வணக்கம்.
இந்த இழை பிசிறுபடாமல் செல்லக் காப்புச்செய்யுள்:
காக்க காக்க — என்
ஆசான் அண்ணா மலையார் காக்க!
காக்க காக்க — இந்த
மன்றப் பொறுப்பர் செல்வா காக்க!
*+++*+++*+++*+++*+++*+++*
எழுத்தின் பிறப்பியல் — பகுதி 2
————————————————
[முற்குறிப்பு:
தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் காணும் ‘பிறப்பியல்’ நூற்பாவைப் பார்த்தோம் (எழுத்தின் பிறப்பியல் — பகுதி 1). இப்போது நன்னூலில் காணும் இரண்டு நூற்பாக்களைப் பார்ப்போம். ]
++++++++++
எழுத்தின் பிறப்பியல் — நன்னூல்
——————————————————————
மொழிமுதற்காரணமாம் அணுத்திரள் ஒலியெழுத்தது
முதல் சார்பென இருவகைத்தே (நன்னூல் 58).
இந்த நூற்பா எழுத்து என்பது என்ன/எது (Grammatically speaking, what is meant by எழுத்து?) என்று வரையறுப்பதாகத் தோன்றுகிறது!
சொற்பிரித்துப் பார்ப்போம்:
மொழி-முதல்-காரணம்—ஆ(கு)ம்
அணுத்திரள் ஒலி எழுத்து; அது
முதல் சார்பு என இரு-வகைத்து-ஏ
[சுருக்கமான பொருள்: மொழிக்கு அடிப்படைக் காரணமாகும் அணுத்திரளின் ஒலியே எழுத்து. அது முதல் எழுத்து எனவும் சார்பெழுத்து எனவும் இருவகைப்பட்டது.]
*தொல்காப்பியத்தில் காணப்படாத குறிப்புகளை / விளக்கத்தை இந்த நன்னூல் நூற்பாவில் காண்கிறேன்.
அவையாவன …
1. மொழிக்கு அடிப்படைக் காரணம் அணுவின் திரட்சி.
2. அந்த அணுத்திரட்சியின் ஒலியே எழுத்து (ஒலி = எழுத்து).
2a. இங்கே ஒலி என்பதைப் பற்றிய பதிவை நினைவில் கொள்ளவும். இந்தத் தமிழ்மன்றத்தில் ‘பேச்சொலி (speech sounds) பற்றி ஓர் ஐய வினா’ என்ற தலைப்பில் ஒரு பதிவிட்டிருந்தேன். அதன் சுட்டி இப்போது கிடைக்கவில்லை.
2b. ஒலி என்ற சொல்லைத் தொல்காப்பியத்தில் காணோம். தொல்காப்பியத்தைத் தொட்டடுத்த சங்கப்பாடல்களில் ‘ஒலி’ என்ற சொல் இருவகையில் பயன்பட்டிருக்கிறது.
3. எழுத்து என்பதன் வரையறை (definition).
சிந்தனையைக் கிளறும் நூற்பா!!!
++++++++++
அடுத்து, எழுத்தின் பிறப்பு என்பது என்ன என்றொரு நூற்பா (நன்னூல் 74):
நிறை உயிர் முயற்சியின் உள்வளி துரப்ப
எழும் அணுத்திரள் உரம் கண்டம் உச்சி
மூக்கு உற்று இதழ் நா பல் அணத்தொழிலின்
வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் பிறப்பே
நிறை உயிர் — full life-breath; voluminous breathing air (?)
முயற்சியின் — due to the effort of
உள்வளி — internal air
துரப்ப — as urged by
எழும் அணுத்திரள் — the mass of uprising atom (air molecules?)
உரம் கண்டம் உச்சி மூக்கு உற்று — hits the chest/lungs, throat, head/crown, and
இதழ், நா, பல், அணத்தொழிலின் — due to its interaction with the lips, tongue, teeth, and palate
வெவ்வேறு எழுத்து ஒலியாய் வரல் — coming out as various speech-sounds
பிறப்பே — is piṟappu
Urged by the internal air,
a mass of air molecules (atomic?) rises up
due to the effort of full/voluminous(?) life-breath …
and
as it hits the chest/lungs, throat, head/crown …
and
due to its interaction with the lips, tongue, teeth, and palate …
it (the mass of air molecules) emerges as various speech sounds …
that is piṟappu.
ஆக, இந்த இரண்டு நன்னூல் நூற்பாக்களும் எழுத்து என்பதுக்கும் எழுத்தின் பிறப்பு என்பதுக்கும் வரையறைகள் தருகின்றன. தொல்காப்பியத்தில் இக்கருத்துகள் காணப்படவில்லை.
++++++++++
எழுத்தின் பிறப்பைப் பற்றிய தொல்காப்பிய நன்னூல் நூற்பாக்களில் காணும் கருத்துகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டியவை.
1. எழுத்து என்பது எங்கே உருவாகி எப்படி வெளிப்பட்டது/புறப்பட்டது (points of production/articulation)
2. எழுத்துக்கு அடிப்படை வளி மேலெழும்பி எந்தெந்த நிலைகளில் தங்கி, பிறகு எந்தெந்த உறுப்புகளுடன் உராய்ந்து அதன்பின் வெளிப்படுகின்றது (order in which the points of interaction / articulation are mentioned)
3. அணு என்ற பொருள்கோள் (new concept)
(தொடரும்)
நன்றி,
ராஜம்
++++++++++
நிறை உயிர் முயற்சியின் உள்-வளி துரப்ப
எழும் அணுத்திரள்
உரம் கண்டம் உச்சி மூக்கு உற்று
இதழ் நா-ப் பல் அணத்தொழிலின்
வெவ்வேறு எழுத்தொலியாய் வரல் பிறப்பே