சுவஸ்த்தி ஸ்ரீ சாலிவாகன சகாப்த்தா 1678 த் துபரி கலியாப்த்தா 4875 யிதின் மேல்செல்லா நின்ற தாது வறுஷம் புறட்டாசி மாதம் 7 நாள். தெசமி ஆதிவாரம் யிந்த சுபதினத்தில் ஸ்ரீ விற்த்தாசல யீசுபர சாமி உச்சி கால கட்டளை பூசைக்கி றாசஸ்ரீ வேங்கட்ட றாவு சீனிவாச சுபேதாற், பற்காணா விற்த்தாசல பஞ்சமால் வகேறா அவற்கள் உச்சிகால கட்டளைக்கி தான சாசனம் பண்ணிக்குடுத்துது. ஊத்தங்கால் சீமை காறசோடலில் அறவத்து னாலடி கோலால் சற்வமானியம் நஞ்சை குழி 50. யிந்த அன்ம்பது குழியும் தர்ம தெத்தமாயி சாமி பூசைக்கி குடுத்துயிருக்குரோம். யிந்த தற்ம்மத்துக்கு யாதாமுருவன் பிறாமணனாயி விகாதம் பண்ணினால் மத்திய பானம் பண்ணின பாவத்திலே போவார். சூத்திரனாயிருந்து விகாதம் பண்ணினால் கெங்கக் கறை[யிலே] காறாம் பசுவை கொன்ற தோஷத்திலே போவான். துலுக்கனாயிருந்து விகாதம் பண்ணினால் மக்காவுலே பண்ணி[யைக் கொ]ண்ண தோஷத்திலே போவான். யிந்த தற்ம்மத்துக்கு விகாதம் பண்ணாமல் உத்திகோத்தரா அபிவிற்ந்தியாயி நடப்பிக்குறவற்களுக்கு சகல சாம்பிறாச்சியமும் அஷ்ட்ட லெக்ஷ்சுமியும் உண்டாயி பூற்னாயிசும் சுகத்திலே யிருப்பார். யிந்தப்படிக்கி தற்ம்ம சாஸ்திரத்திலே சொல்லி யிருக்குது. யிந்தப்படிக்கி யெழுதிகுடுத்த தான சாசனம்.
இ > யி என்றும், ர > ற என்றும் பிழைபட எழுதப்பட்டுள்ளது.
ராஜஸ்ரி - அரசு அலுவலர் மதிப்படைச் சொல்; சுபேதார்- வருவாய்க் கோட்டத் தலைவர்; பர்காணா - வருவாய்க் கோட்டம்; விகாதம் - இடையூறு; உத்திகோத்திர - முன்னேற்ற; அபிவிருத்தி - மனநிலை; சாம்ராஜ்யம் - ஆட்சிநலம், அரசபோகம்.
விளக்கம்: தாது ஆண்டு புரட்டாசி மாதம் 7 ஆம் நாள் சக ஆண்டு 1678 இல் (1756, September 19) பத்தாவது சந்திர நாளான ஞாயிற்றுக்கிழமை நன்னாள் இந்த காகித ஆவணம் வெளியிடப்பட்டது. வெளியிட்ட காலத்தில் தஞ்சாவூர் மராட்டிய அரசிற்கு உட்பட்ட வருவாய்க் கோட்டமாக விருத்தாசலம் இருந்தது. கோட்டத்தின் வருவாய்த்துறை தலைவரான (இன்றைய மாவட்ட ஆட்சியருக்கு ஈடு) அரசத்திரு வேங்கட்ட ராவு சீனிவாசர், விருத்தாசலம் பஞ்சமால் குடும்பத்தை சேர்ந்தவர், ஈசுவர சாமி மட உச்சிக் கால பூசனைக்கு வேண்டி தான ஆவணம் எழுதிக் கொடுத்தார். அதில் அவர் ஊத்தங்காலில் அடங்கிய காரசோடலி கிராமத்தில் 64 அடி கோலால் அளந்து 50 குழி நிலம் கொடையளித்தார். இந்த அறக்கொடைக்கு பிராமணன் எவனாவது இடையூறு செய்தால் அவன் மது அருந்திய பாவத்தை அடைவான். சூத்திரனாகப் பட்டவன் இடையூறு செய்தால் கங்கைக் கரையில் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவான். இசுலாமியன் இடையூறு செய்தால் மக்காவில் பன்றியை கொன்ற குற்றத்தை அடைவான். இந்த அறத்திற்கு இடையூறு ஏற்படுத்தாமல் முன்னேற்ற மனநிலை கொள்பவர் எல்லா அரசபோகமும், எட்டு இலட்சுமிளின் அருளும் பெற்று முழு ஆயுள் பெற்ற நலத்தில் வாழ்வார் என்று அற நூலில் சொல்லி உள்ளது. இப்படியாக கொடை ஆவணம் எழுதினேன்.
சகாப்த்தா, கலியாப்த்தா ஆகிய சொற்களில் ஈறு தமிழ் போல அல்லாமல் மராத்தி போல எழுதப்பட்டு உள்ளது. தஞ்சையில் தெலுங்கு நாயக்கர் ஆட்சி ஏற்பட்ட பின் 16 ஆம் நூற்றாண்டில் ஆட்சியாளர் தம் நேரடி கல்வெட்டு, செப்பேடு ஆவணங்களில் மரியாதை குறைவாக சொல்லும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. தமிழ் வேந்தர் ஆட்சியில் கல்வெட்டில் பிராமணனை கொன்ற பாவம் அடைவார் என்ற வழக்கம் போய் நாயக்கர் ஆட்சியில் பிராமணனாரையே வசைபாடும் சொல்லாட்சி ஏற்பட்டுவிட்டது. அடுத்ததாக பிராமணர் அல்லாதாரை சூத்திரர் என்று விளிக்கும் இழிநிலையை காண முடிகிறது. தமிழ் வேந்தர் ஆட்சியின் போது இப்படியான சொல்லாடல் எந்த சாதியை குறிப்பிட்டு இடம்பெறவில்லை. இந்த சொல்லாடல் தஞ்சாவூர் பகுதியில் மட்டுமே மராத்தியர் ஆட்சிவரை வழங்கி வந்து பின்பு 19 ஆம் நூற்றாண்டில் பிற இடங்களுக்கும் பரவி இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. விஜயரகுநாத நாயக்கர் ஆட்சியில் 1614 இல் அவர் நேரடியாக வெளியிட்ட வல்லம் செப்பேட்டிலும் இப்படியான தரக்குறைவான சொல்லாட்சியை காணமுடிகிறது. அதே போல சேவப்ப நாயக்கன் தொடர்புள்ள கி.பி.1550 தஞ்சாவூர் இரயில் நிலைய வடக்கில் உள்ள மசூதி கல்வெட்டிலும் இப்படி சூத்திரன், துலுக்கன் என்ற சொல்லாட்சி கல்வெட்டில் பதிவாகியள்ளது. (காண்க ஆவணம் இதழ் 4, 1994, பக்கம் 103). ஆந்திரத்திலே 14 ஆம் நூற்றாண்டில் இசுலாமிய ஆட்சியை ஒழித்த நாயக்கர்கள் தம்மை சூத்திரர் என்று கூறி கல்வெட்டு பொறித்தனர் காரணம் ஆளும் அரசனே சூத்திரன் என்றால் அவனுக்கு கீழ்ப்பட்ட அத்தனை குடிகளும் சூத்திரர் தான் என்று எளிதில் அறிவித்து எல்லார் உடைமைகளையும் பறித்துவிடலாம் என்பதே. இந்த சூத்திரர் கருத்தை ஆந்திரத்தில் இருந்து படை எடுத்து வந்த தெலுங்கர் தமிழகத்திலும் செயல்படுத்த முற்பட்டதன் முதல் அடி (first step) தான் இந்த சூத்திரச் சொல்லாட்சி. அதிர்ஷ்ட வசமாக மராட்டியர் அந்த தஞ்சை நாயக்கர் ஆட்சியை ஒழித்தாலும் அந்த சொல்லாட்சி மராட்டியரிடம் ஒட்டிக்கொண்டதற்கு சான்று தான் இந்த காகித ஆவணம்.
தென்னாட்டு கோயிற் சாசனங்கள் பகுதி I, சாசனம் எண்: 96, பக்கம் 103 -104