பனுவலும் text உம் ஒன்றா? - 4

61 views
Skip to first unread message

iraamaki

unread,
Jul 9, 2016, 4:30:46 AM7/9/16
to tamil_...@googlegroups.com, tamil...@googlegroups.com, thami...@googlegroups.com
கலிங்கமென்பது நான் பார்த்தவரை ஒரு கணப்புப் (generic) பயன்படாகவே தெரிகிறது. அரசர்,செல்வரிலிருந்து வறியமக்கள்வரை, அவருடம்பின் உச்சிமுதல் உள்ளங்கால்வரை, பொதுவாய் அணியுந் துணியே கலிங்கமாகும். இதற்கான விவரிப்பு எடுத்துக்காட்டுகளை ஐந்தைந்தாய் “வாசகம், எடுகோள் (reference), அடைப்புக்குறிப்பில் முன்னிகை” என்ற கீழே கிடப்புவரிசையில் அடுக்கியுள்ளேன்..
 
”கலிங்கம் துயல்வர” நற்.20-4 [கலிங்கம் அசைய; இங்கே சொல்லப்படும் கலிங்கம் கனத்ததில்லை; அசையும் அளவிற்கு மெல்லியது தான்.]
”புன்பூங் கலிங்கமொடு” நற்.90-4 [விலைகுறைந்த மெல்லிய கலிங்கமொடு; பூங்கலிங்கம் = பூப்போன்று மெதுவான கலிங்கம். புன் = cheap] 
”நெய்யுங் குய்யும் ஆடி, மெய்யொடு மாசுபட்டன்றே கலிங்கமும் தோளும்” நற்.380-2 [நெய்யும் புகையும் மேல்விழுந்து உடம்போடு கலிங்கமும் தோளும் மாசுபட்டன. நெய்யும்,புகையும் பட்டால் பருத்தியாடை இன்றும் மங்கும்.]
”கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ” குறு.167-2 [துவைக்கவேண்டிய கலிங்கத்தை கழற்றாது உடுத்து; பருத்தியைத் துவைத்துக்கட்டுவது நெடுங்காலப் பழக்கம்.]
”பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி” பதி 76-13 [துவைக்கவேண்டிய கலிங்கம்போல் நீர்த்துறைமலர்ந்த பகன்றையைத் தலையிற்சூடி உழுகிறார். கலிங்கம் இங்கே உழவரின் தலைப்பாகையாகிறது. அழுக்குத்துண்டு தலைப்பாகையானது. பகன்றைமலர் வெண்கலிங்கத்திற்கு உவமையானது.]
 
”சில்பூங் கலிங்கத்தள்” கலி.56-11 [சில்லெனும் பூப்போன்ற மெதுகலிங்கம் அணிந்தவள்; பூப்போல துணியென்பது தென்பாண்டிப்பேச்சு. துணியின் மெதுவான பரிசத்தைச் சொல்ல பூ விதப்பான குறியீடு.]
”கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர்கொள் மான்நோக்கின் மடந்தை” கலி.69-3 [கலிங்கத்துள் ஒடுங்கிய (காதல்கொள் மான்நோக்குடைய) மடந்தை வெட்கம்பிடுங்கித் தின்பதால், ஆடையுள் ஒளிகிறாள்]
”அடிதாழ் கலிங்கம் தழீஇ” கலி.92-42 9 [காலின் அடிவரை தாழும் கலிங்கத்தைப் பிடித்து; கலிங்கமென்பது இங்கே தோள், இடுப்பு, தலையில் அணியும் துணியல்ல. காலின் அடிவரையுள்ள ஆடை. முகன்மையான குறிப்பு இங்கேகிடக்கிறது. Kalingaam is not a fancy fabric.]
“கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்” அக.86-21 [கரைகட்டிய கலிங்கத்துள் ஒடுங்கினாள். கோடிக்கலிங்கம் = கரையுள்ளபடி நெய்த கலிங்கம். இதைப் புதுக்கலிங்கமென்றுஞ் சொல்லலாம். இன்றைக்கும் ஊர்விழாக்களில் புதுத்துணியைக் கோடியென்பர்.]
”முருங்காக் கலிங்கம் முழுவது வளைஇ பெரும்புழுக்குற்ற” அக.136-20 [கசங்காக் கலிங்கம் உடம்பைச் சுற்றியதால் பெரும்புழுக்கம் அடைந்த; கசங்குதலென்றே இற்றைக்காலத்திற் சொல்கிறோம். முருங்குதல் வழக்கு கொஞ்சமும் இல்லை. கோடைகாலத்தில் உடம்புமுழுக்கக் கலிங்கத்தாற் சுற்றின் புழுங்கத்தானே செய்யும்? இங்கே கலிங்கம் = outer garment cloth. So this cloth is nothing  special to be imported from far away Kalinga.]
 
“பாம்புரி அன்ன வடிவின காம்பின் கழைபடு சொலியின் இழைஅணி வாரா ஒண்பூங் கலிங்கம் உடீஇ” புற 383-11 [பாம்புரி போன்ற வடிவானதாய், மூங்கிலில் உட்கிடக்கும் மென்தோலின், இழையணி தென்படாத, ஒளிமிகு, மெதுகலிங்கத்தை உடுத்தி. இழையணி = threadline அருமையான கலைச்சொல் The cloth is so fine that one can’t find threadlines. Very fine count ஆல் நெய்த துணிகளை
இப்படிச் சொல்லலாம்.]
”நேர்கரை நுண்ணூற் கலிங்கம் உடீஇ” புற.392-15 (நேரான கரையுடைய நுண் நூற்கலிங்கம் உடுத்தி. நுண்ணூல் = fine count. கரைவைத்த துணிகளின்மேல் இன்றும் தமிழருக்கு ஈர்ப்பு. காஞ்சிபுரம் புடவைகள் கரைக்குப் பெயர்பெற்றவை.]
”போதுவிரி பகன்றைப் புதுமலரன்ன அகன்றுமடி கலிங்கம் உடீஇ” புற.393-18 [பதி 76-13 இன் தலைகீழொப்புமை. போதுவிரிப் பகன்றையின் புதுமலருக்கொப்பாய் அகன்றுமடிந்த கலிங்கத்தை உடுத்தி;]
”பாம்புரித்தன்ன வான்பூங் கலிங்கமொடு” 397-15 [பாம்புரிபோற் மீமெது கலிங்கத்தோடு; எப்போதும் துணிகளுக்குச் சொல்லப்படும் ஒப்புமை பாம்புரி. கணக்கற்ற பாம்புகள் திரிந்த காலம் போலும்.]
”புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்” புற.398-28, [உயர்ந்தோன் மேனியில் மெது துகில்/கலிங்கம்; நாட்டாமையின் தோளிற்கிடக்கும் துண்டு உணர்த்தப்படுகிறது. it must have been a fine fabric.]
 
”தொன்றுபடு சிதாஅர் மருங்குநீக்கி மிகப்பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலஞ்............லவான கலிங்கம் அளித்திட்டு புற.400-12-13 [நாட்பட்ட கந்தையை மடியில்நீக்கி, மீப்பெருஞ்சிறப்பின் வீறுசால்ந்த நன்கலம் .......லவான கலிங்கம் அளித்திட்டு. கந்தையைநீக்கிக் கோவூர்க்கிழாருக்கு நலங்கிள்ளி கலிங்கமளித்தது சொல்லப்படுகிறது. ஓலை செல்லரித்ததால், கலிங்கப் பெயரடை தெரியவில்லை.]
”நலம்பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒருகை” திரு-109 [தொடையின்மேற் கிடந்த கலிங்கத்தில் அசைகிறது ஒருகை; இது மேலாடையல்ல. கீழுடம்பிலணியும் பருத்தியாடை. முழுக்கவும் மெலிதாக, see through ஆக இருக்கமுடியாது. எனவே நல்ல பயன்பாடுள்ள, run of the mill vEtti cloth. How can this be imported from Kalinga?]
”கானமஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்” சிறு 85 [காட்டுமயிலுக்கு கலிங்கம்கொடுத்த அருந்திறல் அணங்கிய ஆவியர்பெருமான் பேகன். இந்தக் கலிங்கம் அரசன் போர்த்தியிருந்த உயர்போர்வை. must be very valuable.]
”நின்அரைப் பாசியன்ன சிதர்வை நீக்கி ஆவியன்ன அவிர்நூல் கலிங்கம்” பெரு-469 [நின் இடுப்பிலிருக்கும் பாசிவேர் போன்ற கந்தையை நீக்கி ஆவிபோலமைந்த, ஒளிதரும் நூலாலான கலிங்கம்; பாசிவேர்க் கந்தை என்பது வலிய ஒப்புமை. அழுக்குப்பாண்டற் கந்தலாய்ப் புலவர்துணி இருக்கிறது. அதேநேரத்தில் பாலாவிபோல வெள்ளைவெளேரென்று ஒளிவிடும் புதுக்கலிங்கம் கொடையாகிறது.] 
”வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் கண்பொருபு ஊகூஉம் ஒண்பூங் கலிங்கம்” மது.433 [வெயில் மழுங்கி மாலையிற்படரும் செக்கல் நிறம்போல் அசையும் உருவின் கண்பொருது உகுக்கும் ஒளிபூத்த கலிங்கம்]  
 
“கலிங்கம் பகர்நரும்” மது.513 [கலிங்கம் விற்போரும்; இன்றும் சேலைவிற்போர் நம்வீதிகளில் கலிங்கம் பகர்ந்துவருகிறார்.]
”மென்நூற் கலிங்கம் கழன் புகை மடுப்ப” மது.554 [மென்நூற் கலிங்கம் கழுலும் அகிற்புகையில் மணஞ்சேர்க்க; துணிக்கு மணஞ்சேர்ப்பது இன்றும் சில பொரிம்புகளிற் (brands) செய்யப்படுகிறது.]
”இணையணை மேம்படப் பாய்அணை இட்டு காடிகொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி விரித்த சேக்கை” நெடு 134 [இணையான அணை மேம்பட, பாயணையிட்டு, அதன்மேல் துவைத்துக் கஞ்சிதடவிய, சுருக்கமில்லாத, கலிங்கத்தை விரித்து, ஒட்டினாற்போல் அமைந்த தூய மடி விரிந்த படுக்கை. (மடியும் பருத்தித் துணி தான். படிபற்றிப் பல தவறான கருத்துக்கள் உலவுகின்றன. கீழே பார்ப்போம்.) கஞ்சிதோய்த்த துணிகள் இன்றும் படுக்கை விரிப்பாய்ப் பயன்படுத்துவதுண்டு. குறிப்பாகத் தங்கும் ஆடம்பர விடுதிகளில், செல்வர்வீட்டுப் படுக்கைகளில். இதுபோன்ற துணிப்பழக்கம் 2000 ஆண்டுகள் கழித்து இன்றுந்தொடர்வது வியப்பே.] 
”பூந்துகில் மரீஇய ஏந்துகோட்டு அல்குல் அம்மாசு ஊர்ந்த அவிர்நூற் கலிங்கமொடு” நெடு. குறிப்பாக146 (பூப்போன்ற துகிலைத் தழுவியேற்ற வளைஅல்குல். (அல்குல் என்ற உறுப்பு பெண்களுக்கு மட்டும் ஆனதல்ல. ஆண்களுக்குமுண்டு. இடுப்பிற்குங்கீழே தொடைகளுக்கும்மேலே முக்கோணமாயமைந்து, முன்னும்பின்னும் புடைத்துநிற்கும் பகுதி அல்குலாகும். அதற்கும் பெண்ணுறுப்பிற்கும் தொடர்பில்லை. அல்குலின் பின்பகுதியைப் புட்டமென்பார்.) அம்மாசு ஊர்ந்துகிடந்த ஒளிநூற் கலிங்கத்தோடு.. எம்மாசு என்பது வெளிப்படச் சொல்லப்படவில்லை. அல்குலின்மேல் துகில் கிடக்கிறது. அல்குலின்கீழ் கலிங்கங்கிடக்கிறது. இரண்டின் வேறூபட்ட உருவகத்தை ஆழப் புரிந்துகொள்ள வேண்டும்.]
”இழைமருங்கு அறியா நுழைநூற் கலிங்கம்” மலை 561 [இதுவும் புற.383-11 போன்ற இழைமருங்கு அறியமுடியாத நுண்ணிய நூலாற் செய்த கலிங்கத்தைக் குறிக்கிறது. நுழைநூல் = micro filament] 
 
இனிச் சங்கநூல்கள் அல்லாதவற்றிற்கு வருகிறோம். இதில் ஓரிரண்டு விளக்கங்கள் மட்டுமே கொடுக்கிறேன்
 
”கல்லுண் கலிங்கம் நீக்கி” (பெருங். 4:16:23).
“மணிமுடி கலிங்க மாலை” என்ற மேருமந்.123 வரிகள் பொதுக் குறிப்பே.
”சேலை புடவை கலிங்கம்” என்ற உரிச்சொல் நி 147 வரிகள் பொதுக்குறிப்பே.
”வாம வருங்கலம் ஆடை கலிங்கமும் கோசிகமும்” பது. பரிண. 8.25
”உற்ற உதிரம் செழிப்பான் கலிங்கத்தை மற்று அது தோய்த்து” வளையாபதி 43
 
”கண்டத்தில் இட்ட கலிங்கத்தால் கால்வருந்த” பாரதவெண்.296
”நொம்மென் கலிங்கம்” பட்டினத்தார். பா, கோவை 19, 46 (நொய்மையான கலிங்கம்)
”காஞ்சியிருக்கக் கலிங்கம் குலைந்த” கலிங்கத்துப் 64 [இங்கே ஒரு சிலேடையுள்ளது. காஞ்சி = ஒட்டியாணம். மேகலையென்ற அணியைக்குறிக்கும். புத்த இலக்கியங்களில், குறிப்பாகத் திபெத்திய வயிரயான நூல்களில் காஞ்சிநகரம் ஒட்டியாண நகரென்றே பேசப்படும். மணிமேகலை காஞ்சிநகரத்தில் முடிவதும் புத்தக்குறியீடே. மணிமேகலைத்தொடரில் அதைக் குறிப்பிடுவேன். இடுப்பில் மேகலை குலையாதிருக்க, அதன்கீழணிந்த கலிங்கம் குலைந்துபோனதாம். இன்னொருபொருள்: காஞ்சியான் (கருணாகரத் தொண்டைமான்) பிடித்ததாற் கலிங்கநாடு குலைந்துபோயிற்றாம்.]
 
”முலைமேல் கலிங்கம் ஒன்றிட” திருப்புக. 1079 (மேல்வருக்கத்தார் முலைமேற் கலிங்கம்தரிப்பது திருப்புகழ்காலத்தில் வந்துவிட்டது போலும்.)
”கலிங்கமாங் காலிந் துயிலையும்”  கோலாசல.பு.12
”ஈழமும் நீடுகலிங்கமும் மன்றற் இயந் துவைப்ப” கோடீச் கோவை 292
”கலாம் பெறும் கலிங்கம் கலையுடன் தரித்து” விராலி. குற. 6
 
ஆகக் கலிங்கம் என்றுமே விதப்புச்சொல்லல்ல, அதுவொரு கணப்புச் சொல். சொற்பிறப்பியல்வழி காணுமுன் தமிழிலக்கண ஒழுங்கைப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழில் ”ங்கு” எனவரும் சொற்களை “lingering verbs" எனலாம். ஆங்கிலத்தில்வரும் present continous போல இதுதோற்றினும் முற்றிலும் அப்படியில்லை. கீழே எடுத்துக்காட்டுக்களைப் பாருங்கள். 
 
"அசங்குதல், அடங்குதல், அணங்குதல், அரங்குதல், அலங்குதல், இசங்குதல், இடங்குதல், இணங்குதல், இயங்குதல், இரங்குதல், இலங்குதல், இளங்குதல், இறங்குதல், ,உடங்குதல், ,உணங்குதல்,
உயங்குதல், உலங்குதல், உழங்குதல், உறங்குதல், கசங்குதல், கரங்குதல், கலங்குதல்" - இதெல்லாம் ஒருவகை. இவற்றில் அங்குச்சாரியை உள்வந்து நிற்கும். ”அணுங்குதல், அதுங்குதல், அமுங்குதல், அலுங்குதல்,  அழு/ளுங்குதல், அறுங்குதல், இடுங்குதல், இணுங்குதல், இறுங்குதல், உருங்குதல், உழுங்குதல், உளுங்குதல், உறுங்குதல், ஒடுங்குதல், ஒதுங்குதல், ஒருங்குதல், ஒழுங்குதல், கருங்குதல்” என்பது இன்னொருவகை இவற்றில் உங்குச்சாரியை உள்வந்து நிற்கும். இவையிரண்டுந்தான் தமிழில் பெரிதுமுண்டு. ஆனால் “இழிங்குதல், கலிங்குதல்”என மூன்றாம்வகையில் இங்குச்சாரியை ஓரோவழி உள்வந்து நிற்பதும் உண்டு. இங்குச்சாரியை பயிலுஞ்சொற்கள் தமிழிற் குறைவு அதேபோது அவை இல்லாமலுமில்லை. பலவிடங்களில் இவை உங்குச்சாரியைச் சொற்களோடு போலிகாட்டும்.
 
நம்பேச்சிற் சாரியைகள் இல்லாதும் வினைச்சொற்களைப் பயிலலாம். மேற்சொன்னவற்றில் அங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால், ஊடே ஐகாரஞ்சேர்த்து, “அசைதல், அடைதல், அணைதல், அரைதல், அலைதல், இசைதல், இடைதல், இணைதல், இயைதல், இரைதல், ..........., இளைதல், இறைதல், உடைதல், உணைதல், ..........., உலைதல், உழைதல், உறைதல், கசைதல், கரைதல், கலைதல்” என்பவை கிடைக்கும். [நடுவே 2 இடங்களில் சொல்தெரியாது அல்லது இற்றைப்புழக்கமின்றி இடைவெளி காட்டியுள்ளேன்.) அதேபோல் உங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால், உகரத்தோடு “அண்ணுதல், அத்துதல், அம்முதல், அல்லுதல், அழு/ளுதல், அறுதல், இட்டுதல், இண்ணுதல், இறுதல், .........., உழுதல், உள்ளுதல், உறுதல், ஒடுதல், ஒதுதல், ஒருதல், ஒழுதல், கருதல்” என்பவை கிடைக்கும், (இங்கும் இடைவெளி விட்டுள்ளேன்.) அதேபோல இங்குச்சாரியை விடுத்துப்பார்த்தால் இகரஞ்சேர்த்து “இழிதல், கலிதல்” போன்றவை கிடைக்கும்.
 
அதாவது, கலிங்குதலின் சாரியையில்லா வினைச்சொல் கலிதலே. கலிதல் என்பதற்குக் தோன்றுதல் என்றும் பொருளுண்டு, (ஊடும் பாவும் கலந்து பிணைந்து கட்டுப்பட்டு துணியெனும் புதுப்பொருள் தோன்றுகிறதல்லவா?. கலித்தல் = செழித்தல், தழைத்தல், வளர்தல், முகுதல், பெருகுதல், கலித்தலுக்குச் செலுத்தல் பொருளுமுண்டு, கலிங்கல் என்ற பெயர்ச்சொல்லைக் கலிங்கு, கலுங்கு என்று வெவ்வேறு விதமாய்ச் சொல்லுவர். கலித்தலைச் செய்யும்கருவியும் கலிங்கெனப் பெயர்பெற்றது. இதோடு ஒப்பும் ஏரி மடுகும்>மதகும் அதேபெயர்பெற்றது. மதகில்வெளிவரும் நீர்ப்பாய்வு கலிதமானது. ஏரிமதகு கொள்ளாமற் நீரோட்டம் பொசியலாம்; வெடிக்கலாம், கக்கலாம், தமிழில் கலித்தத்திற்கு, “கக்குகை, வெடிக்கை, பொசிகை” என்ற 3 பொருள்கள் உண்டு. கலிங்கு, கலிஞ்சென்றும் பேச்சுவழக்கிற் சொல்லப்படும்.
 
மடுகு எனுங் கருவியில் விளைந்தது மடியெனும் கலிங்கம். இன்னும் இருவிதப் பொருண்மைகளாலும் இப்பெயர் ஏற்பட்டது. ”இத்துணி மிகவும் நீளமானது (18 முழம் புடவை என்றால்
பார்த்துக்கொள்ளுங்கள்) இதை மடித்து வைக்கவேண்டும்” அடுத்தது ”இதை மடியிற்றான் கட்டிச் செருகிக்கொள்ளவேண்டும்”.இப்படியாக ஆக்கம், பேணல், பயன்பாடு என்ற மூன்றாலும் மடி என்னும் பெயர் ஏற்பட்டது. சங்க இலக்கியம் படித்தால் துணிப்பொருண்மையில் வேறு விதப்புப்பொருள் கிடையாது.
 
”துறைபோகு அறுவைத் தூமடி அன்ன” நற்.70-2, [நீர்த்துறைகளில் துவைத்து உடுத்தும் தூய்மையான மடி அறுவையைப் போல”  
”தூது ஒய் பார்ப்பான் மடிவெள் ஓலை” அக.337-7 [தூதாகச் செல்லும் பார்ப்பானின் மடிக்கலிங்கத்தில் ஒருக்கும் வெள்ளோலை”]
”..... என்னரை முதுநீர்ப் பாசி யன்ன உடைகளைந்து திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ” புற.390-15 அதியமான் ஔவையார், [இதேகருத்து மேலே கோவூர்க்கிழாருக்கு நலங்கிள்ளி
கலிங்கமளித்ததையொட்டி வந்தது. இங்கே அவருக்கு முற்பட்ட காலத்தில் அதியமான் நெடுமானஞ்சியால் ஔவையாருக்கு அளிக்கப்பட்டது. அங்கே கலிங்கம். இங்கே மடி. அவ்வளவுதான் வேறுபாடு. அங்கும் முதுநீர்ப் பாசிபோல சிதறிய உடை களைந்து ப்கன்றை மலர் போன்ற பொதுமடி கொள்ளப்படுகிறது. மடி என்பது கணப்புச்சொல் என்றறிய இந்த ஒரு எடுத்துக்காட்டு போதும். அதற்கும் பார்ப்பனருக்கும் ஏற்பட்ட கணுக்கம் பின்னால் வந்தது. “உடுக்க மடி கொண்டுவா” என்பது இங்கே துவைத்த ஆடை என்றே பொருள்படும். “நான் மடியாய் இருக்கிறேன்; என்னைத் தொடாதே” என்பது சாதிவழக்கத்தில் ஏற்படும் தவறானநிலை. மடிச்சீலை என்பது தூய ஆடை, அது கோவணத்தைக் கூடக் குறிக்கலாம்.] 
”தெண்திரை அவிர் அறல் கடுப்ப ஒண்பகல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து” மது 520, [தெள்ளியதிரையில் விளங்கும் கருமணலைப்போல ஒன்றியதாய், சிறியதும் பெரியதுமான மடிப் புடைவைகளை விரித்து. ஆகப் புட்டாப் போட்ட புடைவைகள் அண்ரும் இருந்திருக்கின்றன.]
இன்னொரு காட்டு நெடு 135 இல் உள்ளது. அதை கலிங்கத்தைப் பார்க்கும் போது சொல்லிவிட்டேன். அதில் கலிங்கத்தோடு, மடியும் உள்ளது. உடம்பின் மேலே கலிங்கம், உடம்பின் கீழே
படுக்கையின் மேலே மடி.]
 
கலிங்கம், மடி போக, இன்னுஞ் சில துணிச்சொற்கள் உருவாக்கத்தின் வழி எழுந்துள்ளன..
 
அறுத்தது அறுவை,
குள்>கல்>கலை = தோற்றம் (ஊடும் பாவும் கலந்து தோன்றியது), கலிங்கம் = ஊடும் பாவும் கலிந்து தோன்றியது,
காடிகம் (கஞ்சி ஊட்டப்பட்ட கலிங்கம்), காழகம் (காழால் நிறங்கூட்டப்பட்ட கலிங்கம்) 
கூறை =  ஊடையும் பாவையும் வெவ்வேறு வகைப்பட்ட கூறுகளாய்ப் பிரித்துச் செய்யப்பட்ட கலிங்கம். கூறைநாடு மயிலாடுதுறைக்கு அருகில் சேலைகள் மிகுதியாகச் நெய்யப்படும் ஓர் ஊர்; உறையூர் கூறைப்புடவையும் முன்னாட்களிற் பெரிதாய்ப் பேசப்படும்.  கூறைப்பாய் = தோணிப்பாய்; கூறைப்புடைவை, கூறைப்பை குற்று>குற்றை>கூறை.
கூறை = coarse
coarse (adj.)
early 15c., cors "ordinary" (modern spelling is from late 16c.), probably adjectival use of noun cours (see course (n.)), originally referring to rough cloth for ordinary wear. Developed a sense of "rude" c. 1500 and "obscene" by 1711. Perhaps related, via metathesis, to French gros, which had a similar sense development. Related: Coarsely; coarseness.
 
கோடி/கோடிகம் - விளிம்பிற் கரைகட்டிய ஆடை; புத்தாடை
கோசிகம் = பட்டாடை
துணித்தது துணி
துல்>துய்>தூய்>தூசு = பஞ்சினாலான கலிங்கம்
துல்>துல்கு>துகு>துகில் = பஞ்சினாலான கலிங்கம். (இந்தக்காலத்தில் எல்லாத் துணிகளுக்கும் பொதுவாய்ப் பயன்படுத்துகிறோம்.) ‘பட்டும் துகிலும் உடுத்து” (நாலடி,264); துகிலி = பருத்தியிலை;
துகிலிகை = எழுதுகோல் “சுவர்செய்தாங் கெழுதப்பட்ட துகிலிகைப் பாவை” (சீவக. 2542) பருத்திநூல் தொங்கும்படி செய்த எழுதுகோல். இதைக் கொண்டு வண்ணக் குழம்பிற் தோய்த்து
எழுதுகிறோம்; துகில் மனை = கூடாரம்; துகில்முடி = தலைப்பாகை; துகில் நூல் = வெண்ணூல்
 
துகுதல் = தொகுதியாதல் “சலந் துக்க சென்னிச் சடையான் கண்டாய்” (தேவா. 844:3)
துகுத்தல் = தொகுதியாக்குதல் “அவிழ்ந்த புரிசடை துகுக்கும்” திருவிசை. கருவூ - 7,3)
துகூலம் = வெண்பட்டு நொய்ய புடைவை  
நாகம் = நல்ல தூசு; fine cloth; as resembling a snakes's slough,
நீள்வியம்>நீவியம் = மடித்து மடித்துக் கொய்சகம் வைத்துக்கொள்ளக் கூடிய கலிங்கம்.
 
படாம் = அகலமாய் படவும் கலிங்கம், ”படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எங்கோ” - புற. 141, “படாஅம் ஈத்த கெடாஅ நாலிசைக் கடாஅ யானைக் கலிமான் பேக” புற. 145
பட்டு = பூச்சியைப் பட்டி அடிக்கப்பெறும் பளபள நூலாற் செய்த கலிங்கம்,
பஞ்சி = பருத்தித் துணி
வேய்தகம்>வேதகம்>ஏதகம்
வெட்டியது வேட்டி
 
இன்னும் சில சொற்கள் பயன்பாட்டின் வழி எழுந்துள்ளன. காட்டு:
 
அடுத்தது ஆடை, [உடம்பை அடுத்து உள்ளது]
அப்பியது/அம்பியது/அம்மியது அம்பரம் [உடம்பை அப்பியுள்ளது அம்பரம்]
ஆலிவரும் அணம் ஆவரணம், [உடம்பௌச் சுற்றுவது.]
ஆலிச் சாருவது ஆசாரம், [உடம்பைச் சுற்றுவது]
 
இடுப்புத்துகில் இடையல், [இடுப்பில் கட்டும் துகில்]
இழுத்துச் சுற்றியது இலக்காரம், [[துப்பட்டா போல இழுத்துச் சுற்றியது.]
இடுப்பிற் செருகிக் கட்டுவது உடுக்கை, உடையும் அதே பொருள்தான், [உடையின் விதப்புப் பொருள் மாறி இன்று கணப்புப் பொருளே கொள்கிறோம்.]
அம்பரம்>சம்பரம்>சம்படம், [இது வடபால் பலுக்கம்]
சவளி>சாளி>சாடி,[சவள்ப்பு = அடிப்பு, அடித்துத் துவைத்து தூய்மைசெய்வதால், சவள்க்கக் கூடியது சவளியாயிற்று. இன்று எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம். சாளி வடக்கே போய்ச் சாடியாக மீண்டும் இங்கேவந்து ஆங்கில ஒலிப்பில் சாரியாயிற்று. தமிழ்ச்சொல்லைத் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். 
சிரை>சீரை>சீலை>சேலை, [முதலில் மரவுரியைக் குறித்து இன்று பெண்கள் சுற்றிக்கொள்ளூம் புடைவையைக் குறிக்கிறது.
சூட்டு>சூடு>சூடி [தலையிற் சூடிக்கொள்ளூம் பாகை போன்றது.]
தானை = தாரைப்போல் அணியும் துண்டு. [கொடுந்தானைக் கோட்டழகும் - நாலடி 131,]
 
புட்டம், புட்டகம் = பூவேலை செய்த புடவை [இன்று சுங்குடிச் சேலை என்று சொல்வார்கள் இதில் புட்டாப் போடுவதென்பது குறிப்பிட்ட கலை. ஒருகாலத்தில் புட்டாப் போட்ட சேலைகளுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.]
புடவை = சுற்றிக் கட்டிக்கொள்வது. [இன்று பல்வேறு விதப்புப் பயன்பாடுகள் நெசவில் வந்துவிட்டன.]
வட்டம் வளைத்துக் கட்டியது, பரிவட்டம் = சுற்றி வளைத்துக் கட்டியது, வட்டம்>வத்தம்>வத்த்ரம்>வஸ்த்ரம் [அடிப்படைச்சொல் நம்மூரிற்ற்றான். ஆனால் தோற்றத்தை மறந்து வஸ்திரம் என்று சொல்வதையே நம்மில் பலர் பெரிதாய்க் கருதுகிறார்.
   
இன்னும் சில கொசுறுச்செய்திகளை அடுத்தபகுதியிற் பார்த்துவிட்டு textஐ நோக்கி நகருவோம்.
 
அன்புடன்,
இராம.கி.

வேந்தன் அரசு

unread,
Jul 9, 2016, 10:39:02 PM7/9/16
to தமிழாயம், tamil_ulagam, தமிழ் மன்றம்
புட்டகம்  நீச்சலுக்கு வாகாக கட்டிக்கொளவது என நினைக்கிறேன்.

9 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 4:30 அன்று, iraamaki <iraa...@bsnl.in> எழுதியது:

--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
Reply all
Reply to author
Forward
0 new messages