தேற்றாய் முதலொடுங் கேடு வந்தால்
ஊணிகந் தூட்டப் பட்ட வூதிய வொழுக்கி னெஞ்சத்
தேணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்
சேணிகந் துய்யப் போநின் செறிதொடி யொழிய வென்றார்.
(சிந்தா – காந்தரு – 278)
6. இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல். (905)
இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்றநெஞ்சிற்
புல்லாளனாக.
(சிந்தா – மண்மகளிலம்பகம், செய் – 217)
7. உலகந் தழீஇய தொட்ப மலர்தலும்
கூம்பலு மில்ல தறிவு. (425)
கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதா நட்பாட்சி-தோட்ட
கயப்பூப்போன் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாரு நட்பாரு மில்.
(நாலடி – நட்பாராய்தல் – 5)
8. ஒருநா ளெழுநாள்போற் செல்லும் சேட் சென்றார்
வருநாள்வைத் தேங்கு பவர்க்கு. (1269)
பெறினென்னாம் பெற்றக்கா லென்னா முறினென்னாம்
உள்ள முடைந்துக்கக் கால். (1270)
ஊடற்கட் சென்றேன்மற் றோழி யதுமறந்து
கூடற்கட் சென்றதென் னெஞ்சு. (1284)
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
புலப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்
கலப்பேன் என்னுமிக் கையறு நெஞ்சே.
ஊடுவேன் என்பேன்மன் அந்நிலையே அவற்காணிற்
கூடுவேன் என்னுமிக் கொள்கையி னெஞ்சே.
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
துனிப்பேன்யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணில்
தனித்தே தாழும் இத்தனி நெஞ்சே.
எனவாங்கு
பிறைபுரை யேர்நுதால் தாமெண்ணி யவையெல்லாம்
துறைபோத லொல்லுமோ தூவாகா தாங்கே
அறைபோகு நெஞ்சுடை யார்க்கு.
(கலி – 67)
9. துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்த ராவர் விரைந்து. (1218)
ஒ ஒ கடலே,
தெற்றெனக் கண்ணுள்ளே தோன்ற இமையெடுத்துப்
பற்றுவென் என்றியான் விழிக்குங்கால் மற்றுமென்
நெஞ்சத்துள் ளோடி யொளித்தாங்கே துஞ்சாநோய்
செய்யு மறனி லவன்.
(கலி-144)
10. காமமும் நாணு முயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பி னகத்து. (1163)
11. காம முழந்து வருந்தினார்க் கேம
மடலல்ல தில்லை வலி. (1131)
நலிதருங் காமமுங் கெளவையு மென்றிவ்
வலிதின் உயிர்காவாத் தூங்கியாங் கென்னை
நலியும் விழுமம் இரண்டு.
(கலி-142)
காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம
மெழினுத வீத்தவிம் மா.
(கலி-139)
12. அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய்
தந்நோய்போற் போற்றாக் கடை. (315)
சான்றவர் வாழியோ சான்றவிர் என்னும்
பிறர்நோயும் தந்நோய்போற் போற்றி அறனறிதல்
சான்றவர்க் கெல்லாம் கடனா லிவ்விருந்த
சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென்.
(கலி-139)
13. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில். (549)
குடிபுறங் காத்தோம்புஞ் செங்கோலான் வியன்றானை
விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றாற் பசப்பே.
(கலி – 130)
(தொடரும்)
நாவலர் சோமசுந்தர பாரதியார்
00

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

குடும்ப ஒற்றுமை, கட்சிக்கும் நாட்டிற்கும் நலம் பயக்கும்!

[சுற்றத்தாருடன் அன்புடன் பழகாதவன் வாழ்க்கை கரையில்லாக் குளத்தின் நீர்போன்று பயனற்றுப் போகும்.]
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. (திருவள்ளுவர்திருக்குறள் 523)
ஒருவீர் தோற்பினும் தோற்பது நும் குடியே
புறநானூறு கூறும் இப்பொன்னுரை உலகமக்கள் யாருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. சோழவேந்தன் நலங்கிள்ளிக்கும் சோழவேந்தன் நெடுங்கிள்ளிக்கும் இடையே போர் மூண்டது. அப்பொழுது புலவர் கோவூர் கிழார் இருவரிடமும் ”இருவர் வெற்றி காண்பது என்பது இயலாத ஒன்று. ஒருவர் வெற்றி பெற்றாலும் மற்றவர் தோற்றவர் ஆகிறார். அதனால் சோழர் குடி தோற்றது என்னும் இழிபெயர் சோழர் குலத்திற்கு வரும்.” என அறிவுரை கூறினார்.  இதனை உணர்ந்த சோழ வேந்தர்கள்  போரினை நிறுத்தினர். அவ்வறிவுரையை இன்று தி.மு.க., அ.தி.மு.க. தலைமையைச்சேர்ந்த குடும்பத்தினர் உணர்தல் நன்று.
நம் நாடு மக்களாட்சி நாடு எனக் கூறப்பட்டாலும் கட்சியாட்சி நாடாகத்தான் விளங்குகிறது. கட்சிகள் எண்ணற்று இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று கட்சிகளே முதன்மை பெறும் வகையில் அவற்றின் ஆட்சிகளே நாட்டில் அமைகின்றன. அக்கட்சிகளிலும் தலைமைநிலையில் இருப்பவர்களின் குடும்பங்களே ஆதிக்கம்செலுத்துகின்றனகட்சித்தலைவர்களின் கொத்தடிமைகளாகஇருக்கும் மக்களால் இவை தவிர்க்க இயலாக் கேடுகளாய்மாறிவிட்டன. இவையாவது உருப்படியாக இருக்க வேண்டும் அல்லவா? தலைமையில் உள்ளவர்கள் சிதறுண்டால் கட்சியும் சிதறத்தானே செய்யும். கட்சிநலன் கருதியாவது ஒற்றுமையாக இருக்க  வேண்டும். முதன்மைக் கட்சிகள் சிதையும்பொழுது அவற்றைச் சார்ந்துள்ளஆட்சியும் சிதைவது இயற்கைதானே! எனவே நாட்டு ஒற்றுமைக்கும் இவர்களின் ஒற்றுமை தேவை! இவர்களைத் தூக்கி எறிந்துவிட்டுப் பிறரை – பிற கட்சிகளை – ஆட்சியில் அமர்த்தலாமே என எண்ணலாம். அந்த நிலைக்கு மக்கள்மாறும் வரை அல்லது நன்னெறியாளர் ஆட்சிக்குவரும்சூழல் வரும் வரைஇருக்கும் சூழலில்  முதன்மையாளர்களைமுன்னிலைப்படுத்தித்தான் சிந்திக்க வேண்டி உள்ளது.
இன்றைய எதிர்க்கட்சியாக உள்ள, ஆளுங்கட்சியாகவும் எதிர்க்கட்சியாகவும் மாறி மாறி இருந்த, தி.மு..வின் குடும்பச் சண்டையாவரும் அறிந்ததே! அழகிரி, தாலின், மாறன்கள், கனிமொழி என்று  பல்வகையிலும் அணிகள் இவர்கள் பின் அமைந்துள்ளன. இதுவும் கலைஞரின் தந்திரம் என்று தொடக்கத்தில் எண்ணத் தோன்றியது.  ஏனெனில், கலைஞருக்குப் பின்னர் தி.மு.பிளவுபட்டாலும் இவர்கள்பின்தான் தனித்தனியாக அணிவகுப்பர். அதனால் எப்படியும் கலைஞர் கருணாநிதியின்  பரம்பரையினர்தான் தி.மு.க.வை ஆள்வர். அதன்வழி வாய்ப்புள்ளபொழுது நாட்டையும் ஆள்வர் என்ற எண்ணமே இவர்களின் பிளவு குறித்துக் கலைஞர் கருணாநிதியைக் கவலைப்படச் செய்யவில்லை எனலாம்.
அழகிரி திறமை மிக்கவர்தான். அவரையே தாலின் ஓரங்கட்டுகிறார் என்றால் இவரும் திறமையாளர்தானே! பிறரும் ஒவ்வொருவகையில் திறமையாளர்களே! யார் வல்லவர் என்ற போட்டி ஏன் தேவை? குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தங்களின் முதன்மையை மறந்து  கட்சி இருந்தால்தான் தாங்கள் இருக்க முடியும் என்பதை நினைந்துஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை உணரவேண்டும்.கொள்கைத் தடுமாற்றங்களால் கட்சி தேய்ந்து கொண்டிருக்கும்பொழுது அவற்றைச் சரிசெய்து கொள்கை வழி நடத்திச் செல்ல வேண்டிய கடமை தலைவர்களுக்கு உள்ளது. அதிமுகவின் இன்றைய சிதைவுகளின்பொழுதுகூடத் தி.மு.க. வலுப்பெறவில்லை என்பதை உணர்ந்து யார் பெரியவர் என்று ஆராயாமல் ஒன்றுபட்டு நின்று கட்சியையும் அதன் வழி நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
இந்த அறிவுரை அதிமுகவிற்கும்தான். செயலலிதா இருந்த வரை அவருக்கு அணுக்கமாக இருந்த சசிகலாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் அடிமைபோல் நடந்துகொண்டவர்கள்தாம் அடுத்த நிலையில் இருந்தவர்கள். செயலலிதா மறைந்த  பின்னும்சசிகலாவிடம் கட்டுப்பட்டுக் கிடந்தவர்கள்தான் இவர்கள்.  மத்திய ஆட்சியின் சூழ்ச்சியால் இன்றைக்கு அடுத்தடுத்து பிளவுபட்டு எதிர்நிலையில் உள்ளனர். இந்நேரத்தில் சசிகலா குடும்பத்தினரும் அதிகாரக் கைப்பற்றலுக்காகப் பிளவுபட்டு இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. முனைவர் .நடராசன் செயற்பாடுகளால்தான்செயலலிதாவே கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தும் நிலைக்குஉயர முடிந்தது. கட்சியினரும் அதிகாரத்தினரும் கொடுக்க  வேண்டியவற்றைக் கொடுத்தோ வேறு வகையிலோ பொறுப்புகளை வாங்கியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவர்களுள் பலர் இவர்கள் பக்கம் இருப்பதையெ விரும்புவர் என்பதே உண்மை. சசிகலா சிறையில் இருக்கும் சூழலில், முனைவர் ம.நடராசன் நலங்குன்றி உள்ள நேர்வில், தினகரன்திவாகரன்வெங்கடேசுகிருட்டிணப்பிரியாவிவேக்கு  எனப் பலவகையிலும் அணிஅணியாகச் சிதறுவதால் அவர்கள்இலக்கை அடைய முடியுமா? தினகரன் திறனாளராக உள்ளார். அவர் தலைமையில் குடும்பத்தினர் ஒன்றுபடுவதில் தவறு எதுவும் இல்லை. ‘பொறுத்தார்  பூமி யாள்வார்’ என்பதை உணர்ந்து விட்டுக்கொடுத்துச் செயல்பட்டால் நன்றல்லவா? இவர்களை விரட்டுவதற்கென்றே காவிவலையில் ஒவ்வொருவராகச் சிக்க வைக்கப்பட்டிருக்கும் பொழுதுபிளவு படுவது குடும்பத்திற்கும் கட்சிக்கும் நல்லதல்ல
 தேர்ந்தெடுக்கப்படும் அரசு பதவிக்காலம் வரையும் ஆட்சி செய்வதே நல்லது. செயலலிதாவை மட்டும்  மக்கள் ஆட்சி செய்யத் தேர்ந்தெடுத்ததாகக் கருதுவது தவறு. அவர் தலைமையிலான அதிமுகவையும்தான் ஆள்வதற்கு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆட்சி கலைக்கப்பட்டால் பாசகவின் பிடி  மேலும் தமிழ்நாட்டிற்குக் கேடு விளையும் என்பதில் ஐயமில்லை. பன்னீர், எடப்பாடியார் முதலானார் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்திலும் ஒன்றுபடத் தயங்கலாம். அரசியலில் உறவும் பகையும் மாறிமாறி அமையும் என அறிந்தவர்கள்தாமே நாம்!
பிரிந்து போனவன் திரும்பி வந்தால், தலைவன்  பிரிந்ததற்கான காரணத்தை ஆராய்ந்து சரிசெய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். (திருவள்ளுவர், திருக்குறள் 530)
 ஆதலின் இணையுங்கள்! நாடாள எண்ணும் ஆசையைக் கருதியாவது ஒன்றுபடுங்கள்! மக்கள் உங்களைத் தூக்கி எறியும் முன்னராவது கட்சிகளைக் காப்பாற்றுங்கள்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை அகரமுதல 220 மார்கழி 23- மார்கழி 29, 2048 – சனவரி 07-13, 2018
--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages