(பாசன அறிவியல் – அன்றே சொன்னார்கள்:தொடர்ச்சி)
புலம் பெயர் பறவைகள்
பறவைகள் சில பருவங்களில் இடம் விட்டு இடம் மாறிச் செல்வதை – தம் புலத்தில் இருந்து பெயர்ந்து வேறு புலத்திற்குச் செல்வதைப் புலம் பெயர்தல் (migration) என்கின்றனர். இதற்கான தமிழ்க்கலைச் சொல் வலசை என்பதாகும். எசியாடு(Hesiod), ஓமர்(Homer), எரொடொதசு(Herodotus), அரிசுட்டாடில்(Aristotle) முதலான கிரேக்க அறிஞர்கள் பறவைகள் இடம் விட்டு இடம் மாறுவதைக் குறிப்பிட்டுள்ளார்கள். எனினும் பறவைகள் பிற பகுதிகளில் இருந்து வருவதையும் பிற பகுதிகளுக்குச் செல்வதையும் எங்கும் செல்லாமல் ஒரே பகுதியிலேயே தங்கி இருப்பதையும் (வதி பறவை) வேறுபடுத்தி வலசை அறிவியலைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர்.
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் போற்றிப்பாடும் பொழுது புலவர் குறுங்கோழியூர்க் கிழார் பறவைகள் புலம் பெயர்ந்து வருவதையும் போவதையும் – புதியதாக வேறு இடங்களில் இருந்து பறவைகள் இங்கு வருவதையும் இங்கேயே உள்ள பறவைகள் வேறு இடம் நாடிச் செல்வதையும் –
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் (புறநானூறு 20: 18)
என்னும் வரியில் குறிப்பிடுகிறார். (புள் – பறவை;)
வேந்தன் கோப்பெருஞ் சோழனை அவனைப் பார்க்காமலேயே நட்பு கொண்ட புலவர் பிசிராந்தையார் பாடும் பொழுது, தான் தூதாக அனுப்பும் அன்னப்பறவை தென்குமரியிலிருந்த வட இமயமலைக்குச் செல்வது என்பதைக்
குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி
வடதிசை பெயர்குவையாயின் (புறநானூறு 67: 6-7)
என்று குறிப்பிடுகிறார்.
தான் தனித்திருக்கத் தன் உயிர் மட்டும் பிரிந்து தலைவனை நாடிச் சென்றதைக் குறிப்பிடும் இடத்தில் உவமையாகப், பறவை, தான் தங்கியுள்ள (அசையும் அழகிய கிளையில் உள்ள) கூட்டினைப் பொலிவிழக்கச் செய்யும் வண்ணம் புலம் பெயர்ந்து செல்லும் நிலையைக் குறிப்பிட்டு
அலங்கல் அம்சினைக் குடம்பைப் புல்லென
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந்தாங்கு (அகநானூறு 113 : 24-25)
என்கிறார் புலவர் கல்லாடனார்.
நீயும் நின்பெடையும், தென்திசை குமரியாடி
வட திசைக்கு ஏகுவீராயின்
எனச் சத்திமுற்றத்துப் புலவர், நாரை விடு தூதுப் பாடலில் நாரை இடம் பெயர்ந்து செல்வது பற்றிக் குறிப்பிடுகிறார்.
புலவர் நரிவெரூஉத் தலையார் வேறு எங்கும் செல்லாமல் தங்கி உள்ள நாரையை வதிகுருகு எனக்குறிப்பிட்டு
வதிகுருகு உறங்கும் இன்நிழல் புன்னை (குறுந்தொகை 5)
என்கிறார்.
இவ்வாறு, பறவைகளின் புலப் பெயர்ச்சி அறிவியலை அன்றைய புலவர்களே அறிந்திருந்தனர். ஆனால், உரிமையிழந்து புலம் பெயர்ந்து செல்லும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு உரிமைவாழ்வு பெறுவதற்கான வழிவகைளைத் தமிழ்நாட்டு மக்கள் அறிந்து செயல்பட்டு வாகைசூடும் நாள் எந்நாளோ?
– இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு இதழ்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 21 May 2025 அகரமுதல
(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும்வழி -தொடர்ச்சி)
பூங்கொடி
எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது
தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ
இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க
மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன்,
அருளறம் பூண்டது குறளகம், ஆதலின் 290
தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்;
ஒருதலைக் காமம்
நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும்
பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி
ஆடவர் திரியின் யானென் செய்வல்?
—————————————————————
முரணினர் – மாறுபட்டனர், உரி – தோல் ஆடை, கான் – காடு, எழூஉம் – எழும், விழாஅது – விழாமல், ஒரீஇ – நீக்கி.
++++++++++++++++++++++++++++++++++++++++
ஒருதலைக் காமம் உடையவர் தாமே 295
வருதுயர்க் கடலுள் மடிவது திண்ணம்
மற்றவர் மனத்தை மதியா ராகிச்
சுற்றுதல் இழிதகைத் தொழிலே அன்றோ?
காதற் கொடுமைகள்
காதல் என்றுல கோதும் பெயர்தான்
`ஏது வாக இயற்றும் கொடுமைகள் 300
எத்துணை எத்துணை! கானல்நீர் இதனை
நத்தின ராகி நலிவது பேதமை;
பெண்மை பெண்மைஎனப் பேசி மகளிரைக்
கண்ணை மறைத்துக் கருவியென் றடிமையென்
றெண்ணுங் கொடுமை ஏகுவ தெந்நாள்? 305
காமங் கடந்த காரிகையர் தம்மைத்
தீமனம் கொண்டோர் பழிமொழி செப்பிக்
காப்பிலாப் பொருளெனக் கருதிக் கவர்ந்திட
மோப்பம் பிடிக்க முயலும் கள்வர்
பல்கினர்; இளையோய்! பண்பிலா இம்மொழி 310
சொல்லுதல் இனிமேல் தொலைகநீ பெரும!
எண்ணித் துணிந்ததே இப்பணி’ எனச்சொலக்
கோமகன் ஏக்கம்
கண்ணும் முகமும் கருத்துத் தலைகவிழ்த்
துள்ளம் கலங்கி உறுநடை தளர்ந்து
பிறிதொரு பாங்கர்க் குறுகின னாக, 315
முறுகிய காமம் குறைந்திலன் இவன்எனக்
கருதிய பூங்கொடி கலங்கிய மனத்தள்
ஆடவர் மனநிலை அறிகுநர் யாரெனத்
தோடலர் மாலை சூடிய சண்டிலி
துணியிற் பிரியா திருந்தனள் அவளே. 320
—————————————————————
காப்பிலா – காவலில்லாத, தோடலர் – இதழ்விரிந்த.
(தொடரும்)
கவிஞர் முடியரசன், பூங்கொடி
ஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 20 May 2025 அகரமுதல
(புலம் பெயர் பறவைகள் – அன்றே சொன்னார்கள் – தொடர்ச்சி)
பொருள் அல்லது செல்வம் என்றாலே அதனால் வரும் தீமைகளை மட்டும் எண்ணி அதனை ஒதுக்க வேண்டும் என்பது போன்றே உலகெங்கும் அறிஞர்களும் ஆன்றோர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். புத்தர் முதலான சமய அறிஞர்களும் அவ்வாறே மக்களிடம் பொருளாசை துன்பம் தரும் எனக் கூறிப் பொருள் தேடலுக்கு எதிரான கருத்தையே பரப்பி வந்தனர். பொருள் அடிப்படையிலான இயல் பொருளறிவியல் அல்லது பொருளியல் (பொருளாதார இயல்) என உருவானதும் அதன் இன்றியமையாமை உணரப்பட்டதும் 18 ஆம் நூற்றாண்டில்தான் எனலாம். ஆதம் சுமித் (Adam Smith: 1723-1790) என்னும் பொருளியல் அறிஞர் முதலில் பொருளியல் இலக்கணத்தை வரையறுத்தவர் ஆவார்; 1776 ஆம் ஆண்டு நாடுகளின் செல்வமும் அதன் இயல்பும் காரணங்களும் (An Inquiry into the Nature and Causes of the Wealth of Nations) (அல்லது நாடுகளின் செல்வம் ) என்னும் நூலை வெளியிட்டுப் பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல் என அறிவித்தார்.
இதற்கு முன்னர் அறிஞர்கள் கார்லைல், இரசுகின் முதலானோர், பொருளியலை மகிழ்வற்ற அறிவியல் என்றும் இருண்டஅறிவியல் என்றும் கூறியதற்கு மாறாக அமைந்தது இவரது விளக்கம்.
அடுத்த நூற்றாண்டில் வந்த பொருளியல் அறிஞரான ஆல்பிரட்டு மார்சல் (Alfred Marshal: 1842-1924) பொருளியலை நல இலக்கண அடிப்படையில் (Welfare Economics) வரையறுத்தார். 1890 ஆம் ஆண்டு வெளியிட்ட பொருளியல் கோட்பாடுகள் என்னும நூலில் இதனை அவர் தெளிவுபடுத்தினார். பொருளியல் ஒரு புறம் செல்வததையும் மற்றொரு புறம் அதனை விட முதன்மையாக மனிதனையும் ஆராயும் இயல் என விளக்கினார்.
அறிஞர் தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள், எனத் தொல்காப்பியத்தை வகுத்ததும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் எனத் திருக்குறளை அளித்ததும் பொருளை மக்களுக்கான பயன் அடிப்படையில் நோக்கியதே ஆகும். எனவே, இவர்களின் இலக்கியங்கள் வாழ்வியல் இலக்கியங்களாக ஒளிர்கின்றன.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருளின் இன்றியமையாமையை விளக்குவதற்குப்,
பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள் (திருக்குறள் 751)
என்கிறார். மேலும்,
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள் (திருக்குறள் 754)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர், பொருள் முறையாயும் தீயவழியில் அல்லாமலும் வரவேண்டிய வழியை விளக்குகையிலே மேனாட்டாரின் நலம்சார் பொருளிலக்கணத்தை அன்றே நம்மவர்கள் அறிந்து தெளிந்திருந்தனர் எனலாம்.
19 ஆம் நூற்றாண்டில் பொருளியல் பற்றிப் பிற நாட்டார் எண்ணி ஆராய்ந்திருக்கையில் பழந்தமிழர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதனைப் பற்றிச் சிந்தித்து உள்ளனர் என்பது மட்டுமல்ல, இன்றைய சிந்தனையின் வெளிப்பாடு அன்றே அவர்களிடம் இருந்துள்ளதும் கவனிக்கத்தக்கது. இலக்கியங்களில் இவை இடம் பெற்றுள்ளமையாலேயே இவற்றை நாம் இலக்கியக் கற்பனைகள் என்று ஒதுக்குவது தவறு. மாறாக இலக்கிய நூல்களிலேயே அறிவியல் சிந்தனைகள் இடம் பெற்றுள்ளன எனில், துறை நூல்களில் மிகுதியான அறிவியல் செய்திகள் இடம் பெற்றிருக்க வேண்டுமே என எண்ண வேண்டும்.
இன்றைக்குப் பொருளுக்கு அல்லாடும் நாம் அன்றைக்குப் பொருள் திரட்டலில் சிறந்திருந்ததன் காரணம் பொருள் பற்றிய தெளிவான எண்ணமும் முயற்சியும் இருந்தமைதான். எனவே, தொடர்ந்து வேறு சில பாடல்களையும் அடுத்தடுத்துக் காணலாம்.- இலக்குவனார் திருவள்ளுவன்
நட்பு இதழ்