(வெருளி நோய்கள் 1281 -1285 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1286 -1290
தீக்கோழி(நெருப்புக் கோழி) மீதான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் தீக்கோழி வெருளி.
Strouthokamel என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தீக்கோழி.
“தீக்கோழி அருகே இருந்து ஒலி எழுப்பாதீர். அது உங்கள் கண்களைக் கிழித்து நெஞ்சகத்தைப் பிளந்து விடும்’ என்று சொல்லப்படுவதால் தீக்கோழி குறித்த பேரச்சம் வருகிறது.
பொதுவாக நெருப்புக் கோழி என்று சொல்லப்பட்டாலும் எழுத்துச் சுருக்கத்திற்காகத் தீக்கோழி எனக் குறிக்கப் பெற்றுள்ளது.
00
தீக்காயம் குறித்த வரம்பற்ற பேரச்சம் தீக்காய வெருளி.
தனக்குத் தீக்காயம் ஏற்பட்டால் அது குறித்து அளவுகடந்த பேரச்சம் கொள்வர். சிலர் பிறருக்கு வரும் தீக்காயம் பார்த்தாலும் பெரும் பேரச்சம் கொள்வர். தீக்காய வெருளி உள்ளவர்கள் அடுப்படிப்பக்கம் கூடச் செல்ல மாட்டார்கள்.வெந்நீரில் குளிக்க அஞ்சுவார்கள், வெந்நீர்க்கலனில் வெந்நீர் பயன்படுத்தவும் அச்சம் கொள்வர். வேதியல் பொருள்கள்,மின் கருவிகளாலும் தீக்காயம் ஏற்படும். எனவே, இவை குறித்தும் அச்சம் கொள்வர்.
00
புனைவுரு தீசிகுரங்கி (Dixie kong)தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தீசி குரங்கி வெருளி.
காங்கு என்னும் சப்பானியக் கொச்சைச் சொல்லிற்குக் கொரில்லா /குரங்கன் எனப் பொருள்.
தீசி காங்கி என்பது என்பது காங்கு கழுதை என்னும் தொடரில் வரும் குரங்கி(பெண் மனிதக்குரங்கு). இக்கதைப் பாத்திரத்தின் மீது ஏற்படும் தேவையற்ற அளவுகடந்த பேரச்சத்தை இவ்வெருளி குறிக்கிறது.
00
பாலுறவு நோக்கில் தீண்டுதல் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் தீண்டல் வெருளி.
சிலருக்கு இயல்பாகவே இந்த வெருளி இருக்கும். பலருக்கு அவர்கள் சந்தித்த அல்லது அறிய வந்த மோசமான பட்டறிவுகளால் இவ்வெருளி ஏற்படும்.
பிள்ளைகள் வளரும் பொழுதே தொடுதல் பற்றிய விளக்கங்களை அளித்து விழிப்புடன் இருக்கச் செய்ய வேண்டும். இந்த விழிப்புணர்வே வெருளிக்கு வழி வகுக்கவும் கூடும்.
காண்க: தொடுகை வெருளி(Aphenphosmphobia/Thixophobia)
00
தீது நடைபெறும் என அஞ்சுவது தீது வெருளி.
எதிர்மறையான சிந்தனைகளிலேயே உழல்பவர்களுக்குத் தீது வெருளி வரும் வாய்ப்பு உள்ளது. நல்லது நிகழ வாய்ப்பிருப்பினும் தீய எதிர்பார்ப்புடனேயே சிந்திப்பதால் தீயது குறித்த பேரச்சம் வருகிறது. தொழில் தொடங்கினால் இழப்பு வரும் என்ற பேரச்சம், தேர்வு எழுதினால் அல்லது தேர்தலில் போட்டியிட்டால் தோல்வி வரும் என்ற பேரச்சம், பயணம் மேற்கொண்டால் தீங்கு நேரும் என்ற பேரச்சம் எனப் பலவகைகளிலும் தீங்கு குறித்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
இதனைத் தோல்வி வெருளியாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால்தோல்வி வெருளி(atychiphobia) என்பது தனிவகை.
kako என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தீது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 3/5
ஃஃஃ அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன் 19 April 2026
(திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : ௪. எழுக தமிழினமே!- தொடர்ச்சி)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தமிழ்நாடு
ரு. தமிழ்நாட்டு மக்கள் செய்ய வேண்டுவன?
உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வை எதிர்த்து மறியல் செய்தல். மதுக்கடைகளை அகற்றக் கோரி மதுக்கடைகள் முன் மறியல் ஆர்ப்பாட்டம் செய்தல். உப்புக் காய்ச்சுதல், உப்பெடுத்தல், வரிகொடாப் போராட்டம் நடத்தல். சட்டப்படி காவிரிநீர் கொடாமலும், பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் முன் திருவள்ளுவர் உருவச்சிலை வைக்கக் கூடாதென மறுத்து கருநாடகம் வாழ் தமிழ்களைப் படுகொலை செய்து வெருட்டியடித்த கருநாடக அரசுடன் எத்தகு அரசியல் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாதென்றும் தமிழக அரசை வற்புறுத்தல்.
தமிழ்நாட்டில் வாழும் அயலாரையெல்லாம் வெளியேற்றுமாறும், இனி, எவரையும் தமிழ்நாட்டில் குடியமர்த்தக் கூடாதென்று புரட்சி செய்தல். தாழ்த்தப்பட்ட மக்களை மேல்மட்டத்தார் வாழும் இடங்களிலும் கோவில்களிலும் குடியிருக்கச் செய்தல் வேண்டுமென்றும், கோவில்களில் முடக்கப்பட்டுள்ள செல்வங்களை மக்கள் நலவாழ்வுத் திட்டங்கட்குப் பயன்படுத்துமாறும் அரசை வற்புறுத்தல். தமிழ்நாட்டுக் கோவில்களில் பூசைசெய்ய எல்லாத் தமிழர்கட்கும் வாய்ப்பு நல்குமாறு அரசை வலியுறுத்திப் போராடல்.
வானொலி, தொலைக்காட்;சி நிலையங்கள் தமிழ் மொழியைக் கொச்சையாக்கி வருவதையும், இந்தி மொழியைத் தமிழ்நாட்டில் பரப்ப முனைந்து செயல்படுவதையும் உடனே நிறுத்தும் படியும், குமுகாயச் சீர்திருத்தம் பற்றிப் பேசுபவர்களுக்கும் வாய்ப்பளிக்குமாறும் கோரி, வானொலி, தொலைக்காட்சி நிலையங்களின் முன் மறியல் போராட்டம் நடத்துதல். தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப் பெற்று மக்களவை, மாநிலங்களவைகட்குச் செல்பவர்கள் தமிழிலேயே பேசவேண்டுமென்று வற்புறுத்தல். தமிழ்நாட்டில் விளையும் உணவுப் பொருள்களைத் தமிழ்நாட்டுக்கே பயன்படச் செய்தல் வேண்டுமென்று போராட்டம் செய்தல். வட்டிக் கடைகளும், வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குபவரும் அரசு விதித்துள்ள வட்டியே வாங்க வேண்டுமென்று வற்புறுத்தி மறியல் செய்தல்.
இருப்பூர்தித்துறை, அஞ்சல்துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை முதலியவற்றை மாநில (தமிழக) அரசின் ஆளுமையின் கீழ் விட்டுவிட வேண்டுமென்று கிளர்ச்சி செய்தல். தமிழ்நாட்டுக் கனிமச் சுரங்கங்களையும், அவை சார்பான நிறுவனங்களையும் தமிழ்க அரசிடமே விட்டுவிட வேண்டுமென்று போராடல். வெள்ளையனே வெளியேறு என்றது போல் இன்று வடநாட்டானே வெளியேறு என்று குரலெழுப்புதல். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசுப் பணிமனைகளிலும் அயலாரைப் பணிகளில் அமர்த்தாமல் தமிழ்நாட்டு மக்களையே அமர்த்த வேண்டுமென்று வற்புறுத்தி மறியல் போர் நடத்தல்.
இந்தியா விடுதலை அடைந்துவிட்டதென்று பெருமிதமடையும், வடவர் தமிழ்நாட்டை ஆண்டான் – அடிமை நிலையில் வைத்திருப்பதைக் கண்டித்துப் போர்க்குரல் எழுப்பல். தமிழ்நாட்டிலுள்ள எல்லா (அலுவலகங்களிலும்) (மாநில, மத்திய) அலுவலகங்களிலும் தமிழ்மொழி மட்டுமே அலுவலக நடைமுறை மொழியாக இருத்தல் வேண்டுமென்ற ஆர்ப்பாட்டஞ் செய்தல். விடுதலை (சுதந்திரம்) பெற்று விட்டோமென்று ஆரவாரம், ஆர்ப்பாட்டம் செய்யும் நடுவணரசு (Central government) மாநிலங்களையெல்லாம் அடிமைகள் போல நடத்துவதும், எல்லா அதிகாரங்களையும் தானே வைத்துக் கொண்டு, மாநில மக்களை வறுமையில் உழலச் செய்வதைக் கண்டித்துக் குரல் கொடுத்தல்.
தமிழ்நாடு எப்பொழுதும் வடவர்க்கு அடிமையாகத்தான் இருத்தல் வேண்டும் என்று அடிமை முறி எழுதிக் கொடுத்தவர் யார்? அங்ஙனம் எவராவது எழுதிக் கொடுத்திருந்தாலும் அஃது இன்று சொல்லத்தக்கதன்று. நாங்களும் அனைத்து உரிமைகளுடன் விடுதலையுடன் (சுதந்திரத்துடன்) வாழ விரும்புகின்றோமென்று அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தல். இல்லையேல் நம்மொழி, பண்பாடு, நம் தொல்பழம் வரலாறு முதலியன மறைந்து என்றும் வடவர்க்கடிமையாய் வறுமையில் வாழ வேண்டியதே.
ஒருமைப்பாடு பேசுவதில் பொருளுண்டா?
வானொலி வழி நாள்தோறும், தேசிய ஒருமைப்பாடு, ஒன்று நம் சிந்தனை, ஒன்று நம் பாரதம், நாட்டுக்காக, ஒற்றுமை, எந்த நாடுமே சொந்த நாடன்றோ? என்றெல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தினால் போதுமா? இந்தியாவிலே, தேசியப் பாடல்கள் முதலியவற்றைப் பற்றிப் பேசியும், பாடியும் வந்தால் மட்டும் போதுமா? கருநாடகத்தார், குசராத்தியர், மராட்டியர் முதலியோர் தம் நாட்டில் வாழும் தமிழ் மக்களைக் கொலை செய்தும், பெண்டிரைக் கற்பழித்தும் துரத்துவதைக் கேட்பாரில்லையே! தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்குத் தன்மானம் வரவில்லையே! பேராயக் கட்சித் தமிழர் வடவர்க்கு வால் பிடித்தும், அவர்கள் தரும் பதவிகளுக்கு ஆசைப்பட்டு அவர்களுக்கு ‘ஒத்து ஊதியும்’ காலத்தைக் கழிக்கின்றனர். பேராயத் தமிழர்க்கு இனப்பற்றும், மொழிப்பற்றும் இல. ஏனைய கட்சித் தமிழர்களும், வடவர் பாதந்தாங்கியே வாழ்கின்றனர். என்றுதான் இவர்களுக்குத் தன்மானவுணர்வும், தம் இன, மொழி உணர்வும் வருமோ? அறியோம்.
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை