அழைக்கப்பட்டவர்களே, பொதுக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். ஆண்டவரின் அழைப்பை ஏற்று அவரது மகிழ்ச்சியில் ஒரு மித்து பங்குபெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கை நிறைவேற்றும் விதமாக, சாவின் நிழல் சூழ்ந்தவர்கள் மேல் சுடர் ஒளியாக உதித்தவர் நம் ஆண்டவர் இயேசு. பாவத்தளையால் கட்டுண்ட மக்களுக்கு சிலுவை மரணத்தால் அருள் வாழ்வை வழங்க வந்தவர் அவரே. மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்களை மனிதரைப் பிடிப்பவர்களாக மாற்றும் வல்லமையை இயேசுவி டம் காண்கிறோம். விண்ணரசின் நற்செய்தியைப் பறைசாற்றி, மக்களின் நோய் நொடி களை குணப்படுத்திய இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து நிறைவேற்ற வரம் கேட்டு, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப் பகுதி, யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச் செய்வார். காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவதுபோல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும்போது அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்ததுபோல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்; அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர்.
1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி
4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி
3 வாழ்வோரின் நாட்டினிலே
ஆண்டவரின் நலன்களைக்
காண்பேன் என்று நான் இன்னும்
நம்புகின்றேன். 14 நெஞ்சே!
ஆண்டவருக்காகக் காத்திரு; மன
உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை
பெறட்டும்; ஆண்டவருக்காகக்
காத்திரு. பல்லவி
சகோதரர் சகோதரிகளே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது இதுவே: நீங்கள் ஒத்த கருத்துடையவர்களாய் இருங்கள். உங்களிடையே பிளவுகள் வேண்டாம். ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டிருங்கள். என் அன்பர்களே, உங்களிடையே சண்டை சச்சரவுகள் இருப்பதாகக் குலோயி வீட்டார் எனக்குத் தெரிவித்துள்ளனர். நான் இதைச் சொல்லக் காரணம், உங்களுள் ஒவ்வொருவரும் `நான் பவுலைச் சார்ந்துள்ளேன்' என்றோ `நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்' என்றோ `நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்' என்றோ, `நான் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளேன்' என்றோ சொல்லிக்கொள்கிறீர்களாம். கிறிஸ்து இப்படிப் பிளவுபட்டுள்ளாரா? அல்லது பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? அல்லது பவுலின் பெயரிலா நீங்கள் திருமுழுக்குப் பெற்றுக்கொண்டீர்கள்? திருமுழுக்குக் கொடுப்பதற்கு அல்ல, நற்செய்தியை அறிவிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார். மனித ஞானத்தின் அடிப்படையிலான சொற்களில் இந்நற்செய்தியை அறிவித்தல் ஆகாது. அவ்வாறு அறிவித்தால் கிறிஸ்துவின் சிலுவை பொருளற்றுப் போய்விடும்.
அக்காலத்தில் யோவான் கைது செய்யப்பட்டதை இயேசு கேள்விப்பட்டுக் கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவர் நாசரேத்தை விட்டு அகன்று செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் அமைந்திருந்த கப்பர்நாகுமுக்குச் சென்று குடியிருந்தார். இறைவாக்கினர் எசாயா உரைத்த பின்வரும் வாக்கு இவ்வாறு நிறைவேறியது: ``செபுலோன் நாடே! நப்தலி நாடே! பெருங்கடல் வழிப் பகுதியே! யோர்தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பே! பிற இனத்தவர் வாழும் கலிலேயப் பகுதியே! காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது.'' அதுமுதல் இயேசு, ``மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' எனப் பறைசாற்றத் தொடங்கினார். இயேசு கலிலேயக் கடலோரமாய் நடக்கும்போது, சகோதரர் இருவரைக் கண்டார். ஒருவர் பேதுரு எனப்படும் சீமோன், மற்றவர் அவர் சகோதரரான அந்திரேயா. மீனவரான அவ்விருவரும் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, ``என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்'' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அங்கிருந்து அப்பால் சென்றபோது வேறு இரு சகோதரர்களைக் கண்டார். அவர்கள் செபதேயுவின் மகன் யாக்கோபும் அவர் சகோதரரான யோவானும் ஆவர். அவர்கள் தங்கள் தந்தை செபதேயுவுடன் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் படகையும் தந்தையையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். அவர் கலிலேயப் பகுதி முழுவதும் சுற்றி வந்தார்; அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசு பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; மக்களிடையே இருந்த நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
1. பணியாற்ற அழைப்பவரே
இறைவா,
திருச்சபையை
வழிநடத்தும் திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவரும்,
தங்கள் அழைத்தலின் மேன்மையை
உணர்ந்தவர்களாய், உம்மை
அறியாத மக்களுக்கும்
நற்செய்தி பணியாற்ற துணை
புரியுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
2. அரசுகளை அமைப்பவரே
இறைவா,
எங்கள்
நாட்டை ஆட்சி செய்யும்
தலைவர்கள் அனைவரும் உமது
நற்செய்தி பரவலுக்கு துணை
நிற்கவும், மக்களிடையே
நிலவும் ஆன்மிக இருளை நீக்கி
உமது ஒளியைக் காணச்
செய்யவும் தூண்டுதல்
அளிக்குமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
3. ஒன்றிப்பை
உருவாக்குபவரே இறைவா,
உலகெங்கும் பல்வேறு
சபைகளாக பிரிந்து வாழும்
கிறிஸ்தவர்கள் அனைவரும்
ஒன்றுபடவும், உம்மை அறியாத
மக்களிடையே உமது மீட்பின்
நற்செய்தியை ஒற்றுமை யுடன்
கொண்டு சேர்க்கவும் அருள்
புரியுமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
4. கட்டுகளைத் தகர்ப்பவரே
இறைவா,
பாவம், தீமை,
நோய் ஆகியவற்றின்
கட்டுகளில் சிக்கித்
தவிக்கும் மக்களுக்கு உமது
அருள் நலன்களால் புதுவாழ்வு
தந்து, உமது மீட்பின்
மகிழ்ச்சியைத் தங்கள்
வாழ்வில் அனுபவிக்கும் வரம்
தருமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
5. வாழ்வின் நற்செய்தியே
இறைவா,
எம் பங்கு
சமூகத்தில் வாழும்
பங்குத்தந்தை,
அருட்சகோதரிகள், பங்கு
மக்கள் அனை வரும், ஒரே மனமும்
ஒரே நோக்கமும் கொண்டவர்களாக
உமக்கு சான்று பகர்ந்து வாழ
அருள் வழங்குமாறு உம்மை
மன்றாடுகிறோம்.
இயேசுவின் பணித் தொடக்கம் ! இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கிய செய்தியை இன்றைய நற்செய்தி வாசகம் தருகிறது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் பணி வாழ்வின் தொடக்கத்தை இறைவாக்கினர் எசாயாவின் அறைகூவலின் நிறைவேறுதலாகப் பார்க்கிறார். “காரிருளில் வாழ்ந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள். சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடரொளி உதித்துள்ளது“. கிறிஸ்து பிறந்ததால் ஒளியும், வாழ்வின் நம்பிக்கையும் இந்தப் புவிப் பரப்பில் உருவானது என்ற நற்செய்தியை மத்தேயு பறைசாற்றுகின்றார். என்னுடைய பணியும், வாழ்வும் இயேசுவின் பணியும், வாழ்வும் போல அமைந்திருக்கின்றனவா என்று ஆய்ந்து பார்க்க அழைப்பு விடுக்கிறது இன்றைய வாசகம். எனது பணி இருளில் வாழ்வோர்க்கு ஒளியாக, நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையாக இருக்கிறதா என்று என்னையே கேட்டுக்கொள்கிறேன். எனது வாழ்வும் இயேசுவின் வாழ்வு போல அமைய அருள்வேண்டுகிறேன்.
நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது பணியும், வாழ்வும் நம்பிக்கை அற்றோருக்கு நம்பிக்கையை. இருளில் வாழ்ந்தோருக்கு ஒளியைக் கொண்டுவந்ததபோல, எனது வாழ்வும், பணியும் அமைய என்னi வலிமைப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
***********************************************************************************************************
Diese E-Mail wird von der Webdesignmannschaft
www.tamilcatholicnews.com gesendet. Wenn Sie von unserer E-Mail-Liste sich
austragen wollen, oder wenn Sie einige Schwierigkeiten mit diesem E-Mail
haben, kontaktieren Sie uns bitte über unsere Emailadresse
in...@tamilcatholic.de.
www.tamilcatholicnews.com என்ற
இணையத்தளகுழுவினரால்இந்த
மின்னஞ்சல் உங்களுக்கு
அனுப்பி வைக்கப்படுகின்றது.
இந்த மின்னஞ்சல்களை நீங்கள்
பெற்றுக்கொள்ள
விரும்பாவிடில் அல்லது இவ்
மின்னஞ்சல்களில் ஏதாவது
அசௌகரியங்கள் இருப்பின்,
in...@tamilcatholic.de என்னும்
மின்னஞ்சல் முகவரிக்கு
அறியத்தரவும்.
This Email is sent by the web design team of
www.tamilcatholicnews.com. If you want to unsubscribe from our email list
or if you have some difficulties with this email, please contact us via our
email address in...@tamilcatholic.de.
***********************************************************************************************************
Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.
http://www.tamilcatholicnews.com
http://www.tamilcatholic.de
http://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
http://www.youtube.com/tamilenseelsorgeamt
http://groups.google.com/group/tamilenseelsorge