அம்மை வருவதற்கான காரணம் என்ன?வைரஸ் தொற்றே அம்மை நோய் வரக்காரணம்.வைரஸ் தொற்று எப்படி பரவுகிறது?கோடை வெப்பத்தால், பூமி சூடாகும் போது காற்றில் ஈரப்பதம் குறைகிறது, அப்போது அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்று தான், ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத் தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.
யாருக்குப் பாதிப்பு அதிகம்?
சின்னம்மை நோய், குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரையும் பாதிக்கும். என்றாலும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குவது இதன் இயல்பு. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக வாழும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள், அசுத்தம் நிறைந்த இடங்கள், குடிசைப் பகுதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் வசிப்போருக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் இந்த நோய் விரைவில் பரவிவிடும்.
எப்படி பரவுகிறது?
நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும், சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து, நீர் வெளியேறும் போது, இந்த வைரஸ் கிருமிகள் நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் தொற்றிக்கொள்ளும்.
மேற்சொன்ன வழிகளைத் தவிர, வேறு முறைகளில் பரவுமா?
நோயாளியின் சளியில் வைரஸ் கிருமிகள் வெளியேறும் போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. அடுத்து, நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுத்தட்டுகள், போர்வை, துண்டு போன்றவற்றின் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவலாம்.
அறிகுறிகள் என்ன?
முதலில் சாதாரண காய்ச்சல் போலத் தான் நோய் ஆரம்பமாகும். இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும், நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும். மார்பிலும், முதுகிலும் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும். அடுத்த, 24 மணி நேரத்தில் இவை எல்லாமே நீர் கோர்த்த கொப்புளங்களாக மாறிவிடும்.
சின்னம்மைக் குண்டான முக்கிய அறிகுறிகள் என்ன?
சின்னம்மைக் கொப்புளங்கள் முகம், மார்பு, வயிறு, முதுகு, அக்குள் போன்ற பகுதிகளில் மிக நெருக்கமாகவும், அதிகமாகவும் காணப்படும். முன் கை மற்றும் முன் கால்களில் மிகப் பரவலாகவும் எண்ணிக்கையில் குறைந்தும் தெரியும்.
சின்னம்மை ஒருமுறை பாதித்தவருக்கு மீண்டும் வராது என்பது உண்மையா?
ஆமாம். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் இந்த நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் உருவாகி விடுவதால், ஆயுள் முழுவதும் அவருக்கு இந்த நோய் மீண்டும் வராது.
சிகிச்சை என்ன?
பொதுவாக, அம்மை நோய்கள் குறித்து, நம் சமூகத்தில் பலவிதமான தவறான கருத்துகளும், மூட நம்பிக்கைகளும் நிலவுகின்றன. தீவிர நோய் தொற்றே அம்மையின் தாக்கம், எனவே, அம்மை வந்தால் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
– கே.ஆர்.விஜய் சக்ரவர்த்தி
பொது மருத்துவ நிபுணர்,
சென்னை.