(தோழர் தியாகு எழுதுகிறார் 103 : இரவியா? மு.க. தாலினா?தொடர்ச்சி)
நலக்கேடு நல்காப் போக்கி
இனிய அன்பர்களே!
பொங்கலுக்கு முன்வரும் போகிப் பண்டிகை. அழுக்கையும் குப்பைகளையும் போக்கும் போக்கி நாள் என விளக்குவர் பெரியோர். ஆனால் குப்பைகளைத் தெருவில் போட்டு எரித்தல் என்பதுதான் போகிப் பண்டிகையின் அடையாளம் என்றாகி விட்டது. குழந்தைகள் தப்படித்து ஓசை எழுப்புவது மற்றோர் அடையாளம் எனலாம்.
காலையில் நடக்கப் போனால் தெருவெல்லாம் குப்பை எரிந்து புகையும் துர்நாற்றமும் காற்றில் கலந்து மூச்சுத் திணறுகிறது. நகரமெங்கும் புகைமூட்டம். கிராமப் புறங்களில் இஃது இவ்வளவு பெரிய சிக்கலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் போகியால் காற்று மாசடைவது உண்மை. போகியை இப்படித்தான் கொண்டாட வேண்டுமா? பழையன போக்க வேறு வழி இல்லையா? குறிப்பாக அறிவியலர், சூழலியலர் இதற்கு மாற்றுச் சொல்ல வேண்டும்.
தீபாவளிக்குப் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு, ஒலி மாசு எல்லாம் ஏற்படுகின்றன. காசைக் கரியாக்குவதால் ‘பொருளியல் மாசும்’ தாக்குகிறது. ‘சத்தம் இல்லாத தீபாவளி’ பற்றிப் பாட்டுக்காரர்களும் எழுதுகிறார்கள். ஆனால் இந்தக் கேடு தொடர்கிறது. தீபாவளிப் பண்டிகையால் சூழலுக்கும் கேடு, வயிற்றுக்கும் கேடு, காசுக்கும் கேடு! தீபாவளிக்குச் சொல்லப்படும் புராணக் கதையால் அறிவுக்கும் கேடு! ஆனால் பொங்கல் அப்படியில்லை என்கிறோம்! பொங்கல், கரும்பு, வெல்லம், வாழை, மஞ்சள் எல்லாமே நலந்தரும் ஊட்டக் கூறுகள்! ஆனால் இந்தப் போகிப் பண்டிகை கொண்டாடப்படும் முறை (குப்பையை எரித்து மாசுண்டாக்கல்) பொங்கலுக்குக் கெட்ட பெயருண்டாக்குவதாக உள்ளது. போகி கொண்டாடுவோம்! ஆனால் காற்றை மாசுபடுத்தாமல் கொண்டாடுவோம்! அதற்கு என்ன வழி என்று நம் சூழலியலர்கள் அரசுக்கும் மக்களுக்கும் சொல்ல வேண்டும். பூவுலகின் நண்பர்கள் சொல்ல வேண்டும். சுந்தரராசன், வெற்றிச்செல்வன், பிரபாகரன் எல்லாருமே தாழி அன்பர்கள்தாம். அவர்களில் ஒருவர் சொல்லட்டும்., அவர்கள் சொல்லியிருந்து, நான் கவனிக்கத் தவறியிருந்தால் கவனப்படுத்துங்கள். தொடர்ந்து நமக்கு சூழலியல் வகுப்புகள் நடத்திய தோழர் சமந்தா நமக்கு வழிகாட்டலாம். உங்களில் யார் வேண்டுமானாலும் சொல்லுங்கள், கேட்டுக் கொள்கிறோம்.
இருக்கட்டும். போக்கி நாள் வாழ்த்து! போக்க வேண்டிய பழையனவற்றில் அறியாமை, அச்சம், கொள்கையற்ற அரசியல், நானென்னும் அகந்தை, தன்னல வேட்கை, தனிமனித வழிபாடு, அடிமையுள்ளம், சோம்பல், தான்தோன்றித்தனம், இரசிக மனப்பான்மை. பதவிப் பித்து, கட்டுப்பாடுகளை எதிர்க்கும் அனாட்சியம் [அராசகம்]… இவையும் இன்ன பிறவும் இடம்பெறட்டும். இவற்றைப் போட்டுக் கொளுத்துங்கள்! மாசு ஏதும் விளையாது. உங்களுக்கும் நம் தமிழ்க் குமுகத்துக்கும் நன்மையே விளையும்.
பொங்கல்! நமக்குத் தமிழ்ப் புத்தாண்டு! புத்தாண்டில் புதிய தமிழராய், புதிய மாந்தராய் எழுவோம்!
தாழியின் பொங்கல் வாழ்த்து:
பொங்குக பொங்கல்!
அன்பும் அறிவும் அறமும் பொங்குக!
ஆற்றல் மிகுந்து ஆளுமை பொங்குக!
இனவெறி ஒழிந்து இனநலம் பொங்குக!
ஈகையின்பம் ஈகப்பேரின்பம் பொங்குக!
உயிரினுமினிய உரிமைகள் பொங்குக!
ஊருக்குழைக்கும் ஊக்கம் பொங்குக!
எல்லார்க்கும் கல்வி உரிமை பொங்குக!
ஏன் எனும் கேள்வி எழுந்து பொங்குக!
ஐங்குணமேவிய அரசியல் பொங்குக!
ஒற்றுமையுறுதிப் போர்க்குணப் பண்புகள் பொங்குக!
ஓர்மை மீட்கத் தமிழினம் பொங்குக!
ஔவியம் பேசா உறவுகள் பொங்குக! பொங்குக!
(தொடரும்)
தோழர் தியாகு
தரவு : தாழி மடல் 69
ஆசிரியர் குறிப்பு; போக்கி குறித்து போக்கியின்பொழுதுதான் எண்ண வேண்டுமா?
(தமிழ்நாடும் மொழியும் 38: முத்தமிழ் – தொடர்ச்சி)
நாடகத் தமிழ் தொடர்ச்சி
பிற்காலச் சோழர்களிலே வீரமும் ஈரமும் பெரும் புகழும் கொண்டு வாழ்ந்த இராசராச சோழன், அவன் மகன் இராசேந்திர சோழன் ஆகிய இரு மன்னர் காலத்திலும் திருவிழாக் காலங்களில் இராசராசேசுவரன், இராசராச விசயம் முதலிய நாடகங்கள் நல்ல முறையில் நடிக்கப்பெற்றன என்பதும், சிறந்த நடிகர்களுக்குப் பல பரிசில்களும் தானியங்களும் வழங்கப்பட்டன என்பதும் அக்காலக் கல்வெட்டுக்களினால் தெரிகின்றன, இவ்வாறு சீரும் சிறப்புமாக விளங்கிய நாடகம் பிற்காலத்தில் சமணர் கொள்கையாலும் பாமரர்களாலும் இழிந்த நிலை அடையலாயிற்று. இதனால் நாடகத் தமிழ் நூல்கள் பல கேட்பாரற்று வீழ்ந்தன. வீழ்ந்த சில நூல்களின் வேர்களினின்றும் சென்ற நூற்றாண்டிலே பல நாடகத் தமிழ் இலக்கிய நூல்கள் கிளைத்தன. இவ்வாறு கிளைத்த நூல்கள் பெரும்பாலும் செய்யுட்களால் ஆனவை. மேலும் சமய சம்பந்தமான நாடகங்களாகவும் அவை இருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கன அரிச்சந்திர புராணம், இராமாயணம் மாபாரதம், குற்றாலக் குறவஞ்சி, பள்ளு முதலியவையாம். பிறகு கி. பி. 1891-ஆம் ஆண்டிலே தமிழ் நாடக உலகில் ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டது. இதற்குக் காரணமாயிருந்த பெரியார் தூ. தா. சங்கரதாசு சுவாமிகள் ஆவார். இவர் நாற்பது நாடகங்கள் வரை எழுதினார். பழைய நாடகங்களைச் செப்பம் செய்தார். இவர் எழுதிய நாடகங்களில் பெரும்பான்மை புராண இதிகாச நாடகங்களே. உரோமியோ, சூலியத்து, சிம்பலைன், ஒதெல்லோ ஆகிய கவி சேக்குசுபியர் நாடகங்களும் இவரால் எழுதப்பட்டு நடிக்கப்பட்டன. இன்று தமிழ்த் திரைப்படங்களிலே நடித்துவரும் நடிகர் அனைவரும் இவரால் உருவாக்கப்பட்டவர்களே. எனவே இவரைப் பலரும் ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்‘ என்று இன்றும் பாராட்டுகின்றனர்.
தஞ்சாவூரைச் சார்ந்த நவாபு கோவிந்தசாமி என்பவர் முதன் முதலாக திரை, காட்சி முதலிய அமைப்புகளோடு கொட்டகைகளில் நாடகத்தை நடத்திக் காட்டினார். மேலும் சென்னையிலும், மதுரையிலும், தஞ்சையிலும், குடந்தையிலும் பல நாடகச் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கல்யாணராமையர் கம்பெனி, இராமுடு ஐயர் கம்பெனி, வேல் நாயர் சண்முகானந்த சபா, சி. கன்னையா கம்பெனி முதலிய கம்பெனிகள் நாடகக் கலையை இக்காலத்தில் நன்கு வளர்த்தன. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் தங்கள் நடிப்புத் திறமையால் மக்கள் நாட்டத்தை எல்லாம் கவர்ந்தனர். நாடகத் தந்தையாக விளங்கும் பேராசிரியர் ப. சம்பந்த முதலியாரால் தொடங்கப்பெற்ற சுகுண விலாச சபை கி. பி. 1891-இல் தொடங்கப்பெற்ற அமெச்சூர் சபைகளில் தலைசிறந்ததாகும். இச்சபையில் எசு. சத்தியமூர்த்தி, சி. பி. இராமசாமி ஐயர், டாக்டர் ஆர். கே. சண்முகம் செட்டியார் போன்ற தமிழ்நாட்டு அறிஞர் பெருமக்கள் நடித்திருக்கிறார்களெனில் இச்சபையின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ! நாடகத் தந்தை ப. சம்பந்த முதலியார் அவர்களின் சலியாத உழைப்பினாலும் ஆர்வத்தினாலும் இன்று நாடகக் கலை மிக உயர்ந்து விளங்குகின்றது என்று கூறினால் அது மிகையாகாது. இவர் இதுவரை எண்பது நாடங்கள் எழுதி உள்ளார். இவர் சிறந்த நடிகரும்கூட. கவி சேக்குசுபியர், காளிதாசன் இவர்களது நாடகங்கள் பலவற்றைச் சிறந்த முறையில் தமிழ்ப்படுத்தி உள்ளார். இவரது கற்பனையில் எழுந்த மனோகரா என்னும் நாடகம் சிந்தனைக்கோர் விருந்தாகும். இவர் எழுதிய சபாபதி நாடகம் சிறந்த நகைச்சுவை நாடகமாகும்.
கி. பி 1922-க்குப் பின்னர் சே.ஆர். இரங்கராசுவின் இராசாம்பாள், இராசேந்திரன், சந்திரகாந்தா, மோகன சுந்தரம், வடுவூர் துரைசாமி எழுதிய மேனகா முதலிய சமுதாய சீர்திருத்தக் கருத்துகளைக் கொண்ட புதினங்களை எம். கந்தசாமி முதலியார் நாடகங்களாக்கித் தரவே, இளைஞர்கள் ஆர்வத்தோடு இவற்றை நடித்து நாட்டில் மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். இதே போன்று இந்திய விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில், தெ. பொ. கிருட்டினசாமிப் பாவலர் எழுதிய கதரின் வெற்றி, தேசியக் கொடி, வெ. சாமிநாத சருமாவின் பானபுரத்து வீரன், எசு. டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு, ஐயாமுத்துவின் இன்பசாகரன் முதலிய தேசிய நாடகங்கள் நடிக்கப்பெற்ற காரணத்தால் மக்கள் உணர்வும் உரமும் பெற்றனர்.
அறிஞர் சி. என். அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, ரா. வெங்கடாசலம் எழுதிய பெண், மனைவி, எஸ். டி. சுந்தரம் எழுதிய மனிதனும் மிருகமும், கல்கியின் கள்வனின் காதலி, கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் இழந்த காதல், ஐம்பதும் அறுபதும், விலங்கு மனிதன், கு. சா. கிருஷ்ணமூர்த்தியின் அந்தமான் கைதி, ப. நீலகண்டனின் முள்ளில் ரோசா, நாம் இருவர், எஸ். வி. சகஸ்ர நாமம் எழுதிய பைத்தியக்காரன், சின்னராஜுவின் இரத்தக் கண்ணீர், நாரண துரைக்கண்ணனது உயிரோவியம், நா. சோமசுந்தரம் எழுதிய இன்ஸ்பெக்டர் முதலியன தமிழர் தம் இதயத்தைக் கவர்ந்த முற்போக்கு நாடகங்களாகும்.
இன்று தமிழ் நாடகம் உலகோர் கண்டு வியக்கும் வண்ணம் வளர்ந்து வருகிறது. அதற்குக் காரணம் மேலே குறிப்பிட்ட தமிழ் மறுமலர்ச்சி எழுத்தாளர்களேதான். அவர்கள் தான் நல்ல தமிழிலே துடிதுடிப்பும் கருத்துச் செறிவும் கற்பனை வளமும் பொருந்திய பல நாடகங்களை எழுதி நடித்து வருகின்றனர். இன்று நாடகத் தமிழின் உயிராக விளங்கும் ஒரு நூல் உளது எனில் அது பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுதிய மனோன்மணீயமே என்க. பரிதிமாற் கலைஞர் நாடகம் பல எழுதியுள்ளார் எனினும், அவை படிக்கப் பயன்படுவனவே தவிர நடிக்கப் பயன்படுவன அல்ல. ஆனால் இவர் கி. பி. 1891-இல் எழுதிய நாடகவியல் என்னும் நூல் நாடக இலக்கணத்தை நன்கு எடுத்தியம்புகிறது. இவ்வாண்டில் தான் மனோன்மணீயம் எழுதப்பட்டது.
இன்று நாடக உலகின் முடிசூடா மன்னர்களாய் விளங்குபவர்கள் நவாபு இராசமாணிக்கமும், ஒளவை டி. கே. சண்முகமும் ஆவர். நவாபு இராசமாணிக்கம் நடத்தும் இராமாயணம், ஏசு நாதர், சபரிமலை ஐயப்பன், தசாவதாரம் முதலிய நாடகங்களும், டி. கே. சண்முகம் நடத்தும் இராசராச சோழன், தமிழ்ச் செல்வம், மனிதன், இமயத்தில் நாம், ஒளவையார் முதலிய நாடகங்களும் இன்று மக்கள் உள்ளங்களை எல்லாம். கொள்ளை கொண்டனவாகும். மேலும் புரட்சி நடிகர் எம். சி. இராமச்சந்திரன், சகசுரநாமம், எம். ஆர். இராதா, மனோகர், சிவாசி கணேசன் போன்றவர்களும் திரைப்படங்களில் நடிப்பதோடமையாது அவ்வப்பொழுது சிறந்த நாடகங்களையும் நடத்திவருகின்றனர்.
சென்ற நூற்றாண்டில் நடைபெற்ற நாடகங்களுக்கும் இந்த நூற்றாண்டில் நடைபெறுகின்ற நாடகங்களுக்கும் வேறுபாடு மிகவுள. முற்காலத்து நாடகங்களிலே பாட்டுகளே விஞ்சியிருந்தன. அக்கால நாடகங்களின் வெற்றி அவற்றிலுள்ள பாடல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே இருந்தது. ஆனால் நாளாக ஆக மக்கள் நெஞ்சம் பாட்டை விட்டு வசனத்திலும் நடிப்பிலும் சென்றது. இதனால் வர வர நாடகங்களில் பாடல்கள் குறைந்தன. வசனமும் நடிப்பும் மிகுந்தன. ஆனால் சென்ற நான்கு ஆண்டுகளாக மக்களின் நெஞ்சம் வசனத்திலும் நடிப்பிலும் மட்டுமல்ல, கதையமைப்பிலும் செல்லத் தலைப்படலாயிற்று. வசனமும் நடிப்பும் நடிப்புக்கேற்ற கதையமைப்பும் இருந்தால் தான் இன்று நாடகங்கள் முழு வெற்றியைப் பெற முடியும்.
பாடல்கள் மிகுதியாகப் பெற்ற நாடகம் இடைக்காலத்திலே அயலவர் கூட்டுறவால் நலிந்து, பிற்காலத்திலே பல பெருமக்களால் உயிர்பெற்று, உரை நடையைப் பெற்று இக்காலத்தில் வசனமும் நடிப்பும் பெற்று கதையமைப்பை உயிராகக் கொண்டு நிலவுகிறது. சிற்பி கையிற் கிடைத்த கல், சிற்பமாகும்; சிறுவன் கையிற் கிடைத்த கல் பிறர் மீது வீச உதவும். அது கல்லின் குற்றமன்று; மனிதனின் குற்றமே. அது போல நாடகத்தால் தீமை விளையின் அது நாடகத்தின் குற்றமன்று; அதனைப் பயன்படுத்துவோரே குற்றவாளிகள். எனவே நாடகத்தை நாம் தான் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும். நாடகத்தால் நாட்டு மக்கள் பெற்ற, பெறுகின்ற பயன்கள் எண்ணத் தொலையாதனவாகும்.
(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்