வரலாற்றுக்கு புதிய வருகை...
கள்ளக்குறிச்சி அருகே பல்லவர் கால கல்வெட்டுடன் கொற்றவையும், கிரந்த கல்வெட்டுடன் தவ்வையும் கள்ளக்குறிச்சி உன்னிகிருஷ்ணன் அவர்களின் களஆய்வின் போது கண்டறிந்து,திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் ஆவணப்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி அடுத்துள்ள கச்சிராப்பாளையம் கிராமத்தில் கோமுகி ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள வனதுர்க்கை அம்மன் கோயிலில் உள்ள துர்க்கை சிலையின் மேற்புறம் 5 வரிகளில் பல்லவ மன்னன் நந்திவர்மனின் காலத்திய கல்வெட்டு படியெடுத்து ஆவணப்படுத்தப்பட்டது. வட்டெழுத்தில் உள்ள இக்கல்வெட்டு “நந்தீச்சுர பர்மற்கு யாண்டு இரண்டாவது தண்டப்பாடி உடைய தண்டரக்கி வேம்பன் செய்வித்தது” என்று பொறிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு அறிஞர் சு. இராஜகோபால் தெரிவித்தார். இக்கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மனின் இரண்டாவது ஆட்சியாண்டில் (பொ.ஆ.733ல்) தண்டப்பாடி என்ற ஊரைச் சேர்ந்த தண்டரக்கி வேம்பன் என்பவர் இந்த சிலையை செய்து கொடுத்துள்ளார்.
இதே ஊரின் அருகே ஏர்வாய்ப்பட்டினம் கிராமத்தின் கோயில் எதிரே மூத்ததேவி என்ற தவ்வை சிலை அமைந்துள்ளது. இச்சிலையின் கீழ்புறமும் 3 வரியில் கல்வெட்டு காணப்படுகிறது. 9 ஆம் நூற்றாண்டு கிரந்த எழுத்தில் அமைந்த இந்த கல்வெட்டு அதிக அளவில் பொறிந்துள்ளது.
தண்டப்பாடி என்பது எந்த ஊரைக் குறிக்கிறது என்று அறிய இயலவில்லை. அவ்வூரின் பெயர் பிற்காலத்தில் மாற்றம் அடைந்திருக்கலாம். தண்டரக்கி வேம்பன் என்பது அச்சிலையை செய்தவர் பெயர். இந்த துர்க்கை சிலை 2021க்கு முன்பு மண்ணில் புதைந்திருந்ததாகவும் அதை மீட்டு தற்போது சிறிய அளவில் கொட்டகை அமைத்து பாதுகாத்துவருவதாகவும் இந்த துர்க்கைக்கு தன்டப்பாடி தண்டரக்கி அம்மன் என்ற பெயரும் உண்டு என்று இக்கோயிலை பராமரிக்கும் பூசாரி ஆறுமுகம் தெரிவித்தார். கல்வெட்டில் உள்ள தன்டப்பாடி தண்டரக்கி என்ற பெயர் 1300 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் வழிபாட்டில் நிலைத்து நின்றுள்ளது சிறப்புக்குரியதாகும்
நடுநாடு பல அற்புதமான வரலாற்றையும் அழகான நிலவமைப்பும் கொண்ட பகுதி...
கல்வராயன்மலையடிவராப் பகுதியும் அதன் சுற்றுப்புறமும் மழைக்காலத்தில் மனதை கவரும் பகுதிகள்...
நேரில் போய்த்தான் பாருங்களேன்...
நன்றி- உன்னிகிருஷ்ணன், சி. பழனிசாமி, கண. சரவணகுமார், ஸ்ரீதர்,
தண்டு +அர் + அக்கி > தண்டு என்னும் தாக்குதல் படையை ஊடறுக்கும் (அர்) படையின் முன்னவன் அல்லது தலைவன் என்றும் கொள்ளலாம்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கணப்பனூர் எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள 8ஆம் நூற்றாண்டு நடுகல் கல்வெட்டு உள்ளது. (தரும. கல். 47/1973, பக். 7)
ஸ்ரீ சிவமார / பருமற்கு யாண்டு நாற்பத்தேழாவது கந்தவாணதி அரைசரு புறமலை நாடா / ள அவர் மகனார் தெளிய நி(ஓர்)ஆர் சேவகர் வாணிக / ச் சடைனார் வெட்டக்கியார் கூடல் (வந்துவிட) அவர் / மே ஆனயாடி நின்று செ / ன்று பட்டார்
ஆனையாடி - யானை மேல் அமர்ந்து போரிட்டு; நின்று - இருந்து; சென்று – நீங்கி வெட்டக்கி என்றால் வெட்டு படைத் தலைவர்.