திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions ஆண்டவரின் திருக்காட்சி (2026-01-04)

0 views
Skip to first unread message

HolyMassReadings

unread,
Jan 2, 2026, 9:26:38 AMJan 2
to read...@tamilcatholicdaily.com
 
 
 

திருவழிபாடு Readings, Introduction, Prayer Intentions
ஆண்டவரின் திருக்காட்சி
(2026-01-04)
திருவழிபாடு ஆண்டு –1
(இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6, திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6, மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12)

(PDF Format இணைக்கப்பட்டுள்ளது)
www.tamilcatholicnews.com



திருப்பலி முன்னுரை

நல்ல உள்ளங்களே நல்வாழ்த்துகள். ஆண்டின் முதல் ஞாயிறு பராம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த அற்புத திருவிழா வழிபாட்டுக்கு உங்களை வரவேற்கின்றோம். தன்னை தரணிக்கு காட்சியாக்கினார். பல இடங்களில் இருந்து புறப்பட்டு வந்தவர்களை விண்மீன் கொண்டு வழிநடத்திய அற்புதம் நினைக்கப்படுகின்றது. இன்று காணிக்கைகள் கொணர்ந்து தங்களது மரியாதையை வெளிக்காட்டி நிற்கின்றார்கள். குழந்தையாய் இருந்த போதிலும், அவரே மெசியா என்பதனை தெரிந்து அறிந்திருந்ததாலும், தெண்டனிட்டு வணங்கி ஆராதிக்க முற்பட்டனர். நம்மையும் ஜொலிக்கச் செய்யும் நட்சத்திரங்களாக அவரே நம்மை ஆசீர்வதிக்கின்றார் வழிநடத்துகின்றார். நாமும் அவரது சாட்சிகளாவோம். அவரிடமிருந்து பெற்றவைகளை அவருக்கு காணிக்கையாக்குவோம். அவரே ஆண்டவர் மெசியா என்று வணங்கி ஆராதிப்போம் வாருங்கள் . பங்கேற்று பலன் பெறுவோம். இத் திருப்பலியில் பக்தியோடு பங்கு பெறுவோம்.



முதல்வாசகம்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6
ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்! பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப்பாடல்
பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.
திருப்பாடல் 72: 1-2. 7-8. 10-11. 12-13

1 கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 2 அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. பல்லவி

7 அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 8 ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். பல்லவி

10 தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள். 11 எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். பல்லவி

12 தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 13 வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். பல்லவி


இரண்டாம் வாசகம்
பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3ய,5-6

சகோதரர் சகோதரிகளே, உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 2: 2 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள். பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
-கிறிஸ்துவே உமக்கு புகழ்



விசுவாசிகள் மன்றாட்டுகள்:
விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.
பதில்: ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.


எழுந்து ஒளிவீசு என்று எம்மைப் பணித்த எம் இறைவா!
உலகின் ஒளியாம் இயேசு கிறிஸ்துவின் சீடராய் இவ்வுலகில் வலம் வரத் தேவையான விசுவாசத்தையும், உறுதியான உள்ளத்தையும், எதிர்வரும் இடர்களையும், சவால்களையும் ஏற்றுக் கடைசிவரை உமது அன்பில் நிலைத்திருந்து உமக்குச் சாட்சிப் பகர உம் திருஅவையினர் அனைவரையும் வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார் என்று அமைத்த எம் இறைவா!
நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் அடங்கிவிடாமல் நீர் படைத்த இவ்வுலகில் வாழும் அனைத்து மக்களையும் உம்மைப்போல் அன்புச் செய்யவும், ஏழை எளியோர்களையும் குடும்பத்திலுள்ள முதியோர்களையும், ஆதரவற்றவர்கைளையும் நேசிக்கவும், அரவணைத்து அவர்களின் வாழ்வாதரங்களை உயரவும் நாங்கள் உழைத்திட நல்மனதினைப் பெற்றிட வேண்டிய வரங்களைத் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எமைப் படைத்து ஆளும் எம் தலைவா!
பொருளாதார மாற்றங்களினால் ஏற்பட்டுள்ள போராட்டங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துப் பொதுநலம் காத்திடவும், வறட்சியாலும், புயல்களாலும் நாள்தோறும் அவதிக்குள்ளாகிய விவசாயப் பெருமக்களுக்கு வேண்டிய உதவிகள் விரைவில் அவர்களுக்கு முழுமையாகச் சென்று அடையவும், அவர்களின் அகால மரணங்கள் தடுக்கப்படவும், மீண்டும் அவர்கள் பழைய வாழ்க்கை நிலைக்குத் திரும்பிட உம் வரங்களை அருள்மாரிப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எமைப் படைத்து ஆளும் எம் இறைவா!
வேற்றுநாட்டினரான மூன்று ஞானிகளும் ஒன்றிணைந்துக் குழந்தை இயேசுவைத் தேடி ஞானம் பெற்றது போல் இன்றைய சூழலில் இளைஞர்கள் தான் திருச்சபையின் வலுவான தூண்கள் என்பதை உணர்ந்து இன்றைய கலாச்சாரச் சூழலில் தங்களின் தேவையை எடுத்து இறையாண்மையைக் கட்டிக் காத்து இறைமகனின் உடனிருப்பை உணர்ந்து ஒன்றிணைந்துச் செயலாற்ற வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பு இறைவா!
எங்கள் அருகில் உள்ள ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர், உடல நலம் குன்றியோர் ஆகியோரை ஆதரித்து அவர்களுக்கு உமது அன்பையும், இரக்கத்தையும் நாங்கள் பகிர்ந்தளிக்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

எங்களோடு இருப்பவரே!
இப்பெருவிழா நாட்களில், தங்கள் குடும்பங்களோடு இருந்து, உமது ஆசீர்வாதத்தை பெறமுடியாத பல்வேறு மக்களுக்கு, உமது திருமகனின் திருக்காட்சியை காணும் பேற்றினை நீர் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எங்கள் பரம தந்தையே!
உம் திருமகனின் திருகாட்சிப் பெருவிழாவை கொண்டாடும் இந்நாளில் எங்கள் இல்லங்களும் உள்ளங்களும், உமது திருமகனின் அன்பையும், இரக்கத்தையும் பிரதிபலிப்பதாக இருந்திடவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.



இன்றைய சிந்தனை

''கிழக்கிலிருந்து ஞானிகள் வந்து, 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீண் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்'' (மத்தேயு 2:2) கீழ்த்திசை ஞானியர் இயேசுவை வணங்கினர் என்னும் செய்தி மத்தேயு நற்செய்தியில் இடம் பெறுகிறது. மனிதராகப் பிறந்த இறைக் குழந்தை இஸ்ரயேலரை மட்டுமன்றி உலக மக்கள் அனைவரையும் மீட்க வந்தார் என்னும் கருத்து இவ்வரலாற்றில் கூறப்படுகிறது. கீழ்த்திசை ஞானியர் பிற இனத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் நேரிய உள்ளத்தோடு கடவுளைத் தேடுகின்ற எல்லா மனிதருக்கும் அடையாளமாக அமைகின்றார்கள். இயற்கையில் தோன்றிய ஒரு சிறப்பு நிகழ்வு அவர்களைக் கடவுளிடம் இட்டுச் செல்கிறது. அதாவது, அதிசய விண்மீன் ஒன்று அந்த ஞானியருக்கு வழிகாட்டியாக அமைந்து அவர்களை வழிநடத்துகிறது.

மனிதர் கடவுளைத் தேடிக் கண்டுபிடிக்க உருவாக்கப்பட்டவர்கள். அவர்களுடைய உள்ளத்தின் ஆழத்தில் கடவுள் வேட்கை பதிந்துள்ளது. எனவேதான் தொடக்க காலத்திலிருந்தே மனிதர் கடவுளைத் தேடி வந்துள்ளனர். சில வேளைகளில் மனிதர்கள் கடவுளைத் தவறாக அடையாளம் கண்டதுண்டு. ஏன், இன்றுகூட கடவுள் என்றால் யார் என்னும் கேள்விக்கு ஒத்த கருத்துடைய பதில் கிடைப்பது அரிது. ஆனால் அமைதியின்றி அலைமோதுகின்ற மனித உள்ளம் கடவுளைக் கண்டு, உணர்ந்து அனுபவிக்கின்ற நிலையில்தான் உண்மையான அமைதியைக்; கண்டடையும். கடவுளிடமிருந்து அகன்று போகின்ற வேளைகளில் நம் உள்ளத்தில் சஞ்சலம் உண்டாவதை நாம் உணர்கின்றோம். ஞானியருக்கு வழிகாட்டிய விண்மீன் அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்த வேளைகளில் அவர்களும் வழிதடுமாறியதுண்டு. ஆனால் அவர்களுடைய தேடல் தொடர்ந்தது. விண்மீன் காட்டிய ஒளியும் இறுதிவரை குறைபடவில்லை. கடவுளின் அருள் என்னும் ஒளி நம் இதயத்தில் ஒளிர்ந்து, நம்மை வழிநடத்துவதை நாம் உணர வேண்டும். நம் இதயம் நம்மில் தூண்டுகின்ற ஆழமான ஆவல்களை நாம் உதறித் தள்ளிவிடாமல் தொடர்ந்து வழிநடந்தால் உலகின் ஒளியாகிய கிறிஸ்துவைக் கண்டுகொள்வோம். ஒளிபெற்ற நாம் நம் நம்பிக்கைப் பயணத்தை மீண்டும் தொடர்வோம். பிறரை இயேசுவிடம் இட்டுச்செல்கின்ற சாட்சிகளாக மாறிடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, நீர் காட்டுகின்ற ஒளியைத் தொடர்ந்து எங்கள் நம்பிக்கைப் பயணம் அமைந்திட அருள்தாரும்.







***********************************************************************************************************
Diese E-Mail wird von der Webdesignmannschaft www.tamilcatholicnews.com gesendet. Wenn Sie von unserer E-Mail-Liste sich austragen wollen, oder wenn Sie einige Schwierigkeiten mit diesem E-Mail haben, kontaktieren Sie uns bitte über unsere Emailadresse in...@tamilcatholic.de.

www.tamilcatholicnews.com
என்ற இணையத்தளகுழுவினரால்இந்த மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த மின்னஞ்சல்களை நீங்கள் பெற்றுக்கொள்ள விரும்பாவிடில் அல்லது இவ் மின்னஞ்சல்களில் ஏதாவது அசௌகரியங்கள் இருப்பின், in...@tamilcatholic.de என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அறியத்தரவும்.

This Email is sent by the web design team of www.tamilcatholicnews.com. If you want to unsubscribe from our email list or if you have some difficulties with this email, please contact us via our email address in...@tamilcatholic.de.
***********************************************************************************************************



Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.



http://www.tamilcatholicnews.com
http://www.tamilcatholic.de
http://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
http://www.youtube.com/tamilenseelsorgeamt
http://groups.google.com/group/tamilenseelsorge

20260104_full.pdf
20260104_short.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages