இராஜேந்திர சோழன் வடநாடு சென்றாரா?
............................................
இராஜராஜனுக்கும் வானவன் மாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர்தான் இராஜேந்திர சோழன். இராஜராஜனே வயதானப் பிறகு அரியணையில் ஏறியதால், அவருக்கு உறுதுணையாகத் தந்தையின் சார்பில் பல போர்களுக்குத் தலைமையேற்றுச் சென்றவர் இராஜேந்திர சோழனே.
இராஜேந்திரன் 1012-இல் இளவரசனாகப் பட்டம் சூட்டிக்கொண்டார். இவர் பட்டத்துக்கு வந்த ஆறே ஆண்டுகளில் தன் மகன் இராஜாதி ராஜனுக்கு முடி சூட்டினார். இன்னொரு மகனான சுந்தர சோழனைப் பாண்டிய நாட்டுக்கு அரசனாக்கினார். இராஜேந்திரனுக்கு கடாரம் கொண்டான், கங்கை கொண்டான், மதுராந்தகன் என்ற பட்டப்பெயர்களும் உண்டு.
தற்போதைய மலேசியாவில் உள்ள கெடா தான் அப்போது கடார நாடு என்று அழைக்கப்பட்டது. அந்த கடாரத்தின் மீது படையெடுத்து வென்றதால் கடாரம் கொண்டான் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இராசேந்திர சோழன் தனது தளபதி அரையன் ராஜராஜன் தலைமையில் படைகளை அனுப்பி, கங்கைக்கரை மாளவம், கோசலம், வங்காளம் (பால வம்சம்) உள்ளிட்ட பல வட இந்திய நாடுகளை வென்றார்.
அரசர்கள் தங்களின் போர் வெற்றிக்குப் பிறகு, கல் அல்லது இரும்பினால் ஆன வெற்றித் தூண்களை (ஜெயஸ்தம்பம்) நிறுவுவது வழக்கம். ஆனால், இராஜேந்திர சோழன் ஜல ஸ்தம்பத்தை நிறுவினார். வெற்றியின் நினைவாகக் கொண்டு வந்த கங்கை நீரை ஊற்றி, சோழ கங்கம் என்னும் ஏரியை உருவாக்கினார். அந்த ஏரி இப்போது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது. சோழ கங்கையைச் சுற்றி ஊர் அமைத்து, அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயர் சூட்டினார். தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். தன் தந்தை கட்டியதைப் போல் கலைநயத்துடனும், அதே நேரத்தில் அக்கோயிலை விஞ்சிவிடாமலும் இருக்கும்படி ஒரு சிவாலயம் எழுப்பினார்.
தந்தையின் காலத்தில் இலங்கையின் ஒரு பகுதியை மட்டும் வென்ற இராஜேந்திரன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதையும் வென்று வெற்றிக்கொடி நாட்டினார்.
அரசர்கள் எல்லாப் போர்க்களங்களுக்கும் செல்வதில்லை. அரசர்கள் சார்பில் அவர்கள் அனுப்பும் படையுடன், படைத் தளபதிகள்தான் நிறைய போர்களுக்குச் செல்வார்கள். அப்படித்தான் இராஜேந்திரன் அனுப்பிய சோழர் படை, வடநாட்டை வெற்றி கொண்டது.
தன் சார்பாக வென்ற தளபதிகளை வரவேற்க, இராஜேந்திரசோழன் ஆந்திர மாநிலம் கோதாவரி வரை படையுடன் சென்றார் என்று குறிப்பிடுகிறது விழுப்புரம் மாவட்டம் எண்ணாயிரம் என்ற ஊரில் உள்ள கல்வெட்டு. கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்தில் உள்ளது.
இராஜேந்திரன் தன் ஆட்சிக் காலத்தில் ஜாவா, சுமித்ரா, மலேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தோனேஷியா போன்ற நாடுகளை வென்றதால் ‘அலைகடல் மீது பல கலம் செலுத்திய’ அரசர் என்று புகழப்படுகிறார்.
பொ.யு. 1014 முதல் 1044-ஆம் ஆண்டு வரை இவரது ஆட்சி இருந்தது. இராஜேந்திரன் அரசனாகப் பதவி ஏற்ற ஆயிரமாவது விழா 2014-இல் கொண்டாடப்பட்டது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் இரண்டு கோட்டை மதில்கள் இருந்துள்ளன. ஒன்றின் பெயர் இராஜேந்திரன் சோழன் மதில். இன்னொன்றின் பெயர் உள்படை வீட்டு மதில். வீர இராஜேந்திரன் (இராஜேந்திரனின் மகன் இவர்) காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டில், இங்குள்ள அரண்மனையின் பெயர் ‘சோழ கேரளன் திருமாளிகை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜேந்திர சோழனின் பெயர்களில் ஒன்றுதான் சோழ கேரளன்.
ஆதிபூமி, கீழை சோபானம், மாவலி வானாதிராஜன் பள்ளிக்கட்டில் என அரண்மனைப் பகுதிகளுக்குப் பெயர்களாக இருந்துள்ளன.
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வருவதற்கு இராஜராஜன் பெருவழி, இராஜேந்திர சோழன் பெருவழி, விளாங்குடையான் பெருவழி, கூழை யானை போன பெருவழி போன்ற வழிகள் இருந்துள்ளன. வேம்பு குடி வாயில் என்று ஒரு வாயிலுக்குப் பெயர் இருந்துள்ளது. இராஜராஜன் காலத்தில், தஞ்சை புகழின் உச்சியில் இருந்தது. அப்படி இருக்க 1014இல் மன்னனாகப் பொறுப்பேற்ற ராஜேந்திர சோழர், தஞ்சையை விட்டு, ஏன் ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிய நகரை உருவாக்கினார்?
''பெரும் படைகள் போவதற்கும் வருவதற்கும் தஞ்சை போதுமானதாக இல்லை. வணிகர்களின் பெருக்கம், வெளிநாட்டவர் வருகை எனத் தஞ்சை நெரிசல்மிக்க இடமாக மாறியது. தஞ்சாவூர் விவசாய நிலங்கள் அதிகம் இருந்த இடம். தவிரவும் காவிரி ஆறு, பாசனத்திற்கு மட்டுமே ஏற்றதாக இருந்தது. அது நீர் வழிப்போக்குவரத்திற்கு (கப்பல்கள்) ஏற்றதாக இல்லை. அதனால் அவருக்கு மாற்றுச் சிந்தனை உதித்தது. தற்போது கொள்ளிடம் ஆறு என்று கூறப்படும் 'இராஜேந்திர சோழப்பேராற்றை' நீர் வழிப் போக்குவரத்திற்குப் பயன்படுத்த நினைத்தார். கப்பற்படையில் சிறந்தவரான ராஜேந்திர சோழர், கொள்ளிட ஆற்றில் கலன்கள் மூலம் ஆயுதங்கள், படைகளைக் குணகடலுக்குள் (வங்காள விரிகுடா) அனுப்ப முடியும் என்று எண்ணினார். அதனால் புதிய தலைநகரைக் கங்கைகொண்ட சோழபுரத்தில் உருவாக்கினார்” என்று அரசியல், சமூகக் காரணங்களைக் குறிப்பிடுகிறார் கங்கைகொண்ட சோழபுர மேம்பாட்டுக் குழுவின் தலைவர் பொறியாளர் கோமகன்.
இன்னொரு காரணம் ''திருச்சியில் இருந்து எதிரிப்படைகள் தஞ்சையை அடைவது எளிது. கங்கைகொண்ட சோழபுரம் கொஞ்சம் தூரத்தில் உள்ளது. இதைக் கருத்தில் வைத்தும், அவர் தஞ்சையில் இருந்து தலைநகரைக் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றி இருக்கலாம்'' என்று கூறுகிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம்.
இப்படிப் பல காரணங்களை யோசித்து உருவாக்கிய நகரம், சிறிது பாண்டியர்களாலும், முழுதும் மாலிக்காபூரின் படையெடுப்பாலும் அழிந்தது. கங்கைகொண்ட சோழபுரத்தில் உட்கோட்டை - மாளிகைமேடு என்னும் இடத்தில் இருந்த சோழர்களின் அரண்மனை, இன்று வெறும் செங்கல் கட்டடமாகச் சிதைவுற்ற நிலையில் காட்சியளிக்கிறது. அங்கு இருந்த கோட்டைச் சுவர்களின் கற்களைச் சுற்றி இருந்த ஊர் மக்கள் தங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு பெயர்த்தெடுத்துச் சென்றதாய், தமிழக அரசு தொல்லியல் துறை வெளியிட்டுள்ள ‘கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு’ நூல் குறிப்பிடுகிறது.
இராஜேந்திரனுக்குத் திரிபுவன மாதேவி (வானவன் மாதேவி), முக்கோக்கிழானடிகள், அரிந்தவன் மாதேவி, பஞ்சவன் மாதேவி, வீரமாதேவி என மனைவியர் பலர் இருந்தனர்.
தன்னுடைய கடைசிக் காலத்தில் வீரமாதேவியைத் திருமணம் செய்து கொண்ட இராஜேந்திரன், அவருடன் நாடு சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார். தொண்டை மண்டலம்(தற்போதைய திருவண்ணாமலை மாவட்டம்) பிரம்மதேசத்தில் (பொ.யு.1044) பயணம் செய்த போது மரணமடைந்தார். அவருடன் பயணம் செய்த வீரமாதேவி உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொண்டார்.
இராஜேந்திரன், சோழ மன்னர்களில் மிகவும் வலிமை வாய்ந்தவராக இருந்தார்.