(வெருளி நோய்கள் 261 – 265 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 266 – 270
ஆர்லண்டோ(Orlando) நகரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்லண்டோ வெருளி.
ஆர்லண்டோ / ஓர்லாண்டோ ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரமாகும். இங்கே உலகப்புகழ்பெற்ற திசுனிஉலகம், உலகளாவிய(யுனிவெர்சல்) பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன.
ஆர்லண்டோ நகரம், பொழுதுபோக்கு அரங்கங்கள், உணவுமுறை முதலான பல குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர்.
00
ஆர்வம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்வ வெருளி.
காண்க : அவா வெருளி – Periergeiaphobia
00
ஆர்வப்பெயர்ச்சி குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆர்வப்பெயர்ச்சி வெருளி.
‘anorak’, ‘arachnophobia’ ஆகியவற்றின் ஒட்டுச்சொல்லே இச்சொல். தேவையற்ற தவறான பேரார்வத்தின் அடிப்படையிலான இடப்பெயர்ச்சி குறித்த அளவு கடந்த பேரச்சம்.
00
புனைவுரு ஆர்னால்டு(Arnold) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆர்னால்டு வெருளி.
சாலப்பள்ளிப்பேருந்து (The Magic School Bus) என்னும் அசைவூட்டப் படத் தொடரில் புனைவுரு பாத்திரம் ஆர்னால்டு மாத்தியூ பெர்லிசுடன்(Arnold Matthew Perlstein).
00
ஆலங் கட்டி(hail) மழை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆலங் கட்டி மழை வெருளி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
வல்லினம் மிகுதலும் மிகாமையும் தமிழுக்குரிய சிறப்பே!
ஒரு சொல் அதன் பொருளை வேறுபடுத்திக் காட்ட உதவுவன வேற்றுமை உருபுகளாகும். வேற்றுமை உருபுகளை நேரடியாகப் பயன்படுத்தும் பொழுதும் மறைமுகமாகப் பயன்படுத்தும் பொழுதும் வல்லின எழுத்துகள் மிகுந்து வருவது தமிழின் சிறப்பாகும். அவ்வாறு மிகுந்து வராவிடில் பொருளே மாறுபடும். எனினும் சிலர், அவ்வாறு எழுதத் தேவையில்லை; இயல்பாக எழுதலாம் எனத் தவறாகக் கூறி வருகின்றனர். “இலக்கணம் இல்லாச் செய்தி கரையற்ற ஆறு ஆகும்” என அறிஞர்கள் கூறுவதிலிருந்தே இலக்கணத்தின் சிறப்பை உணரலாம். இலக்கணத்தின் ஒரு கூறுதான் வல்லினம் மிகுதலும் மிகாமையும். எனவே, இதன் இன்றியமையாமையை உணரலாம்.
சான்றாகச் சில பார்ப்போம்.
‘கீரை கடை’, ‘தயிர் கடை’ என்னும் பொழுது ‘கீரையைக் கடை’, ‘தயிரைக் கடை’ என நாம் வேற்றுமை உருபு மறைந்து வருவதைப் புரிந்து கொள்கிறோம். அதே நேரம், ‘கீரைக் கடை’, ‘தயிர்க்கடை’ என்னும் பொழுது முறையே, ‘கீரை விற்கும் கடை’, ‘தயிர் விற்கும் கடை’ என்பது புலனாகின்றது. எனவே, சொற்களின் இடையே உரிய வல்லின எழுத்தைச் சேர்ப்பதாலும், சேர்க்காமல் இயல்பாக அமைப்பதாலும் பொருள் மாற்றத்தை உணர்கிறோம்.
சொற்களைப் பிரித்து எழுதும் பொழுதும் சேர்த்து எழுதும் பொழுதும் பொருள் மாறுபடுவதை உணரலாம். ‘முதல் அமைச்சர்’ வந்தார் என்றால் முதலாவது அமைச்சர் வந்தார் எனப் பொருளாகிறது. ‘முதலமைச்சர்’ வந்தார் என்றால் அமைச்சர்களின் தலைவரான முதலமைச்சர் வந்தார் எனப் பொருளாகிறது.
இவ்வாறான இலக்கணக் கூறுகள் தமிழுக்கு வளம் சேர்ப்பன. எனவே, தமிழ் மொழிப் பாடங்களில் மட்டுமல்லாமல் பிற துறைப் பாடங்களைத் தமிழில் எழுதும் பொழுதும் இலக்கண நெறிமுறைகளைப் பின்பற்றுவதை நம் கடமையாகக் கொள்ள வேண்டும்.
இலக்குவனார் திருவள்ளுவன்