தமிழகத்தில் ராமர் கோவில்கள் என்ற தலைப்பில் குடந்தை சேதுராமன் அவர்களின் கட்டுரை ஒன்று. வாசித்ததில் பெரும் பிரம்மிப்பு. தமிழகத்தில் உள்ள ஸ்ரீராமர் கோவில்களின் பட்டியலை கல்வெட்டில் உள்ளதுபடி பதிவு செய்துள்ளார்.
பொதுவாகவே திருமால் வழிபாடு என்பது தமிழகத்தின் வாழ்வியல் நடைமுறையில் இணைக்கப்பட்ட ஒன்று.
ஏரிகாத்த ராமர், சொன்னவண்ணம் செய்த பெருமாள்.. இதுமாதிரியான பெயர் தமிழகத்தில் மட்டுமே உண்டு. பெருமாளுக்கும் தமிழர்களுக்கும் அப்படியொரு அன்னியோன்னியத் தொடர்பு.
ஆழ்வார் பாசுரங்கள் அனைத்தும் தீந்தமிழ் சொற்களால் பெருமாளைச் சிறப்பிக்கும்.
திருமழிசை ஆழ்வார் சொல்கிற அனைத்தையும் பெருமாள் கேட்கிறார். அதனால்தான் அவர் சொன்ன வண்ணம் செய்த பெருமாள். ஆழ்வார் பெருமாளைப் பார்த்து எழுந்திரு என்கிறார். பெருமாள் தனது பாம்பு பாயைச் சுருட்டி எழுகிறார். படு என்று ஆழ்வார் கட்டளையிட்டால் பெருமாள் படுக்கிறார்.
கட்டளைகள் அனைத்தும் தமிழ் பாசுரம்.
தமிழுக்கும்.. பெருமாளுக்கும் ..அப்படியொறு இணக்கம்.
இனி..
தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் ஸ்ரீராமர் கோவில்கள்..
திரு அயோத்தி பெருமாள். இராகவச் சக்கரவர்த்தி. குருசேத்திரத் தேவர்.
இராகவபெருமாள்..
இப்பெயர்கள் எல்லாம் தமிழகத்தில் மட்டுமே உண்டு.
தசாவதாரங்களின் பெயர்களில் குடியிருப்புகள். ஆழ்வார் பாசுரங்களை விண்ணப்பஞ் செய்தல்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் பெயரில் திருநந்தவனம்.
ஸ்ரீராமருக்கு பிறந்தநாள்.
ஸ்ரீராமருக்கு சீதாதேவியை திருமணம் செய்து வைத்து சீதனமாக நிலம் கொடுத்தல்..
கோவில்களில் இராமாயணம் படிக்க நிவந்தம்.
கல்வெட்டுகள் படி தமிழக ஸ்ரீராமர் கோவில்கள்.
திருநெல்வேலி மாவட்டம். நாங்குநேரி மனோன்மனீஸ்வரர் ஆலயம். பாண்டியன் மாறஞ்சடையனின் இரண்டாம் ஆட்சியாண்டு. கி.பி.863.
S.i.i.vol 14 No 17
நிலதானம் பற்றியக் கல்வெட்டில் ...
" ஸ்ரீராகவேந்திர பெருமாளுக்கு வைத்த பத்து மா நிலம் "
காஞ்சிபுரம்.புள்ளலூர்.கைலாசநாதர் கோவிலில் உள்ள காமாட்சியம்மன் கோவில் கல்வெட்டு.
முதலாம் பராந்தகனின் 34 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 941.
Ins 46/ 1923.
" திரு அயோத்தி நின்று அருளுகின்ற ஸ்ரீராகவபெருமாளுக்கு"
நந்தா விளக்கெரிக்க அரசியார் 10 கழஞ்சு பொன் தானமளித்துள்ளார்.
திருநெல்வேலி.
பாளையங்கோட்டை . வட்டெழுத்துக்
கல்வெட்டு. முதலாம் ராஜராஜனின் 10 ஆம் ஆட்சியாண்டு. கி.பி.995.
கோபால சாமி கோவிலில் மகாபாரதம் மற்றும் இராமாயணம் படிப்போர்க்கு நிலதானம் வழங்கப்பட்டது.
" " ஸ்ரீ கோவிலில் ஸ்ரீபாரதம் வாசிப்பார்க்கு பாரத விருத்தியாகவும் ஸ்ரீராமாயணம் வாசிப்போருக்கு விருத்தியாகவும் "
உத்ரமேரூர் .. பார்த்திபேந்திரனின் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு.
S.i.i.vol 3 .no 160.
" குருசேத்திர தேவர் என்றொரு கோவிலை குறிப்பிடுகிறது."
தஞ்சை. ஆலங்குடி.
முதலாம் இராஜராஜனின் 9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.994.
Ins 498 / 1920.
" ஸ்ரீராகவப்பெருமாள் கோவிலுக்கு நிவந்தம் "
புள்ளலூர். கைலாசநாதர் கோவில்.
இரண்டாம் இராஜேந்திரனின்
9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1061.
Ins 48/ 1923
" திரு அயோத்தி பெருமாள் கோலில் பாரதம், இராமாயணம் படிக்க இறையிலியாக நிலம் வழங்குதல்."
தஞ்சை. திருமெய்ஞானம். ஞானபரமேஸ்வரர் கோவில். இராஜராஜனின் 24 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1009.
Ins 322 / 1910.
" ஸ்ரீ நாராயண விண்ணகரத்து லஷ்மி ராகவப்பெருமாள் "
உத்ரமேரூர்.
பராந்தகனின் 15 ஆம் ஆண்டு.
S.i.i. vol 6 no 297.
" " கோவிந்தச்சேரியைச் சேர்ந்த ஒருவர் திரு அயோத்திப் பெருமாளுக்கு நிலதானம் வழங்கியுள்ளார். "
திருநெல்வேலி.
சேரமாதேவி.
முதலாம் இராஜேந்திரன்.
8 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1020.
S.i.i.vol 5. No 747.
" இவ்வூரில் இருக்கும் இராகவச்சக்கரவர்த்தி கோவிலுக்கு நிவந்தம்."
மதுராந்தகம். முதலாம் குலோத்துங்கனின் மூத்த மகன் பராந்தகத் தேவன் 7 ஆம் ஆட்சியாண்டு.
S.i.i. vol 5 no 991.
" திரு அயோத்திப் பெருமாள் கோவிலுக்கு திருவிடையாட்டமாக நிலம் அளித்தல்."
மதுராந்தகம்.
விக்ரமச்சோழன் 9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1127.
S.i.i. vol 7 no 479
" பெண் ஒருவர் திரு அயோத்தி பெருமாள் கோவில் திருவிழாவுக்கு நிலம் வழங்குதல் "
தஞ்சை.அம்மங்குடி.
இராஜராஜனின் 9 ஆம் ஆட்சியாண்டு. கி.பி.994.
Ins 238/ 1927.
" ஸ்ரீராமதேவ பெருமாள் கோவிலுக்கு நிவந்தம் "
சிறுதாவூர்.
முதலாம் இராஜராஜன்.
9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.995.
" பரசுராம விண்ணகர் ஆழ்வார் கோவிலில் திருப்பள்ளி எழுச்சி நிவந்தம் "
உத்ரமேரூர் வைகுந்த பெருமாள் மற்றும் சுந்தரவரதப்பெருமாள் கோவில் கல்வெட்டு.
பல்லவ, கன்னரத்தேவ, சோழர் கால கல்வெட்டுகள்.
இவ்வூரில் உள்ள குடியிருப்புகள் திருமாலின் அவதாரப் பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.
S.i.i.vol 6. 283 -325,
332 - 377.
" வாமனச்சேரி, கேசவச்சேரி, நாரயணச்சேரி, கோவிந்தசேரி , திரிவிக்ரமச்சேரி, பத்மனாபச்சேரி, மாதவச்சேரி, விஷ்ணுசேரி "
நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி .. தமிழ் வேதம் என்றழைக்கப்படுகிறது.
கேசவன் தமர் என்ற
7 வது பதிகத்தில் திருமாலின் 12 பெயர்கள் அந்தாதி பாடலாக இருக்கிறது.
இந்த 12 பெயர்களும் கல்வெட்டிலும் இடம் பெற்றுள்ளது. பாண்டிச்சேரி. திரிபுவணம். கல்வெட்டுகளில் நிவந்த தானம் பெறுபவர்களாக இந்த 12 பெயருடையவர்கள் இருந்துள்ளார்.
" கேசவா, நாரயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, ரிஷிகேசவா, ஸ்ரீதரா, பத்மநாபா, தாமோதரா "
நம்மாழ்வாரின் திருவாய்மொழி சோழர் காலத்தில் பெரும்பாலான பெருமாள் கோவில்களில் பாடப்பட்டது. கங்கை கொண்ட சோழனாம் இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் சிறப்பாகக் கூறப்படுகிறது.
முதலாம் இராஜேந்திரனின் எண்ணாயிரம் கல்வெட்டு.
Ep.in. vol 39 no 34.
" திருச்சென்னடைக்கும் திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்ய வேண்டும் நிபந்தங்களுக்கும் "
உத்ரமேரூர்.
இராஜேந்திரனின்
19 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1031.
Ins 176/ 1923.
" ஸ்ரீராகவத்தேவர்க்கு திருச்சென்னடைக்கும் திருவாய்மொழி பாடுவதற்கும் "
சிறுதாவூர்.
இரண்டாம் இராஜேந்திரன் கல்வெட்டு.
" பரசுராம விண்ணகர் ஆழ்வார் கோவிலில் வெண்ணை கூத்தாழ்வார் ( பாலகிருஷ்ணன்) படிமம் பிரதிட்டை செய்யப்பட்டது.
திருக்கோவிலூர்.
சோழக்கேரளின் மூன்றாம் ஆட்சியாண்டு.
" திருமங்கை ஆழ்வாரின் திருநடுந்தாண்டகம் விண்ணப்பம் செய்தல் "
ஸ்ரீரங்கம்.
முதலாம் குலோத்துங்கன்.
18 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1088.
S.i.i. vol 3 no 70
" திருவரங்கப் பெருமாள் முன்பு குலசேகர ஆழ்வாரின் தேட்டந்திறல் திருப்பதிகம் விண்ணப்பம் செய்தல் "
திருக்கோவிலூர்.
முதலாம் குலோத்துங்கனின்
25 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1095.
Ins 354/ 1921.
" ஆண்டாள் திருப்பாவை பதிகங்கள் வீண்ணப்பம் செய்தல் "
ஸ்ரீரங்கம்.
இரண்டாம் குலோத்துங்கன்.
9 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1142.
S.i.i.vol 24 No 138.
" சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் பெயரில் திருநந்தவனம் அமைக்கப்பட்டு திருவரங்கப் பெருமாளுக்கு திருப்பள்ளித் தாமம் எடுத்து விண்ணப்பம் செய்யவேண்டும் "
இரண்டாம் குலோத்துங்கனின் 2 ஆம் ஆட்சியாண்டு.
S.i.i.vol.7 no 477
" திரு அயோத்தி கருணாகரப் பெருமாளுக்கு நந்தா விளக்கெரிக்க நிவந்தம்."
சேரமாதேவி.
மாறவர்மன் விக்ரமபாண்டியன்.
8 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1189.
" ஸ்ரீவல்லப விண்ணகர் ஆழ்வார் கோவிலில் ஸ்ரீராமன், சீதா, இலக்குவன் திருமேனிகளை எடுத்து நிவந்தம் "
எண்ணாயிரம்.
இராஜேந்திரன்.
30 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1042.
Ins 341/ 1917.
ஸ்ரீராமரின் பிறந்த நட்சத்திரமான புணர்பூசம் நட்சத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது.
" ஸ்ரீகோவிலில் எழுந்தருளி நின்று திரு ஆராதணை கொண்டு அருளுகின்ற ஸ்ரீராகவச்
சக்கரவர்த்திகள் மாசி திருபுணர்பூசமும் "
வடமதுரை.
திருநல்லம்.
இராஜேந்தின்.
25 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி. 1037.
Ins 262. / 1953.
ஸ்ரீராமர், சீதா தேவிக்கு திருக்கல்யாணம் நடத்தி, சீதாதேவிக்கு திருமணச்சீராக இராஜேந்திரனே நிலதானம் செய்கிறார்.
ஒரு தந்தை ஸ்தானத்தில் இந்த சீரை வழங்குகிறார்.
" உடையார் இராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு 25 ஆவது ஜெயங்கொண்ட சோழமண்டலத்து பையூரிளங் கோட்டத்து ஜெயங்கொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து திரு அயோத்திச் சக்கரவர்த்திக்கு நம்பிராட்டியாரை எழுந்தருள்வித்து திருக்கல்யாணம் செய்து ஸ்ரீதனம் வைத்த நிலம். "
இன்னும்.. இன்னும்...
ஸ்ரீராமர் கோவில் பட்டியல் தொடர்கிறது.
பதிவின் நீளம் கருதி முடித்துக் கொள்வோம்.
Refrence ..
தமிழகத்தில் ராமர் கோவில்கள்.
குடந்தை சேதுராமன்.