ஆன்மீகச் சொற்பொழிவும் குமுக வளர்ச்சியும்
முனைவர் இராம.கி.
சென்னை 600101
அண்மையில் 24/06/2015 அன்று எங்களூருக்கருகில் பள்ளத்தூர் சிவன்கோயிலின் 9ஆம் நாள் தேர்த்திருவிழா. ஏற்பாட்டாளரான அரு.இராம.அருண் சமூக வளர்ச்சிக்குப் பயனுறும் வகையிற் பேசும்படிக் கூறியிருந்தார். துடிப்பான இளைஞரும், தொழில்முனைப்பாளரும் (industrialist) ஆன அருண் கூப்பிட்டுப் போகாமலெப்படி? போயிருந்தேன். கணிசமான கூட்டம். நாட்டுப்புற ஊரில் அவ்வளவு சேர்ந்ததே மகிழ்ச்சிக்குரியது. மேடையின் பின்புலத்திற் பெரும்பதாகையில் ஆன்மீகச் சொற்பொழிவு என்றெழுதி, குமுகவளர்ச்சி உரையை நானாற்றுவதாகப் போட்டிருந்தார். சற்றதிர்ந்தேன். ஆன்மீகச் சொற்பொழிவு நானாற்றுவதாவது? எண்ணிப்பார்த்தேன். ”போராடிப் பார், ஆன்மா மகிழும்!” என்று பேச்சினூடே சொல்லப்போகிறோமே? அது ஆன்மீகமின்றி வேறென்ன? - என்ற எதிர்க்கேள்வியும் என்னுளெழுந்தது. படித்துப்பாருங்கள்.
காடுவெட்டிப் போட்டுக் கடிய நிலந்திருத்தி
வீடுகட்டிக்
கொண்டிருக்கும் வேள்வணிகர் வீடுகட்கு
அன்றைக்கு வந்தவெங்கள் அம்மா
இலக்குமியே
என்றைக்கும் நீங்கா திரு!
இந்த இனிய மாலைப்பொழுதில் இவ்வரங்கிற் கூடியிருக்கும் பள்ளத்தூர்வாழ் மக்களுக்கும் விழா அழைப்பாளருக்கும் முதற்கண் என் வணக்கம். சிவன்கோயிற் தேரையிழுத்து நிலைகொள்ளச் செய்த களைப்போடு எல்லோருங் கூடியுள்ள நிலையில், அடுத்த கோயில்நிகழ்ச்சி தொடங்குமுன் இடைப்பட்ட நேரத்தில், உங்களோடு செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்புத் தந்தமைக்கு என் நன்றிகள். நான் மேடைப் பேச்சாளன் அல்லன். ஏதோ எனக்குத் தோன்றிய சில கருத்துக்களை உங்கள்முன் சொல்ல முயல்கிறேன்.
இந்த அரங்கில் ”குமுகவளர்ச்சி” பற்றிப் பேசுவதாக விழா ஏற்பாட்டாளரிடஞ் சொல்லியிருந்தேன். என்னை அறிமுகப்படுத்தியவர் என் தொழில்முறை விவரங்களையும், ஓய்வுநேரத் தமிழ்ப் பணிகளையும் எடுத்துரைத்தார். அது ஒருபக்கம் இருக்கட்டும். அடிப்படையில் நான் உங்களுக்குத் தெற்கேயுள்ள பக்கத்தூர்க்காரன். கண்டனூரான். கண்டனென்பது சோழ அரசர்குலத்தின் பட்டப்பெயர். சோழன் இராசராசனின் பெரியதகப்பன் கண்டராதித்தன் சாக்கோட்டைக் காடுகளுக்கு வேட்டையாட வந்தபோது அருள்மிகு வீரசேகரர் திருமேனியைக் கண்டெடுத்தான். அதன்பின் ஒப்பற்ற கோயிலையும் அங்கு கட்டினான். நம் பக்கத்திற் சாக்கோட்டைக் கோயிலே மிகுந்த பழமைவாய்ந்ததும் பெயர்பெற்றதுமாகும். சிவகங்கை சமத்தானக் கோயிலுங் கூட. கண்டராதித்த சோழனின் வேட்டைப் படைகள் தண்டுகொண்டு தாவளித்த இடந்தான் கண்டன் ஊராயிற்று.
கிட்டத்தட்ட கி.பி. 600 களில் சோழநாட்டிலிருந்து பெயர்ந்து இளையாற்றங்குடிக்கு வந்த நகரத்தார் பாண்டிய அரசாணையால் 9 ஊர்களிற் குடியேறிக் கொஞ்சங் கொஞ்சமாய் வளர்ந்து பரந்து விரிந்த 96 ஊர்களிற் கணிசமான புள்ளிகளைக் கொண்ட கண்டனூரும் ஒன்றாகும். காலவளர்ச்சியில் பல்வேறு உச்சங்களை எங்களூர் கண்டிருக்கிறது. ”இமயத்தின் எல்லைகண்ட எந்தமிழ் என்றும்வாழ்க” என்ற சொலவத்தை சுற்றுப்பக்கமெல்லாம் ஆரவாரத்தோடு பரப்பியவூர் கண்டனூராகும். தைமாசம் பழனியாத்திரை போவோருக்குக் கண்டனூர்ப்பெருமையும் முகன்மையும் நன்றாகத் தெரியும். கண்டனூர்க் கோயிற்சிறப்பென்றால் அதன் கட்டுமானத்தையும், கார்த்திகை மாசக் கடைசிச் சோமவாரத்தையும், தெய்வானை கல்யாணத்தையும், விசயதசமிக்கு அம்புபோடும் கோலாகலத்தையும், செல்லாயி அம்மன் தேர்த்திருவிழாவையும் சொல்லலாம். கூடவே எங்கள் வையைக்காடு பற்றிச் சொல்லலாம். மருதுபாண்டியரைப் பிடிப்பதற்காக ஆங்கிலேயக் கிழக்கிந்திய கும்பணிக் கர்னல் அக்னியூ காளையார்கோயிலிருந்து எங்கூர்வரை பரந்துகிடந்த பெருங்காட்டை அழித்தபோது. அங்குமிங்கும் மிஞ்சிய சில காட்டுப்பகுதிகளில் ஒருபகுதி தான் எங்கள் வையைக்காடு. கண்டனூருக்கும் காட்டிற்கும் அப்படியோர் ஆழ்ந்த உறவுண்டு.
உங்கள் பள்ளத்தூர் எங்கள் ஊரைவிடப் பெரியது. சென்ற 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின் ஏறத்தாழ 10000 பேருக்குமேல் இங்கிருக்கிறீர்கள். நாங்கள் 8000 க்கு அருகிற்றான் தேருவோம். இரண்டு ஊர்களிலுமே பெண்கள் ஆண்களை விட சற்றுக் கூடுதற் தொகையிலிருக்கிறார். பள்ளத்தூரென்றாலே, சமதளமன்றிச் சாய்ந்துகிடக்கும் புவிமட்டமும், (ஆங்கிலத்திற் சொல்வாரே terraced என்பது போல்) பாத்திகட்டித் தளம்போட்டு, ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் சரிந்துசெல்லும் வீதிகளும், சோலையாண்டவர் கோயிலும், ஆண்பெண் இருவரிற் கணிசமானவர்க்கு அமையும் சோலையெனும் பெயரும், சீதையாச்சி மகளிர் கல்லூரியின் சிறப்பும், திரைப்பட நகைச்சுவை நடிகை மனோரமாவின் பின்புலமும், சூரியத் தொலைக்காட்சியின் நாதசுவர நெடுந்தொடரின் உருவாக்கமும் எனப் பல நினைவுகள் எழும். எனக்குத் தெரியாத, இன்னுஞ்சில விதப்பான பெருமைகளும் சிறப்புக்களும் உங்களூருக்கு இருக்கும். அவற்றை எல்லாம் தெரிந்துகொள்வது முகன்மையெனினும் இந்தவூர் மக்களின் உன்னத உழைப்பிற்கும் குமுக வளர்ச்சிக்கும் கட்டியங்கூறும்படி சென்றவாண்டு நடந்த வேளாண் செய்தியொன்றை இங்கு சொல்வதே சிறப்பென்று தோன்றுகிறது. அதற்கு முன்னால் சிவகங்கை மாவட்டத்து இயற்கைச் சூழலையும், ஒரு வரலாற்றைச் செய்தியையும் சொல்லவேண்டும்.
குமிந்துகூடிச் சேர்ந்துவாழும் மக்கள்கூட்டத்தையே குமுகமென்று சொல்கிறோம். குமுகமென்பதை வடமொழி உச்சரிப்போடு சமூகமென்று சொல்லியே நாமெல்லாம் பழகிவிட்டோம். ஆங்கிலத்தில் இதை society என்பார். "People bound by neighborhood and intercourse aware of living together in an ordered community" ஆகக் குமுகமென்பது வெறுங் கும்பலல்ல. பல்வேறு வகைப்பட்ட மக்கள் ஓரிடத்திற் சேர்ந்து குடியிருந்து, கட்டொழுங்கோடு வாழும் அமைப்பாகி, ஒருவருக்கொருவர் இணங்கி, எல்லோருக்கும் நலனும் வளர்ச்சியும் ஏற்படும்வகையில் உறவாடிக் கொள்வதே குமுகமாகும். இக் குமுக உறுப்பினருக்குத் தனிப்பொறுப்புக்களும், குடும்பப் பொறுப்புக்களும், குழுப்பொறுப்புகளும் இருப்பது போலவே குமுகப் பொறுப்புகளும் உண்டு.
நம் ஊர்கள் பாலைத்திணையைச் சேர்ந்தவை. (உங்களுக்குத் தெற்கே கண்டனூருக்கு வடக்கேயுள்ளது பாலையப்பட்டியாகும்.) ஏதோ சவுதி அரேபியாபோல் எங்கு பார்க்கினும் மணலும், மணல்சார்ந்த விளையுளும் இருப்பதே பாலையென்று எண்ணிவிடக்கூடாது. பாலை நிலத்திற்கு சிலம்பின் ஆசிரியர் ஒரு வரையறை சொல்வார்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையிற்
திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்த்ப்
பாலை என்பதோர் வடிவம்
கொள்ளும்
- சிலப்பதிகாரம் 11: 60-7
பாலை என்பது முல்லைநிலமும் குறிஞ்சிநிலமும் தம் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கவைக்கும் துயருறுத்துவதாய் வடிவங்கொள்ளும். அதற்குப் பெயரே பாலையாகும். அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்து நிலங்களெல்லாம் முல்லை நிலங்களே. காடும் காடுசார்ந்த நிலமும் முல்லையென்பர். மழைவாராது வெந்துபோனால் இம்முல்லைநிலங்கள் பாலையாகும். எங்கள் வையைக்காடு பற்றிச் சொன்ன காரணம் இப்பொழுது புரிகிறதா? உங்கள் ஊரிலும் அப்படியோர் காடு உறுதியாய் இருந்திருக்கும். அது எங்கே போனதென்று ஓர்ந்துபார்த்தீர்களா?
நான் சொல்லப்போகும் பழஞ்செய்தியை எத்தனை இளையர் அறிவரென்று தெரியவில்லை. 1954 இல் பெரும்புயலொன்று தமிழ்நாட்டைத் தாக்கியது. பழைய இராமநாதபுரஞ் சேர்ந்த பல மாவட்டங்களையும் அது சேதப்படுத்தியது. கண்மாய்கள், வயல்கள், நிலபுலன்கள், சாலைகள், வரப்புக்கள், வீடுகள், மரங்கள் எனவேற்பட்ட சேதம் கணக்கற்றது. அப் புயலுக்கப்புறம் ஓரிரண்டு ஆண்டுகள் கோடை வாட்டிவறுத்தி, நிலம் முற்றிலும் வரண்டுபோனது. நீர்வளங் குறைந்ததால் நிலத்தடிநீரை எப்படி மேலே கொண்டுவருவதென அரசியலாரும் அரசதிகாரிகளும் யோசித்தார். அன்றிருந்த முதலமைச்சர் காமராசருக்கு யாரோ தவறான யோசனைகளை அவக்கரத்திற் சொல்லியிருக்கிறார். மேற்கு ஆசுத்திரேலியாவிலிருந்து ஜூலிஃப்ளோரா கன்றுகளையும் யூகலிப்டசு கன்றுகளையும் கொண்டுவந்து இங்குநட்டால் அவை மரமாய்வளர்ந்து நிலத்தடிநீரை மேலே கொண்டுவந்துவிடுமெனச் சொல்லியிருக்கிறார். ”படித்த அறிவாளிகள் சொல்கிறார்; உண்மையாய்த் தானிருக்கும்; செய்துபார்ப்போமே?” என்று படிக்காதமேதையும் நம்பினார். விளைந்தது நாட்பட்ட ”விபரீதம்”. இந்தியாவெங்கும் இரு மரங்களும் ”அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த மூர்த்தியாகிப்” பரவி வேறெந்த மரங்களையும் வளரவிடாது விரவிக் கிடக்கின்றன. நம் இயற்கை வளத்தை ஒட்டுமொத்தமாய் அழித்ததில் இவ்விரு மரங்களுக்கும் பெரும்பங்குண்டு. (நம்மூர்க் கருவேலத்திற்கு மாறுபட்டு, சீமைக்கருவேலம், வேலிக்கருவை, வேலிகாத்தான் என்றெல்லாம் அழைக்கப்படும் இம்மரத்தின் ஆங்கிலப்பெயர்கேட்டு மயங்கிவிடுவோம். ஜூலிஃப்ளோரா.)
என்னவொரு கொடுமை தெரியுமோ? இம்மரத்தின் வேர் நிலத்தடிநீரை உறிஞ்சம்; ஆனால் தனக்கு மட்டுமே உறிஞ்சும். இம்மரம் விளையுமிடத்தில் வேறொன்றையும் வளரவிடாது. அதே போலத்தான் யூகலிப்டசு மரமும். (நம் பக்கம் இதை ஆர்.எஸ்.பதி மரம் என்பார்). நம்மூரின் இயல்மரங்களான அரசு, அழிஞ்சில், ஆச்சா, ஆத்தி, ஆல், இலந்தை, இலவு, இலுப்பை, ஏழிலைப்பாலை, ஒதியம், கருங்காலி, கல்யாணமுருக்கு, கொன்றை, கோங்கு, சந்தனம், சீதா, செஞ்சந்தனம், தில்லை, தேக்கு, தேற்றான்கொட்டை, நாவல், நுணா, நெல்லி, நொச்சி, பவளமல்லி, பாதிரி, புங்கம், புளி, புன்னை, பூவரசு, மகிழம், மரா, முள்முருக்கு, வன்னி, வாகை, வில்வம், வெள்நாகு, வேங்கை போன்ற எத்தனையோ மரங்கள் அருகிவிட்டன இல்லெனில் அழிந்துவிட்டன. நம் சிறாரும் இவற்றைப் பார்த்ததுமில்லை; அறிந்ததுமில்லை. நம் இயற்கை தெரியாமல் வளர்கிறார். அவருக்குப் பள்ளிக்கூடத்தில் பைன், செடார் என்று ஏதேதோ வேற்றுநாட்டு மரங்களைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறோம். இங்கோ எங்குபார்த்தாலும் வேலிக்கருவையும், யூகலிப்டசும் நீக்கமற நிறைந்து கிடக்கின்றன. நாட்டின் அழகைச் சிதைப்பது மட்டுமல்லாது நம் இயற்கை வளங்களும் இவற்றால் அழிகின்றன.
இதேநிலை இனியுந் தொடர்ந்தால், நம் நாடு நிலத்தடி நீர்வளத்தை வெகுசீக்கிரம் இழக்கும்.
முல்லையும் மருதமும் முறைமையில் திரிந்து
சரளையும்
மேடும் மணலொடு புணர்ந்து
வேலிக் கருவை கோரைப் புல்லோடுப்
போலிகை நிலமாய்
புறத்தினிற் காட்டி
எங்கு பார்த்தாலும் மணல் பாய்ந்துகிடக்கும் மேற்கு ஆசுத்திரேலியா போல நம் நாடு ஆகும் நிலை வெகுதொலைவிலில்லை.
இந்த வேலிக்கருவையாற்றான் நம்மூர்க் கண்மாய்களுக்கு நீர்வரத்துள்ள கால்கள் அடைபட்டுப் போயின. கண்டதேவிக் கோயிற்குளம் தவிர வேறெந்தக் குளமாவது நம் பக்கத்தில் நிறைந்து பார்த்திருக்கிறீர்களா? சற்று எண்ணிப்பாருங்கள். எப்பொழுது நம் ஊர்க்கண்மாய்கள் நிறையவில்லையோ, அப்புறம் நம்வீட்டுக் கிணறுகளிலும், கேணிகளிலும் நீருற்றுக்கள் தூர்ந்துதான் போகும். 30-80 அடிவரை இருக்கும் நிலத்தடி நீர்ப்படுகை வற்றிப்போனால் பின் புரைக்கிணறுகளில் (borewells) தான் நாம் உயிர்பிழைக்கவேண்டும். அதன் ஆழம் 120 அடிகளிலிருந்து 250 அடிவரை போகும். இப்பொழுதெல்லாம் புரைக்கிணறுகளை 220 அடிகளுக்குத் தோண்டுகிறார்கள். ஒவ்வொரு புரைக்கிணற்றுக்கும் ஆகுஞ்செலவு 1-1¼ இலட்சமாகும். எத்தனை பேரால் இது முடிகிறது? தண்ணீருக்கு அலையும் பிழைப்பு நம்மூர்களில் இப்பொழுதே வந்துவிட்டது. வீடுகளின் வெளிச்சுவர்களில் மூன்று நீர்க்குழாய்கள் வைத்து ஓரிரு மணிநேரம் தண்ணீர் அளித்தாலே அது பெரும் தருமம் என்றாகிவிட்டது.
கண்டனூரிற் சிச்சிறிதாய் எல்லா வீட்டாரும் புரைக்கிணறுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். பழைய கிணறுகளிற் சேறுகூட மிஞ்சவில்லை. தரைதட்டிப் போயிற்று. எப்பொழுது கண்டனூரார் வையைக்கரைக் கண்மாய் நிறையாது போனதைக் கவனிக்கவிலையோ, அப்பொழுதே அக் குமுகம் தடுமாறிப் போனது. அதே நிலைதான் பள்ளத்தூருக்கும். இங்கும் உங்கள் கண்மாய் நிறைந்து பலவாண்டுகள் ஆகிவிட்டன என்று கேள்விப்படுகிறேன். இந்நிலையிற்றான், ”போராடிப் பார், ஆன்மா மகிழும்!” என்று தலைப்பிட்ட செய்தியைப் படித்தேன். அசந்துபோனேன். எப்பேர்ப்பட்ட நல்ல பொதிவான செய்தி தெரியுமா? நீங்கள் உங்கள் ஊரிற் சாதித்திருக்கிறீர்கள். அதைத்தான் இந்தப் பேச்சினூடே உங்களோடு பகிர்ந்துகொள்ள நினைத்தேன். இதைப் பல செய்தித்தாள்களிலும், வலைத்தளங்களிலும் அறிந்தேன்.
------------------------------------------------
சீமை கருவேலமரங்களை அழித்து 110 ஏக்கரில் விவசாயம் நடைபெறுகிறது. மகிழ்கிறது மனம்!
விவசாயத்திற்கு மீண்டும் புத்துயிர் அளித்த பள்ளத்தூர் விவசாயிகளுக்கு ஒரு ராயல் சல்யூட்…!
வெளிநாட்டு மோகத்தை விடுத்துப் பல ஆண்டுகளாக சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தைச் சீரமைத்து, விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர் பள்ளத்தூர் விவசாயிகள். போதிய மழையின்மை, ஆர்வம் குறைந்ததால், கடந்த 15 ஆண்டுகளாக விவசாயம் படிப்படியாக குறைந்துவருகிறது. செல்வத்துக்காகக் கடல்கடந்து போய் வேலைசெய்து, குடும்பத்தினரை அவ்வப்போது சந்திக்க முடியாமல், நல்லதுகெட்டதுக்கு வரமுடியாமல் தவிப்பவர் ஏராளமானோர். இந்நிலை என்று மாறுமோ? - என்றேங்கித் தவிக்கும் சமுதாயத்துக்கு மத்தியில் ”நாங்கள் மாறியுள்ளோம்” எனக் கூறுகின்றனர் பள்ளத்தூர் விவசாயிகள்.
காரைக்குடிக்கு அருகே பள்ளத்தூர் பெரிய கண்மாய் மூலம் முப்போகம் விளைந்த 140 ஏக்கர் நிலத்திற் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாகச் சீமைக்கருவேல மரங்கள் மண்டிக்கிடந்தன. ”யார் சீரமைப்பார்?” - என்று ஏங்கியிருந்த நேரத்தில் ”முயற்சிசெய்து பார்ப்போம், முப்போகம் விளைந்த இடத்தில் ஒரு போகமாவது விளையவைப்போம்” என வெளிநாட்டிலிருந்து வந்த முன்னாள் விவசாயிகளும், பல்வேறு வேலைக்கு சென்ற இந்நாள் விவசாயிகளும் முயன்றனர். ஊரும் இவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தது. 100-க்கும் மேற்பட்டோருக்கு பாத்தியப்பட்ட இடத்தைச் சுற்றிலும் ரூ.8 லட்சம் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டது. சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு தற்போது 110 ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ”அடுத்த ஆண்டு 140 ஏக்கர் விவசாயம் செய்துகாட்டுவோம்” என்கின்றனர் இவ்வூர் விவசாயிகள்.
இனி அடுத்தடுத்து மற்ற ஊராரும் பள்ளத்தூர் விவசாயிகளைப் பார்த்து விவசாயத்திற்கு மாறுவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை…!!! ஆனால், இம்மாற்றத்திற்குப் பள்ளத்தூர் விவசாயிகள்தான் முன்னோடிகளாக விளங்குவார்கள்..!!! உங்கள்பாதம் பணிந்த எங்களின் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! விவசாயக் குடிமக்களே…..!!!
– சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்
----------------------------------------------------------
சீமைக் கருவேல மர ஒழிப்பு இயக்கமென்னும் இச்சிந்தனை சிவகங்கை மாவட்டமெங்கும் பரவ வேண்டும். ஆர்.எஸ்.பதி. மரங்களும் தவிர்க்கப்படவேண்டும். இங்கிருக்கும் பெருஞ்செல்வந்தர் இதற்கு உதவவேண்டும். பள்ளத்தூரைச் சுற்றிலும் இம் மரங்களைப் பிடுங்கியெறியுங்கள். மாறாக நம்மூர் மரங்களை நடுங்கள். ஊரெங்கும் மழைநீர் சேகரிப்பைக் கூட்டுங்கள். கண்மாய்க்கு நீர்வருங் கால்களைத் தூர்வாருங்கள். ஊர்க் கண்மாய்களை நிறைத்துப்பாருங்கள் உங்கள் கேணிகளிற் கொஞ்சங் கொஞ்சமாய் நீர் ஊறத் தொடங்கும்.
”மழைநீர் சேகரிப்பின் தேவை” என்ற தலைப்பில். அக் 23 2014 இல் தினமலரில் ஒரு செய்தி வெளியானது. “காரைக்குடி: நெற்பயிர் நீரில் மூழ்கும் அளவு, கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்தும் வரத்து கால்வாய் அடைப்பால் பள்ளத்தூர் கண்மாய் புல் வெளியாகவே காட்சி அளிக்கிறது.” இதுபோன்ற செய்திகள் இனியும் வாராதிருக்கக் கண்மாய்களுக்கு நீர்வரும் வழியைக் கண்டறிந்து நீர்வரத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சுற்றுச்சூழல் மாறுவதைப் பற்றிப் பேசுகையில் சூடு, ஈரப்பதம், காற்று, நிழல்தருஞ் சூழல் ஆகியவை பற்றியும் பேசவேண்டும். நம் ஊர்களின் சூடு ஓரளவாவது குறையவேண்டுமெனில், ஈரப்பதம் கூடவேண்டுமெனில் நம்மூர்ப்பக்கம் மரபுசார்ந்த மரங்களை நடவேண்டும். மண்ணில் ஈரம் இருந்துகொண்டேயிருக்கவேண்டும். மாற்றூர்க் கோயிலில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒருமரம் நட்டுக் காட்சிசெய்திருப்பார்கள். அதை மாதிரியாகக்கொண்டு, ஒவ்வொரு நட்சத்திரத்திற் பிறந்தோரும், அந்நட்சத்திரத்திற்கொப்ப 10 மரங்களாவது நட்டுப் பராமரிக்கலாம். ஒரு குமுகத்தின் நிலத்தில் 33 விழுக்காடாவது மரம் நிறைந்த பகுதிகளாய் ஆகவேண்டுமென்று அறிவியலாளர் சொல்கிறார். மொத்தத்தில் நம்மூரின் பழைய முல்லைத்தோற்றம் இங்கு திரும்பி வரவேண்டும்.
அது மட்டுமல்ல. நம்மூர்களில் மாலைநேரத்தைக் குடும்பத்தோடு களிக்க பச்சைப் பசுமையான சோலைகளே இல்லாதிருக்கின்றன. சோலையாண்டவர் கோயிலைச் சுற்றி ஒரு சோலையுண்டா? அந்தக்காலத்தில் ஐயனார் கோயில்களும் அம்மன் கோயில்களும் பெரும்பாலும் அடர்ந்த காவிற்குள்ளேயே இருந்தன. இன்று அப்படியிருக்கின்றனவா? கேரளத்தில் இன்றுகூட பல நாட்டார் கோயில்கள் காவிற்குள் தான் இருக்கின்றன. நம்மூர்களில் ஒவ்வொரு கோயிலுக்கும் தலமரம் என்றவொன்று உண்டு. அந்தத் தலமரங்கள் நிறைந்த சோலையைக் கோயிலையொட்டி நிறுவுகிறோமா? ஆழ்ந்து ஓர்ந்து பார்த்தால், ஊருக்கு 2 பூங்காக்களாவது நமக்குத் தேவை. (காரைக்குடியில் புதுப் பேருந்துநிலையத்திற்கு அருகிலுள்ள பூங்காவிற்கு எத்தனைபேர் வருகிறாரென்று கவனித்திருக்கிறீர்களா? 5 உருபாய் கட்டணமென்றாலும் கூட்டம் விடாது போகிறது. அந்தப் பூங்கா நமக்கெல்லாம் ஒரு மாதிரிப் பூங்காபோல் ஆகவேண்டும். அந்நகருக்கே கூட இன்னும் 10 பூங்காக்கள் வேண்டும்.)
நம் ஊர்களில் கோயிலை விட்டால் பொதுவிற் புழங்கும் இடங்களேயில்லை. அப்படியிருப்பது சரியில்லை. குறைந்தது இரு பூங்காக்களும் ஒரு விளையாட்டு மைதானமும், ஒரு வாசகசாலையும் நமக்கு வேண்டும். இப்பொழுது பல ஊர்களில் இவை பராமரிப்பின்றிக் காணாமற் போயின. நம் மக்களெல்லோரும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவமிருந்து நெடுந்தொடர்களைப் பார்த்துக் குடியிருக்கத் தொடங்கிவிட்டார். நாம் வாழும் ஊரிற் பிள்ளைகளுக்குக் கலைகளைச் சொல்லிக் கொடுக்கும் பயிலகம் இருக்கவேண்டாமா? 1970கள் வரை இவையெல்லாம் நம் ஊர்களில் இருந்தன. இப்பொழுதோ எல்லாம் நிலைகுலைந்துபோயின.
ஊருக்குள் இருக்குஞ் சாலைகளை உருப்படியாகப் புதுப்பிக்கமாட்டேம் என்கிறோம். கோயில்களை நெருங்கும் இடங்களில், கோயில்வாசல்களிற் செங்கல்களைப் பதியமாட்டேம் என்கிறோம். சாலைகளின் இருமருங்கும் நிழல்தரும் மரங்களை நடமாட்டேம் என்கிறோம். பெரும்பாலான பேருந்து நிறுத்தங்கள் நிழல்தரும்படி புதுப்பிக்கப்படவில்லை. எங்கு பார்த்தாலும், “மாடுவந்தது, கட்டினாற் கட்டிக்கொள்; கட்டிக்காவிட்டாற் போ” என்ற அசமந்தமும் அலட்சியமும் இருந்தாலெப்படி?
மேலே கூறிய இந்த உள்கட்டுமானங்களை எல்லாம் நாம் சரிசெய்யவில்லையென்றால், நிலத்தடி நீர் கிடைப்பதிற் சிக்கல் ஏற்படுமென்றால், நம் ஊர்ப்பக்கங்களில் ஏற்படும் வீட்டுமனைத் தேவைகள் வெடித்துச் சிதறும் குமிழ்போல ஆவது வெகுதொலைவில் இல்லை. இப்பொழுது நம் ஊர்கள் சற்று தகைவோடு (stress) தான் உள்ளன. நம் ஊர்ப்பக்கங்களில் பொதுவாகவுள்ள பொருளியல் உந்துகளைச் சற்று எண்ணிப்பார்ப்போமா? இவற்றில் நிறைகளும் இருக்கின்றன; குறைகளும் இருக்கின்றன. முதலில் நிறைகள்:
· சுற்றுவட்டாரத்திலுள்ளோர் தேடிவந்து வாங்கும் நிலைவெள்ளிப் பாத்திரங்களின் கணிசமான உருவாக்கமும் விற்பனையும்
· அதே போல வைர, தங்க நகைகளின் உருவாக்கமும், விற்பனையும்,
· செட்டிநாட்டு பருத்திச் சேலைகள் கொஞ்சங்கொஞ்சமாய் பெயர்பெறுகின்றன.
· மரபுசார் சுற்றுலா முயற்சிகள் இப்பொழுது தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. அதையொட்டி நட்சத்திரத் தங்கும் விடுதிகள் இங்கு எழும்பியுள்ளன. சுற்றுவட்டாரத்தில் 100 கி.மீ. தொலைவிலுள்ள இடங்களை இங்கு தங்கியிருந்து பார்த்துவரும் முறைமை ஏற்பட்டிருக்கிறது.
· நம் மரபுசார்ந்த வீடுகளை வைத்துத் திரைப்படம், நெடுந்தொடர், விளம்பரம் சார்பான வளர்ச்சிகள் புதிதாக வேர்விடத் தொடங்கியுள்ளன.
· அக்கம்பக்கத்திலுள்ளோர் காரைக்குடியை மையமாக்கி வாழத்தொடங்கும் முன்முனைப்பு நம் பார்வைகளை மாற்றியிருக்கிறது. ”காரைக்குடி ஒரு மையம், நாம் அதன் துணைக் குடியிருப்புக்கள்” என்ற எண்ணம் பலருக்கும் அரும்பியிருக்கிறது.
· புதுவயல், கல்லூர், கண்டனூர், பள்ளத்தூர் பக்கமிருக்கும் 250க்கும் எண்ணிக்கையிற் கூடிய அரிசியாலைகளின் தாக்கம் அரிசிவணிகத்தில் பெரிதாக இருக்கிறது. இந்தியாவின் அரிசிவிலையை நிர்ணயிப்பது இந்த ஊர்களே. இப்பொழுது கோதுமை போன்ற கூலங்களுக்கும் அந்தத் தாக்கம் நகர்கிறது.
· இரண்டே மணிநேரத்தில் மதுரை, திருச்சி என்னும் இருபெரும் நகரங்களை இணைக்கும் இயலுமையும், நாலொழுங்கைச் சாலையும் (four-lane road) logistics என்னும் இலக்கிப்புத் துறையில் புதுவேகம் பாய்ச்சியிருக்கிறது.
மேலேசொன்ன எல்லாமே குமுகவளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன. ஆனால் வளர்ச்சியைக் குறைக்கும் சில நடப்புகளையும் இங்கு சொல்லத்தான் வேண்டும்.
· மருத்துவ வசதிக்குறைவு (நல்ல விதப்பியல் மருத்துவர்கள் இங்கு இல்லை; இன்னும் முழு ஏந்துகளோடு கூடிய மருத்துவமனையில்லை. ஏதாவது மருத்துவ அவக்கரம் ஏற்பட்டால், இப்பொழுதும் திருச்சிக்கோ, மதுரைக்கோ ஓடவேண்டியுள்ளது.)
· பேருந்து, தொடரி (train) போன்றவற்றில் இப்போதிருக்கும் தேக்கம். (இரண்டையும் பிணைக்கும் முயற்சிகளும் நடைபெறவில்லை.)
· மதுரைக்குத் தொடரி இணைப்பு இல்லாதது ஒரு பெருங்குறையே. (காரைக்குடியின் ஒரு காலைக் கட்டிப்போட்டது போற்றான் இது ஆகிறது.)
· மாலை நேரங்களில் கோயிலைத் தவிர்த்துப் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாமை.
· பேர்பெற்ற பள்ளிக்கூடங்கள் இன்னும் ஏற்படாமை. (நம்மூர்ப் பள்ளிக்கூடங்கள் ஆசிரியர்கள், நூலகம், காட்சியகங்கள், சோதனைச்சாலைகள், போட்டிகள், மைதானங்கள் எனப் பலவிதங்களிற் பின்தங்கியுள்ளன. அவற்றை மேலோங்கச் செய்வதற்கு நிறுவனர்களும் முயலவில்லை. மற்ற ஆர்வலரும் முன்வரவில்லை.)
· வாய்ப்புக் கருதி இங்குள்ளோர் சென்னை, கோவை, திருச்சி, மதுரை என்று பெருநகரங்களுக்குப் பிழைப்புக் கருதிப் போய்விடுவதால், இங்கு அகவை முதிர்ந்தோரே தங்கிப் போகிறார். கல்லூரி முடித்த இளைஞரெல்லாம் கடைசித்தேர்வு முடிந்தமறுநாளே பெட்டியைக் கட்டிக்கொண்டு, கெட்டும் பட்டணஞ் சேரென்ற கூற்றை வேதவாக்காக்கிச் சென்னைப் பட்டினம் போகும் நிலைமை ஏற்பட்டுவிட்டது. இங்கு பொதுப்பணி செய்யும் இளைஞர் குறைந்துவிட்டார்.
· வாழ்வில் வளம்பெற வாய்ப்புக்கள் இங்குகுறைவு என்றநிலை நாளுக்கு நாள் கூடிவருகிறது. இத்தனைக்கும் பெரும் தொழிலதிபர்கள் இங்கிருந்துதான் தமிழகத்தில் வந்துள்ளார். தண்ணீர்த் தேவை அவ்வளவு எழாத, ஓரிரு ஆலைகள் இங்கே எழுமானால் குமுகவளர்ச்சி பெரிதாக வாய்ப்புண்டு. இங்குள்ள செல்வந்தர்கள் மனம் வைக்கவேண்டும். ஒரு காலத்தில் இந்த வட்டாரத்திலிருந்து பலரும் சென்னை அம்பத்தூருக்குப் போய் வேலைசெய்து வாழ்ந்துவந்ததால் அம்பத்தூரைச் ”சின்னப்பள்ளத்தூர்” என்று வேடிக்கையாக அழைப்பதுண்டு. இன்று ஊர்வளர்ச்சி பார்த்தால், பள்ளத்தூர் எப்பொழுது சின்ன அம்பத்தூராவது? - என்ற கேள்வி நம்முள் எழுகிறது. நல்லதொரு மாற்றமாய் பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) திருமயத்தில் ஒரு குழாய் உருட்டாலையை உருவாகியது. திருமயம், கடியாபட்டி போன்ற ஊர்களுக்கு இது நல்ல வளங்கொடுக்கும். மற்ற ஊர்களுக்கும் அதன் வீச்சு தெறிக்கவேண்டும்.
· இன்னொரு செய்தியாய் உள்கட்டுமானக்குறைவு பற்றிச் சொல்லவேண்டும். அது எங்களூரில் நடந்தது. இப்பொழுதெல்லாம் Business Process Outsourcing என்னும் பொதினச் செலுத்த வெளியூற்று வேலைகள் இந்தியாவில் நடந்துவருகின்றன. ஒரு பேச்சிற்குச் சொல்கிறேன். அமெரிக்க நிறுவனம் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அந்நிறுவனத்தின் புதுக்குகளை (products) வாங்கும்போது ஒரு குறையோ, பழுதோ ஏற்பட்டு அதற்கு விளக்கம் அல்லது தீர்வு நாடி உலகெங்கும் உள்ள வாடிக்கையாளர் தொடர்புகொண்டு கேட்கவிழைகிறார். பொதுவாக நிறுவனத்தின் ஊழியரே இதற்கு மறுமொழி சொல்லாது, இந்த வெளியூற்றுச் சேவையாளர் தன் ஆட்களை வைத்துத் தீர்வுகளைச் சொல்வார். இதன்மூலம் இந்தியாவிற்கு வருமானம் கிடைக்கிறது. அமெரிக்க நிறுவனத்திற்கு வேலையும் நடக்கும். செலவுங் குறைச்சல். அப்படியொரு வெளியூற்று நிறுவனம் 9 star technologies என்ற பெயரில் எங்களூரில் நடந்தது. நம் பக்கத்து பையன்கள் 80 பேருக்குமேல் வேலை செய்தார். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வாடிக்கையாளர் கண்டனூரில் இருக்கும் வெளியூற்று வேலையாளிடம் விவரங்கேட்டுத் தீர்வு காணுவார். இந்த வேலை சிறப்பாக நடக்கவேண்டுமென்றால், Bsnl. Airtel, Vodophone போன்ற ஏதோவொரு சேவைவழங்குநர் (service provider) வலுவான அகலப்பாட்டை (broad band) வசதியை ஏற்படுத்தித் தரவேண்டும். அவர்தரும் அகலப்பாட்டையின் செறிவும், பட்டையகலமும் (bandwidth), தரமும் உச்சநிலையில் இருக்கவேண்டும். இவை போன்றவை உள்கட்டுமானத்தைப் பொறுத்தவை. இவற்றைச் சென்னையிற் தருவது போலவே கண்டனூரிலும் தந்தாற்றான், இந்தப் பொதினச் செலுத்து வெளியூற்று முயற்சிகள் வெல்லும். இந்த முயற்சியில் என்னகுறை நடந்ததென்று எனக்குத் தெரியாது. 3,4 ஆண்டுகள் வேலைசெய்த 9 star technologies கண்டனூரில் இப்பொழுது வேலைசெய்வதில்லை. நம்மூர்ப் பக்கத்து 80 பையன்களும் எங்கெங்கோ சிதறிப்போய்விட்டனர். பாராட்டப்படவேண்டிய நல்லதொரு தொழில்முயற்சி முளையிலேயே முடங்கிப் போனது. எதிர்காலத்தில் BPO முயற்சிகள் நம்மூரில் வெற்றிகரமாய் நடக்குமானால் நம் குமுக வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.
பொதுவாகக் குமுக வளர்ச்சி என்பது பல்வேறு முயற்சிகளின் தொகுப்பால் விளையும் நலனாகும். அதைச் செய்வதற்குத் திட்டமிடலும், இடைவிடாத முயற்சியும், செல்வந்தரின் ஆதரவும், அரசின் பெரும் ஊக்கமும் தேவை. ஓர் ஊர் வளர அது இன்றியமையாதது.
பள்ளத்தூரின் குமுகவளர்ச்சியைப் பெரிதும் நாடுகிறேன்.
நன்றி.