மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – இலக்குவனார் திருவள்ளுவன்

1 view
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
5:29 AM (13 hours ago) 5:29 AM
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan, Umarani Pappusamy Mysore, Guberan Rajan, Dr. Ku.Muthukumar

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!: சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32 – இலக்குவனார் திருவள்ளுவன்


(தீயவற்றைப் பிறர் அறியாமல் செய்தாலும் மனம் அறியுமே! – தொடர்ச்சி)

சங்கப் புலவர்கள் பொன்னுரை – 32

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!

 “சினனே காமம் கழிகண் ணோட்டம்

அச்சம் பொய்ச்சொல் வுடைமை

தெறல்கடு மையொடு பிறவும்இவ் வுலகத்(து)

அறம்தெரி திகிரிக்கு வழியடை யாகும்”  

பாடியவர் : ஆசிரியர் பாலைக் கௌதமனார்

பதிற்றுப்பத்து 22, அடிகள் 1- 4 (பாடலின் மொத்த அடிகள் 38)

பெயர் – கயிறுகுறு முகவை (14)

துறை – வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு

தூக்கு – செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்

வண்ணம் – ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

பதவுரை :

சினன்=அளவு கடந்த சினம்; காமம்=அளவுகடந்த காமம்; கழிகண் ணோட்டம்=மிகுதியான கண்ணோட்டம்; அச்சம்=பேரச்சம்; பொய்ச்சொல்=பொய்ச் சொல்; அன்புமிகு=மிகுதியான அன்பு; உடைமை=உடைத்தாயிருத்தல்; தெறல் கடுமை=கடுமையாகத் தண்டித்தல்;

பிறவும்=இவையும் இவை போன்ற பிறவும்; இவ்வுலகத்(து)=இவ்வுலகத்தில்; அறம் தெரி=அறம் நிலைபெறுவதற்காகப் பிறப்பிக்கும்; திகிரி=அரசாணை; வழியடை யாகும்=தடைக் கல்லாகும்.

தெளிவுரை:

இவ்வுலகத்தில், அற வழி ஆட்சி புரிவதற்குரிய அரசரின் ஆணைகள் செயற்பாட்டிற்கு அளவு கடந்த சினமும், அளவுகடந்த காமமும், மிக்க கண்ணோட்டமும், பேரச்சமும், பொய் பேசுதலும், மிகுதியான அன்பு கொண்டிருத்தலும், குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டித்தலும், இவை போன்ற பிறவும் தடைக் கற்களாக நிற்பனவாகும்.

எனவே, இத் தீமைகளை நீக்கி ஆட்சி செய்க என்கிறார் புலவர்.

உலகியலில் உருள்வது அறநெறிச் சக்கரம். சினம், காமம், அளவுகடந்த இரக்கக் குணம், அச்சம், பொய் பேசுதல், அளவு கடந்த அன்பைக் கொட்டுதல், பிறர் வாழ்வை அழித்தல், பிறரிடம் கடுமையாக நடந்துகொள்ளுதல் முதலானவையும் இவற்றைப் போன்ற பிறவும் இயல்பாக உருளும் அறச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்தும் தடைக்கற்கள் ஆகும்.

அரசன் ஆட்சியை ஆணைச் சக்கரம் என்பதால் அறநெறியைச் சக்கரமாகக் குறிப்பிடுகின்றனர்.

சக்கரம் உருளத்தானே செய்யும். எனவே, அறச்சக்கரம் உருள்வதற்கு அளவு கடந்த செயற்பாடுகளையும் பண்புகளையும் தடைக்கற்களாகக் கூறுகின்றனர்.

எனவே, அறநெறிச்செயல்களின் இயக்கத்திற்கு இவை தடை எனப் புரிந்துகொள்ளவேண்டும்.

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு” என்பது பழமொழி. அமிழ்து என்பது நம்மைச் சாகாமல் இருக்கச் செய்வது என்பர். அதுவே அளவு கடக்கும் பொழுது சாகவைக்கும் நஞ்சாகும் என்றால் பிறவெல்லாம் எம்மாத்திரம்!

உணவு, செயற்பாடுகள், அன்பு காட்டுதல் முதலிய பண்புகள், இரக்கம் காட்டுதல் முதலிய கண்ணோட்டங்கள், தவறுகளுக்கும் குற்றங்களுக்குமான தண்டனைகள் என யாவுமே ஓர் அளவிற்குத்தான் இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் அவற்றை மேற்கொள்வோருக்கு எதிராக மாறும்.

மிகுதி என்னும் பொருளிலான கழி என்னும் சொல்லைக் கண்ணோட்டடத்திற்கு மட்டுமல்லாமல் சினம், காமம் முதலிய பண்புகளுக்கும் சேர்த்துப் பொருள் காண வேண்டும்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்.

(திருக்குறள், ௩௱௫ – 305) என்கிறார் திருவள்ளுவர்.

“கழி சினம் காத்தல், கடன்”  என்கிறார் புலவர் காரியாசான் (சிறுபஞ்சமூலம்-பாடல் 75).

“ஆறுவது சினம்” என்கிறார் ஒளவையார் (ஆத்தி சூடி.2).

அஃதாவது தணிக்கப்பட வேண்டியது சினம். சினம் வருவது இயற்கைதான். ஆனால் அது அளவு கடக்கக் கூடாது.

காமம் என்பது நிறைவான அன்பைக் குறிப்பது.

“கமம் நிறைந்து இயலும்”  என்கிறார் தொல்காப்பியர் (தொல்காப்பியம் 2-8-58).

“கமஞ்சூல் மாமழை” என்கிறார் புலவர் நக்கீரர் (திருமுருகாற்றுப்படை அடி 7).

நிறைவைக் குறிக்கும் கமம் என்னும் சொல்லில் இருந்து நிறைவான அன்பைக் குறிக்கும் “காமம்” பிறந்தது.

பாலின்ப உணர்வுதான் தலைமுறைகள் தழைக்க அடிப்படையாக இருப்பது. ஆனால், அதுவே மிகுதியானால் உடலுக்கும் உள்ளத்திற்கும் கேடு. அளவு மிகுந்து வெறியானால் தீங்கும் விளைவிக்கும்.

கண்ணோட்டத்தால்தான் உலகம் இயங்குவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். அவரே செயற்பாட்டிற்கு ஊறு நேராத வகையில் கண்ணோட்டம் இருக்க வேண்டும் என்கிறார்.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு

உரிமை உடைத்திவ் வுலகு.

(திருக்குறள், ௫௱௭௰௮ – 578) என்று சொல்கிறார் அவர்.

கண்ணோட்டம் மிகுந்தால் நீதி நடுநிலையாய் அமையாது. அதனால் அப்போது செய்வன யாவும் தீமைகளையே விளைவிக்கும்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்.

(திருக்குறள், ௪௱௨௰௮ – 428) என்கிறார் திருவள்ளுவர்.

அச்சம் மிகும் பொழுது பலவித இடையூறுகள், தீங்குகள் ஏற்படும். வெருளிநோயும் (Phobia) வரும். எனவே, அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச வேண்டிய நாம் அளவுகடந்து அச்சம் கொள்ளக் கூடாது.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்

(திருக்குறள், ௨௱௯௰௨ – 292) என்கிறார் திருவள்ளுவர்.

அப்பொய்மையும் அளவு மிகுந்தால் தீமையே விளைவிக்கும்.

உறவில் பொய் மிகுந்தால் பகை ஏற்படும்; நட்பில் பொய் மிகுந்தால் பிரிவு ஏற்படும்; தொழிலிலும் வணிகத்திலும் பொய் மிகுந்தால் பிளவு ஏற்படும்; இழப்பு ஏற்படும்.

இவ்வாறு எதுவாக இருந்தாலும் மிகுதியான பொய் என்பது தீமையே விளைவிக்கும். (இப்படிச் சொல்வதால் அளவான பொய் இருக்கலாமா என எண்ணக் கூடாது.)

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்

அடுமுரண் தேய்க்கும் அரம். (௫௱௬௰௭ – 567)

என்று மிகுதியான தண்டனை வல்லமையைத் தேய்க்கும் அரம் என்கிறார் திருவள்ளுவர்.

மிகுந்த சினம், அளவுகடந்த காமம், மிகுதியான கண்ணோட்டம், அச்சம், பொய், மிகுதியான தண்டனை முதலிய யாவும் அரசருக்கு மட்டுமல்ல, அறநெறியில் வாழ விரும்பும் யாருக்கும் தடைக்கற்களாகும்.

எனவே, யாராயினும் எதிலும் வரம்பு மீறாமல் பேசவேண்டும், வரம்பு மீறாமல் செயற்படவேண்டும்.

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்! என்பதை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வோம்.

– இலக்குவனார் திருவள்ளுவன்

தாய், ஏப்பிரல் 22, 2026

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்! – Thaaii Magazine

--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages