இறை அன்பில் இணைந்திருக்கும் எம் இனிய உறவுகளே! பொதுக்காலத்தின் நான்காம் ஞாயிறு வாரத்திற்குள் நுழைகின்றோம். புதிய மாதத்தின் முதல் நாளாகிய இன்று இறை அருளோடு எமது வாழ்வை புதிதாய் தொடங்குவோம்; அதற்கான வரத்தைக் கேட்டு நிற்போம். இன்றைய இறைவார்த்தைகளாக, செப்பனியா இறைவாக்கினர் நூல், ஆண்டவரை நேர்மையோடு, தாழ்மையோடு தேட அழைப்பு விடுப்பதோடு, இரண்டாவது இறைவார்த்தையாக, புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம்; அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார் என்று எம்மை திடப்படுத்துவதோடு, மத்தேயு எழுதிய நற்செய்தியில் இயேசுவின் மலைப்பொழிவினூடாக எமது வாழ்வின் உள்ளார்ந்த சட்டத்தை எழுதுவதோடு, செயல்களுக்கான விதியையும் தெளிவாக்குகின்றது. இன்றைய உலகில் வாழும் எமக்கு ஆசீர்வாதங்கள் அதிகமாக தேவைப்படுகின்றன. பாவங்களாலும், பரிகாரம் இன்மையாலும், எமது இறுகிய மனப்பான்மையாலும், எதிர்மறை எண்ணங்களால் குறைசொல்லும் பழக்கத்தாலும் நாமும் இன்னும் இறைவனை இழந்துகொண்டு தான் இருக்கின்றோம். நேர்மையில் உண்மையில் இறைவனோடு வாழ இன்றைய நாள் எம்மை அழைக்கின்றது. நாம் எப்படி எமது மனசாட்சியை உருவாக்கி புதிய சட்டங்களை கற்றுக்கொள்ள நற்செய்தி அறிவுறுத்துகின்றது. தீமைகளை எதிர்த்துப் போராடுவோம். நாமும் இவ்வுலகத்திற்காக அதன் தேவைக்காக வாழுவோம்; எம்மை அர்ப்பணிப்போம்; இன்றைய பலியில் அதற்கான வரம்கேட்டு மன்றாடுவோம். குறிப்பாக, இவ்வுலகத்தின் அமைதிக்காகவும், யுத்தங்கள் இன்றி நிம்மதியான வாழ்வுக்காகவும் மன்றாடி இப்பலியில் இணைந்திடுவோம்.
செப்பனியா கூறியது: நாட்டிலிருக்கும் எளியோரே! ஆண்டவரின் கட்டளையைக் கடைப்பிடிப்போரே! அனைவரும் ஆண்டவரைத் தேடுங்கள்: நேர்மையை நாடுங்கள்: மனத்தாழ்மையைத் தேடுங்கள்: ஆண்டவரது சினத்தின் நாளில் ஒரு வேளை உங்களுக்குப் புகலிடம் கிடைக்கும். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்: அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்: வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது: அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.
7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார். பல்லவி
8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார். 9aஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார். பல்லவி
9bcஅனாதைப் பிள்ளைகளையும்
கைம்பெண்களையும்
ஆதரிக்கின்றார்; ஆனால்,
பொல்லாரின் வழிமுறைகளைக்
கவிழ்த்துவிடுகின்றார்.
10சீயோனே! உன் கடவுள்,
என்றென்றும், எல்லாத்
தலைமுறைகளுக்கும் ஆட்சி
செய்வார். பல்லவி
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்ட நிலையை எண்ணிப் பாருங்கள். மனிதக் கணிப்பின்படி உங்களுள் ஞானிகள் எத்தனைபேர்? வலியோர் எத்தனை பேர்? உயர்குடி மக்கள் எத்தனை பேர்? ஆனால் கடவுள் ஞானிகளை வெட்கப்படுத்த, மடமை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்து கொண்டார். அவ்வாறே, வலியோரை வெட்கப்படுத்த, வலுவற்றவை என உலகம் கருதுபவற்றைத் தேர்ந்துகொண்டார். உலகம் ஒரு பொருட்டாகக் கருதுபவற்றை அழித்து விட அது தாழ்ந்ததாகக் கருதுபவற்றையும் இகழ்ந்து தள்ளுபவற்றையும் கடவுள் தேர்ந்தெடுத்தார். எவரும் கடவுள் முன் பெருமைபாராட்டாதபடி அவர் இப்படிச் செய்தார். அவரால்தான் நீங்கள் கிறிஸ்துவுடன் இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். கிறிஸ்துவே கடவுளிடமிருந்து நமக்கு வரும் ஞானம். அவரே நம்மை ஏற்புடையவராக்கித் தூயவராக்கி மீட்கின்றார். எனவே மறைநூலில் எழுதியுள்ளவாறு, பெருமை பாராட்ட விரும்புகிறவர் ஆண்டவரைக் குறித்தே பெருமை பாராட்டட்டும்.
இயேசு மக்கள்
கூட்டத்தைக் கண்டு மலைமீது
ஏறி அமர, அவருடைய சீடர் அவர்
அருகே வந்தனர். அவர்
திருவாய் மலர்ந்து
கற்பித்தவை:
“ஏழையரின் உள்ளத்தோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு
உரியது. துயருறுவோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் ஆறுதல் பெறுவர்.
கனிவுடையோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் நாட்டை
உரிமைச் சொத்தாக்கிக்
கொள்வர். நீதி நிலைநாட்டும்
வேட்கை கொண்டோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் நிறைவு பெறுவர்.
இரக்கமுடையோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் இரக்கம் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் கடவுளின் மக்கள் என
அழைக்கப்படுவர்.
நீதியின் பொருட்டுத்
துன்புறுத்தப்படுவோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
விண்ணரசு அவர்களுக்கு
உரியது. என் பொருட்டு மக்கள்
உங்களை இகழ்ந்து,
துன்புறுத்தி, உங்களைப்
பற்றி இல்லாதவை
பொல்லாதவையெல்லாம்
சொல்லும்போது நீங்கள்
பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து
பேருவகை கொள்ளுங்கள்!
ஏனெனில் விண்ணுலகில்
உங்களுக்குக் கிடைக்கும்
கைம்மாறு
மிகுதியாகும்.”
எமது திருத்தந்தை
பதின்னான்காம் லியோ
அவர்களுக்காகவும், எமது மறை
மாநில ஆயர், ..........
அவர்களுக்காகவும்
மன்றாடுவோம்.
இவ்வுலக
வாழ்வுக்காக, நீதிக்காக,
உண்மைக்காக உழைக்கும்
இவர்கள் இறை ஞானத்தையும்,
அன்பையும் அவர் தரும்
அனைத்துப் பெறுபேறுகளையும்
நிலைநாட்டும் கருவிகளாக
திகழ வரமருள வேண்டுமென்று,
...
இயேசுவின்
பெயரால் அர்ப்பணிக்கப்பட்ட
அனைத்து பிள்ளைகள்
இவ்வுலகின் விடியலாக
மாறுவார்களாக.
புதியன தேடி, புதுமைகள்
செய்து, ஒவ்வொரு
மாற்றத்திற்காக ஏங்கும்
இவர்கள், உலகின் புது ஒளியாக
மாறுவார்களாக. இயேசுவை
இதயத்தில் தாங்கி, தமது
நன்மைகளாலும் நல்
ஒழுக்கங்களாலும்
அணிசேர்க்க வேண்டுமென்று,
...
உலகின் பல்வேறு
கோணங்களிலே, விபத்துக்களால்,
யுத்தத்தால் மேலும்
அணர்த்தங்களால் அவதியுறும்
மக்களை
கண்ணோக்கியருளும்.
இம்மக்கள் அனைவரும்
எதிர்நோக்கை தொலைத்திடாமல்
இறை நம்பிக்கையிலும்,
பராமரிப்பிலும் வாழ்ந்திட
அருள்புரிய வேண்டுமென்று,
...
குடும்பங்களில்
அன்பை தொலைத்திடாமல்,
பாசத்தை அணைத்திடாமல்,
நம்பிக்கையில் உயர்ந்து
நிற்கும் கோபுரமாக வாழும்
அனைத்து பெற்றோர்கள்
மற்றும் பிள்ளைகளில்
என்றும் நிறை ஆசீர்
கிடைத்திடவும், அனைத்து
சந்தர்ப்பத்திலும்
இறைவனுக்கு சான்றுபகரும்
கருவிகளாகிட வேண்டுமென்று,
...
''நீதிநிலைநாட்டும்
வேட்கை கொண்டோர்
பேறுபெற்றோர்; ஏனெனில்
அவர்கள் நாட்டை உரிமைச்
சொத்தாக்கிக் கொள்வர்''
(மத்தேயு 5:6)
''தாகமுற்றோர்க்குக் கடவுள்
நிறைவளித்தார்; பசியுற்றோரை
நன்மைகளால் நிரப்பினார்''
எனத் திருப்பாடல்கள் நூல்
கூறுகிறது (காண்க: திபா 107:5,9).
பசியும் தாகமும் மனிதருக்கு
இயல்பான அனுபவம். உணவும்
நீரும் பசிதாகம் போக்க
உதவுகின்றன. நீதியை
நிலைநாட்ட வேண்டும் என்னும்
''வேட்கை''யும் அடிப்படையில்
பசி, தாகம் போன்ற ஆவல்தான்.
அந்த வேட்கையை நாம்
நிறைவுசெய்ய வேண்டும்
என்றால் எத்தகைய நீதியை
நிலைநாட்டுவது என்னும்
கேள்வி எழுகிறது. பழைய
ஏற்பாட்டில் ''நீதி'' என்பது
கடவுள் தம் மக்களோடு
செய்துகொண்ட உடன்படிக்கையை
முழுமனத்தோடு
கடைப்பிடிப்பதைக்
குறித்தது. மத்தேயு ''நீதி''
என்னும் சொல்லை ஏழு முறை
பயன்படுத்துகிறார்.
இயேசுவின் மலைப் பொழிவில்
மட்டும் இச்சொல் ஐந்துமுறை
வருகிறது (மத் 5:6,10,20; 6:1,33). தமிழ்
மொழி பெயர்ப்பில் ''நீதி'',
''நெறி'', ''அறச்செயல்'',
''ஏற்புடையவை'', ''நீதிநெறி''
(காண்க: மத் 3:15; 21:32) என்னும் பல
சொல்கள் ஒரே கருத்தை
வலியுறுத்தும் வகையில்
உள்ளன. எனவே, நாம்
''நீதிநிலைநாட்டுவதில்
வேட்கை'' கொண்டிருக்க
வேண்டும் என இயேசு
கற்பிப்பதைப்
புரிந்துகொள்ள வேண்டும்
என்றால் விவிலியப்
பார்வையில் நீதி எதைக்
குறிக்கிறது என்பதை அறிவது
தேவை.
இவ்வுலகில் மனிதர் எவ்வாறு
வாழ வேண்டும் எனக் கடவுள்
விரும்புகிறாரோ அவ்வாறு
நாம் வாழ்ந்தால் நாம்
நீதியைக்
கடைப்பிடிக்கிறோம் என்பது
பொருள். இது உறவுகளின்
அடிப்படையில் எழுகின்ற ஓர்
ஒழுங்குமுறை எனலாம். கடவுள்
நம்மோடு உறவாடுகின்றார்.
அந்த உறவின் பயனை நாம்
அனுபவிக்கின்ற அதே வேளையில்
கடவுளோடு நாமும் நல்லுறவு
கொள்வது ''நீதி'' ஆகும். கடவுள்
எல்லா மனிதரையும்
அன்புசெய்து அவர்களுக்குத்
தம் வாழ்வில்
பங்களிக்கின்றார். அதையே நம்
வாழ்க்கை நெறியாக நாம்
கொள்ளும்போது ''நீதி'' நம்
வாழ்வில் துலங்கும்.
இறுதியாக, கடவுள் தாம்
படைத்த உலகை அன்போடு
பராமரிக்கின்றார். நாமும்
படைப்புலகைப் பொறுப்போடு
ஆண்டு நடத்தும்போது ''நீதி''
அங்கே துலங்கும். இத்தகைய
வாழ்க்கை நெறியை இயேசு
நமக்குக் கற்றுத் தருகிறார்.
அந்நெறிப்படி நாம்
நடக்கும்போது எந்நாளும்
நீடிக்கின்ற வாழ்வை, விண்ணக
நாட்டை நாம் அடைவோம் என்பது
இயேசு நமக்குத் தருகின்ற
வாக்குறுதி (காண்க: மத்
5:6).
செபம்: இறைவா, எங்கள் வாழ்வில் நல்லுறவுகள் நாளும் வளர்ந்திட அருள்தாரும்.
***********************************************************************************************************
Diese E-Mail wird von der Webdesignmannschaft
www.tamilcatholicnews.com gesendet. Wenn Sie von unserer E-Mail-Liste sich
austragen wollen, oder wenn Sie einige Schwierigkeiten mit diesem E-Mail
haben, kontaktieren Sie uns bitte über unsere Emailadresse
in...@tamilcatholic.de.
www.tamilcatholicnews.com என்ற
இணையத்தளகுழுவினரால்இந்த
மின்னஞ்சல் உங்களுக்கு
அனுப்பி வைக்கப்படுகின்றது.
இந்த மின்னஞ்சல்களை நீங்கள்
பெற்றுக்கொள்ள
விரும்பாவிடில் அல்லது இவ்
மின்னஞ்சல்களில் ஏதாவது
அசௌகரியங்கள் இருப்பின்,
in...@tamilcatholic.de என்னும்
மின்னஞ்சல் முகவரிக்கு
அறியத்தரவும்.
This Email is sent by the web design team of
www.tamilcatholicnews.com. If you want to unsubscribe from our email list
or if you have some difficulties with this email, please contact us via our
email address in...@tamilcatholic.de.
***********************************************************************************************************
Web Design Team,
Tamil Catholic Chaplaincy,
Laurentiusberg 1,
45276 Essen,
Germany.
http://www.tamilcatholicnews.com
http://www.tamilcatholic.de
http://www.facebook.com/tamilcatholicsgermany
https://www.facebook.com/goodnewsofjesuschrist
http://www.youtube.com/tamilenseelsorgeamt
http://groups.google.com/group/tamilenseelsorge