தொண்டைமநாடு எனும் சிற்றூர்

1 view
Skip to first unread message

Seshadri Sridharan

unread,
Jan 29, 2026, 1:01:57 AM (5 days ago) Jan 29
to தமிழ் மன்றம்
image.png

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி அருகே அமைந்துள்ளது தொண்டைமநாடு எனும் சிற்றூர். இவ்வூரில் தான் முதலாம் ஆதித்த சோழனின் (பொ.ஆ.907) பள்ளிப்படை கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது ஏகவீதி எனும் குக்கிராமம். இதில் தொண்டலசாலம்மா எனும் அம்மன் கோவில் வளாகத்தில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சடையவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு ஒன்றும், ஒரு நடுகலும், அதனருகில் நான்கு தூங்குதலை நடுகற்களும், ஒரு கொற்றவை (விஷ்ணு துர்கை) சிற்பமும் வரிசையாக காணப்படுகின்றன. பொ.ஆ.1262-ஐ சேர்ந்த இக்கல்வெட்டு, திருவேங்கட கோட்டத்து ஆற்றூர் நாட்டு தொண்டைமநாற்றூர் தொண்டலஸ்வாமி கோயிலுக்கு கோயில்காணியாக இருந்த நிலத்தை திருவெங்காடுடையார் என்பவரின் மகன் திக்கானையும் அக்க நாயனும் தங்களின் இரு பங்குகளை நூறு பணத்திற்கு தொண்டைமநாற்றூர் அவையாண்டார் மக்கள் மூவருக்கு விற்பனை செய்த தகவலை தருகிறது. இக்கல்வெட்டில் வரும் திருவேங்கட கோட்டம் என்பது திருப்பதி தான். அன்றும் மாவட்டமாக இருந்தது இன்றும் அதே மாவட்டத்தில் இவ்வூர் அமைந்துள்ளது சிறப்பானது என்றாலும், தொண்டைமநாற்றூர் என்று இன்றும் அதே பெயரில் இவ்வூர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்த சோழனின் பள்ளிப்படையில் முதலாம் பராந்தகனின் 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டிலும், "திருவேங்கட கோட்டத்து ஆற்றூர் நாட்டு தொண்டைமநாற்றூர்" என்று வருவதால் குறைந்தது 1100 ஆண்டுகளுக்கு மேல் இவ்வூர் அதே பெயரில் தொடர்ந்து வந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
கொற்றவை சிலையை பொறுத்தமட்டில் இது பிற்கால சோழர் காலத்தியதாக தெரிகிறது. அதனுடன் கூடிய தூங்குதலை நடுகற்கள் நான்கில் ஒரு கல்வெட்டில் மட்டும் தெலுங்கில் பொறிப்பு காணப்படுகிறது. மீதமுள்ள நடுகற்களில் இல்லை. ஊரை காக்கவோ, வேண்டுதலுக்காகவோ, போர் வெற்றிக்காகவோ தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளும் மரபில் தூங்குதலை என்பது சற்றே வேறுபட்டதுடன் கொடூரமானது. மூங்கில் கழியின் நுனியில் தன் தலை முடியை கட்டிக்கொண்டு, தன் கழுத்தை தானே வாளால் வெட்டிக்கொள்ளும்போது, மூங்கில் கழியில் துண்டுப்பட்ட தலை ரத்தத்தை சுற்றிலும் தெளித்து தொங்கும். பார்க்கவே மிகக் கொடுமையான இந்த செயலை இவ்வூரில் நால்வர் செய்திருக்கிறார்கள். இது பொதுவாகவே, கொற்றவைக்கு (காளி) தரப்படும் பலியாக தான் இருக்கிறது.
ஏகவீதி என்று தற்போது அழைக்கப்படும் இக்கிராமமும் முன்பு 'ஏகவீரி' என்றிருந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. 'ஏகவீரி' என்பது எட்டு கைகளுடன் உக்கிரமாக அமைக்கப்படும் போர்க்கடவுள் 'கொற்றவை'யின் (தெலுங்கில் ரேணுகாதேவி என்ற பெயர் பிரபலமானது) மற்றொரு பெயர். ஏகவீரா என்பது மராத்திய நாட்டிலும் (கர்லா குகையில் அமைந்துள்ள காளிதேவிக்கு இப்பெயர் உண்டு) காணப்படும் ஒரு பரவலான பெயராக உள்ளது. 'ஏகவீரி பிடாரி' என்ற பெயர் திருவலஞ்சுழியில் சோழர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இங்கு எட்டு கைகளுடன் கூடிய காளி சிலை உண்டு.
- விக்கி கண்ணன்
28.01.2026






image.png
Reply all
Reply to author
Forward
0 new messages