1. சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 : இலக்குவனார் திருவள்ளுவன் ++ 2.என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்!

1 view
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Jul 11, 2024, 6:17:44 PM (10 days ago) Jul 11
to thiru thoazhamai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Dr. Ku.Muthukumar, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, limra...@gmail.com, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, rajendran krishnan, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, Batchaa Thiruchi, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, H...@ammkitwing.in, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan s, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 12. அனைய கொல்!

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      12 July 2024      கரமுதல


(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 11. திருமுருகாற்றுப்படை- தொடர்ச்சி)

என் தமிழ்ப்பணி

அத்தியாயம்  9. அனைய கொல்!

அறம் பொருள் இன்பம் என்ற மூன்றன் இயைபினை உள்ளவாறு உணர்ந்து அவற்றிற்குரிய மதிப்பளிக்கும் உள்ளம் உடைய ஓர் உயர்குலப் பெண், கார் காலத்து மாலைப் பொழுதில் தலைவாயிற்கண் யாருடைய வருகையையோ ஆவலோடு எதிர் நோக்கிக் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள்.

அவள் கணவன் பெருவணிகர் குடியில் வந்தவன்; அதனால் விழுநிதி ஈட்டும் விருப்பம், அவன் உள்ளத்தில் இயல்பாக ஊறிக் கிடந்தது என்றாலும், அவன், அப்பொருளொன்றே வாழ்வுத் துணையாகும், அஃது ஒன்றைப் பெறுவதினாலேயே தன் வாழ்வு நிறைவாகி விடும் எனக் கருதும் குறுகிய உள்ளம் உடையவனல்லன். பொருளிட்ட வேண்டும் என்றாலும், அதை அறவழியிலேயே ஈட்ட வேண்டும் என்றாலும், ஈட்டிய பின்னர் அப்பொருட் பயனாம் இன்பத்தைக் குறைவற நுகர்தல் வேண்டும் என்ற விரிந்த உள்ளமும் அவனுக்கு உண்டு. அவன் பால் அப்பண்பு குறைவறக் குடி கொண்டிருப்பதைக் கண்டே அவள் அவனை மணம் செய்து கொண்டாள். இருவரும் இணை பிரியாதிருந்து இன்புற்று வாழ்ந்தனர்,

ஒருநாள் எப்போதும் இன்ப நாட்டத்திலேயே இருந்து விடுதல் கூடாது. அவ்வின்பம் இடையற்றுப் போகா வண்ணம் துணை புரிவதாய பொருளையும் ஈட்ட வேண்டும்’ என்ற உணர்வு அவனுக்கு உண்டாயிற்று. உடனே அப்பணி மேற்கொண்டு புறப்படத் தொடங்கினான். அதை அவள் அறிந்து கொண்டாள். பொருளீட்ட வேண்டுவது அவன் கடமையென்பதை அவளும் அறிந்திருந்தமையால் அவன் விருப்பத்திற்கு மறுப்பளிக்கவில்லை.

ஆனால் பொருள் தேடிப் போகும் இவர், ஆங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டி வருமோ; அவ்வளவு காலம் இவரைக் காணாது நான் எவ்வாறு தனித்து வாழ்வேன் என எண்ணி வருந்தினாள். அவ்வருத்தம் நிறை மனத்தோடு தன் மனைப்புறத்தே உள்ள நொச்சிவேலி அருகே நின்றிருந்தாள். அவளைத் தேடி ஆங்கு வந்த அவன் அவள் முகக்குறிப்பில் அவள் மணக் கலக்கத்தைக் கண்டு கொண்டாள். உடனே அவள் அருகில் சென்று நின்றான். வேலியில் படர்ந்திருக்கும் முல்லைக் கொடியை அவளுக்குக் காட்டி

‘பெண்ணே! இம்முல்லை இப்போதுதான் தளிரீன்றுளது. இஃது அரும்பீன்று மலரும் அத்துணை விரைவில் நான் வந்து விடுவேன். கார்காலம் தொடங்கியதும், இதுவும் மலரத் தொடங்கி விடும். நானும் அக்கார்காலத்தில் திரும்பி விடுவேன். இஃது உறுதி. அச்சிறு காலம் வரை; கடமையை எண்ணி கலங்காது காத்திருப்பாயாக” எனக் கூறித் தேற்றினாள். அவன் உரைத்த உறுதிமொழியை நம்பி, அவள் ஒருவாறு உளம் தேறி, அவனுக்கு விடையளித்தாள்

அவன் போய் விட்டான். கடமையை எண்ணி அவள் காத்துக் கிடந்தாள். நாட்கள் கழிந்து கொண்டேயிருந்தன. கார்காலமும் தொடங்கிவிட்டது. ஆயினும் அவன் வந்திலன். ஒவ்வொரு நாளிலும் அவனை எதிர் நோக்குவாள் அவன் வருகையைக் காண வாயிற்கண் வந்து, ஊரெல்லாம் உறங்கும் வரை காத்துக் கிடப்பாள்.

இறுதியில் அன்றும் அவன் வாராமை கண்டு வருந்தி வாயில் அடைத்து விழி நீர் சோரச் சென்று பள்ளியில் வீழ்ந்து கிடப்பாள். அத்தகைய நாட்களுள் ஒன்று அந்நாள்.

கணவன் தேரைக் காணும் ஆர்வத்தோடு கண்ணில் நீர் மல்கக் காத்திருக்கும் போது அவள் தோழி ஆங்கு வந்தாள். அவளைக் கண்டதும் அவள் துயர் அளவிறந்து பெருகிற்று. உடனே, தோழி! கணவர் கார்காலத் தொடக்கத்தில் வந்து விடுவேன் என் வாக்களித்துச் சென்றார். தோழி! அதோ பார், கார் கால மழை பெய்ந்து ஓய்ந்து விட்டது. தன் வருகைக்காகத் தவம் கிடந்த இம் மாநிலத்து மண் தண் பெயலால் நெகிழ்ந்து குளிறுமாறு பெருமழை பெய்த மேகம், தன் இடியொலி அடங்கி ஓய்ந்து விட்டது. மேகத்தை எதிர் நோக்கிற்று மண். அது ஏமாந்து போகாவாறு மழையும் உரிய காலத்தில் வந்து பெய்தது. அதனால் மண் குளிர்ந்தது. கணவர் வருகையை எதிர்நோக்கி நாள்தோறும் காத்துக் கிடக்கிறேன் நான். ஆனால் அவர் வந்திலர். வந்து தண்ணனி செய்திலர் அதனால் நான், மகிழ்ச்சியும் மன எழுச்சியும் இழந்து வருந்துகிறேன். காலம் பொய்யாது வந்து பெய்த மழை, இன்ன காலத்தில் வருகிறேன் என முன்கூட்டி வாக்களிக்கவில்லை. வாக்களிக்காமலே வந்து உதவிற்று. நம் கணவர் கார்காலத்தில் வந்து விடுவேன் என வாக்களித்துள்ளார். வாக்களித்தும் அக்காலத்தில் வந்திலர்.

“தோழி! சிற்சில ஆண்டுகளில் மழை கார்காலத்திற்கு முன்பாகவே வந்து நம்மை ஏமாற்றுவதும் உண்டு. ஆதலின் கார்காலம் தொடங்கி விட்டது என்பதை இம்மழையைக் கொண்டு மட்டும் நான் கூறவில்லை.”

இதோ பார் காட்டில் எழுந்த நறுமணம் நாட்டிலும் வந்து நாறுகிறது. காட்டில் முல்லையும் பிடவும் மலர்ந்ததால் எழுந்த மணம் கம்மென வீசத் தொடங்கிவிட்டது. அது போதாதோ, கார்காலம் தொடங்கி விட்டது என்பதைக் காட்ட. தோழி! மலர்வதற்கு முன் சிவல் பறவையின் முள் போல் கூர்மையுற்றுக் காண்பதற்குக் கொடியவாய்க் காட்சி அளித்த முல்லை அரும்புகள், மலர்ந்த பின்னர் எத்துணை இனிமையாக மணக்கிறது கண்டாயா?

நம்பால் மனம் நெகிழ்ந்து, காலம் தாழ்க்காது வந்திருந்தால் நம் மனம் விரும்பு இனியவராக விளங்க வேண்டிய நம் கணவர் மனவிரக்கமற்று வராதிருப்பதால் நனிமிகக் கொடியவர் போல் தோன்றுகின்றனரே.

என்னே கொடுமை! தோழி! முல்லை தனித்து மலர்ந்திருந்தால் மணம் காடு நிறையப் பரவியிராது பிடவும் உடன் மலர்ந்ததினாலேயே இவ்வளவு மணம் எழுந்துளது: பொருளீட்டும் தன் பணியில் வெற்றி காண்பதால் அவர் மனம் மட்டும் நிறைந்து விடுவதால் வாழ்க்கையில் உண்மை இன்பம் உண்டாகிவிடாது. வாக்களித்துச் சென்றவாறே கணவர் வந்து சேர்ந்தார் என்ற செய்தி கேட்டு என் மனமும் நிறைவு பெறுதல் வேண்டும். எங்கள் இருவர் நெஞ்சும் நிறைந்த வழியே எங்கள் வாழ்க்கையில் உண்மைப் பேரின்பம் நிலவும். இதை அவர் உணர்ந்திலர்: இப்போதும் அவர் வந்திலர். இதற்கு யான் என் செய்வேன்?

“தோழி! கார்காலம் தொடங்கியது மட்டுமன்று இப்போது கார்கழி காலமும் ஆகிவிட்டது. பள்ளங்களில் வெண் சங்குகள் உடைந்து கிடப்பனபோல் மலர்ந்துள்ள வெண்காந்தட் செடிகளுக்கு இடையிடையே தலைகாட்டும் அறுகம்புல்லை அதோ பார். கார்காலம் தொடக்கத்தில் முளைக்கத் தொடங்கிய அவ்வறுகு, இப்போது கிழங்கு விடுமளவு வளர்ந்துவிட்டது. அது கார்காலக் கழிவை யில்லவோ உணர்த்தும்.

இன்னமும் அவர் வந்திலர். காதற்பிணையை அடையப் பெற்றேம் என்று களிப்பு மிகுதியால் செருக்கித் திரியும் அக் கலைமான் வெண்காந்தளும் அறுகங்கிழங்குமாகிய அரிய உணவையும் வெறுத்து, தன் காதற்பிணையின் பின் திரியும் அப்பேரின்பக் காட்சியை, தோழி! நீயும் காண். இக்காதற் காட்சியைக் கண்டும் என் கண்கள் கலங்காதிருக்குமோ? இக் கலைக்கு உள்ள உணர்வுதானும் நம் காதலர்க்கு இல்லையே: பயிரையும் பாவையும் வெறுத்துவிட்டு இரலை, பிணையின் திரிகிறது ஈண்டு.

ஆனால், நம் காதலர், பொருள்மீது சென்ற வேட்கையை வெறுத்து, நம்மோடு கூடிக் களிக்கக் கருதாது. நம்மை மறந்து, பொருளை விரும்பி ஆண்டே கிடக்கிறார்: இதற்கு என் செய்வேன்?

“தோழி மழை பெய்தது. அதைக் கண்ணுற்ற நான் மழைதான் பெய்தது. ஆனால் முல்லை இன்னமும் அரும்பீன வில்லை. அது அரும்பீனும் கருவத்தில் அவர் வந்துவிடுவார்; அவர் அளித்த வாக்கு பொய்யாகாது என நம்பி அமைதி கண்டேன். அது கழிந்தது. முல்லையும் மலர்ந்து விட்டது. அப்போதும் அவர் வந்திலர். அவர் வாக்குப் பொய்த்து விடுமோ? அதனால் அறம் பிறழ்ந்த தவறு அவரைச் சார்ந்து விடுமோ என்ற ஐயம் எழுத்தது. அதனால் வருந்தினேன்.

அக்காலமும் கடந்துவிட்டது. கார்கழிகாலம் வந்து விட்டதை அறுகங்கிழங்கு உணர்த்தக் கண்டேன். இந்நிலையிலும் அவர் வந்திலர். அவர் உரைத்துச் சென்ற வாக்கு உறுதியாகப் பொய்த்துவிட்டது. அதனால் அவர்க்கு என்ன கேடு நேருமோ என எண்ணி நடுங்குகிறது என் உள்ளம் தோழி! பொருள், அறத்திற்கும் இன்பத்திற்கும் துணையாய். விளங்கவேண்டும்.

இன்பத்தை அளிக்க வேண்டும்; அறவழி வரவேண்டும் என்றெல்லாம் அறநூல்கள் கூறுகின்றன. ஆனால் இவரோ தன் பொருள் வேட்கையால் என் இன்பத்தை அழித்துவிட்டார். அளித்த வாக்குப் பிழைத்துப் போக அறநெறி யினின்றும் பிறழ்ந்து விட்டார். அறம் கெடினும் கெடுக இன்பம் கெடினும் கெடுக என்ற கருத்துடையவராய் நின்று அவர் பொருளீட்டத் துணிந்து விட்டார். தோழி! அப் பொருள் அத்துணைச் சிறப்புடையதோ?” எனக் கூறி வருந்தினாள்.

மண்கண் குளிர்ப்பவீசி, தண்பெயல்

பாடு உலந்தன்றே பறைக்குரல் எழிலி:

புதன் மிசைத் தளவின் இதமுள் செந்நனை

நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக்

5. காடே கம்மென்றன்றே; அவல

கோடு உடைந்தன்ன கோடல் பைம்பயிர்ப்

பதவின பாவை முனை இ மதவு நடை

அண்ணல் இரலை அமர் பிணை தழிஇத்

தண்அறல் பருகித் தாழ்ந்து பட்டனவே:

10. அனைய கொல்? வாழி தோழி! மனைய

தாழ்வில் நொச்சி சூழ்வன மலரும்

மெளவல் மாச்சினை காட்டி

அவ்வளவு என்றார் ஆண்டுச் செய்பொருளே.”

திணை : பாலை

துறை : தலைமகன் பொருள்வயின் பிரிந்தானாகத்

தலைவி தோழிக்குச் சொல்லியது.

புலவர்: ஒரோடோகத்துக் கந்தரத்தனார்.

1. மண்கண்-மண்ணிடம்

2. பாடு-ஒலி; உலந்தன்று-அடங்கிற்று; பறைககுரல்-

முரசுபோல் முழங்கும், எழிலி- மேகம்.

3. தளவு-முல்லை; செந்நனை-பேரரும்பு

4. பிணி அவிழ-மலர

5. அவல-பள்ளத்தில்

6. கோடு-சங்கு கோடல்-வெண்காந்தள்;

7. பதவு-அறுகு: பாவை- கிழங்கு முனைஇ

வெறுத்து மதவு-செருக்கு மிகுந்த

8. இரலை-ஆண்மான், அமர்: உள்ளம் விரும்பும்:

9. அறல்: நீர்; பள்டன; தங்கின

10. மனைய: மனைக் கணஉள்ள;

11. தாழ்வில்-உயர்ந்த, சூழ்வன-சூழ்ந்து.

(தொடரும்)

என் தமிழ்ப்பணிபுலவர் காகோவிந்தனார்

++

சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 : இலக்குவனார் திருவள்ளுவன்

 


ஃஃஃ     இலக்குவனார் திருவள்ளுவன்      12 July 2024      கரமுதல


(சட்டச் சொற்கள் விளக்கம் 471-480 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)

சட்டச் சொற்கள் விளக்கம் 481-490

481.  accusationகுற்றச்சாற்று
குற்றச்சாட்டு  

குற்றம் சுமத்தல்  

சட்ட நடவடிக்கைக்குரிய தீங்கையோ குற்றத்தையோ ஒருவர் செய்திருக்கிறார் அல்லது சட்டப்படி செய்யவேண்டியதைச் செய்யாதிருக்கிறார் என அவர்மீது சாட்டுவதே குற்றச்சாட்டுரை அல்லது குற்றச்சாட்டுரை ஆகும்.

பொதுவாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரைக் குற்றவாளி என்றே எழுதியும் பேசியும் வருகின்றனர். குற்றஞ்சாட்டப்படுநரையும் குற்றம் மெய்ப்பிக்கப்பெற்றுத் தண்டனைபெற்ற தண்டனையரையும் இணையாகக் கருதக்கூடாது.
482. Accused appears to be in sound mindஉசாவலின்(விசாரணையின்) பொழுது  குற்றஞ்சாட்டப்பட்டவர் நல்ல மனநிலையில் இருப்பதாகத் தோன்றும் பொழுது………..  

Accused  -ஐ எதிரி எனக் குறிக்கக்கூடாது. வழக்கில் எத்தகைய நிலையினர் எனக் குறிப்பிடத் தேவை யிருப்பின் எதிரர் எனலாம்.
483. Accused in any offense  எந்தக் குற்றத்திலேனும் குற்றம் சாட்டப்பட்டவர்  

குறிப்பிட்ட குற்றம் அல்லது வழக்கு என்றில்லாமல் பொதுவாகக் குறிக்கப் பெறுபவர்.    
484. Accused of any offenceஏதாவது ஒரு குற்றத்திற்குக் குற்றம் சாட்டப்பட்டவர்  

ஏதேனும் ஒரு குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட அல்லது முறையாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்
485. Accused/ Accused person                சாட்டாளர்  

குற்றஞ்சாற்றப்பட்டவர்குற்றஞ்சாட்டப்பட்டவர்          

குற்றம்சாட்டப்பட்ட ஆள்  (குற்றவழக்கில்) எதிரர்;
குற்றம்‌ சுமத்தப்பட்டவர்‌  

சாட்டாளர்(accused) என்னும் சொல் குற்ற வழக்கு நடைமுறைத்தொகுப்பு 1973இல் எங்கும் வரையறுக்கப்படவில்லை. எனினும் பொதுவாகச் சட்டமீறல் செய்பவராகக் கருதப்படுகிறது. என்றாலும் இருப்புப்பாதைச் சொத்து(சட்டமீறல் உடைமை) சட்டம் 1966, பிரிவு 8 குற்றஞ்சாட்டப்படும் ஆள்  குறித்துக் கூறுகிறது.   காண்க:     accusation- குற்றச்சாற்று
486. Accuserசாட்டுநர்

குற்றஞ்சுமத்துநர்  
குற்றஞ்சாற்றுபவர்
குற்றஞ்சாற்றுநர்    

குற்றம் புரிந்தார் என மற்றொருவர்மீது சாட்டுரை செய்யும் ஒருவர்.  

ஒருவர் அறமுறைக்கு மாறான, சட்டத்திற்கு எதிரான, இரக்கமற்றதான செயலைச் செய்ததாக அல்லது குற்றச்செயல் புரிந்ததாகக் குற்றஞ்சாற்றுபவர்.
487. Accustomபழக்கு
பயிற்று  
ஒன்றை/ ஒரு சூழல் அல்லது நிலைப்பாட்டுக்குப் பழக்கமாக்கிக் கொள்வது அல்லது வழக்கமாக்கிக் கொள்வது.
488. Acetone – படிகநீர்மம்
 
நுண்ணுயிரி நீர்மம்
படிகநீர்மம் (அசிட்டோன் /Acetone) ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.

489. Achieve – செய்துமுடி
முயன்றுஅடை.
 
கடின உழைப்பாலும் திறமையாலும் ஒரு செயலைச் செய்துமுடிக்கும் அருவினையைக் குறிக்கிறது.

490. Achievement – செய்துமுடித்தல்
 
இலக்கு அடைவு
 
ஒன்றை முயன்று அடைந்து வெற்றி காணல்.
அருவினை(சாதனை) ஆற்றி முடித்தல்.

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்




++++




--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages