ஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 17 October 2025 அகரமுதல
(குறட் கடலிற் சில துளிகள் 32. தக்கவர் இனத்தில் இணைந்தால் பகைவரால் யாது செய்ய இயலும்? –தொடர்ச்சி)
குறட் கடலிற் சில துளிகள் 33
இடிக்குந் துணை இருப்போரைக் கெடுப்போர் யாருமிலர்
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
(திருவள்ளுவர், திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல், எண்: ௪௱௪௰௭ – 447)
கடிந்துரைத்துக் கூறித் திருத்தும் தன்மையுடைய பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?
பதவுரை
இடிக்கும் = கடிந்துரைத்து அறிவுரை கூறும்; துணையாரை=துணையாக இருந்து உதவி; ஆள்வாரை = கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்து ஆட்கொள்வோரை; யாரே=யார்; கெடுக்கும் = தீங்கு செய்து கெடுக்கும்; தகைமை யவர்=தன்மை யாளர்; யாருமிலர்.
“மணக்குடவர் ஆள்வார் என்றதற்குத் தமக்குத் தமராகக் கொள்ள வல்லார் எனப் பொருள் கொண்டார். இதைத் தழுவிப் பரிமேலழகர் ‘இவர் நமக்குச் சிறந்தார் என்று ஆளும் அரசர்’ எனப் பொருளுரைத்தார்.”
ஆட்சியாளராக இருப்பின் ஆட்சியில் தவறு செய்ய முற்படுகையில் கண்டித்து அறிவுரை கூறி நல்வழிப்படுத்தும் துணிவும் தகைமையும் உடையவர் துணை இருப்பின் அவருக்குத் தீங்கு செய்யும் வலிமையுடையவர் யாருமிலர்.
வேறு நிலையில் இருப்பவராக இருப்பின், தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பின், அதிலிருந்து திசைதிருப்பி நற்பாதை கட்டும் வல்லைமையுடைய பெரியவர் துணை இருப்பின் அவரைத் தடுத்தாட்கொள்ளும் தீங்கினர் யாருமிலர்.
ஒரு துறையில் ஈடுபடும்போது, தவறு செய்ய விடாமல் உரிய பாதையில் இயங்கச் செய்யும் அத் துறை வல்லுநராக உள்ள அறிவில் பெரியோரை உறுதுணையாகக் கொண்டால் யாரும் அவருக்குத் தீங்கு செய்ய இயலாது. எனவே, எத்தகையவராக இருப்பினும் தக்க பெரியவரைத் துணையாகக் கொண்டால் தீங்கு செய்யும் வல்லமையுடையவர் யாரும் இலர்.
அதிகாரத்தில் உள்ளவர் அல்லது உயர் நிலையில் உள்ளவர் அருகில் ஆதாயம் அடைவோர் இருப்பது இயல்பு. அவர்கள் அறிவுரை கூறும் துணிவு உடையவராக இருக்க மாட்டார். அறிவுரை கூறுவதால் சினத்திற்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சாமல் தீமையில் இருந்து காப்பாற்றுவதையே இலக்காகக் கொண்டு அறிவுரை கூறுவோரைத் துணையாகக் கொண்டால் எவ்வழியிலும் தீங்கு செய்வோர் நெருங்க இயலாது. இதையே திருவள்ளுவர் நமக்குத் தெரிவிக்கிறார். எனவே,
தீமை செய்யும் வல்லமையுடையவரிடம் இருந்து தீங்கு நேராமல் காத்துக் கொள்ள பெரியாரைத் துணையாகக் கொள்க.
– இலக்குவனார் திருவள்ளுவன்
(நாலடி நல்கும் நன்னெறி 15: கேடு எண்ணாதே! பொய் சொல்லாதே! –தொடர்ச்சி)
நாலடி நல்கும் நன்னெறி 16
பிறர் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!
சினம் கூடாது எனச் சங்கப்புலவர்கள், திருவள்ளுவர், பதினெண்கீழ்க்கணக்குப் புலவர்கள், காப்பியப் புலவர்கள், சித்தர்கள், வள்ளலார் முதலிய அண்மைக்காலப்புலவர்கள், மேனாட்டறிஞர்கள் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
அணு என்பது மீச்சிறு அளவு. அத்தகைய அணு அளவும் சினம் கொள்ளக் கூடாது என்கிறார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அவர்,
“அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்“
என்கிறார்.
நம்மிடம் சினம் இல்லாமல் போனால் யாவும் கைகூடும். இதனை, இடைக்காட்டுச் சித்தர்.
“சினமென்னும் பாம்பு இறந்தால் தாண்டவக்கோனே! யாவும்
சித்தியென்றே நினையேடா தாண்டவக்கோனே” என முழங்கித் தெரிவிக்கிறார்.
சினம் என்பது அதனால் பாதிப்புறுவோருக்கும் தீங்கு விளைவிக்கும். அதனை வெளிப்படுத்துவோருக்கும் தீங்கினை விளைவிக்கும். எனவேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்”சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி” என்கிறார்.
நாலடியாரும் சினமின்மை குறித்துப் பத்துப்பாடல்களில் கூறியுள்ளது. அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.
மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க – மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று
( நாலடியார், பாடல் 61)
பதவுரை : மதித்து = பொருட்படுத்தி, மதிப்பளித்து; இறப்பாரும்=நடந்து கொள்வோரும்; இறக்க=அவ்வாறு நடந்து கொள்ளட்டும்; மதியா= மதிக்காமல்; மிதித்து=கால் படும்படி;இழிவுபடுத்தி; இறப்பாரும்= நடந்து கொள்வோரும்; இறக்க – அங்ஙனம் தாழ்வு படுத்தி நடக்கட்டும்; மிதித்து ஏறி ஈயும்=ஈயும் மிதித்து ஏறி; தலைமேல் இருத்தலால் – தலைமேல் இருத்தலினால்; அஃது அறிவார் -அந் நிலையை அறிந்து சிந்திக்குஞ் சான்றோர்;காயும் = எரிந்து விழும்; கதம்=சினம்; இன்மை=கொள்ளாது இருத்தல்; நன்று=நல்லது.
இறப்பாரும் என்பது இங்கே ஒழுகுவாரை – நடந்து கொள்வாரைக் குறிக்கிறது. இறக்க என்பது தாழ்வுபடுத்தி / இழிவுபடுத்தி ஒழுகுதலை/நடந்து கொள்ளுதலைக் குறிக்கிறது.
இறக்க என்பது தாழ்ச்சியையும் குறிக்கும். எனவேதான் பறவையின் தாழ்வான உறுப்பு இறக்கை எனப்பட்டது.
கருத்து: தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது. அஃதாவது
பிறர் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் சினம் கொள்ளாதே!
(வெருளி நோய்கள் 534-538: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 539-543
539. ஐசுலாந்து வெருளி-Islandophobia
ஐசுலாந்து(Island) தொடர்பானவற்றில் காரணமின்றிப் பேரச்சம் கொள்வதே ஐசுலாந்து வெருளி.
ஐசுலாந்து நாடு, ஐசுலாந்து மக்கள், அவர்களின் நாகரிகம், பண்பாடு, பொழுதுபோக்கு முதலியன என ஐசுலாந்து தொடர்பானவற்றில் காரணமின்றி வெறுப்பும் பேரச்சமும் கொண்டிருப்பர்.
00
540. ஐந்தாய ஆட்ட வெருளி -Yahtziphobia
ஐந்தாய ஆட்டம்(the game Yahtzee) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஐந்தாய ஆட்ட வெருளி.
ஐந்து ஆயம்(தாயக்கட்டை/கவறு//பகடைக்காய்) கொண்டு விளையாடும் ஆட்டம் ஐந்துஆய>ஐந்தாய ஆட்டம்.
00
541. ஐந்தாம் எண் வெருளி – Quintaphobia/ Pentaphobia
ஐந்தாம் எண் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஐந்தாம் எண் வெருளி.
penta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஐந்து.
Quinque > Quinta என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ஐந்து.
ஐந்தெழுத்து உள்ள பெயர், ஐந்தாம் நாளில் நடைபெறும் நிகழ்வு முதலானவற்றின் மீது தேவையற்ற பேரச்சம் கொள்வர்.
சீன எண்களுக்குரிய ஒலிப்பு முறை துயரம் அல்லது அவலம் அல்லது எதிர்மறை தரும் வேறு சொல்லின் ஒலிப்பிற்கு ஒத்து வருவதால்,அதை எண்ணி அத்தகைய எண்களைக் கண்டு தேவையற்று அஞ்சுவோர் உள்ளனர்.
5 ஆம் எண்ணின் ஒலிப்பு, ‘இல்லை’ என்னும் பொருள் கொண்ட சொல்லினை ஒத்திருப்பதால் 5 ஆம் எண் கண்டு பேரச்சம் வருகிறது.
00
542. ஐந்தாம் வகுப்பு வெருளி – Wunguphobia
ஐந்தாம் வகுப்பு நிலை குறித்த அளவுகடந்த பேரச்சம் ஐந்தாம் வகுப்பு வெருளி.
தொடக்கப்பள்ளியின் நிறைவாண்டு ஐந்தாம் நிலை. இதில் வெற்றி பெற்றால் உயர்நிலைப்பள்ளி செல்லலாம். எனவே, ஐந்தாம் நிலை குறித்து அளவுகடந்த பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
தொடக்கப்பள்ளிக்கூட வெருளியும் நடுநிலை/உயர்நிலைப்பள்ளிக்கூட வெருளியும் உள்ளவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
543. ஐந்தன்கூறு வெருளி – Pemptophobia
ஐந்தன்கூறு குறித்த வரம்பற்ற பேரச்சம் ஐந்தன் கூறு வெருளி.
“Pempto” என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் ஐந்தாவது.
ஐந்தாம் எண் வெருளி உள்ளவர்களுக்கு ஐந்தன் கூறு வெருளி வர வாய்ப்புள்ளது.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 18 October 2025 அகரமுதல
(வெருளி நோய்கள் 539-543: இலக்குவனார் திருவள்ளுவன் தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 544-548
544. ஐரிய வெருளி – Hibernophobia
ஐரிய மக்கள் தொடர்பானவை மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஐரிய வெருளி.
அயர்லாந்து நாட்டினரிடம், அவர்களது ஐரிய மொழியிடம், அவர்களின் அடக்குமுறைப்போக்கு, வேறுபாட்டுணர்வு முதலானவற்றிடம், கலை, பண்பாடு, நாகரிகம் முதலானற்றிடம் ஏற்படும் மிகை வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் கொண்டிருப்பர்.
1863 இல் காதரீன் ஓ நெயில்(Kathleen o’neil) என்பவர் உதவி தேவை – ஐரியர் யாரும் விண்ணப்பிக்க வேண்டா (Help wanted – no Irish need apply)என எழுதிய பாடல் ஐரியர்கள் வாழ்ந்த நாடெங்கும் இசைக்கப்பெற்றுப் பரவலாகப் புகழ்பெற்றது. நாட்டில் பலரிடம் ஐரிய வெறுப்பு இருந்ததையும் இதனால் ஐரிய வெருளிக்கு ஆளானவர்கள் இருந்தமையையும் உணரலாம்.
Hibernia என்பது அயர்லாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயராகும்.
545. ஐரோப்பிய வெருளி – Europhobia
ஐரோப்பியா தொடர்பானவை குறித்து ஏற்படும் காரணமற்ற பேரச்சம் ஐரோப்பிய வெருளி எனப்படும்.
ஐரோப்பியா, ஐரோப்பிய மக்கள், ஐரோப்பியா தொடர்பானவை குறித்து ஐரோப்பியர்களிடையேயும் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களிடையேயும் காரணமற்ற பேரச்சமும் கொண்டிருப்பர். ஐரோப்பிய ஒன்றிணைப்பு ஏற்பட்ட பின்பும் இதன் மீது ஏற்படும் அச்சமும் ஐரோப்பிய வெருளியில் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே, ஐரோ/யூரோ எனப்படும் ஐரோப்பிய நாணயத்தின் மீதான வெறுப்பும் அச்சமும் ஐரோப்பிய வெருளியில் அடங்கும்.
00
546. ஒகையோ வெருளி – Ohiophobia
ஒகையோ மாநிலம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஒகையோ வெருளி.
ஐக்கிய அமெரிக்காவில் 17 ஆவதாக 1803ஆம் ஆண்டில் இணைந்த மாநிலம் ஒகையோ(Ohio). பெரிய ஏரிகள் பகுதியில் அமைந்துள்ளது. ஒகையோ என்றால் வட அமெரிக்கப் பழங்குடியாகிய இராக்குவா மக்களின் மொழியில் ‘நல்லாறு’ எனப் பொருள். இதன் தலைநகரம் கொலம்பசு(Columbus).
00
547. ஒடுக்கு வெருளி – Catastolephobia
ஒடுக்கப்படுதல்(repression) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஒடுக்கு வெருளி.
பண்பாடு, நாகரிகம், கலை, மொழி, இனம், சமயம், சாதி, நாடு முதலானவற்றில் பிற பிரிவினரால் அல்லது அரசால் ஒடுக்கி ஆளப்படுவது குறித்த பேரச்சம்.
00
548. ஒட்டக வெருளி- Kamilaphobia
ஒட்டகம் குறித்த அளவுகடந்த பேரச்சம் ஒட்டக வெருளி.
Kamil என்றால் ஒட்டகம் எனப் பொருள்.
வயிறு ஒட்ட இருந்தாலும் – பட்டினி கிடந்தாலும் -தாங்கும் விலங்கைப் பழந்தமிழர் ஒட்டகம் என்றனர்.
உயர வெருளி உள்ளவர்களுக்கு ஒட்டக வெருளி வருகிறது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
++++