வணக்கம்.
முதலில் … இந்த இழை பிசிறுபடாமல் செல்லக் காப்புச் செய்யுள்:
காக்க காக்க -- என்
ஆசான் இலக்குவன் காக்க!
காக்க காக்க -- இந்த
மன்றப் பொறுப்பர் செல்வா காக்க!
+++*+++*+++*+++*+++*+++*+++*+++*+++*
எழுத்தின் பிறப்பியல் — பொது
—————————————-------
பிறப்பு என்றால் என்ன?
ஒன்றன் உள்ளே (inside an entity, say A)
அதன் பகுதியாக (as a part of A)
இன்னொன்று (another entity, say B)
உருவாகி (forms, and)
வெளிப்படுவது (comes out; that which comes out)
piṟappu (பிறப்பு) is that which forms as a part of an entity (say, A) and comes out / emerges as a separate entity (say, B)
எடுத்துக்காட்டு: மரக்கிளை, யானைக்கன்று, தாயின் குழவி, கோழிமுட்டை
மரத்தின் (A) கிளையும் (B),
யானையின் (A) கன்றும் (B),
தாயின் (A) குழவியும் (B),
கோழியின் (A) முட்டையும் (B)
‘பிறப்பு.’
ஆக…
இங்கே, ‘பிறப்பு’ என்பதை …
1. பருப்பொருள் (பெயர், noun; an entity which emerges from another entity)
2. ஒன்றிலிருந்து இன்னொன்று வெளிப்படும் முறை (தொழிற்பெயர்; a process by which an entity [say, B] emerges from another entity [say, A])
… எனப் புரிந்துகொள்வது நலம்.
பிறப்பியல் என்றால் என்ன?
இன்று ‘இயற்பியல்’ (physics) என்று புழங்குகிறோமே அதே-போல்-தான் ‘பிறப்பியலும்.’
++++++++++
எழுத்து என்றால் என்ன?
எழுத்து என்பதன் அடிச்சொல்லாக (stem) நான் கருதுவது: எழு
எழு — rise
இந்த அடிச்சொல்லைத் தொடர்ந்து ‘க், ச். த், ந், ப், ம், வ்’ ஆகிய ‘இடைநிலைகளில்’ ஏதாவது ஒன்று வந்து பிற சொற்களை உருவாக்கலாம்.
எழு + {க், ச், த், ந், ப், ம், வ்}
எழு + க்/ச்/ந்/ம்/வ் —> தன்வினைச் சொற்கள்
எழு + த் / ப் —> பிறவினைச் சொற்கள்
எடுத்துக்காட்டு:
எழுக, எழுச்சி, எழுந்தான், எழும்பினான், எழுவீர் (தன்வினை)
எழுத்து, எழுதினான், எழுப்பு, எழுப்பினான் (பிறவினை)
[தற்குறிப்பு: ஏனோ இங்கே … கருநாடக இசையின் ஏழு சுரங்களும் (ஸ, ரி, க, ம, ப, த, நி) இசை விசைப்பலகையும் (musical keyboard) நினைவுக்கு வருகின்றன. இசைப்பின் ஏற்ற இறக்கம் நெளிவு சுளிவுகள் காரணமோ? தெரியவில்லை. அந்த நினைவைப் புறந்தள்ளி மேலெழுதுகிறேன்.]
++++++++++
பழந்தமிழில் … ‘எழுத்து’ என்பது இரு வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது:
1. கட்புலனுக்கு மட்டுமே உணர்வாகும் வரிவடிவம்.
2. செவிப்புலனுக்கு மட்டுமே உணர்வாகும் இசைப்பு/இசைவடிவம்.
அகச்சான்றுகள் சில:
* அந்தரத்து எழுதிய எழுத்தின் … (தொல்காப்பியம்)
* எழுத்துடை நடுகல் (அகநானூறு 53:11)
* குயில் எழுத்து (அகநானூறு 297:8)
* கூருளி குயின்ற கோடுமாய் எழுத்து (அகநானூறு 343:7)
* இன்ன பல பல எழுத்துநிலை மண்டபம் (பரிபாடல் 19:53)
இவை கட்புலனுக்கு மட்டுமே உணர்வாகும் வரிவடிவம்.
* நீட்டம் வேண்டின் அவ்வளபுடைய கூட்டி எழூஉதல் என்மனார் புலவர் (தொல்காப்பியம்)
இது செவிப்புலனுக்கு மட்டுமே உணர்வாகும் இசைப்பு.
[குறிப்பு: இங்கே ‘இசைப்பு’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறேன். ஏனெனில் அதுவே தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது; ஒலிப்பு, உச்சரிப்பு, பலுக்கு போன்ற சொற்கள் பயன்படுத்தப்படவில்லை.]
++++++++++
எழுத்தின் பிறப்பியல் — தொல்காப்பியத்தில் …
—————————-----------------
[முற்குறிப்பு: நன்னூலில் காணும் நூற்பாவைப் பிறகு பார்ப்போம். இப்போது தொல்காப்பியத்தை விளங்கிக்கொள்வோம்.]
நூற்பா
————
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் உளப்பட
எண்முறை நிலையான் உறுப்புற்று அமைய
நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவேறு இயல
உந்தி — கொப்பூழ்/தொப்புள் navel
முதலா — தொடக்கமாக, having (it) as base
முந்து வளி — மேலெழும் காற்று, upward moving air
தோன்றி — emerging; emerges and …
தலை — head, crown
மிடறு — throat
நெஞ்சு — heart/lungs
நிலைஇ — staying; stays and …
உளப்பட — including
எண்முறை நிலையான் — eight stations
உறுப்பு — organs
உற்று — hitting; hits and
அமைய — settling; settles and
நெறிப்பட — along its way / path
நாடி — seeking, desiring
எல்லா — all
எழுத்தும் — letters
சொல்லும் காலை — when one utters
பிறப்பின் ஆக்கம் — process of release
வேறு வேறு — various
இயல — of nature
++++++++++
சுருக்கமான பொருள்
———————————-
உந்தியிலிருந்து (கொப்பூழிலிருந்து) புறப்படும் வளி/காற்று மேல்நோக்கியெழுந்து
தலை, மிடறு, நெஞ்சு ஆகிய இடங்களில் பொருந்தி
அவற்றோடு
பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளையும் சேர்த்து எட்டு இடங்களில் அமையும்போது / உராயும்போது
நெறிப்பட நாடி (அவற்றின் நெளிவு வளைவுகளைத் தொடர்ந்து)
எல்லா எழுத்தையும் சொல்லும்போது
(அவை)
உருவாகி வெளிப்படுதற்கான முயற்சிகள் பற்பல
++++++++++
படிப்படியாகப் புரிந்துகொள்ள முயல்வோம் …
1. உந்தியிலிருந்து வெளிப்படும் வளி/காற்று மேல் நோக்கி எழுகிறது.
2. அந்தக் காற்று … தலை, தொண்டை, நெஞ்சு ஆகிய இடங்களில் பொருந்துகிறது.
அதோடு …
3. பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகிய உறுப்புகளையும் சேர்த்து
3a. எட்டு இடங்களில் தங்கி அவற்றோடு உராய்கிறது.
[குறிப்பு: அந்த எட்டு இடங்களையும் இங்கே இந்தக் கட்டுரைக்காகப் பேச்சுறுப்புகள் (speech organs) என்று குறித்துக்கொள்ள வேண்டுகிறேன்.]
அப்போது …
4. உந்தியிலிருந்து மேல்நோக்கிக் கிளம்பிய அந்தக் காற்று வெளிப்படும் நெளிவு வளைவுப் பாதையைத் தொடர்ந்து …
5. எல்லா எழுத்தையும் சொல்லும்போது …
6. அந்த எழுத்துகளைப் பிறப்பிக்கும் முறைகள் (process of producing) வேறு வேறு தன்மையன.
++++++++++
1. இங்கே ‘எல்லா எழுத்தும்’ என்பது எதைக் குறிக்கிறது?
‘எழுத்து’ என்றால் என்ன என்ற வரையறையைத் (definition) தொல்காப்பியத்தில் காணோம்.
‘எழுத்து’ எனப்படுபவை எவை என்ற அறிமுகம்தான் நமக்குக் கிடைக்கிறது (“எழுத்தெனப்படுப” என்று தொடங்கும் நூற்பாவில்).
ஆகவே …
தொல்காப்பியத்துக்கு முன்பே ‘எழுத்து’ என்றால் என்ன, அவை யாவை என்ற வரையறை/பட்டியல் உருவாகியிருக்கவேண்டும்.
ஆனால் …
2. மொழிக்காக முதலில் தோன்றியது ஒலியா எழுத்தா என்ற இக்கால வினாவுக்குத் தொல்காப்பியத்தில் விடை இல்லை.
++++++++++
பிறர் கருத்தும் …
1. பேச்சொலிகளைப் (speech sounds) பற்றிப் பிற நாட்டாரும் (அரிஸ்ட்டாட்டில், Zeno) இந்திய வட மொழியாளரும் சிந்தித்துள்ளார்கள்.
[எடுத்துக்காட்டுக்குப் பார்க்க: Phonetics in Ancient India, W.S. Allen]
1a. பிற நாட்டு/மொழி ஆய்வாளரின் கருதுகோளுக்கும் தமிழுக்கு இலக்கணம் படைத்த தொல்காப்பியத்துக்கும் ஒற்றுமை உண்டு.
2. தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் உள்ள ‘பிறப்பியல்’ நூற்பாவில் காணும் படிப்படி நிலை (step-by-step) விளக்கம் மிகவும் சிறப்பானது.
3. தொல்காப்பிய எழுத்ததிகாரப் ‘பிறப்பியல்’ நூற்பாவில் காணும் விளக்கம் உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
3b. உலகில் எந்த இடுக்கில் பிறந்திருந்தாலும் … மனிதமுகத்தில் பேச்சுறுப்புகள் (speech organs) குறையில்லாமல் சரியாக/திருத்தமாக அமைந்திருந்தால் … அந்தக் குழவி தன் வாய்/மூக்கு வழியாக வெளிப்படுத்தும் மூச்சுக்காற்று (breath) தொடக்கத்தில் ஒரேபோல்தான் வெளிப்பட்டு ஒலிக்கும்.
[குறிப்பு: வேண்டுமானால் …பன்னாட்டு மருத்துவ மனைகளில் குழந்தைப்பிறப்புக்கூடத்தில் பணியாற்றும் செவிலியரைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.]
3c. பல் முளைக்கத்தொடங்கிய காலத்திலிருந்து குழந்தையின் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் வெளிப்படும் ஒலியை ‘மா’ என்றும் ‘பா’ என்றும் ‘ங்கா’ ‘இங்கா’ ‘உங்கா’ ‘ஞ்ஞ்ஞேஏஏஏ …’ என்றும் பிறவாறும் ஒலிப்பதாகக் கேட்பதும் சொல்வதும் அவரவர் இடத்தின் நிலத்தின் காலத்தின் சூழலைப் பொருத்தது.
3d. அதே-போல், காக்கையின் ஒலியைக் ‘க்கா க்கா’ என்றும் ஆட்டுக்குட்டியின் ஒலியை ‘மே மே’ அல்லது ‘பே பே’ என்றும் பூனையின் ஒலியை ‘மியாவ்’ என்றும் … ஒலிப்பதாகக் கேட்பதும் சொல்வதும் அவரவர் இடத்தின் நிலத்தின் காலத்தின் சூழலைப் பொருத்தது.
3d.1. சங்கப்பாடல்களில் பலவகை ஒலிகளுக்குமான சொற்கள் — கரை, குரை, அலறு, கதறு … போன்றவை — காணுகின்றன.
4. இவற்றில் ஒரு நுணுக்க ஒற்றுமையைக் காண்கிறேன். அதாவது — உடலின் எப்பகுதியில் (வயிறு?/உந்தி?) தோன்றினாலும் அந்தக் காற்று மேலெழும்பி வாய் /மூக்கு வழியே வெளிப்படும்போது … தடையேதும் இல்லாமல் வெளிப்படும் ஒலி “அ / ஆ.”
[தற்குறிப்பு: இதைத்தான் திருவள்ளுவர் ‘அகர முதல எழுத்தெல்லாம் …’ என்று குறித்தாரோ?!]
4a. நெஞ்சுக்காற்றின் குறைவாலோ வேறு என்ன காரணத்தாலோ … அந்தக் காற்றுக்கு முதல் தடுப்பானாக (stopper) அமைவது தொண்டைக்குச் சற்று மேலேயுள்ள கடைவாய்ப் பகுதியும் (back of the mouth/tongue) மேல் அண்ணமும் (soft palate). அங்கேதான் க், ங் ஆகிய ஒலிகள் உருவாகி வெளிப்படுவதாகத் தொல்காப்பியம் கூறுகிறது (“ககார ஙகாரம் முதல்நா அண்ணம்”).
4a.1. எனவே மொழிக்கு அடிப்படை ஒலிகள் அகரமும் ககரமும் என்று முடிவு செய்கிறேன்.
4b. ஆகவேதான் … மனித உறுப்பைப்போன்ற நாக்கின் வளர்ச்சியில்லாத அஃறிணை உயிர்களின் ஒலிப்பில் … நாக்கு செயல்படத் தேவையான ட், ண், த், ந், ற் போன்ற நாவொலிகளை மனிதர்கள் கேட்பதில்லை.
4c. ஆனால் ... காக்கை, குருவி, அணில், கிளி, … இன்ன பிற உயிர்கள் தத்தமக்குள் ஒன்று எழுப்பும் ஒலியை இன்னொன்று புரிந்துகொள்ளும்!!! நாயின் குரைப்பில் லொள், வள், குர்ர்ர், கர்ர்ர்ர், என்றெல்லாம் கேட்பவர்களும் உளர். நாயின் வாயமைப்பைப் படித்தவர்கள் இதற்கு விளக்கம் சொல்லுவார்களோ என்னவோ.
எல்லாம் இயற்கையின் விந்தை! இதில் மனித அரசியல் புகுவது கொடுமை.
++++++++++
அடுத்த பகுதியில் நன்னூலைப் பார்ப்போம்.
நன்றி,
ராஜம்