மாட்சிக்குரியவர்களே, எல்லாம் வல்ல ஆண்டவரின் பெயரால் இன்றைய திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இன்று நாம் தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறை சிறப்பிக்கின்றோம். நமது பாவங்களுக்காக இறந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசுவின் மாட்சியில் பங்கு பெற இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இறைத்தந்தையின் அன்பு மைந்தர் இயேசுவுக்கு செவிசாய்க்க கடவுள் நம்மை அழைக்கிறார். திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் நிறைவேற்றிய இயேசுவைப் போன்று, இறைத்திட்டத்தை அறிந்து வாழ்வில் செயல்படுத்த நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் பாடு கள் வழியாக, அவரது உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற வரம் வேண்டி, இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
அந்நாள்களில் ஆண்டவர் ஆபிராமை நோக்கி, ``உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்'' என்றார். ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார்.
4 ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5 அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. பல்லவி
18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி
20 நாம் ஆண்டவரை
நம்பியிருக்கின்றோம்; அவரே
நமக்குத் துணையும் கேடயமும்
ஆவார். 22 உம்மையே நாங்கள்
நம்பியிருப்பதால், உமது
பேரன்பு எங்கள்மீது
இருப்பதாக! பல்லவி
அன்பிற்குரியவரே, கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன் மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.
அக்காலத்தில், இயேசு
பேதுருவையும் யாக்கோபையும்
அவர் சகோதரரான யோவானையும்
ஓர் உயர்ந்த மலைக்குத்
தனிமையாகக் கூட்டிக்கொண்டு
போனார். அங்கே அவர்கள்முன்
அவர் தோற்றம் மாறினார்.
அவரது முகம் கதிரவனைப் போல்
ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள்
ஒளி போன்று வெண்மையாயின. இதோ!
மோசேயும் எலியாவும்
அவர்களுக்கு முன் தோன்றி
இயேசுவோடு
உரையாடிக்கொண்டிந்தனர்.
பேதுரு இயேசுவைப் பார்த்து,
“ஆண்டவரே, நாம் இங்கேயே
இருப்பது நல்லது. உமக்கு
ஒன்றும் மோசேக்கு ஒன்றும்
எலியாவுக்கு ஒன்றுமாக
மூன்று கூடாரங்களை
அமைக்கட்டுமா? இது உமக்கு
விருப்பமா?” என்றார்.
அவர் தொடர்ந்து
பேசிக்கொண்டிருந்தபோது
ஒளிமயமான மேகம் ஒன்று
அவர்கள்மேல் நிழலிட்டது.
அந்த மேகத்தினின்று, “என்
அன்பார்ந்த மைந்தர் இவரே.
இவர் பொருட்டு நான்
பூரிப்படைகிறேன்.
இவருக்குச்
செவிசாயுங்கள்” என்று ஒரு
குரல் ஒலித்தது. அதைக்
கேட்டதும் சீடர்கள் மிகவும்
அஞ்சி முகங்குப்புற
விழுந்தார்கள். இயேசு
அவர்களிடம் வந்து அவர்களைத்
தொட்டு, “எழுந்திருங்கள்,
அஞ்சாதீர்கள்” என்றார்.
அவர்கள் நிமிர்ந்து
பார்த்தபோது இயேசு ஒருவரைத்
தவிர வேறு எவரையும்
காணவில்லை.
அவர்கள் மலையிலிருந்து
இறங்கிவந்தபோது இயேசு,
“மானிடமகன் இறந்து
உயிருடன் எழுப்பப்படும்வரை
இக்காட்சியைப்பற்றி
எவருக்கும்
சொல்லக்கூடாது” என
அவர்களுக்குக்
கட்டளையிட்டார்.
மாட்சி மிகுந்தவரான
இறைவா,
திருத்தந்தை,
ஆயர்கள், குருக்கள்,
துறவறத்தார் அனைவரும்,
ஆபிரகாம் கொண்ட
நம்பிக்கையின் வழிமரபினராக
விளங்கும் திருச்சபையின்
மக்களை, உமது மாட்சிக்கு
உகந்தவர்களாக உருமாற்றும்
வரமருள வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
மகத்துவம் மிக்கவரான
இறைவா,
சிலுவை
வழியாக உம் திருமகன்
நிறைவேற்றிய மீட்புச் செயலை,
உலக மக்கள் அனைவரும் அறிந்து
ஏற்றுக்கொள்ளவும், உம்மில்
நம்பிக்கை கொண்டவர்களாய்
நீர் தருகின்ற மாட்சியை
உரிமையாக்கவும் அருள் தர
வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
நலம் அளிப்பவரான
இறைவா,
எம் நாட்டு
மக்களிடையே நிலவும் தவறான
நம்பிக்கைகள், கொள்கைகள்,
கோட்பாடுகள் அனைத்தும்
மறையவும், தீமை, வன்முறை,
பயங்கரவாதம் ஆகியவற்றின்
மீதான வெறுப்புணர்வு
பெருகவும் துணைபுரிய
வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
நிறைவு தருபவரான
இறைவா,
உலக
ஆசைகளாலும், போட்டி,
பொறாமையினாலும் மன அமைதி
இழந்து தவிக்கும் மக்கள்
அனைவரும், உமது மாட்சியில்
நிறைவு காண்பவர்களாய்
வாழ்ந்து, அமைதியையும்
மகிழ்ச்சியையும் சுவைக்க
வரம் தர வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
உருமாற அழைப்பவரான
இறைவா,
எம்
பங்குத்தந்தை,
அருட்சகோதரிகள், பங்கு
மக்கள் அனைவரும் உமது
நிறைவான ஆசீரைப் பெற்று
உருமாறியவர்களாய்,
உலகத்தின் முன்னிலையில் இறை
மாட்சிக்கு உகந்த
புதுவாழ்வு வாழ அருள்புரிய
வேண்டுமென்று உம்மை
மன்றாடுகிறோம்.
''ஆறு நாள்களுக்குப்
பின்பு இயேசு பேதுருவையும்
யாக்கோபையும் அவர் சகோதரரான
யோவானையும் ஓர் உயர்ந்த
மலைக்குத் தனிமையாகக்
கூட்டிக்கொண்டு போனார்.
அங்கே அவர்கள்முன் அவர்
தோற்றம் மாறினார். அவரது
முகம் கதிரவனைப் போல்
ஒளிர்ந்தது'' (மத்தேயு 17:1-2)
இயேசு தோற்றம் மாறிய
நிகழ்ச்சியை மாற்கு,
மத்தேயு, லூக்கா ஆகிய
மூவரும் விவரிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியை
விவரிப்பதில் பழைய
ஏற்பாட்டு உருவகங்கள் பல
பயன்படுத்தப்பட்டுள்ளன. மலை,
கதிரவனைப்போல் ஒளிரும்
முகம், ஒளிமயமான மேகம்,
மேகத்திலிருந்து வரும்
குரல், மோசேயும் எலியாவும்
தோன்றுதல் போன்ற உருவகங்கள்
ஆழ்ந்த பொருளை
உணர்த்துகின்றன. அதாவது மோசே
சீனாய் மலையில் ஏறிய போது
கடவுள் அவரோடு பேசிய
நிகழ்ச்சியின் எதிரொலிப்பு
இங்கே உள்ளது. மேகம் என்பது
கடவுளின் உடனிருப்பைக்
குறிக்கும் அடையாளம். மோசே
திருச்சட்டத்தையும் எலியா
இறைவாக்கையும்
குறிக்கின்றார்கள். இயேசு
''திருச்சட்டத்தையும்
இறைவாக்குகளையும்
அழிக்கவல்ல, அவற்றை
நிறைவேற்றவே வந்தார்''
என்னும் செய்தியை மத்தேயு
ஏற்கெனவே அறிவித்தார்
(காண்க: மத் 5:17). வானிலிருந்து
வந்த குரல் இயேசுவைக்
கடவுளின் மகன் என அடையாளம்
காட்டுகிறது (மத் 17:6). இயேசு
வானகத் தந்தையின்
''அன்பார்ந்த மகன்''. நாம்
அவருக்குச் செவிசாய்க்க
வேண்டும் (மத் 17:6).
இயேசுவின் தோற்றம்
மாறியதையும் வானிலிருந்து
குரல் எழுந்து இயேசுவைக்
கடவுளின் மகன் என அடையாளம்
காட்டியதையும் கண்டு, கேட்டு
அனுபவித்த சீடர்கள் அதன்
விளைவாக முகங்குப்புற
விழுகிறார்கள். அவர்களை
அச்சம் மேற்கொள்கிறது.
அப்போது ''இயேசு அவர்களிடம்
வந்து, அவர்களைத் தொட்டு,
'எழுந்திருங்கள்,
அஞ்சாதீர்கள்' என்றார்'' (மத்
17:7). கடவுள் நம்மைத் தம்மிடம்
ஈர்க்கின்ற சக்தி கொண்டவர்;
நம் உள்ளம் அவரை நாடித்
தேடுகிறது. அதே நேரத்தில்
கடவுளின் பிரசன்னத்தில்
நாம் அஞ்சி நடுங்குகிறோம்.
ஆனால் இயேசு நாம்
அஞ்சவேண்டியதில்லை என
நமக்கு உறுதியளிக்கிறார்.
அவரோடு நாம் இருக்கும்போது
நம் வாழ்வில் அச்சம்
நீங்கும்; நம் உள்ளத்தில்
உறுதி பிறக்கும்.
இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.
***********************************************************************************************************
Diese E-Mail wird von der Webdesignmannschaft
www.tamilcatholicnews.com gesendet. Wenn Sie von unserer E-Mail-Liste sich
austragen wollen, oder wenn Sie einige Schwierigkeiten mit diesem E-Mail
haben, kontaktieren Sie uns bitte über unsere Emailadresse
in...@tamilcatholic.de.
www.tamilcatholicnews.com என்ற
இணையத்தளகுழுவினரால்இந்த
மின்னஞ்சல் உங்களுக்கு
அனுப்பி வைக்கப்படுகின்றது.
இந்த மின்னஞ்சல்களை நீங்கள்
பெற்றுக்கொள்ள
விரும்பாவிடில் அல்லது இவ்
மின்னஞ்சல்களில் ஏதாவது
அசௌகரியங்கள் இருப்பின்,
in...@tamilcatholic.de என்னும்
மின்னஞ்சல் முகவரிக்கு
அறியத்தரவும்.
This Email is sent by the web design team of
www.tamilcatholicnews.com. If you want to unsubscribe from our email list
or if you have some difficulties with this email, please contact us via our
email address in...@tamilcatholic.de.
***********************************************************************************************************
Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.
http://www.tamilcatholicnews.com
http://www.tamilcatholic.de
http://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
http://www.youtube.com/tamilenseelsorgeamt
http://groups.google.com/group/tamilenseelsorge