கனடா போன்ற வடபுலப் பகுதிகளில் இலையுதிர் காலத்தில் மேப்பிள் போன்ற மரங்களின் இலைகள் உதிரும் முன்னர் அவ்விலைகள் கண்கவர் நிறங்களில் காட்சி அளிக்கின்றன.
ஏன் அப்படி நிகழ்கின்றது என்பது இயல்பான கேள்வி. இது பற்றி விரிவாக எழுதலாம் எனினும் இப்போதைக்குச் சுருக்கமாக்க் கீழ்க்காணுமாறு சொல்லலாம்.
சூன் 21 உக்குப் பிறகு பகல்நேரம் குறையத் தொடங்கும். செட்டம்பர் அட்டோபர் மாதங்களில் ஒரு நாளில் கதிரொளி கிடைக்கும் கால அளவு குறுகிக் கொண்டே போகும்பொழுது கதிரொளியில் இருந்து இலைகள் ஆற்றல் வடித்துத் திரட்டும் பச்சையம் (chlorophyll) உருவாவது குறைந்துகொண்டே வந்து நின்று விடுகின்றது. இதனால் இலைகளில் முன்பே அவற்றுள் இருந்த பிற நிறப்பொருள்கள் தெரிய வருகின்றன. அவையாவன மஞ்சையம் (xanthophylls) சிவப்பியம் (carotenoids). இவை தவிர சில மரங்கள் சிவப்பும் கருநீலச்சிவப்பு நிறமும் தரும் anthocyanins (கருநீலச் சிவப்பியம்) உருவாக்குகின்றன.