"எங்களிடம் 76 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் ஏராளமான நடுகற்களும் உள்ளன. ஆனால், பெண்களைக் காப்பாற்றுவதற்காக எதிரிகளுடன் போராடி உயிர் நீத்த நபருக்காக வைக்கப்பட்ட இந்த நடுகல் முக்கியத்துவம் வாய்ந்தது" என்கிறார், இந்திய தொல்லியல் துறையின் (கல்வெட்டியல்) இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி.
தருமபுரி மாவட்டத்தில் நொளம்ப (Nolamba) மன்னர்களின் காலத்தில் நடப்பட்ட நடுகல் குறித்து இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
யார் இந்த நொளம்ப மன்னர்கள்? தருமபுரியில் அவர்கள் வைத்த நடுகல் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுவது ஏன்?
தருமபுரி மாவட்டம், அரூர் தாலுகாவில் அமைந்துள்ளது நவலை கிராமம். விவசாயம் மற்றும் கால்நடை மேய்ச்சல் பிரதானமாக உள்ள இந்த கிராமத்தின் வயல்வெளிகளில் சில நாட்களுக்கு முன்பு இரண்டு நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றில் ஒரு நடுகல்லில், "பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்" பற்றிய குறிப்புகள் இருந்ததாக, டிசம்பர் 15-ஆம் தேதி இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
'கன்னட மொழியில் இரண்டு நடுகற்கள்'
"கன்னட மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த நடுகற்கள் கி.பி. 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை" என, இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளது.
அதில், "நவிலூரு (நவலை கிராமத்தின் தொன்மைப் பெயர்) பகுதியை நொளம்ப மன்னர் ஆட்சி செய்த போது சத்ரியன் புலியண்ணாவின் மகன் பிரிதுவா என்ற வீரர், பெண்களை பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்கு எதிரி வீரர்களுடன் சண்டையிட்டு இறந்தார்," என எழுதப்பட்டுள்ளது.
கோவையைச் சேர்ந்த யாக்கை மரபு அறக்கட்டளையின் நிர்வாகிகள் மூலம் இந்த நடுகற்கள் தொல்லியல் துறைக்கு வந்ததாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி.