1. உ.வே.சா.வின் என் சரித்திரம் 25 ++ 2. உ.வே.சா.வின் என் சரித்திரம் 25

5 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jan 25, 2023, 6:20:08 AM1/25/23
to Akar Aadhan, pmaruda...@yahoo.com, muthun...@gmail.com, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsw...@gmail.com, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, antony louis, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, palanic...@gmail.com, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, chitr...@gmail.com

தோழர் தியாகு எழுதுகிறார் 23: ஏ. எம். கே. (5) : கடலூர் இரவு

 அகரமுதல


ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன்      25 January 2023      



(தோழர் தியாகு எழுதுகிறார் 22. காலநிலைப் பொறுப்புக்கூறலும் காலநிலை நீதியும் தொடர்ச்சி)

கடலூர் இரவு

சிறைப்பட்ட எவரும் சிறையிலிருந்து தப்ப எண்ணுவதும், வாய்ப்புக் கிடைக்கும் போது அந்த எண்ணத்தைச் செயலாக்க முற்படுவதும் இயல்புதான். சாதாரணமான ஒருவருக்கே இப்படி யென்றால், பொதுவாழ்வில் ஈடுபட்டு ஏதேனுமொரு குறிக்கோளுக்காகச் சிறைப்பட்டவர்களுக்கு அதுவே புகழ்தரும் சாதனையாகி விடுகிறது.

ஒளரங்கசீப்பின் ஆகுரா சிறையிலிருந்து தப்பியது வீர சிவாசிக்கும்,தென் ஆப்பிரிக்க பூவர் சிறையிலிருந்து தப்பியது வின்சுடன் சர்ச்சிலுக்கும், ‘வெள்ளையனே வெளியேறு!’போராட்டக் காலத்தில் ஆங்கிலேய ஆட்சியின் சிறையிலிருந்து தப்பியது செயப்பிரகாசு நாராயணனுக்கும், அதே ஆட்சியின் வீட்டுச் சிறையிலிருந்து தப்பியது நேதாசி சுபாசுசந்திர போசுக்கும், சப்பானியச் சிறையிலிருந்து தப்பியது இராணுவத் தளபதி பி.பி. குமாரமங்கலத்துக்கும், வேலூர் சிறையிலிருந்து தப்பியது ஏ.கே. கோபாலனுக்கும் புகழார்ந்த சாதனைகள் என்பதில் ஐயமில்லை. இவ்வகைச் சாதனையாளர்களை முழுமையாகப் பட்டியலிடுவதானால் நீண்டு கொண்டே போகும்.

இவர்களே இப்படியென்றால்… அரசை மாற்றுவதல்லதகர்த்து நொறுக்குவதே புரட்சி என்று ஆயுதமேந்திப் போராடிச் சிறைப்பட்டவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயல்வதிலும் அதிசயம் ஒன்றுமில்லை . அவர்கள் இப்படிச் செய்யவில்லை என்றால்தான் அதிசயம்.

பொன் நாடார் கொலைக்கு நீதி கேட்டு கடலூர் சிறையில் நடை பெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தில் தோழர் ஏ.எம். கோதண்டராமனுக்குத் துணைநின்றவர்களுக்கு அவர் ஒரு புரட்சிக்காரர் என்பது தெரியும். வாய்ப்புக் கிடைத்தால் கோதண்டராமன் தப்பிச் சென்று விடுவார் என்பதும் தெரியும். ஆகவேதான் அவரிடமிருந்து ஓர் உறுதிமொழி கோரப்பட்டது:

“இந்தப் போராட்டம் முடியும் வரை சிறையிலிருந்து தப்பிச் செல்வதில்லை என்று நீங்கள் எங்களுக்கு உறுதி கொடுக்க வேண்டும்.”

“ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?”

“தோழரே, நம் கைதிகள் இப்போதிருக்கும் மனநிலையில் எதுவும் செய்வார்கள். சிறை வாயிலை உடைத்துத் திறக்கச் சொன்னால் திறந்து விடுவார்கள். மதிலேறிக் குதிக்கச் சொன்னால் குதிப்பார்கள். எல்லாவற்றையும் கொளுத்தச் சொன்னால் கொளுத்துவார்கள். எவ்வளவு பெரிய காவலர் படை வந்தாலும் நாம் பணியப் போவதில்லை. தாக்குதல் என்று வந்தால் சிறையே போர்க்களமாகி விடும். அந்தக் குழப்பத்தில், அந்தக் களேபரத்தில் நீங்கள் சிறையிலிருந்து தப்புவது ரொம்பச் சுலபம். தப்பிச் செல்வது உங்களுக்குச் சரிதான். ஆனால் இந்தப் போராட்டம்? நீங்கள் இருப்பதால்தான் எதிரி பயப்படுகிறான். நீங்கள் மட்டும் இல்லை என்றால் இந்நேரம் எங்களை அடித்து நொறுக்கிக் கூடையில் அள்ளிப் போயிருப்பான். நம் ஆட்களும் நீங்கள் இருப்பதால்

கட்டுப்பாடாக இருக்கிறார்கள். இல்லையேல் அவனவன் விருப்பத்திற்கு எதாவது செய்து விடுவான். எல்லாம் வீணாகி விடும். நாங்களே கூட உங்களை நம்பித்தான் போராடிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களை விட்டுப் போவதில்லை என்று உறுதி கொடுங்கள். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். உயிரைக் கொடு என்றாலும் கொடுக்கிறோம்.”

ஏ.எம். கே. சிறிது நேரம் மௌனமாகி விட்டார். இடது கை விரல்களால் மூக்குச் சரிவுகளைத் தேய்த்து, மீசையைத் தடவி, பிறகு உள்ளங்கையில் முகவாயை நட்டுக் கொண்டு சொன்னார்:

“சரி… சரி… நன்றாகப் புரிகிறது. இந்தப் போராட்டத்தில் ஒரு முடிவு

தெரியும் வரை நான் தப்பிச் செல்ல மாட்டேன். அந்த எண்ணத்துக்கே இடம் தர மாட்டேன். இது உறுதி. என்னை நம்புங்கள்.”

“உங்களை நம்பாமல் வேறு யாரை நம்பப் போகிறோம்? நீங்கள் சொன்னதே போதும், இனி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.”

பின் ஒரு சந்தர்ப்பத்தில் ஏ.எம். கே.யிடம் நான் கேட்டேன் :

“நீங்கள் இப்படி உறுதி கொடுத்தீர்களே, உண்மையிலேயே தப்பிச் செல்லும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

“அந்த வாய்ப்பு அப்போதே இருந்தது. ஆனால் தப்பிச் செல்லக் கூடாது என்றுதான் இருந்தேன்.”

“ஏன்?”

“வாய்ப்புக் கிடைத்தால் தப்பிச் செல்ல வேண்டும் என்பது பொதுவாகச் சரி. ஆனால் மக்களைத் திரட்டி நிறுத்தி விட்டுக் களத்திலிருந்து ஓடிப் போவது சரியல்ல. சிறை என்று பார்த்தால் ஓடத்தான் தோன்றும். போராட்டக் களம் என்று பார்த்தால்தான் அங்கிருந்து ஓடக் கூடாது என்று புரியும்.”

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. எந்த நேரமும் காவலர் படை உள்ளே நுழையும், பிறகு கண்ணீர்ப் புகை, தடியடி… ஏன், துப்பாக்கிச் சூடு கூட நிகழலாம். அந்தக் கைதிகள் எல்லாவற்றுக்கும் அணியமாய் இருந்தார்கள்.

ஏ.எம். கே.வுக்குத் துணைநின்று போராட்டத்தை ஒழுங்கு செய்து வழி நடத்திக் கொண்டிருந்த குழுவில் ஒருசிலர் ஆயுள் கைதிகள் – வேறு சிறைகளிலிருந்து  மாற்றப்பட்டவர்கள்.

பாளையங்கோட்டைச் சிறையில் சோறே இல்லாமல் தொடர்ந்து நான்கைந்து நாள் கேழ்வரகுக் களி மட்டும் கொடுக்க உறுதியாகப் போராடித் தடியடிக்கு ஆளாகிச் சிறைமாற்றல் செய்யப்பட்ட சில ஆயுள் கைதிகள் இப்போது கடலூரில் ஏ.எம்.கேவுக்குத் துணைநின்றார்கள். ஆனால் கறுப்புக் குல்லாய்க் கைதிகள் சிலரும் தேர்ந்த தொழிற்சங்க ஊழியர்களைப் போல் செயல்பட்டுப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கொண்டுவந்ததுதான் வியப்புக்குரியது.

கறுப்புக் குல்லாய்களை ஒன்றுபடுத்தவும் முடியாது, போராடச் செய்யவும் முடியாது என்று அது வரை நிலவி வந்த தப்பெண்ணம் அந்தக் கடலூர் இரவில் நொறுங்கிக் கொண்டிருந்தது. சோறுகுழம்புக்காகப் போராடத் திரளாத அந்தக் கைதிகள்ஒரு சக கைதி கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருந்தார். தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிக் கொண்டிருந்தார்கள்

“கைதி செத்தால் காக்காய் செத்தாற்போல்” என்ற சிறைப் பழமொழிக்குச் சவால் விடுத்தது அந்தப் போராட்டம். ஆகவேதான் கறுப்புக் குல்லாய்க்குள்ளிருந்த மானுடத்தை அந்தப் போராட்டத்தால் வெளிப்படுத்திக் காட்ட முடிந்தது.

குற்றவாளிகளை மனிதர்களாக்குவது ஒடுக்கு முறையல்ல, ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டமே என்பது அங்கே மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டது.

ஏ.எம்.கே. அதிகம் பேசக் கூடியவரல்ல. நீண்ட உரைகள் நிகழ்த்தும் வழக்கமும் அவருக்கு இல்லை. தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே அப்படித்தான். சொல்ல வேண்டியதைச் சுருக்கமாகவும் கூர்மையாகவும் சொல்வார். எதையும் பூசி மெழுகிப் பேச அவருக்குத் தெரியாது.

அந்தப் பதற்றமான இரவிலும் அவர் அவராகவே இருந்தார். இடையிடையே தேவையைப் பொறுத்துச் சுருக்கமாகப் பேசினார். சந்தேகங்களைப் போக்கினார். அனைவருக்கும் துணிவூட்டினார். வழி நடத்தும் பொறுப்பிலிருந்த தோழர்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருந்தார். யாரும் அன்றிரவு உறங்கவில்லை..

நள்ளிரவு தாண்டி விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த போது வாயிற்பக்கம் சலனம் தெரிந்து அனைவரும் திரும்பிப் பார்த்தனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட மருத்துவ அதிகாரி, கா.க.(S.P.) மற்றும் சில அதிகாரிகள் உள்ளே வந்தார்கள். ஏ.எம்.கேயிடம் மாவட்ட ஆட்சியர் சருமா சொன்னார் :

”நிலவரத்தை அரசுக்குத் தெளிவாகச் சொல்லி விட்டேன். உரிய நடவடிக்கை எடுக்குமாறு அவர்களும் சொல்லி விட்டார்கள். சடலத்தைக் காலையில்தான் அகற்றுவோம். முறையான பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். விசாரணையும் நடைபெறும். இப்போது நீங்கள்…”

”நடவடிக்கை என்றால், கொலைக் குற்றத்துக்காகச் சிறை அதிகாரிகளைக் கைது செய்வீர்களா? அரசு அப்படித்தான் ஆணையிட்டுள்ளதா?”

“விசாரணைக்குப் பிறகுதானே நடவடிக்கை எடுக்க முடியும்?”

”சரி….அது வரை பணி விலக்கமாவது பண்ணுவீர்களா?  இதே கண்காணிப்பாளர், இதே சிறை அதிகாரிகளை வைத்துக் கொண்டு விசாரணை நடத்துவதை எப்படி ஏற்க முடியும்?”

”அது பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. இப்போது…”

“என்ன இப்போது?”

”இப்போது நீங்கள் கதவடைப்பிற்குள் போய் விட வேண்டும். அரசாங்கத்தில் இதை மிகவும் கடுமையாகக் கருதுகிறார்கள். எங்களால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.”

“இல்லை , அது முடியவே முடியாது. என்ன நடந்தாலும் நடக்கட்டும். உருப்படியாக எந்த நடவடிக்கையும் இல்லாமல் நாங்கள் போராட்டத்தைக் கைவிட முடியாது.”

“ஓர் இரவு முழுவதும் சிறையில் கதவடைப்பிற்குள் போகவில்லை என்றால்,அரசு அதைக் கடுமையாகக் கருதும்…”

சிறைக்குள் கைதி அடித்துக் கொல்லப்படுவதை நாங்கள் அதை விடக் கடுமையாகக் கருதுகிறோம்.

”அவர்கள் போய் விட்டார்கள். காவல்துறைப் படையோடு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்த்துக் கைதிகள் சுதாரிப்பாய் இருந்தார்கள். ஆனால் காவல்துறைப் படை வரவே இல்லை. விடிந்த பின் மாவட்ட ஆட்சியர் வந்து, “உங்கள் கோரிக்கைப்படியே சிறைக் கண்காணிப்பாளரும் இதர சிறை அதிகாரிகளும் பணி விலக்கம் செய்யப்படுறார்கள், இன்னும் சிறிது நேரத்தில் சிறைத் துறைத் துணைத் தலைவர் (D.I.G.) வந்து விசாரணையைத் தொடங்குவார்” என்று தெரிவித்தார். போராட்டம் இந்த அளவில் வெற்றிகரமாக முடிந்தது.

சிறைத் துறை துணைத் தலைவர் (D.I.G.) வந்த பிறகு ஏ.எம். கே.யை அழைத்துப்

பேசினார்.

‘’நீங்கள் கொடுத்த பட்டியலில் உள்ள அனைவரையும் பணி விலக்கம் செய்து விட்டோம் போதுமா?”

“போதாது.”

”ஏன்?”

“கொலைக் குற்றத்துக்கு பணி விலக்கம்தான் தண்டனையா?”

“இல்லையில்லை, இப்போதைக்குப் பணி விலக்கம். விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை .”

“கைது செய்து கொலை வழக்குப் போட வேண்டாமா? என்பதுதான் கேள்வி.”

“…..”

“போகட்டும். இந்த அளவுக்கு உங்களை நடவடிக்கை எடுக்க வைப்பதற்கே இவ்வளவு தூரம் போராட வேண்டியிருந்தது. இது வரை எத்தனையோ கைதிகள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போதுதான் முதன் முதலில் நடவடிக்கை எடுக்க வைத்துள்ளோம். ஆனால் ஓர் எச்சரிக்கை.”

“என்ன?”

“விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். சாட்சிகளை மிரட்டுவது, வேறு சிறைக்கு மாற்றுவது எதுவும் கூடாது.”

“அதற்கு நான் உறுதியளிக்கிறேன்.”

“கொஞ்ச நாளைக்கு அப்படி இப்படி நாடகமாடி விட்டுப் பழையபடி எல்லாரையும் வேலைக்கு எடுத்து விடலாம் என்று நினைக்காதீர்கள். அப்படிச் செய்தால் நாங்களே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். கொலைக்குக் கொலைதான். என்னை நீங்கள் வேறு சிறைக்கு மாற்றி விட்டாலும் அது நடக்கும். இங்கு கைதிகளே குழு(squad) அமைத்து அதைச் செய்து முடிப்பார்.”

“இல்லை! இல்லை!… உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.”

“குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளில் ஒருவர் உங்கள் மருமகன் அவருக்காக எந்தச் சலுகையும் காட்ட மாட்டீர்கள் அல்லவா?

“மாட்டேன். எல்லாருக்கும் சட்டம் ஒன்றுதான்.”

” எங்களுக்கும் உங்களுக்குமா?”

சி.து.து.த.(D.I.G.) சிரித்து மழுப்பி விட்டுப் புறப்பட்டார்.

சிறிது காலம் கழித்து விசாரணை நடைபெற்றது. இடைக்காலத்தில் ஏஎம்கே சாட்சிகளை முறையாக ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார்.

விசாரணையின் போது ஏஎம்கேயும் சாட்சி சொன்னார். விசாரணை அதிகாரியாக வந்த சி.து.து.த.(D.I.G.)  கேட்டார் :

”நீங்கள் நீதிமன்றத்தையே புறக்கணிக்கிறவர்.. இந்த விசாரணையில் எப்படிப் பங்குபெறுகிறீர்கள்?”

“என் கொள்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டா. நான் சொல்வதைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அது போதும்.”

விசாரணை முடிந்த பிறகும் முடிவு வராமலே சில ஆண்டுகள் கழிந்தன. 1977 அல்லது 78 இல் விடுதலையாகி வந்து ஏ.எம்.கே. சென்னையில் தங்கியிருந்த போது ஓர் உணவகத்தில் சிறை அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். பொன்நாடார் கொலைக்காக இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளில் அவரும் ஒருவர்.

ஏஎம்கே அவரிடம் கேட்டார் : “என்ன ஐயா எப்படியிருக்கிறீர்கள்?”

“நன்றாக இருக்கிறேன்.. எல்லாம் உங்கள் புண்ணியத்தில்தான்.”

“அது எப்படி?”

“உங்களால்தான் பணி விலக்கம்  ஆனேன். இப்பொழுது தொழில் நன்றாக நடக்கிறது. பணிவிலக்கத்தில் இருப்பதால் முக்கால் சம்பளமும் கிடைக்குது — வசதியாக இருக்கிறேன். நன்றிங்க.”

முடிவில், சிறைக் கண்காணிப்பாளர் தவிர, மற்றவர்கள் ஒவ்வொருவராய்த் திரும்ப எடுக்கப்பட்டு வேலைக்குத் திரும்பினார்கள். கண்காணிப்பாளர் மட்டும் பணி நீக்கம்  செய்யப்பட்டார்.

தமிழகச் சிறை வரலாற்றில் ஒரு கைதியின் மரணத்துக்காக வேலையிழந்த ஒரே சிறைக் கண்காணிப்பாளர் அவர்தான். ஆனால் அவரை வேலைநீக்கம் செய்வதற்கு அரசு காட்டியிருந்த காரணம்தான் பெரிய கொடுமை!

(தொடரும்)

தோழர் தியாகு எழுதுகிறார்

தரவு : தாழி மடல் 18


உ.வே.சா.வின் என் சரித்திரம் 25

 அகரமுதல


ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன்      25 January 2023      


(உ.வே.சா.வின் என் சரித்திரம் 24 தொடர்ச்சி)

என் சரித்திரம்

அத்தியாயம் 15


குன்னம் சிதம்பரம் பிள்ளை

அரியிலூரில் இருக்கையில் எனக்குக் கல்வியில் அபிவிருத்தி ஏற்பட்டதோடு விளையாட்டிலும் ஊக்கம் அதிகரித்தது. பிராயத்திற்கு ஏற்றபடி விளையாட்டிலும் மாறுதல் உண்டாயிற்று. அரியிலூரிலுள்ள பெருமாள் கோயில் வாசலிலும் உள்ளிடங்களிலும் நண்பர்களோடு விளையாடுவேன். படத்தை (காற்றாடியை)ப் பறக்கவிட்டு அதன் கயிற்றை ஆலயத்திற்கு வெளியேயுள்ள கருடதம்பத்திலே கட்டி அது வான வெளியில் பறப்பதைக் கண்டு குதித்து மகிழ்வேன். கோபுரத்தின் மேல் ஏறி அங்கும் படத்தின் கயிற்றைக் கட்டுவேன். தோழர்களும் நானும் சேர்ந்து ஒளிந்து பிடிக்கும் விளையாட்டில் ஈடுபடுவோம். கோயிலிலுள்ள மூலைமுடுக்குகளி லெல்லாம் போய் நான் பதுங்குவேன்.

தசாவதார மண்டபத்தில் வாமன மூர்த்திக்கு மேல் புறத்தில் ஓர் இடுக்கு உண்டு. அதில் நான் ஒரு முறை ஒளிந்துகொண்டேன். அந்த இடம் மிகவும் குறுகலானது. என் நண்பர்கள் நெடுநேரம் என்னைத் தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை. பிறகு வேறிடத்தில் தேடப் போனார்கள். அப்போது நான் வெளியில் வந்து நின்று அவர்களை அழைத்தேன். என்னை அவர்கள் கண்டு பிடிக்கவில்லை யென்பதில் எனக்கு ஒரு சிறிது பெருமை உண்டாயிற்று. “எங்கே ஒளிந்திருந்தாய்?” என்று அவர்கள் என்னைக் கேட்டபோது நான் இடத்தைக் கூறவில்லை. அந்த இம் நான் ஒளிந்து கொள்வதற்காக அமைந்ததென்று தோற்றியது.

சில வருடங்களுக்கு முன் நான் அரியிலூருக்கு ஒரு முறை போயிருந்தேன். அப்போது நான் இளமையிற் பழகிய  இடங்களைப் பார்த்து மகிழ்ந்தேன். என்னுடன் சில கனவான்கள் வந்திருந்தார்கள். அவர்களையும் அழைத்துக்கொண்டு தசாவதார மண்டபத்திற்குப் போனேன். அங்கே வாமன மூர்த்திக்கு அருகில் நான் இளமையில் ஒளிந்திருக்கும் இடத்தை உற்றுக் கவனித்தேன். அப்போது, “இந்தக் குறுகிய இடத்தில் நாம் எப்படி இருந்தோமோ?” என்று எனக்கு வியப்பும் அச்சமும் உண்டாயின.

உடன் வந்த அன்பர்களில் ஒருவர், “அங்கே என்ன விசேடம்? அவ்வளவு கவனமாகப் பார்க்கிறீர்களே” என்று கேட்டார்.

பார்த்த இடத்தில் சிற்பம் ஒன்றும் இல்லை; கட்டிட விசேடமும் இல்லை. அங்கே அவர்கள் கண்ணுக்கு ஒரு புதுமையும் தோன்றவில்லை. எனக்கோ அப்படி அன்று. நான் அங்கே என்னையே கண்டேன்; என் இளமைப் பருவத்தின் விளையாட்டைக் கண்டேன். அவர்களுக்கு விசயத்தை எடுத்துக் கூறிய பிறகு அவர்களும் அந்த இடத்தைப் பார்த்தார்கள்.


தந்தையார் கவலை

 
எனக்கு ஏழாம் பிராயம் நடந்தது. என் தந்தையார் மாதந்தோறும் என் பாட்டனாருக்குச் செய்யவேண்டிய கிரியைகளைச் செய்து வந்தார். வருட் முடிவில் செய்யவேண்டிய ஆப்திக சிராத்தம் நெருங்கியது. அதற்கு வேண்டிய பொருளைச் சம்பாதிப்பதில் அவருக்கு நாட்டம் உண்டாயிற்று. அந்தக் கவலையோடு மற்றொரு செலவைப் பற்றிய கவலையும் சேர்ந்தது.

எனக்கு உபநயனம் செய்யவேண்டிய பிராயம் வந்துவிட்டமையால் அதற்குரிய முயற்சிகளும் செய்யவேண்டியிருந்தன. எல்லாம் பணத்தினால் நடைபெற வேண்டியவை. “எப்படியாவது ஆப்திக சிராத்தத்தை நடத்திவிடலாம்” என்ற தைரியம் என் தந்தையாருக்கு இருந்தது. “உபநயனம் செய்யவேண்டும்; அதற்கு என்ன செய்வது?” என்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்தார். சாணேற முழம் சறுக்கும் வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் மனம் தத்தளித்து நின்றது.

குமரபிள்ளை

அக்காலத்தில் என் தந்தையாரை ஆதரித்து வந்தவர்களுள் ஒருவராகிய கொத்தவாசற் குமரபிள்ளை என்பவர் ஒரு சமயம் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்; அப்போது என் தந்தையாருடைய சேமலாபங்களை விசாரித்தார். பேசிவருகையில் என் உபநயனத்தைப்பற்றி அவர் கவலை யடைந்திருப்பதை யறிந்து, “அது விசயமான கவலை தங்களுக்கு வேண்டாம். உபநயனத்துக்கு நான்கு நாட்களுக்கு முன் தங்களுக்குப் பணம் கிடைக்கும்” என்று வாக்களித்தார். துந்துபி வருடம் வைகாசி மாதம் (1862, சூன்) என் பாட்டனாருக்கு ஆப்திக சிராத்தம் வந்தது. அதன் பொருட்டு உத்தமதானபுரம் செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. குமரபிள்ளை பொருளுதவி செய்வதாகச் சொல்லியிருப்பதை நம்பி ஆப்திகம் ஆன பிறகு ஆனி மாதமே என் உபநயனத்தை உத்தமதானபுரத்தில் நடத்தி விட எந்தையார் நிச்சயித்தார்.

உபநயனம்


நாங்கள் உத்தமாதானபுரத்திற்குச் சென்றோம். என் பாட்டனாரது சிராத்தம் நடைபெற்றது. அப்பால் எனக்கு உபநயனம் செய்வதற்குரிய முயற்சிகள் ஆரம்பமாயின. என் பிதா இன்ன தினத்தில் முகூர்த்தம் வைத்திருக்கிறதென்று குறிப்பிட்டுக் கொத்தவாசற் குமர பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். முகூர்த்தத்திற்கு நான்கு தினங்கள் முன்னதாக அந்த உபகாரி இரண்டு வேளாளப் பிள்ளைகளை வேண்டிய தொகையுடன் அனுப்பினார். அவர்கள் வந்து பணத்தை என் தந்தையார் கையிலே கொடுத்தார்கள். அதை வாங்கும்போது என் தந்தையாரும் அருகிலிருந்த சிறிய தந்தையாரும் கண்ணீர் விட்டு உருகினார்கள்.

குறிப்பிட்ட முகூர்த்தத்தில் எனக்கு உபநயனம் நடைபெற்றது. அதற்கு அரியிலூர், மாயூரம், கும்பகோணம், தியாக சமுத்திரம், சுவாமிமலை, கோட்டூர், சூரியமூலை, திருக்குன்றம், கணபதி அக்கிரகாரம். திருவையாற்றுக்குடி, திருவையாறு திருப்பழனம், பாபநாசம், சுரைக்காவூர், பொன்வேய்ந்தநல்லூர், தேவராயன் பேட்டை, அச்சுதேசுவரபுரம், உள்ளிக்கடை, ஊற்றுக்காடு, உடையாளூர், நல்லூர் என்னும் இடங்களிலிருந்து பந்துக்களும் அன்பர்களும் வந்திருந்தார்கள்.

உபநயன காலங்களில் நடைபெறும் ஊர்வலம் விநோதமானது. பெரும்பாலும் வாகனங்களில் அது நடைபெறாது. உபநயனப் பையன் தன் அம்மான் தோளில் ஏறிக்கொள்வான் பெண்களும் ஆண்களும் புடைசூழ வாத்திய கோசத்துடன் ஊர்வலம் செல்லும். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அம்மான் நிற்பார். வீட்டிலுள்ள பெண்கள் ஆரத்தி எடுப்பார்கள். அவ்வாறு எடுத்த தாம்பாளத்தில், ஊர்வலத்துடன் செல்லும் பெண்கள் தாங்கள் கொண்டுசெல்லும் பட்சியங்களையும் தாம்பூலத்தையும் வைத்துப் போவார்கள் இப்படி ஒவ்வொரு வீட்டிலும் நடைபெறும். இவ்வூர்வலம் என் உபநயனத்திலும் நடந்தது.


எங்கள் குடும்ப வழக்கப்படி உபநயன காலத்தில் எனக்கு ‘வேங்கடராம சர்மன்’ என்று நாமகரணம் செய்யப்பட்டது. அந்தப் பெயரே நன்றாக உள்ளதென்று என் தகப்பனாரும் பிறரும் எண்ணினர். அது முதல் எனக்கு வேங்கடராமனென்ற பெயரே பலரால் வழங்கப்பட்டு வந்தது.

உபநயன காலத்தில் நான் யசூர் வேதத்தை அத்தியயனம் செய்வதற்கு உரியவ னென்றும், வாதூல கோத்திரத்தின னென்றும், ஆபத்தம்ப சூத்திரத்தைக் கடைப்பிடிப்பவ னென்றும் உணர்ந்தேன்.

பூணூல் அணிந்து துவிசனாகிய புதிதில் எனக்கு என் அம்மான் சிவராமையர் மந்திரங்களை யெல்லாம் கற்பித்தனர். சந்தியா வந்தனங்களைத் தவறாமல் ஒழுங்காகச் செய்துவந்தேன். மந்திரசபம் செய்வதில் எனக்கு இயல்பாகவே விருப்பம் உண்டு.


கௌரீ மந்திரம்

உபநயனம் ஆனபிறகு மீண்டும் நாங்கள் அரியிலூர் வந்து சேர்ந்தோம். நான் தமிழ்க் கல்வியிற் சுவை கண்டேனாதலால் சடகோபையங்காரை விடாமற் பற்றிக்கொண்டேன்.

ஒரு சமயம் என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் எங்களைப் பார்ப்பதற்காக அரியிலூருக்கு வந்தார். சிலர் கேட்டுக்கொண்டபடி சில தினங்கள் நாங்கள் இருந்த வீட்டில் ஆலாசிய மாகாத்துமியம் வாசித்துப் பொருள் சொல்லி வந்தார். நான் தினந்தோறும் அதைக் கேட்டு வந்தேன். சிரீ சோமசுந்தரகக் கடவுள் கௌரி என்னும் பெண்ணுக்கு அருள்புரிந்த திருவிளையாடல் ஒன்று அந்த மாகாத்மியத்தில் இருக்கிறது.

(தொடரும்)

என் சரித்திரம்.வே.சா.

000

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages