(குறட் கடலிற் சில துளிகள் 37 : சிறுமைப்பண்புகளில் இருந்து விலகி இரு! – தொடர்ச்சி)
நல்லினத்துடன் சேர்ந்து நல்லறிவுடன் திகழ்!
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௫௰௨ – 452)
பொழிப்புரை: தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது தன்மையைப் பொறுத்து அறிவு உண்டாகும் (பேரா.முனைவர் சி.இலக்குவனார்)
பதவுரை: நிலத்து-பூமியினது; இயல்பான்-தன்மையால்; நீர்-நீர்; திரிந்து-வேறுபட்டு; அற்று ஆகும்-அத்தன்மைத்து ஆகும்; மாந்தர்க்கு-மக்களுக்கு; இனத்து-இனத்தினது; இயல்பு-தன்மை; அது-அஃது; ஆகும்-ஆம்; அறிவு-அறிவு.
இனம் என்பதற்கு வகை வகுப்பு, குலம், சுற்றம், கூட்டம், இனம், ஒப்பு, அமைச்சர் எனப் பல பொருள்கள் உள்ளன.
நிலத்தின் தன்மையால், அதிற் சேரும் நீரின் தன்மை மாறுபடும். எந்த மண்ணில் நீர் கலக்கிறதோ அந்த மண்ணின் தன்மை நீருக்கு வரும். மண்ணின் நிறம், சுவை, பண்பு முதலியன நீருக்கும் உண்டாகும். நல்ல சுவையுள்ள நீர், கூடச் சேரும் மண்ணின் சுவைக்கேற்ப திரியும். நிறமற்ற நீர் செம்மண்ணில் கலக்கும் பொழுது செந்நிறம் அடைவதுபோல், கரிசல் மண்ணில் கலக்கும் பொழுது கரு நிறம் அடைவதுபோல், கலக்கும் மண்ணின் நிறத்திற்கேற்ப நிறத்தை அடைகிறது. உவர் நீரில் கலக்கும்போது உவர்ப்புச் சுவை அடைவதுபோல் சுவையற்ற நீர், தான் கலக்கும் மண்ணிற்கேற்பச் சுவையைப் பெற்று விடுகிறது.
இவைபோல்தான் மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் விளங்கும்; எந்த இனத்துடன் அல்லது கூட்டத்தினருடன் சேர்கிறானோ அந்த இனத்தின் அல்லது கூட்டத்தின் தன்மைக்கேற்ப அறிவைப் பெற்று விடுகிறான். நல்ல இனத்தில் சேருபவன் அறிவு நல்லறிவாவதுபோல் தீய இனத்தில் சேருபவன் அறிவு தீய அறிவாகிறது.
பின்னர் வந்த ஒளவையார், சேரத்தக்கவர்களை நன்கு அறிந்து சேர வேண்டும் என்பதற்காகச்,
சேரிடம் அறிந்து சேர்
என்றதும் இதனால்தான்.
இக்காலக் கவியரசர் முடியரசன், நல்லவரைச் சார்ந்தால் நல்லவர் ஆகலாம், அல்லவரைச் சார்ந்தால் அல்லவர் ஆகலாம். சேரிடம் அறிந்து சேராவிடில் சீரழிவாகிக் சிறுமை அடைவான் என்கிறார். இதனை அவர் கூறும் பாடல் வரிகள் பின்வருமாறு:
நல்லவர்ச் சார்வோர் நல்லோ ராகுப
அல்லவர்ச் சார்வோர் அல்லரா குபவே;
சேரிடன் அறிந்து சேர்க இன்றேல்
சீரழி வாகிச் சிறுமை மிகுமே!
(நெஞ்சில் பூத்தவை)
என்கிறார் கவியரசர் முடியரசன்.
தேனுடன் பாலைக் கலக்கும் பொழுது, பாலுக்குத் தேனின் சுவை வந்து விடுகிறது. அதே நேரம், பாலுடன் தண்ணீரைக் கலந்தால் பாலின் சுவை குறைந்து விடும். அதன் தன்மையும் மாறுபடும். எந்தப் பொருளுடனும் கலப்படம் செய்யும் பொழுது அந்தப் பொருள் தன் தன்மையை இழந்து கேடு செய்யும் பொருளாகிறது. எனவேதான் கலப்படப் பொருளை யாவரும் விரும்புவதிலலை.
நிலத்தோடு கலக்கும் நீர் அதன் தன்மைக்கேற்ப திரிவதுபோல் எப்பொருளாயினும் தன்னுடன் கலக்கும் பொருளால் நல்ல தன்மையை இழந்து விடுகிறது. மாந்தரும் தாம் சேரும் இனத்திற்கேற்ப அறிவு சிதைந்து மாறி விடுகின்றனர். அறிவு சிதையாமல் நல்லறிவுடன் இருக்க வேண்டுமென்றால், நல்லினத்துடன் சேர வேண்டும்.
அறிவு வரவிருக்கும் துன்பங்களைத் தவிர்க்கிறது; சரியான முடிவுகளை எடுக்க உதவுகிறது; வாழ்க்கையின் உண்மையான இயல்பைப் புரிந்துகொள்ளச் செய்கிறது; தன்னம்பிக்கையை மிகுவிக்கிறது; குழப்பத்தைத் தவிர்த்து தெளிவுடன் செயல்பட வழிகாட்டுகிறது; அறிவுடையவர் எல்லாம் உடையவராகத் திகழ்கிறார். இவற்றிற்காக அறிவு சிதையாமல் இருக்க வேண்டும்; நல்லறிவாக இருக்க வேண்டும்.
எனவே, நல்லினத்துடன் சேர்ந்து நல்லறி
எனவே, நல்லினத்துடன் சேர்ந்து நல்லறி நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு.
மக்கள் தாம் சேர்ந்து வாழும் இடத்திற்கு தக்க எண்ணம், சிந்தனை, பழக்க வழக்கம், பண்பாடு, பேச்சு, ஒழுகலாறு (manners) பெற்றிருப்பர். இது தான் mental frequency, mental wave length எனப்படுகிறது. மக்கள் உருவில் அனைவரும் ஒன்றே ஆயினும், உணவு, உடுக்கை, உறையுள் ஆகிய தேவைகள் ஒன்றே ஆயினும் இந்த mental wave length வேறுபடுவதால் அனைவரும் சமம் என்பது தவறு. இதை மாற்றுவது கடினம் என்பதால் தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பர் முன்னோர். சமத்துவம் பேசுவோர் இதை எல்லாம் மனதில் கொள்வதில்லை. தண்ணீரையும் மண்ணெய்யும் சேர்த்து வாழ்விக்க முற்படுவர் அது தவறு. இதனால் தான் மாற்று மத மக்கள் ஒன்று சேர்வதில்லை.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To view this discussion visit https://groups.google.com/d/msgid/tamilmanram/CAGs6Gj4r3NaCfN8GCHi%2BTu%3DO3xixQrnbtXa-zPmn2xnGSm3Q7w%40mail.gmail.com.