சிகை கொற்றன் கல்வெட்டு குறிக்கும் மறைமுக ஆள் யார்
எகிப்தின் பாரோ 7 ஆம் ராமிசேசு கல்லறைக் கையெழுத்து பதிவுகள் 8 இடங்களில் சிகை கொற்றன் பற்றி குறிப்பிடுவதாக பேரா சார்லொட்டி கிமிட்டு சொல்கிறார். ஆனால் அவை ஒவ்வொன்றும் ஒரே விதமாக இல்லாமல் வெவ்வேறு சொல்லால் மாறுபட்ட எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது மாறுபட்ட பொருளை கொள்ள வைக்கிறது. அப்படி ஒன்று தான் நாம் இங்கே காணப்போவது.
இதில் சிகை கொற்றன் வருத(ல்) கண்ட்டா
si-kai ko-r-ra-n va-ru-ta-(l) ka-n-t-taa என உள்ளது.
இதன் பொருள் சிகை கொற்றன் பார்த்தார் என்று கொள்ள முடியாமல் சிகை கொற்றன் வருவதை இன்னொருவர் கண்டா(ர்) என "ஆர்" மதிப்பு ஈறு இடாமல் குறித்துள்ளனர். 'வரு' என்பது தமிழி எழுத்திலும் 'த'ல் என்பது சிந்து எழுத்தில் சிவப்பு நிறத்தில் சுட்டப்படாமலும் உள்ளது. இக் கையெழுத்தில் 'ல்' என்ற எழுத்தை அனுமானத்தில் சுட்டியுள்ளேன். இதை படித்துக் காட்டிய ஐரோப்பியருக்கு சிந்து எழுத்து இவை என்று தெரியாததால் அவற்றை எழுத்து என்று கருதாமல் விட்டிருக்கலாம். இங்கு உள்ள இரண்டு இணைப்பு படங்களை ஒப்பிட்டு எவரும் உண்மையை உணரலாம். மேலும் அடுத்து வரும் கண்ட்டா என்பதில் ண் சிந்து எழுத்தில் தமிழி ட் எழுத்துடன் கோர்த்து எழுதப்பட்டிருப்பதை கவனிக்கவில்லை. அதை தமிழி "ண்" என்று தவறாக கொண்டுவிட்டனர். எனவே முன்முடிபின்படி (pre assumption) தவறாக கண்டா என்றே படித்துள்ளனர். ஆக இந்த இடத்தில் சுற்றிப் பார்க்க வந்தவர் என்ற கருத்து வலுவிழந்து இருவர் சந்தித்ததை இவ்வெழுத்து நமக்கு உணர்த்துகின்றது. இந்த சந்திப்பு இரு உயர் பொறுப்பாளரிடையே (dignitaries) நடந்திருக்க வேண்டும். இந்த கையெழுத்துகள் உயரத்தில் இருப்பதை பார்த்தால் இந்த கையெழுத்தை எழுத ஏணி தேவை பட்டிருக்கும் அல்லது இரண்டு, மூன்று ஆள் மீது ஒருவர் ஏறி எழுதி இருப்பார் என்று தோன்றுகிறது. அதனால் சிகை கொற்றன் பற்றிய எழுத்துகள் சிலவற்றில் கையெழுத்து மாறுபாடு தெரிகின்றது. எனவே சிகை கொற்றனுடன் இன்னும் சிலர் வந்தார் என கொள்ளலாம். இதில் கொற்றனை கண்டவர் யார் என்று பெயர் மட்டும் குறிக்கவில்லை.

