உயிரினும்!
.......................
வள்ளுவர் வாய்மை அதிகாரம் தொடங்கும்போது "தீமை இலாத சொலல்" என்ற விளக்கமும் தவம் அதிகாரம் தொடக்கத்தில் "உற்ற நோய் நோற்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை" என்றும் சிறப்பான விளக்கம் தந்துவிடுகிறார். ஆயின் ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் ஒழுக்கம் உயர்ந்த சிறப்புத் தருதலால் அது உயிரை விடவும் மேலாகப் பாதுகாக்கப்பட வேண்டியது(131) என்று தொடங்குகிறார்.
பலகற்றுத் தெளிந்தாலும் ஒழுக்கமே வாழ்வுக்கு உற்ற துணையாக் இருப்பதால் ஒழுக்கத்தை விரும்பிப் பாதுகாக்க வேண்டும் (132) என்று தொடர்கிறார்.
ஒழுக்கமில்லான் கண் உயர்வு இல்லை (135), ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை (137), நன்றி எனும் நன்மை விளைய விதைக்க வேண்டியது நல்லொழுக்கம் (138) என்று உணர்த்துகிறார்.
ஒழுக்கத்தின் உயர்வுகளைக் கூறிச் செல்லுகிற வள்ளுவர் ஒழுக்கத்திற்கு வரையரை தரவில்லையே என்று எண்ணிப் பார்தால் அதிகாரத் தலைப்பு "ஒழுக்கம்" அல்ல "ஒழுக்கம் உடைமை" என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒழுக்கத்தை உடையவானக இருப்பது! எனவே ஒழுக்கம் உடையவனாக இருப்பதின் மேன்மை இவ்வதிகாரத்தில் உணர்த்தப்படுகிறது எனக்கொள்ளலாம்.
பிறகு ஒழுக்கம், ஒழுகலாறு, ஒழுகும் வழி எங்கு உரைக்கப்படுகிறது என்று நோக்கினால் ஒழுக்கமுடைமை அதிகாரத்திற்கு அடுத்து "பிறனில் விழையாமை" தொடங்கி 33 அதிகாரங்களில் ஒழுகும் வழிகள் உரைக்கப்படுகிறது. பொறயுடைமை, அழுக்காறாமை, வெஃகாமை, வெகுளாமை, கள்ளாமை, பயனில சொல்லாமை என்று எத்தனை எத்தனை வழிகளில் அறம் உரைக்கிறார் என்பது நினைவில்கொண்டு பின்பற்ற வேண்டியவை.
ஒவ்வொரு உயிரும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எவ்வளவு பாடுபடகின்றது. உயிர் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயல்வது இயற்கையின் நியதி. அந்த உயிர் நீங்கினால் உடல் பிணமாகிவிடுகிறது. அந்த ஊனை மயக்கம் தெளிவின்மை ஆகிய குற்றம் நீங்கிய அறிவினார் உண்ண மாட்டர்கள்.
"செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்" (238)
அறிவினோர்க்கு இலக்கணம் "பிறிதின் நோய் தன் நோய் போல போற்றுதல்" என்பது வள்ளுவம். அன்பும், அருளும் ஓடிப் பெருகும் நெஞ்சு உடையோர் உயிர் நீங்கிய பிணம் என்னும் உடலை ஒருபோதும் உண்ணமாட்டார். ஆகச் சீராட்டிப் பாராட்டிப் பாதுகாக்கபட்ட உயிர் நீங்கினால் பிணம். அந்த உயிரை விடவும் பாதுகாக்கப்பட வேண்டியது ஒன்று உண்டா? உண்டு! அது என்ன? ஏன்?
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்" (131)
ஒன்றையொன்று ஒப்பிட்டு உயர்ந்ததின் இன்றியமையாமையை உணர்த்துவது மொழித் திறன் ஆற்றல் உத்திகளுள் ஒன்று. சிறப்பானதும் ஆகும். ஒருவன் வாழ்கிறான் என்பதை விடவும் ஒழுக்கத்துடன் வாழ்கிறான் என்பது மேன்மையானது. பெருஞ் சிறப்புக்கு என்ன காரணம்? ஒழுக்க நெறிகளுடன் வாழ்பவன் தானும் சிறப்பாக வாழ்ந்து சமுதாயமும் பயனுற வாழ்வான். ஈதல் இசைபட வாழ்தல், உலகத்தார் உள்ளத்தில் எல்லாம் உளன் என வாழ்தல், விட்டுச் செல்கிற சிறப்புடைய எச்சங்களால் வாழ்தல் என வாழ்க்கைக்குப் பிறகும் புகழ் வாழ்வு தொடர்கிறது. இவையனைத்தும் ஒழுக்கம் தருகிற பெரும் பயன்! விழுப்ப வாழ்வு!
எனவே உயிரை ஓம்புதல் இயற்கை நிலை! ஒழுக்க நெறியைக் கடைப்பிடித்துத் தொடர்ந்து அதில் நிலைத்துப் போற்றி நடத்தல் ஆவது அறியும் அறிவுடையோர் வாழ்வு!
நன்றி 🙂👍
சொ.வினைதீர்த்தான்
................................
பி.கு: இன்று ஒரு நிகழ்வுக்கு எழுதிய கட்டுரை. சற்று நீளமானது. நண்பர்கள் அன்புடன் படித்துக் கருத்திடுக! 🙏🏻