காவேரிப்பட்டிணம் அரசம்பட்டிக்கு அருகே உள்ள மஞ்சமேடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் திரு அண்ணாமலை அவர்கள் ஒரு கல்வெட்டை கண்டறிந்து கூறியதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு மஞ்ச மேடு கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டது. கோட்டீஸ்வரநயினார் அவர்களின் தென்னந்தோப்பில் கிழக்கு நோக்கிய நிலையில் ஒரு கல்வெட்டு புடைப்பு சிற்பத்தோடு காணப்படுகிறது. இருபக்கத்திலும் கல்வெட்டு காணப்படுகிறது. இது பற்றி தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனச் செயலாளர் கோவிந்தராஜ் கூறுகையில்:
தருமபுரியிலிருந்து ஆந்திர மாநிலம் பூதலப்பட்டு வரை செல்லும் அதியமான் பெருவழியை ஒட்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக வணிககுழு கல்வெட்டுகள் கிடைத்துவருகின்றன. மஞ்சமேடும் அவ்வழியில் அமைந்துள்ள ஒரு ஊராகும். இங்கு கிடைத்திருப்பது எழுபத்தொன்பது நாட்டார் என்ற வணிகக் குழு கல்வெட்டாகும்.
நிகரிலிசோழ மண்டலத்து கங்க நாட்டு, தகடூர் நாட்டு, எயில் நாட்டு, மேல்கூற்று, பாரூர் பற்றில் உள்ள மஞ்சமாடத்தில் இருக்கும் மஞ்சமாட எம்பெருமான் பெரியநாட்டுப் பெருமாளுக்கு எழுபத்தொன்பது நாட்டு பெரிய நாட்டார் கூடி தங்கள் ஒவ்வொரு ஊரிலிருந்தும் தலா ஒரு பணம் வீதம் வசூலித்து கொடுத்ததைத் தெரிவிக்கும் கல்வெட்டு இது.
இக்கல்வெட்டின் முன்பக்கம் உள்ள (பரமேஸ்வரி) கஜலட்சுமியின் சிற்பம் மிகவும் நுட்பமாக பெரிய மார்பகங்களோடு ( வளமையை குறிக்க) செதுக்கப்பட்டுள்ளது. வலப்பக்கத்து யானை கலசத்திலிருந்து நீரை ஊற்றுகிறது. இடப்பக்க யானை மலரைத் தூவுகிறது. அருகே கெண்டி, இணை பாதம், தண்டம், குடை, கத்தி, சேவல், பன்றி, சித்திரமேழி எனப்படும் ஏற் கலப்பை, குத்துவிளக்கு போன்ற வணிக சின்னங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்கனின் 22ம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்டதாகும். (பொ.ஆ.1200)
எனவே இக்கல்வெட்டு வாயிலாக மஞ்சுமாடம் என்று இன்றைக்கு சரியாக 825 வருடங்களுக்கு முன் அழைக்கப்பட்ட ஊர் தற்போது மஞ்சமேடு என்று அழைக்கப்படுகிறது என்பது தெரியவருகிறது மேலும் தற்போது இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வாடமங்கலம் பெருமாள் கோயிலைத்தான் இக்கல்வெட்டு “மஞ்சுமாட எம்பெருமான் பெரியநாட்டுப் பெருமாள்” என்று குறிப்பிடுகிறது என்றார். ஆய்வுப்பணியில்
பாலாஜி, விஜியகுமார், அருங்காட்சியக காப்பாச்சியர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன். ஆகியோர் கலந்து கொண்டனர்.