முதலாம் பரமேஸ்வர வர்மனின் கூரம் செப்பேடு விளக்கம்
கூரம் கிராமத்து தர்ம கர்த்தாவிடம் இருந்து Hultzsch என்னும் தலைமை தொல்லெழுத்தாளரால் இந்த மெல்லிய செப்பேட்டு தொகுதி பெறப்பட்டது. கூரம் ஆகிய இந்த கிராமம் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் காஞ்சிபுரத்தில் இருந்து 11.4 கிலோ மீட்டர் தொலைவில் திருமால்பூருக்கு முன்னதாக அமைந்துள்ளது. மொத்தம் 95 வரிகள் கொண்ட 7 மெல்லிய செப்பேடுகளின் 14 பக்கங்களில் 57 முதல் 88 ஆம் வரிகள் வரை தமிழில் உள்ள இவை கி.பி. 679 இல் பல்லவ வேந்தன் முதலாம் பரமேஸ்வர வர்மன் எடுப்பித்த கோவில் விச்சா வினீத பல்லவ பரமேஸ்வர கிருஹம் பற்றி விவரிக்கிறது. இதன் முதல் 4 1/2 பக்கங்கள் சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில் பல்லவர் முன்னோர்கள் தொடக்கம் கூறப்படுகிறது. பரமேஸ்வர வர்மனின் பாட்டன் முதலாம் நரசிம்ம வர்மன் பெற்ற வெற்றிகளை 12 ஆம் வரி விவரிக்கிறது. 17 ஆம் வரி இவன் தந்தை இரண்டாம் மகேந்திர வர்மன் பற்றி கூறுகிறது. அதே 17 ஆம் வரி தான் சாதிச் சட்டங்கள் அதன் நடைமுறைகளை பல்லவன் முதலாம் பரமேஸ்வரன் வழக்காற்று படுத்தினான் என்கிறது. தென்னிந்திய கல்வெட்டுகள் மடலம் 7, எண் 865 இல் செக்கில் எண்ணெய் பிழிவோர் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நடைமுறை என்ன என்பதை காஞ்சி மாநகர் செப்பேட்டின் படி முடிவு எடுத்த சித்திரமேழி சாசனம் என திருக்கோவிலூர் வட்டம் கீழூர் வீரட்டானேசுவரர் திருக்கோவில் தென் சுவர் கல்வெட்டு ஒன்று குறிப்பது இந்த செய்தியை தானோ? ஆனால் பல்லவர் செய்த சட்டத்தை சோழர் மீது ஏற்றி சோழரை தூற்றுகின்றனரே திராவிடத்தார்!! தலித்தியர் இந்து மதம், பிராமணர் தான் சாதி உண்டாகக் காரணம் என்கின்றனரே!! அந்த காஞ்சிநகர் செப்பேடும் கிடைத்தால் பொய் உரைகள் ஒழித்து வரலாறு திருத்தி எழுதப்படும். இதன் 19 ஆம் வரி முதலாம் பரமேஸ்வர வர்மன் பற்றி உரைக்கிறது. 23 ஆம் வரி அவன் பாதாமி சாளுக்கியன் முதலாம் விக்கிரமாதித்யனையும் அவன் படைகளையும் புறமுதுகிட்டு ஓடச் செய்தான் என்றும் விக்கிரமாதித்தன் கிழிந்த ஆடையோடு நின்றான் என்கிறது. இதன் 47 ஆம் வரியில் இந்த வெற்றியின் நினைவாகவோ என்னவோ நால் வேதம் கற்ற 108 குடும்பங்களை உடைய கிராமமாம் கூரத்து இறைவன் பினாகபாணிக்கு (சிவன்) இவன் செய்த நிவந்தம் பற்றி குறிக்கப்படுகிறது. இதன் நிறைவேற்று ஆணையாளர் உத்தரகாரணிகையை சேர்ந்த மஹாசேன தத்தர் ஆவர் என்கிறது 49 ஆவது வரி. இனி செப்பேட்டின் தமிழ் பகுதியை மட்டும் காண்போம்.
"ஊற்றுக்காட்டுக் கோட்டத்து நீர்வேளூர் நாட்டுக் கூரமும் ஞம்மனம் பாக்கமும் - - - (ஞங்கணத) - - ட விச்சா விநீதப் பல்லவரசன் விலைக்காணங் கெயிக் கொடுத்து _ _ சிராவணே செய்து ஆயிரத்திரு நூற்றுக் குழிப்படியால் விற்றுக் கொண்ட நிலம் தளி எடுப்பதற்கு. ஓடு சுடக் கொண்ட நிலம் தலேப்பாடகத்துள் சூளேமேட்டுப் பட்டியும் ஊருள் மண்டகம் எடுத்த நிலத்தோடுங் கூட அயிந்தேகால் பட்டி நிலமும் விற்றுக்கொண்டு விச்சா விநீத பல்லவ பரமேச்சுரகரம் எடுத்து, ஏரி தோண்டி, இத்தளி வழிபாடு செயிவார்க்கு இருக்கும் மநேயும் மநேப்படப்பும் வகுத்து இதநுள் மிக்க நிலம் ஒழுக்கவிக்கு விளே நிலமாகவும் இன் நிலத்துக்கு கீழ்பாலெல்லை மூதுகாட்டு வழியின் மேற்கும். தென் பாலெல்லை ஊர் புகு வழியின் வடக்கும். மேல் பாலெல்லை ஊர் புகு வழி நின்றும் வடக்கு நோக்கி நாட்டுக்காலுக்கே போன வழியின் கிழக்கும். வட பாலெல்லை நாட்டுக்காலிந் தெற்கும். இன் நான்கெல்லை அகத்தும் தளியும் எரியும் வழிபாடு செயிவார்க்கு மநையும் மநைப் படப்புன் நீக்கி மிக்க நிலமும் சூளைமேட்டுப் பட்டியும் ஒழுக்கவிக்கு விளை நிலமாக கொடுத்தது . இத் தளிக்கு வேண்டுந் தேவகரும நவகருமஞ் செயிவதற்கும் இருபதின்மர் சதுர்ப்பேதிகளுக்குப் பிரமதேயங் கொடுப்பதற்கும் மணயிற் கோட்டத்துப் பன்மா நாட்டுப் பரமேச்சுர மங்கலத்துள் அகப்பட்ட வளேயில் சுற்று நிலம் அத்தநையும் இருபத்தெயிந்து பங்காயி இதனுள் மூன்று பங்கும் கூரத்துத் தளிக்கு தேவகரும நவகருமஞ் செய்வதாகவும் மண்டகத்துக்கு தண்ணீருக்குந் தீக்கும் ஒரு பங்காகவும், இம்மண்டகத்தே பாரதம் வாசிப்பதற்கு ஒரு பங்காகவும் நின்ற இருபது பங்கும் இருபதின்மர் சதுர்ப் பேதிகளுக்கு பிரமதேயமாக கொடுத்து. இவ்வூர் மநையும் மநைப் படப்பும் ஊறாள்ச்சியும் செக்கும் தறியும் கூலமும் தரமும் கத்திக் காணமும் மற்றும் பொதுவிநால்லுள்ள தெல்லாம் இப்பங்கு இருபத்தைன்தின் வழியாலே பங்கிட்டுண்பார்ராகவும். இவ்வூர் பரமேச்சுர தடாகத்துக்கு பாலாற்று நின்றும் தோண்டின பெரும்பிடுகு காலிந் புழுதிபாடும் நீர்ரீந்த வழியாலே தலேவாயும் தலேப்பேழையும் ஊற்றுக் காலும் தோண்டின நிலமெல்லாம் பரமேசுவர மங்கலத்து நிலமாக. இக்காலுள் குற்றேத்த _ _ _ மையும் நாடாழ்ச்சியுன் நாட்டுப்பபண்ணிக்கெயும் _ _ தானங் கொடுத்த மூன்று பங்குநுளும் ஒன்றரை பங்கு _ _ நார் அனந்த சிவ ஆசாரியர் மக்கள் மக்கள் மருமக்கள் _ _ _ புறம் கொண்டு வழிபாடு செயிது பலி போசன _ _ ம் கொண்டு புல்ல சருமர் மக்கள் மக்கள் வகருமமும் இவ்விருவர் மக்கள் மக்கள் _ _ _ தேவதமாகா நின்ற ஸப்பபட்டார கருங்கா _ _ க்காத்து கொடுக்க."
வேதனை விசாரம் > விச்சா விநீத - கவலை களையும்; Vi-nita, mfn. led or taken away, removed Sec . ; stretched, extended (Moniter williams dictionary), சிராவண - பெருமைப்படுத்தியது, காணம் - நாணயம்; குழி - 877; தலைபாடகம் - வேளாண் நிலம்; மூதுகாடு - பிணக்காடு, சாக்காடு; அகரம் - பிராமண குடியிருப்பு, அக்ரஹாரம்; வழிபாடு - பூசனை; படப்பு - வீட்டுத்தோட்டம், கொல்லைப் புறம்; ஒழுக்கவி - படையல் சோற்று உணவு; நவகரும - புதுப்பித்தல்; வளே - சூழப்பட்ட இடம்; தீ - தீவட்டி; ஊரால்சி - ஊராட்சி வரி; தரம் - நிலவரி; கத்தி - வெட்டு கத்திகள் வரி ; ஈந்த - பங்கிட்டு; தலைவாய் - வாய்க்கால் தொடங்கும் நிலம்; தலை பேழை - வாய்க்கால் முடியும் கடைமடை; ஊற்றுக்கால் - வயல் முதலியவைகளில் நீர்வடியும் கால்வாய், water channel in fields;
விளக்கம்: ஊற்றுக்காட்டுக் கோட்டத்தில் அடங்கிய நீர்வேளூர் நாட்டின் கூரமும் நம்மனம் பாக்கமும் என்பதோடு சிதைந்துள்ளது. இது அந்நாளைய கூரம் கிராமத்தின் இருப்பிடத்தை குறிக்கிறது. கவலைகளையும் பல்லவ அரசன் விலைப் பணத்தை கையில் கொடுத்து ஆயிரத்து இருநூறு குழி நிலம் வாங்கிக் கொண்டார். இது கோவில் (தளி) எழுப்புவதற்கு. ஓடு, செங்கல் சுடுவதற்கு வாங்கிய வேளாண் நிலம் சூளைமேட்டுப் பட்டிக்காகவும் ஊரில் மண்டபம் கட்டுவிக்க வாங்கிய நிலம் என்று ஐந்தேகால் பட்டி நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. விற்றவர் யார் என்ற குறிப்பு இல்லை. இந்நிலத்தை கொண்டு விச்சா வினீத பல்லவ பரமேஸ்வர அக்ரஹாரம் அமைக்க ஏரி தோண்டுவித்து, பூசனை செய் அர்ச்சகர்க்கு வீடும் வீட்டுக் கொல்லைப்புறமும் வகுத்து ஒதுக்கி பின் இதில் எஞ்சிய நிலத்தை படையல் சோற்றுக்கு வேண்டிய கூலங்களை விளைவிக்கும் நிலமாக விடப்பட்டது. இந்த நிலத்திற்கு கிழக்கு எல்லை சுடுகாட்டிற்கு மேற்காகவும் தென்பகுதி எல்லை ஊருள் நுழையும் வழிக்கு வடக்கிலும் மேற்குபகுதி எல்லை ஊர் புகும் வழியில் இருந்து வடக்காக ஊர் வாய்க்காலுக்கு போகும் வழிக்கு கிழக்கிலும் வடபகுதி எல்லை ஊர் வாய்க்காலுக்கு தெற்கிலும் ஆக இந்த நான்கு எல்லைக்கு உள்ளே அடங்கிய நிலத்தில் கோவில், ஏரி, அர்ச்சகர்க்கு வீடும் வீட்டுக் கொல்லையும் போக எஞ்சிய நிலமும் தற்காலிகமாக சூளை மேடாக (furnace) உள்ள நிலமும் வேலை முடிந்த பின் படையல் சோற்று கூலத்தை விளைக்கும் நிலமாக்குக என்று கொடுக்கப்பட்டது.
இக்கோவிலுக்கு தேவையான தெய்வ காரியம், புதுப்பித்தல் வினைகளுக்கும் நால் வேதம் கற்ற இருபது பிராமணருக்கு பிரமதேய நிலம் கொடுப்பதற்கு கூரம் அருகில் 4 கி.மீ வடகிழக்கில் இற்றை மணவூரான மணவில் கோட்டத்தில் அடங்கிய பன்மா நாட்டின் பரமேஸ்வர மங்கலத்தின் ஊர் வட்டத்தில் சுற்றி இருந்த அத்தனை நிலத்தையும் இருபத்தைந்து பாகமாக பிரித்து அதில் மூன்று பங்கை கூரத்தின் தெய்வ கருமம், புதுப்பித்தல் வினை செய்வதற்கும் மண்டபத்தில் தண்ணீர் இடவும், தீவட்டி கொளுத்தி வைக்கவும் ஒரு பங்காகவும் அதில் மகாபாரத சொற்பொழிவு நடத்த ஒரு பங்கும் என்று ஐந்து பங்கு ஒதுக்கி எஞ்சிய இருபது பங்கை நால்வேதம் கற்ற பிராமணர் இருபது பேருக்கு கொடுக்கப்பட்டது. பரமேஸ்வர மங்கல வீடு, வீட்டுக் கொல்லை வரி, ஊராட்சி வரி, செக்கு வரி, தறி வரி, கூல வரி, செய்யப்படும் கத்திகள் வரி, நிலவரி, மற்றபடி பொதுவில் உள்ள எல்லா வகை வரி வருவாய்களும் இந்த இருபத்தைந்து பங்கு பிரிக்கப்பட்ட விதத்திலேயே பங்கிட்டு (சம்பளமாக) உண்ணக் கடவது. இந்த ஊரின் பரமேசுவர ஏரிக்கு பாலாற்றில் இருந்து தோண்டி கொணரப்பட்ட பெரும்பிடுகு என்னும் கால்வாயின் புழுதி புரளும் நீர் பங்கிட்டு முறையில் வாய்க்கால் தொடக்கம் முதல் வாய்க்கால் பின்னடையும் வரை நீர்வடியும் வயல் கால் தோண்டிய நிலம் எல்லாம் இனி பரமேஸ்வர மங்கலத்து நிலமாக அறியப்படட்டும். தானம் கொடுத்த மூன்று பங்குள் ஒன்றரை பங்கு அனந்த சிவாசாரியார் பிள்ளை பேரர் வழியினரும் மருமக்கள் பேரர் வழியினரும் அனுபவித்து வரட்டும். இன்னொரு ஒன்றரை பங்கு பூசனை செய்து பலி சோறு உரிமையும் கொண்டு புல்ல சருமர் பிள்ளை பேரர் வழியினரும் மருமக்கள் பேரர் வழியினரும் அனுபவித்து வரட்டும். இதன்மேல் வரும் எழுத்து வரிகள் அதிகம் சிதைந்து விட்டன பொருள் அறிய முடியவில்லை.
பின் குறிப்பு: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி ஒன்றில் வித்யா வினீத என தவறாக கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கல்வியை களைந்த என்ற தவறான பொருள் விளைந்துவிடும். எனவே இது பல்லவ வேந்தன் பரமேஸ்வர வர்மனை புகழ்ந்துரைக்கும் ஒரு பட்டம் ஆகும். மேலும் இதை பரமேஸ்வர வர்மனுக்கு அடங்கிய சிற்றரசனின் பெயர் என்றும் பிழைபட விளக்கப்பட்டுள்ளது. அப்படி யாரும் இல்லை, அது நேரடியாக பல்லவ வேந்தனைத் தான் குறிக்கிறது என்பது மீண்டும் இதே சொற் பயன்பாட்டில் பரமேஸ்வரனின் பெயர் இடம் பெறுவதில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வூர் ஏற்கனவே இருந்துள்ளது, அதில் 108 பிராமண குடும்பங்கள் இருந்துள்ளன. எனவே சிலர் கருதுவது போல புதிதாக நகரம் ஏதும் இங்கு அமைக்கப்படவில்லை. மேலும் தளி என்று கோவில் கட்டுதலையும் ஓடு சுடும் சூளைமேடும் குறிக்கப்படுவதில் இருந்து இது மங்களூர், கேரள பாணியில் ஓடு வேய்ந்த கோவிலாக இருக்க வேண்டும் போல உணர முடிகிறது. எனவே இது பாறையால் கட்டப்படும் கற்றளி அல்ல. அப்படி குறிக்கப்படவும் இல்லை. சிலர் இதை தமிழ்நாட்டின் முதல் கற்றளி என்று தவறாக குறித்துள்ளனர் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கது. இக்கோவிலில் காணப்படும் தூண் கல்வெட்டுகள் மூன்றாம் நந்திவர்மன் காலம் முதல் தோன்றுவதால் இக்கோவில் அவன் காலத்தை ஒட்டி கற்றளியாக ஆக்கப் பட்டிருக்கலாம். காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் இக்கோவிலுக்கு பின்பு தான் கட்டப்பட்டுள்ளன எனும் போது கூரம் பரமேஸ்வரன் கோவில் ஒரு செங்கல், சுதைக் கோவிலாகவே கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்வதே சரி.
பண்டு ஒரு பொருளை விலைக்கு கொடுப்பதற்கும் விலை, விற்று என்ற சொல் தான் பயன்பட்டுள்ளது வாங்குவதற்கும் அதே சொல் தான் பயன்பட்டுள்ளது என்று அறிக. செப்பேட்டில் கெயி, தலெ, வளே ஆகிய பேச்சு வழக்குச் சொற்கள் கருநாடக தாக்கம் பெற்றிருக்குமோ? தக்கோலம் அருகில் உருவாகும் கூவம் பண்டு பாலாறு எனப்பட்டது. அதில் இருந்து பெரும்பிடுகு கால்வாய் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் நீண்டால் தான் இந்த பரமேஸ்வர மங்கலத்திற்கு நீர் கொண்டு வர முடியும் என்று உணர்க. கூரத்தில் நீர் பாசன வசதி இல்லாததால் இந்த பிராமணருக்கு குறுக்கு வழியாக வடகிழக்கில் 4 கி.மீ தொலைவில் இருந்த பரமேஸ்வர மங்கலத்தில் விளைநிலங்கள் பிரமதேயமாக கொடுக்கப்பட்டனவோ? அல்லது ஏற்கனவே கூரத்தில் 108 பிராமண குடும்பங்கள் இருப்பதால் அங்கே ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றால் அவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த நேரிடும் என்பதாலோ இங்கு கொடுக்கப்பட்டது? இந்த செப்பேடு பல்லவர் வரலாற்று பேழையாக மட்டுமல்லாமல் பரமேஸ்வர வர்மன் வெற்றிச் சிறப்பையும் கூறுவதாக இருப்பதோடு பல்லவ வேந்தர் கோவில் மற்றும் பிராமணரை போற்றியதற்கும் சான்றாக உள்ளது.
.
பார்வை நூல்: SII VOL I, NO 151, pg 144 - 154