தொல்காப்பிய நல்லறிஞர் கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களிடம் நான் பேராசிரியர்
அண்ணாமலை அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியையும், அதற்கு அவர் பகர்ந்த
விடையையும், நான் இட்டிருந்த மறுமொழியையும் சுட்டி அவருடைய
கருத்தை வேண்டினேன். அவர்களும் பேரன்புடன் உடனே தன் கருத்தை வெளியிட்டுள்ளார்.
என் நெஞ்சார்ந்த நன்றி கவிஞர் ஐயாவுக்கு.
இதனைப் பகிர ஐயா அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்கள்.
இதன் மறைமுகப் படியை பேராசிரியர் அண்ணாமலையாருக்கும், முனைவர் அண்ணா கண்ணனுக்கும்
கவிஞருக்கும் இணைக்கின்றேன் (ஏனெனில் தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை அவர்கள் தெரிவிக்க விரும்புவார்களா
மாட்டார்களா என்று அறியாததால் இப்படிச் செய்கின்றேன்).
அன்புடன்
செல்வா
________________________________________
மெய்யெழுத்து வந்தால், 'ஒரு', 'ஓர்' ஆவதற்கு மரபிலக்கண விதி உண்டு
(செ. சீனி நைனா முகம்மது)
"தமிழ் இலக்கணப்படி ஓர் அரசன், ஒரு மன்னன் என்றுதான் எழுதவேண்டுமா?" என்ற வினாவுக்கு 'வல்லமை' மின்னிதழில் இ. அண்ணாமலையாரின் விடை பொறுப்பற்றது; பழமைமீது வெறுப்பையும் மரபிலக்கணப் புலவர்பால் பழிப்பையும் காட்டுவது; தமிழின் இலக்கணச் செம்மையைக் கெடுப்பது.
"உயிரெழுத்தில் துவங்கும் பெயருக்குமுன் வரும் எண்ணுப்பெயரடை நெடிலிலும், மெய்யெழுத்தில் துவங்கும் பெயருக்குமுன் வரும் எண்ணுப்பெயரடை குறிலிலும் இருக்கவேண்டும் என்று எனக்குத் தெரிந்த வரை எந்த மரபிலக்கணத்திலும் விதி இல்லை" என்றும், "பழைய இலக்கண நூல்களில் இல்லாத ஒன்று" என்றும் இவர் கூறுவது உண்மைன்று.
பண்டை மரபிலக்கண நூல்கள் நுட்பமும் செறிவும் மிக்க நூற்பாக்களால் ஆனவை. அவை ஒவ்வொரு சிறு இலக்கணக் கூறையும் நேரடியாகக் கூறும் தொடக்கப் பாடங்கள் அல்ல. உரையான் கோடல் என்ற உத்தி அண்ணாமலையாருக்குத் தெரியாததும் அன்று. மேற்கூறிய வினாவுக்குத் தொல்காப்பியம் சார்ந்தே விளக்கமளிக்கலாம்.
"இக்காலத் தமிழ்ப்புலவர்கள் சிலர் நல்ல தமிழின் இலக்கணம் என்று தாங்களே கற்பித்துக்கொண்ட சில இலக்கணக் கொள்கைகளின் அடிப்படையில் புதிய இலக்கண விதிகள் கூறுகிறார்கள். ஒரு-ஓர் பயன்பாட்டு விதி இவற்றில் ஒன்று" என்கிறார் இவர்.
ஆனால், இவரும் இவரது மொழியியல் கூட்டாளிகளும் தாங்களே கற்பித்துக்கொண்ட புதுப்புதுக் கொள்கைகளைத் தமிழின் தலையில் நாள்தோறும் கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். மொழியியல் கல்வியின் பெயரால் இவர்கள் எடுத்துக்கொண்டிருக்கும் இந்த உரிமை, தமிழ் மரபிலக்கணப் புலவர்களுக்கு இல்லை என்று கூற இவர் யார்? இவர்களைவிடப் பன்மடங்கு உரிமை அவர்களுக்கு உண்டு.
தொல்காப்பியம் சார்ந்து விதிகள் கூறும் நன்னூல், உரையாசிரியர்கள் தங்கள் ஆய்வின்படி அளித்த விளக் கங்களின் அடிப்படையிலேயே சில புதிய கூறுகளைச் சேர்த்துள்ளது. அன்றைய உரையாசிரியர்களின் அந்தத் தகுதி இன்றைய புலவருள் யாருக்கும் இல்லை என்றும் ஆனால் மொழியியலாளருக்கு மட்டும் உண்டு என்றும் இவர் கருதுவது நகைப்புக்குரியது.
எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே
உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார்
(தொல். எழுத்து. 140)
எல்லாச் சொற்களும் உயிர்கள் வருமிடத்து உடம்படுமெய் கொள்ளுதலைத் தடுக்கமாட்டார்கள் என்றுதான் இந்த நூற்பாக் கூறுகிறது. உடம்படுமெய்கள் யாவை? எங்கே எது வரும் என்ற விளக்கம் இதிலில்லை.
இஈ ஐவழி யவ்வும் ஏனை
உயிர்வழி வவ்வும் ஏமுன்இவ் விருமையும்
உயிர்வரின் உடம்படு மெய்யென் றாகும்
(நன்னூல் 162)
இதன்படி, இ ஈ ஐ ஈறுகளுக்குமுன் வகரமும் மற்றவற்றுக்குமுன் ஐகாரமும் ஏகாரத்துக்குமுன் இவ் விரண்டும் வருமென்பது உரையாசிரியர்கள் ஆய்ந்தளித்த கருத்தும் மேலாய்ந்த நன்னூலாரின் கருத்துமேயாம்.
உயிர்கள் உடம்படுமெய் கொள்ளுவதைத் தடுக்கமாட் டார்கள் என்று தொல்காப்பியம் கூறுவதிலிருந்தே, உடம்படுமெய் வாராமலும் உயிரீறும் உயிர்முதலும் சந்திப்பதுண்டு என்பது தெளிவாகிறது.
உயிர்கள் அடுத்தடுத்து வந்து மயங்கமாட்டா என்பதை மொழியியல் தேர்ந்த அண்ணாமலையாருக்கு விளக்கத் தேவையில்லை. அவை மயங்க மாட்டாமையாலேயே இடையில் உடம்படுமெய் வருகிறது. இந் நிலையில் உடம்படுமெய் இன்றியே அவை சந்தித்தல் எங்ஙனம்?
இதற்குப் பல வழிகள் உள. ஒன்று விட்டிசைத்தல். விட்டிசைத்தலில் அவை தொடர்ந்து ஒலிப்பதில்லை என்பதால், தொடர்ந்து ஒலிக்கும் தொடர் பற்றிய விளக்கத்தில் அதை விட்டுவிடலாம். விட்டிசைக்காமலும் உடம்படுமெய் பெறாமலும் உயிர்கள் சேர்ந்திசைப்பதற்கு வேறு வழிகள் உள. அவற்றுள் ஒன்றுதான், ஒரு, இரு போன்ற சொற்களின் ஈற்றுகரம் கெடுதலும் முதல் நீளுதலுமாகிய உத்தி.
ஒரு + ஆயிரம் என்ற காட்டைக் காணலாம். "ஒரு ஆயிரம்பேர் இருப்பார்கள்" என்ற தொடரில் ஒரு என்பதன் பொருள்வேறு என்பது சரிதான். ஆனால், இந்தப் பொருளில் இத் தொடரை ஒலிக்கும்போது இச் சொற்கள் விட்டிசைக்கின்றன. ஒரு என்பது, ஒன்று என்று பொருள்படுமாறு இத் தொடரை உடம்படுமெய் இன்றியே சேர்த்திசைக்க வேண்டும் எனில், ஒரு என்பதை ஓர் என்று மாற்றலாம். எண்ணுப் பொருள் மாறாது; உடம்படுமெய் இல்லாமலும் விட்டிசைக்காமலும் சேர்த்திசைத்துவிடலாம். இதனைத் தொல்காப்பியம் எண்ணுப்பெயர்ப் புணர்ச்சி பற்றிய பகுதியில் பின்வருமாறு விளக்குகிறது:
முதலீர் எண்ணின்முன் உயிர்வரு காலைத்
தவலென மொழிப உகரக் கிளவி
முதனிலை நீடல் ஆவயி னான.
(தொல். எழுத்து. 455)
முதலிரண்டு (ஒரு, இரு) எண்களுக்குப்பின் உயிர் வந்தால் (நிலைமொழி ஈறான) உகரம் கெடும் என்றும் அத் தருணத்தில் அதன் முதலெழுத்து நீளும் என்றும் இந் நூற்பா மிகத் தெளிவாகக் கூறுகிறது. நூற்பாவின் தொடக்கத்திலேயே, 'முதலிரு என்ற சொல்', 'முதலீர்' என்று வந்து 'உடம்பொடு புணர்த்தல்' என்ற உத்திப் படி, நூற்பாவுக்கு எடுத்துக்காட்டை நூற்பாவிலேயே தருகிறது. இந் நிலையில், இது "பழைய இலக்கண நூல்களில் இல்லாத ஒன்று" என்று அண்ணாமலையார் கூறுவதை எப்படி ஏற்பது? இந்த நூற்பாவை அவர் அறியமாட்டாரா? அறிந்தும் மறந்தாரா? மறைக்கிறாரா?
எண்ணுப் பெயர்களுக்கு மட்டுமன்றிப் பண்புப்பெயர்களுக்கும் இரு வடிவங்கள் இருக்கலாம் என்று கூறும் அண்ணாமலையார், பண்புப் பெயர்களிலும் இத்தகைய புணர்ச்சிமுறை வருவது, மை ஒட்டு நீங்கியபின் அரு, பெரு, கரு என்றாகும் பெயர்களிலேதான் என்பதைக் கெட்டித்தனமாகக் கண்டுகொள்ளாமல் விடுகிறார்.
"பழைய இலக்கியத்தில் இந்த வேறுபாடு பெருவழக்காக இருக்கலாம்; அதேசமயம் மாறான வழக்கையும் பழைய இலக்கியத்தில் காணலாம்" என்கிறார். மாறான வழக்குக்கு இவர் காட்டுத் தந்திருக்க வேண்டும். அப்படி இவர் தரமுயன்றிருந்தால், நிலைமொழி ஓர், ஈர் என்றிருக்க அடுத்து மெய் வருவதைத்தான் காட்ட முடியும். வருமொழி முதலெழுத்து மெய்யாக இருக்கும் தொடர்களில் உயிரும் மெய்யுமே சந்திக்கின்றன. இங்கே மயங்குதல் மயங்காமை என்ற சிக்கலே இல்லை. எனவே செய்யுளோசை கருதி அவ்வாறு வருவதில் குற்றமுமில்லை. ஒரு + ஆயிரம் என்ற தொடரில் உயிரும் உயிரும் சந்திக்கின்றன. எனவே மயங்காத இவை மயங்குமாறு விதி வேண்டும். ஆனால், ஓர் + குடிசை என்ற தொடரில் உயிரும் மெய்யுமே சந்திக்கின்றன. இங்கே ஓசைத் தேவைக்கு ஏற்ப ஒரு குடிசை, ஓர் குடிசை என இருவிதமாகவும் எழுதலாம். ஒரு, ஓர் ஆகும் விதி, சேர்ந்திசைக்கும் இடத்தில் உயிர்கள் மயங்காத நிலையைத் தவிர்ப்பதற்கே என்பது இவருக்குப் புரியாதா என்ன?
அவற்றுள்
ரகார ழகாரம் குற்றொற் றாகா
(தொல். எழுத்து. 49)
இந்த நூற்பா, ர் ழ் இரண்டும் முதற்குறிலுக்கு அடுத்து வாரா என்று கூறுவதையும் இங்கே எண்ணுதல் வேண்டும். சிறுமை + இடை = சிற்றிடை ஆகும்போது, பெருமை + இடி = பெர்ரிடி ஆகாமல் பேரிடி ஆவதன் காரணமான ஒலியியல்பை இஃது உணர்த்துகிறது. கருவிழி - காரிருள், அருநிழல் - ஆருயிர் எழுகடல் - ஏழிசை என வரும் மாற்றங்களும் இதனால்தான்.
இறுதியாக, பண்புப்பெயருக்குப் பெரும், பெரி, பேர் என இவர் மூன்று வடிவங்கள் கூறுகிறார். இது மொழியியலாளர் புதுவிளக்கம். 'பெரும்' என்றொரு வடிவமில்லை. பெருமை என்பதில் மை ஒட்டு நீங்கியபின் 'பெரு' என்பதுதான் எஞ்சும். பெரும்படை என்பதிலுள்ள 'ம்', மாம்பழத்தில் உள்ள 'ம்' போல, இடையில் மெலிமிகுந்ததால் வந்தது. பெருமை + விழா, பெரும்விழா எனல் தவறு; பெருவிழா என்பதே சரி. படிமுறை வருமாறு:
பெருமை + விழா பெருமை + படை
> பெரு + விழா > பெரு + படை
= பெருவிழா > பெரு + ம் + படை
= பெரும்படை
கருவிழி என்பதுதான் தமிழ்வழக்கு. கரும்விழி அன்று. முப்பெரும்விழா தவறு; முப்பெருவிழா என்பதே சரி.
அடுத்து, அவர்கூறும் 'பெரி' என்ற வடிவமுமில்லை. பெரியப்பாவில் உள்ளது 'பெரி' என்றால், பெரியவீடு என்பதில் உள்ள பெரிய என்பதை எங்குச் சேர்ப்பது? பெருமை என்ற பண்புப்பெயரில், மை ஒட்டு நீங்கிய பின் அதில் அ என்ற பெயரெச்ச ஒட்டுச் சேர்ந்து, பெரு + அ = பெரிய ஆகிறது. பேர் என்பதும் இவ்வாறு பெருமையில் மை ஒட்டு நீங்கியபின் எஞ்சிய 'பெரு', உயிருக்குமுன் நீண்டதால் (பேர்) ஆனதுதான்.
எனவே, தமிழ் இலக்கண விதிப்படி ஒரு மன்னன் ஓர் அரசன் என்றே எழுதல் வேண்டும். செய்யுளில் ஓசை கருதி ஓர் மன்னன் என்று எழுதுதல் பிழையன்று. இதுவே தமிழின் இயல்பு.
அண்ணாமலையாரை மொழியியல் குழப்பியிருக்கலாம். அதற்காக அவர் தமிழையும் குழப்பமுயல்வது வீண்முயற்சி; வெல்லாது, பழிதான் எஞ்சும்.